Home » Cover Story » வெற்றிமுகம்

 
வெற்றிமுகம்


பில் கேட்ஸ்
Author:

மாவீரன் லெனினின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. அப்போது அவருக்கு வயது 10. முதல் முதலாய் ஒரு படகில் ஏறிக்கடலில் போகும் வாய்ப்பைப் பெறுகிறார் லெனின். பத்து வயதுச் சிறுவனை கடல் பயணம் பரவசப்படுத்தியிருக்க வேண்டு மல்லவா? அதுதான் இல்லை!

அந்தப்படகில் கரியை அள்ளிப்போடும் தொழிலாளியை கவனித்துக் கொண்டிருந்தார் லெனின். “இவர் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார். இவரது பணிச் சுமையைக் குறைக்க என்ன வழி” என்று யோசிக்கத் தொடங்கி விட்டார்.

மக்கள் தலைவராய் மலரப் போகிறார் என்பதற்கு பருவத்திலேயே அடையாளம் தெரிந்தது. அப்படித்தான் பில்கேட்ஸின் வாழ்க்கையும்.

தந்தை வழக்கறிஞர். தாய் ஆசிரியை. சிறுவனாய் இருந்த பில்கேட்ஸிடம், என்னவாகப் போகிறாய் என்று யாராவது கேட்டால் “பளிச்” சென்று பதில் வருமாம் “கோடீஸ்வரன்” என்று.

இன்று உலகக் கோடீஸ்வரர்களுக்கெல்லாம் கோடீஸ்வரராக உயர்ந்திருக்கும் பில்கேட்ஸிடம் வெற்றிமுகம், பள்ளிப்பருவத்திலேயே கம்ப்யூட்டர் மீது கொண்ட காதலால் ஆரம்பமானது.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது, பத்தாம் வகுப்பு படிக்கும் தன் தோழன் பால் உடன் சேர்ந்து கம்ப்யூட்டர் பயிலத் தொடங்கியவர் பில்கேட்ஸ்.

புரோகிராமர்களாக வருவதில் அந்த வயதிலேயே அளவு கடந்த ஆர்வம் அவர்களுக்கு.

பால்-பில் கூட்டணி கம்ப்யூட்டர் துறையில் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.

கம்ப்யூட்டர் நிறுவனம் தொடங்கும் கனவில் இருவரும் இருந்தபோது, எமராபர்ட்ஸ் என்பவர் MITS நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் மைக்ரோ ப்ராஸஸருடன் கூடிய கம்ப்யூட்டரை நன்றாக உருவாக்க விரும்பினார். அடிப்படையில் குறைகள் நிறைந்திருந்த அந்த “ஆல்பர்” பால்-பில் கவனத்தைக் கவர பேஸிக் அடிப்படையில் புரோகிராம் வடிவமைக்க முன்வந்தார்கள். வெற்றியும் பெற்றார்கள்.

இந்த இருவரும் இணைந்து தொடங்கியது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம். புதிய திறமை களை அரவணைத்து பெருமளவில் வளர்ந்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மைக்ரோ சாஃப்ட் வளர்ந்தபோது பில்கேட்ஸின் வயது இருபது.

ஒவ்வொரு முயற்சியிலும் ஏராளமான சறுக்கல்கள் எதிர்கொண்டன பில்கேட்ஸை. சற்றும் தளராத உறுதியுடன் புதிய புதிய இலக்குகளை வகுத்துக்கொண்டு அவற்றை நோக்கி முன்னேறிக்கொண்டே இருந்தார் அவர்.

அப்படி உருவானவைதான் ஆப்பிள் I, ஆப்பிள் II, Cobol, Pascal, Fortran போன்றவை.

கம்ப்யூட்டர் துறையில் தனக்கு முன்னரே கொடி நாட்டிய நிறுவனங்களைக் கூட புறங்காணும் விதமாய் பில்கேட்ஸின் உழைப்பும் திட்டமிடலும் இருந்து வந்துள்ளன.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக் கும் வேளையில் இந்தியாவில் 1100 நிறுவனங்களின் போக்கையும் நிலையையும் ஆய்வு செய்யும் சிட்ரஸ் 100 என்கிற நிறுவனத்தில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு பில்கேட்ஸ் சமீபத்தில் வருகை தந்ததை யடுத்து அந்நிறுவனத்திற்கு அங்கீகாரம் கூடியதாகவும், இந்தியாவில் முதல்நிலையைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.

குறிப்பாக கடந்த அக்டோபர் 31 – நவம்பர் 30க்குள் நடுவிலும் மைக்ரோசாஃப்ட் மலை போல் நிமிர்ந்து நிற்க முக்கியக் காரணம், பில்கேட்ஸின் வருகை என்கிறது அந்த ஆய்வு.

