Home » Articles » உறவுகள் உணர்வுகள்

 
உறவுகள் உணர்வுகள்


admin
Author:

அறிவுக்கும் உணர்வுக்குமிடையேயான தொடர்பு ஒரு இதழில் சொல்லி முடித்துவிடக்கூடியதல்ல…

இந்த எண்ணம் எனக்கு ஏற்படக் காரணம் மைதிலி. சமீபத்தில் என்னைச் சந்தித்த மைதிலிக்கு வயது நாற்பத்தெட்டு. சுய பச்சாதாபமும், விரக்தியும் என்னை வாட்டுகின்றன என் சொல்லாமல் சொல்லிய கண்கள். அது நூறு சதவீதம் உண்மைதான் என பறைசாற்றிய பருத்த உடம்பு.

நான்கு மணி நேரம் தொடர்ந்து, தன் முப்பத்து நான்கு வருட தாம்பத்திய வாழ்கையின் கொடூர முகங்களையெல்லாம் கிழித்து, கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தோடு பேசிய அவரைப் பார்க்கப் பார்க்க எனக்கு மூச்சு வாங்கியது.

தனிமையில் சிந்தித்துப் பார்த்தபோதுதான், மைதிலி மட்டுமல்ல தொண்ணூறு சதவீத மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் இனிமையைத்தொலைத்துவிட்டு துவள்கிறார்கள் என்பது புரிந்தது. காரணம், இந்த ” அறவு – உணர்வு” விகிதார குளறுபடிதான்.

சென்ற இதழில் சொல்லியிருந்ததைப் போல சினிமா, டிராமா பிரச்சனையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை. நாற்பது வருடம், ஐம்பது வருடங்களாக புரையோடி, புண்ணாகிவிடுகிற அளவிற்கு தீவிர விளைவுகள் ஏறபடவும் காரணமாகிவிடுகிறதே.. எப்படி?

“பதினாலு வயசுல கல்யாணமாகி வந்தேன். சொப்பு வைச்சு விளையாடற வயசிலயே நிஜமான சமைலையும் கத்துக் கொடுத்துட்டதால எனக்கு எல்லா வேலையும் தெரிஞ்சிருந்தது. காலையில் கரண்டி, மதியம் தவா, ராத்திரி வாணலின்னு வாழ்க்கை போயிட்டிருச்சு.

இருட்டினதுக்கப்புறம்தான் அவர் முகத்தையே பார்க்க முடியும். எனக்கு கை, காலெல்லாம உதறும். ஏதாவது பேசமாட்டாரான்னு அவர் முகத்தையே பார்த்துட்டிருப்பேன். வெறும் பதினாலு வயசுல, நான் பயந்து போயிருக்கறப்ப, இவர்தானே அன்பா பேசி புரிய வைக்கனும். அப்படியெல்லாம் எதுவும் செய்யமாட்டாரு.

என்னையே பார்த்துட்டிருப்பாரு. நானா பக்கத்துல போய் பேசனும்னு நினைப்பாரோ என்னவோ, அப்புறம் ஒன்னும் பேசாம போய்டுவாரு. இல்ல, சில நாள் நேரா வந்து என்னைத் தொடுவாரு. எனக்கு எப்படியோ இருக்கும். கூச்சத்துல கொஞ்சம் தள்ளிப் போவேன். உடனே, எழுந்து போயிடுவாரு.

நான் தப்பு செய்திட்டேனா. இப்ப என்ன சொல்லி சமாதானப்படுத்தறதுன்னு எனக்குள்ளேயே யோசிச்சிட்டு, அழுதிட்டிருப்பேன். பெரும்பாலான ராத்திரிகள்ல இதே அழுகைதான் தொடரும்.

காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்து சமையல், வீட்டு வேலை. கூட்டுக் குடும்பங்கறதால கிட்டதட்ட பணிரெண்டு பேர்க்கு நான் சமையல் செய்யணும். இவர் காலைல போனா, சாயங்காலம் இருட்டினப்புறம்தான் வருவாரு.

