Home » Articles » நூல்கள் வெற்றியின் தூண்கள்

 
நூல்கள் வெற்றியின் தூண்கள்


மெர்வின்
Author:

அறிவைப் பயன்படுத்தி அனைவரும் பாராட்டும்படி வாழத் துணையாக இருப்பவை நூல்கள்தான், உயர்வுதரும் உன்னதமான நூல்கள் வாழ்க்கைக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்து உதவும்.

நூல்களைப் படிப்பதன் மூலமே அறிவை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும். அறிவின் மேன்மை உயர உயர வாழ்க்கையின் தரமும் சிறப்பாக அமையும்.

உலகில் வெற்றி கண்டவர்கள் எல்லாம் உயர்வு அடைவதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது நூல்கள்தான். ஒரு வரலாறுதான் இன்னொரு வரலாற்றை உருவாக்கும்.

அவர் அப்படி வாழ்ந்திருந்தார், இவர் இப்படி உயர்வு பெற்றிருந்தார் என்ற உண்மை நிகழ்ச்சிகளை உணரச் செய்பவை நூல்களை நூல்கள்தான்.

மேன்மை பெற்றவர்கள் எல்லாம் எவ்விதம் அந்த நிலைக்கு உயர்ந்தார்கள் என்ற உண்மையை உள்ளத்தில் பதிய வைக்கச் செய்பவை நூல்கள் தான்.

ரோம் நகரின் அழகையும், பிரகாசிக்கும் இத்தாலியையும் ஒரு நூலின் மூலம் அறிந்து கொள்ள முடியும். பழமையான உலகத்தின் சின்னங்களையும் நவீன உலகத்தின் பெருமைகளையும் நூலின் மூலம் தெரிந்து கொள்ள இயலும்.

நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்ததற்குப் பிறகு நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது நல்ல நூல்கள்தான். நடு இரவில், விளக்கு வைத்துக்கொண்டு மூளைக்குச் சிறந்த வேலை கொடுத்து கடினமாகப் பல நாட்கள் உழைத்து எழுதப்பட்டவையே நூல்கள்.

நூல் ஆடம்பரமான ஒன்று அல்ல. அது வாழ்வின் இன்றியமையாதவற்றில் ஒன்று. நம்முடைய இயல்புக்கு உண்டான தன்மைகளுக்கு ஏற்ப மறைந்த எழுத்தாளர்கள் தெளிவாக எழுதி இருக்கிறார்கள்.

“நெருங்கிய நண்பர்களுக்குச் சொல்வது போல் தங்களுடைய எண்ணங்களை நமக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்” என்கிறார், எமர்சன்.

கையில் பிரம்பில்லாமல், கடுமொழி கூறாமல், கோபப்படாமல், கற்றுக்கொடுக்கும் சம்பளம் கேட்பதில்லை.

இவர்கள் யார் என்றால் நூல்கள்தான்.

நூல் செல்வத்துக்கெல்லாம் செல்வமாகும். இதற்கு மேற்பட்ட செல்வம் வேறு கிடையாது. உண்மை, உழைப்பு, உறுதி, நேர்மை வாய்மை, அன்பு, பண்பு, விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்தையும் போதிப்பது நூல்கள்தான்.

“நூல் என்பது சட்டைப் பைக்குள் கொண்டு செல்லும் பூந்தோட்டம்” என்று அரேபியப் பழமொழி கூறுகிறது. நூல்கள் மனதோடு பேசுகின்றன. நண்பர்கள் இதயத்தோடு பேசுகின்றனர். இறைவன் ஆன்மாவுடன் பேசுகிறார்.

கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் நூல்களைப் படித்தே ஆக வேண்டும்.

“ஒரு நூலைப் படிப்பது புதிய நண்பனைக் கண்டுபிடிப்பதாகும். அதை மீண்டும் படிப்பது பழைய நண்பனைச் சந்திப்பது போலாகும்” என்று கூறுகிறது சீனப்பழமொழி.

நிச்சயம் நன்மை தரக்கூடிய உண்மையான பல்கலைக் கழகம் நல்ல நூல்கள் தான். ‘நல்ல நண்பர்களைத் தேடிக்கொள்வதற்கு அடுத்த படியாக நல்ல நூல்களைத் தேடிக் கொள்வது இனிமையானது’ என்கிறார் கோல்டன்.

நூல்கள் மனித சமுதாயத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச் சென்ற கருவூலமாகும். அது தலைமுறை தலைமுறைôகப் பல சந்ததிகளுக்குப் பயன்படும்.

“நூல்கள் காலம் என்னும் கடலின் கரையில் நிறுத்தப்பட்டுள்ள கலங்கரை விளக்குகள்”, என்கிறார் கிப்பன். புத்தகங்கள், ஞானிகள், வீரர்களுடைய இதயங்களை நம் உள்ளத்திற்குப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடிகளாக விளங்குகின்றன.

“ஐரோப்பாவிலுள்ள மணிமுடிகளை எல்லாம் என்னிடம் தந்து, என் நூல்களையும் படிப்பதையும் விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டால் நான் அந்த அரசு மணிமுடிகளை எறிந்து விட்டு என் நூல்களை மட்டுமே போற்றிப் பாதுகாப்பேன்” என்கிறார் அறிஞர் பெனிலன்.