ஒரு தனி மனிதனின் மீது வணிகச் சந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அந்த நிறுவனத்தை நிகரற்ற உயரங்களுக்கு உயர்த்தும் என்பதற்கு இது இணையற்ற எடுத்துக்காட்டு.

பில்கேட்ஸ் – ஒரு கோடீஸ்வரரின் சாதனைச் சரித்திரம் என்னும் தலைப்பில் திரு ஆர்.பி.சாரதி எழுதிய புத்தகம், மதி நிலையத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

இந்த நூலிலும் பில்கேட்ஸ் வாழ்வு குறித்த அரிய தகவல்கள் அடங்கியுள்ளன. இதோ… அவற்றிலிருந்து சில பகுதிகள், உங்களுக்காக…….

கூட்டுமுயற்சி

பில்கேட்ஸ் என்ற மனித எந்திரம் போதும் என்று ஓய்ந்து விடுவதே இல்லை.

ஐபிஎம் கம்ப்யூட்டர் உலகத்தின் மாபெரும் சக்தி. கம்ப்யூட்டரை வருங்காலத்துக்கு அழைத்துச்செல்ல வடிவமைக்கும் நிறுவனம்….. வசதி நிறைந்த நிறுவனம், பில் கேட்ஸுக்கு விண்டோஸால் ஓரளவு புகழ் கிடைத்த போதிலும் எதிர்பார்த்த மிகப்பெரும் அளவுக்குப் பணம் கிடைக்கவில்லை.

பில்கேட்ஸ் புத்திசாலி. மீண்டும் ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து தொழில் முன்னேற்றங்காண விரும்பினார். ஐபிஎம் நிறுவனக் கம்ப்யூட்டர்கட்கு விண்டோவைப் பயன்படுத்தினால் நல்ல இலாபம் கிடைக்கும். ஆனால் ஐபிஎம் அதற்குத் தயாராயில்லை. மறுத்து விட்டது.

பில்கேட்ஸ் தம் மைக்ரோ ஸாஃப்ட் நிறுவனம் தனிநபர் கம்ப்யூட்டர் துறையில்

பெற்றுள்ள அனுபவத்தையெல்லாம் விளக்கிப் பார்த்தார். ஐபிஎம்மின் பிடிவாதம் தளர்ந்தது.

அவர்கள் விரும்பும் வகையில் விண்டோஸ் மாதிரியை மாற்றியமைக்கவும், இரு நிறுவனங்களும் இதில் இணைந்து செயல்படுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டு முயற்சியின் விளைவுகள் ஓஸ்/2 ((os/2) ) மற்றும் ப்ரஸென்டேஷன் மானேஜர் (Presentation manager) ஓஸ்/2 தனிநபர் கம்யூட்டருக் காக வடிவமைக்கப்பட்டது.

ஓஸ்/2 (os/2) மாதிரியில் வரைகலை இயக்கங் களுக்காக அமைக்கப்பட்டதே ப்ரெஸன்டேஷன் மானேஜர்.

பிஸி மாகஸீனின் ((PC magazine) சாதாரண மாகப் படைப்பாளிகட்கு அளிக்கப்படும் விருது 1986ல் விதிவிலக்காகப் பில் கேட்ஸுக்கே வழங்கப்பட்டது.

பில்கேட்ஸைத் தோல்விகள் எப்படித் தளரச் செய்வதில்லையோ அப்படியே விருதுகளும், வெற்றிகளும் மயக்கத்தில் ஆழ்த்திவிடுவதில்லை.

மைக்ரோஸாஃப்ட் குதிரையும் லோடஸ் குதிரையும் கம்ப்யூட்டர் களத்தில் வெகு வேகமாக முன்னே பின்னே என்று ஒடிக்கொண்டிருந்தன. மைக்ரோஸாஃப்ட் பெறும் சிறிய அளவிலான வெற்றிகள் பில்கேட்ஸின் வானக் கனவுகட்குப் போதுமானவையாக இல்லை. மேலும் லோடஸ் மைக்ரோஸாஃப்டின் ஜப்பானிய களத்திலும் காலைவைக்கத் தொடங்கிவிட்டது.

லோடஸ்ஸை அதன் துறையிலேயே சந்திக்கும் எண்ணத்துடன்தான் பில்கேட்ஸ் தம் எக்ஸெல் மாதிரியின் விண்டோ வடிவங்களைத் திறமையாகத் திட்டமிட்டார்.

பில்கேட்ஸ் எக்ஸெல் மாதிரியைத் தனிநபர் கம்ப்யூட்டருக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றியமைக்கும்போது மிகவும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார். எக்ஸெல்லை விண்டோஸுக்குப் பயன்படுத்திய போதும் தொலைநோக்குடனேயே செயல்பட்டார்.