எகிப்திய மன்னர் ஒருவர் தன்னுடைய படிக்கும் அறையை “ஆன்மாவின் மருந்து” என்று எழுதியிருந்தார் என்றால் நாம்

நூலின் மேன்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

இவருடைய கூற்றின்படி மருந்துகளாக இருக்க வேண்டு மானால் நாம் நூல்களை மிகுந்த கவனத்துடன் தேர்ந்து எடுக்க வேண்டும் அல்லவா!

“நூல்கள் என்னை மதுக் கடையிலும், விளையாட்டு மைதானத்திலும், கொண்டு போய் சேர்க்காமல் தடுத்து நிறுத்தி இருக்கின்றன.. போப் எடிசன் ஆகியவர்களுடன் பழகவும் மில்டன் சேக்ஸ்பியர், ஷெல்லி, முதலியவர்களுடன் கூடிக்குலாவவும் வழியைக் காட்டியவை நூல்களே” என்கிறார் தாமஸ்கோ.

ஒரு நூல் இதயத்திலிருந்து வெளிவந்திருந்தால், அது மற்ற இதயங்களுக்குள் புகுந்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. நூல் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை போன்றது என்கிறார் எச். மான்.

உலகில் சாகாவரம் பெற்ற பொருள் புத்தகம்தான் என்பதனை என்றும் நினைவில் வைக்க வேண்டும். நூல் மட்டும் இல்லையென்றால் கடவுள் இல்லை. நீதி இல்லை. இயற்கையின் விஞ்ஞானம், அசையாமல் நின்றுவிடும்.

“என மனத்திற்கு உகந்த நூல்களை மட்டும் கொடுத்துவிட்டு என்னை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் நான் கஷ்டப்பட மாட்டேன்” என்று கூறுகிறார் மாசினி.

“சுவாமி விவேகானந்தரின் நூல்கள் அனைத்தும் மிகவும் ஆராய்ந்து படித்திருக்கிறேன். அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் மீதுள்ள அன்பு ஆயிரம் மடங்கு பெருகி இருக்கிறது” என்கிறார் காந்தியடிகள்.

வாழ்க்கையில் ஏற்படும் வியப்பு, திகைப்புகளைக் கணக்கிடுகிறது. சமூகத்தின் இலட்சியங்களின் உயிர் நாடியாக இருக்கிறது. அவை எதுவென்றால் நூல்கள்தான் என்று உறுதியாகக் கூற முடியும்.

நல்ல நூல்களே நம்மைச் செம்மைப்படுத்திச் செழுமையாக்கும். சில நூல்களை திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் சிந்திக்க முடியும், செயல்படவும் இயலும்.

நம்மை நல்ல மனிதனாக்குவது நூல்கள்தான். பாரதியாரின் எழுச்சியூட்டக் கூடிய பாடல்கள், சுதந்திரம் பெறுவதற்கு உந்து சக்தியாக இருந்தது என்பது வெளிப்படையான உண்மை.

நமது வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், தேவையானது எது என்று தேர்ந்தெடுத்துக் கொண்டு அதை மட்டுமே படிக்க வேண்டும். வேண்டாதவற்றை ஒதுக்கிவிடுவது நல்லது. அவசிய மற்றதைப் படித்து நம்முடைய நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது.

முன்னேறுவதற்கு என்னென்ன நூல்களைப் படிக்க வேண்டும் என்பதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது முக்கியம்.

வாழ்க்கை வரலாறு படிப்பது நமது குறைகளைப் போக்கிக் கொள்ளவும், நிறைகளை வளர்த்துக் கொள்ளவும், பெரிதும் துணைபுரியும். அந்தந்தத் துறையில், மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கை வரலாறு நம்மை உற்சாகப்படுத்தும்.

நமக்குப் பிடித்தமான நூலைப் பணம் கொடுத்து வாங்கும் பொழுதுதான் அதில் அக்கறை ஏற்படும். ஒரு வரி விடாமல் படிக்க வேண்டும். நமக்குப் பிடித்தமான கருத்துக்களை அடிக்கோடு போடுவது நல்லது.

மீண்டும் ஒருமுறை அந்த நூலைப் படிக்கும் பொழுது அந்தக் கருத்துக்கள் மனதில் பதியும். செயல்வடிவம் பெறத் தூண்டும். வாழ்வியல் நூல் களைப் படிப்பதன் மூலம்தான் வாழ்வில் வெற்றியைப் பெற முடியும்.

வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருவது வாழ்வியல் நூல்கள்தான் என்பதனை என்றும் நினைவில் வைத்து கொண்டு செயல்பட்டால் நிச்சயம் வெற்றி நமக்கேதான்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2003

திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கம்
நிறுவனர் பக்கம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
திறந்த மனமே சிந்தனை தெளிவாம்
உங்கள் மகளை/ மகனை படிப்பில்-பண்பில் சிறந்தவராக வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
வாணவராயர் சிந்தனைகள்
வெற்றி நிச்சயம்
பொதுவாச் சொல்றேன்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றிமுகம்
உள்ளத்தோடு உள்ளம்
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு!!
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் மாணவர் பக்கம்
வெற்றியின் மனமே……
எமது பண்பாடு
நூல்கள் வெற்றியின் தூண்கள்
கேள்வி பதில் பகுதி
மாற்றம் மலரட்டும்
உங்கள் எடையை குறைக்க வேண்டுமா? கேளுங்கள் என்னை