அவர் நிறுவனம் உருவாக்கும் ஒவ்வொரு மாதிரியும் பல படைப்புகட்கும் உதவும் வகையில் எளிதில் மாற்றியமைக்க ஏதுவாகவும் செய்யப் பட்டது அவர் வெற்றியின் இரகசியம். அவர் உபயோகிப்பாளர் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆலோசனைகளைப் புறக்கணிப்பதில்லை.

விண்டோஸுக்கான எக்ஸெல்லின் வேகம் போதாது என்ற விமரிசனத்தையடுத்து அதன் வேகத்தை விரைவுபடுத்த விரும்பினார். எக்ஸெல்லை 1-2-3 நிலைகளிலான கோப்புகளை (Files) நேரடியாகப் படிக்கவும், எழுதவுமான வகையில் மாற்றியமைக்கத் திட்டமிட்டதும் வாடிக்கையாளர் வேண்டுகோளுக்காகத்தான்!

விண்டோஸின் வேகம் இரட்டிப்பாகும் வகையில் பில்கேட்ஸ் மைக்ரோ ஸாஃப்ட்டை முடுக்கிவிட்டார்.

மைக்ரோஸாஃட் பணியாளர்கள் மிகச் சிறந்தவர்கள்.

மைக்ரேஸாஃப்ட் விற்பனை உலகில் நம்பர் 1.

மைக்ரோஸாஃப்டின் இலாபமும் நம்பர் 1 என்ற நிலைக்குத் தம் நிறுவனத்தைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் பில்கேட்ஸ். பில்லின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர் வெற்றிக் கனியை இந்த முறை அதிகச் சிரமமின்றிப் பறித்துவிட்டார்.

புதிய ஹார்டுவேர்ஸ்களுக்கு மிகவும் பொருத்தமானது எக்ஸெல் பயன்பாட்டுக்கான பயிற்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. வேறு மாதிரிகளைப் பயன்படுத்தியவர்கள் கூட எக்ஸெல் எளிதாகவும், திறமையாகவும் செயல் படுவதை உணர்ந்து எக்ஸெல் மாதிரிகட்கு மாற்றிக்கொள்ள ஆரம்பித்தனர்.

விருதுமழை

கம்ப்யூட்டர் உலகத்தில் பில்கேட்ஸின் சாதனை ஆயிரத்தோடு ஒன்று ஆயிரத்தொன்று என்று ஆகிவிடவில்லை. ஆயிரத்துள் ஒருவரின் சாதனையாக அது முன்னின்றது. கம்ப்யூட்டர் பந்தயத்தில் ஆங்காங்கு தோன்றிய பல கம்ப்யூட்டர்கள் தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் தரமான, ஒருங்கிணைந்த வகையில் ஒருசில கம்ப்யூட்டர்கள் கம்ப்யூட்டர் உலகை மாற்றிய வகையிலான பெருமையில் மைக்ரோஸாஃப்டுக்கு முக்கியப் பங்குண்டு. பில்கேட்ஸுக்கு முக்கியப் பங்குண்டு.

அது மைக்ரோஸாஃப்டுக்கு விருது மழைக்காலம்!

பிஸி வேர்ல்ட் PC World மவுஸை (mouse) யும், ஃபடைட் ஸ்டிமுலேடரையும் Flight Stimulator பாராட்டியது.

பிஸி மாகாஸின் PC Magazine வேர்டு 2.0 (World 2.0)) மற்றும் விண்டோஸுக்கு (Windows) விருதுகள் வழங்கியது.

ஸாஃப்ட்வேர் பப்ளிஷர்ஸ் அஸோஸி யேஷன் (Software Publisher) ஆஸ்கார் விருதுகளை அளித்தது.

மிகச் சிறந்த உற்பத்தித் திறனுடன் கூடிய படைப்பு (Best productive product) மிகச் சிறந்த நிர்வாகத் தயாரிப்பு (Best productive product) ஆகிய துறைகட்கான பரிசுகளையும் அது அள்ளிச் சென்றது.

விண்டோஸ் மிகச் சிறந்த தொழில் நுட்பத் தயாரிப்பு. (Best Technical) product உபயோகிப் பாளர்க்கான இன்டாஃபேஸ் (Best user interface), மிகச் சிறந்த ஸாஃப்ட்வேர் என மூன்று பரிசுகளை வென்று பெரும் புகழ் ஈட்டியது.

மேலும் 1985ன் மிகச்சிறந்த என்வரைன் மென்ட் (Environment) என்ற தகுதியையும் பெற்றது.

பில்கேட்ஸ் என்ற இளைஞர் தம் முப்பதாவது வயதில் உலகின் தலைசிறந்த கோடீஸ்வரர்களுள் ஒருவராகவும் ஆகிவிட்டார்.

பில்கேட்ஸ் போன்ற தொழில் எந்திர மனிதன் மனதில் படிக்கும் ஆர்வம் குறையவே இல்லை.

பில்லுக்கு எந்தவிதமான புத்தகங்கள் பிடிக்கும்?

வெற்றிக் கதைகள், வாழ்க்கை வரலாறுகள்.

நெப்போலியன் போனபார்ட் என்ற பிரெஞ்சு மாவீரன் கதை பில்லுக்கு மிகவும் பிடிக்கும். ஆங்கிலப் பேரரசையே சில காலம் அலற வைத்தவன் அவன்!

தோல்வி முகத்திலும் எதிர்கால வெற்றியை எட்டிப் பிடித்த ஆற்றல் பெற்றவர்; ஆனாலும் நுனிக்கொம்பில் ஏறி நின்ற பிறகும் சிந்திக்காமல் இன்னும் மேலே ஏற முயன்ற போதுதான் மீளமுடியாதபடி படுபாதாளத்தில் வீழ்ந்தான்.

அவன் வீழ்ச்சி அவன் வெற்றிகளை மறைத்து விட முடியாது.

பில் பலர் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருந்தாலும் நெப்போலியனைப் பற்றித்தான் அதிகம் படித்திருந்தார்.

நெப்போலியனை அடுத்து பில்லின் மன பிலியனில் இடம் பிடித்தவர் லியனார்டோ டாவின்சி.

அவர் அரசரல்லர்… வீரரல்லர்… கவிஞரல்லர்… அரசியல்வாதியோ அறிவியல் அறிஞரோ அல்லர்… கலைஞர்…

கம்ப்யூட்டர் விஞ்ஞானியின் நாட்டங்கள் நெப்போலியன் மீதும், டாவின்சி மீதும் படிந்து இருந்ததைக் கொண்டே பில்லின் பன்முகப் பேரறிவை அறிந்து கொள்ளலாம்.

அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் அன்று உலக மும்மூர்த்திகளுள் ஒருவர். போர்க்காலத்தில் வீரம் அவருக்கு வழிகாட்டி. அமைதிக்காலத்தில் சாந்தம் அவர் இலட்சியம்.

இரண்டாம் உலகப் போர் நெருக்கடியின் போது சர்ச்சிலின் பிரிட்டனே ஆடிப் போன போது நாஜிகளின் கொட்டத்தை அடக்கியவர் ரூஸ்வெல்ட்! ஹிட்லரின் வீழ்ச்சிக்கு… பாசிஸ முசோலினியின் வீழ்ச்சிக்கு ரூஸ்வெல்டின் பங்கு அற்ப சொற்பமானதல்ல.

உலக அமைதிக்கென ஐக்கிய நாடுகள் சங்கம் அமைப்பதில் அவர் ஆற்றிய பங்கு பிராயச் சித்தமாகிவிட்டது. ரூஸ்வெல்ட்டின் வாழ்க்கை பில்லுக்கு ஒரு தலைவரின் இரு முகங்களைக் காட்டியது.

பில் விரும்பிப் படித்த ஆல்பர்ட் ஸ்லோவன் (Albert sloan) எழுதிய பொது மோட்டார்

தொழிலில் என் வாழ்க்கை (My years at general motor) என்ற நூலில் கண்ட வெற்றிகரமான முயற்சிகள் அவர் தொழில் மேம்பாட்டுக்கு வழிகாட்டியது.

போட்டோக்களும், படங்களும் மிகுந்த பெட்மன் நூலகமே அவருக்குச் சொந்தமானது.

(முகங்களின் சந்திப்பு தொடரும்…)

 

1 Comment

  1. saro says:

    நானும் ஒரு நாள் வெற்றியாளன வருவேன்
    நதிகள் இணைப்பில் ஒருகிணைப்பு தேவை
    அதில் வெற்றி பெற்று இந்தியாவின் வளம் காண்பாய்.

Post a Comment


 

 


January 2003

திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கம்
நிறுவனர் பக்கம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
திறந்த மனமே சிந்தனை தெளிவாம்
உங்கள் மகளை/ மகனை படிப்பில்-பண்பில் சிறந்தவராக வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
வாணவராயர் சிந்தனைகள்
வெற்றி நிச்சயம்
பொதுவாச் சொல்றேன்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றிமுகம்
உள்ளத்தோடு உள்ளம்
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு!!
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் மாணவர் பக்கம்
வெற்றியின் மனமே……
எமது பண்பாடு
நூல்கள் வெற்றியின் தூண்கள்
கேள்வி பதில் பகுதி
மாற்றம் மலரட்டும்
உங்கள் எடையை குறைக்க வேண்டுமா? கேளுங்கள் என்னை