அதிகாலைலேர்ந்து வேலை செஞ்சிட்டு சாயங்காலம் கொஞ்சம் ஓய்வா இருக்கறப்ப ரேடியோ கேட்பேன். அந்தக் காலத்துலதான் டி.வி இல்லையே.. ஒரு நாள் சாயங்காலம், அவர் ஃப்ரெண்டோட வந்தாரு. ஏதோ ‘தாம்தூம்’ னு நுழைஞ்சவரு நான் உட்கார்ந்து ரேடியோ கேட்கறதைப் பார்த்ததும் சட்டுனு அதை ஆஃப் பண்ணிட்டு ‘ஒரு குடும்பப் பொம்பளைக்கு விளக்கு வெச்சதுக்கப்புறம் என்ன பாட்டு வேண்டிக் கிடக்குது’னு கேட்டாருபாருங்க. எனக்கு ரொம்ப அவமானமாயிடுச்சு… அதுவும் மூணாவது ஆள் முன்னாடி.. சொன்னா நம்ப மாட்டீங்க, அன்னிக்கு விட்டதுதான், இதுவரைக்கும் ரேடியோ கேட்கற பழக்கத்தையே மறந்துட்டேன்.

ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணி இந்த அல்ப விஷயத்திற்காக இப்படி தாரை தாரையாக கண்ணீர் விடுவாளா என்று நீங்கள் கேட்கலாம். உணர்வுகளுக்கு வயதில்லை, கௌரவம் பார்க்கும் தன்மையில்லை.

ஐம்பது வயதில் வேண்டுமானால் “கிருஷ்ணா, ராமா” என்றிருக்கலாம். அதுகூட கட்டாயமில்லை. அப்படியிருக்க, ஒரு பதினாலு வயது சிறுமியின் உணர்வுகள், ஆசைகள், கனவுகள், நசுக்கப்பட்ட அந்தக் கணம் இன்னும் மனதை விட்டு அகலாமால் ஆழப்பதிந்துவிட்டது.

கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட தகவல் போல பட்டனைத் தட்டியதும் பளிச்சென்று முன்னே வருகிறது. ஐம்பது வருட தாம்பத்திய வாழ்க்கை ஆட்டம் காண காரணம், அஸ்திவாரம் சரியில்லாதது போனதுதான்.

நான் பட்டுப் புடவையோ, நகையோ எதிர்பார்க்கலங்க, அவர் ஒரு முழம் பூ வாங்கிட்டு வருவாரானு ஏங்குவேன். அக்கம் பக்கத்து பொண்ணுங்க தலையில வெச்சுட்டுப் போறப்ப பொறாமையா பார்ப்பேன். ஆனா, இவர் ஒரு நாள் கூட எனக்கு வாங்கித் தந்ததில்ல. நானே வாய்விட்டு கேட்டாகூட, உப்பு, புளி பிரச்சனையே பெரிசா இருக்கு. உனக்கு பூதான் குறைச்சல்..? இந்த பதில்தான் வரும். இந்த அவமானத்துக்கு பயந்தே நான் கேட்கறதை நிறுத்திட்டேன்.

இதை மைதிலிதான் சொன்னாரா, நம்ம வீட்டுக் கதை மாதிரி இருக்கே என உங்களில் பலர் நினைக்ககூடும். சரியா?

பணம், பணம், பணம்னு அடுத்த வேளை தேவைகளுக்காக பணத்தைத் தேடி அலையற கொடுமை எங்களுக்குதாமா தெரியும். எதிர்கால வாழ்க்கை எப்படியிருக்கும்? என்ன செய்யப்போவோம்ங்கிற பயத்துல நான் வேலை வேலைனு அலைஞ்சிட்டிருக்கிற சமயத்துல பூ, பொட்டுன்னு வாங்கித்தரவா முடியும்? சினிமாவுல வர்ற மாதிரியே நிஜ வாழ்க்கையும் அமையுமா?

கணவர்களின் வாதம் சரிதான். வாழ்க்கை சினிமாவாகிட முடியாதுதான். ஆனால், ஐந்து நிமிட, பத்து நிமிடக் காட்சிகளுக்குக் கூடவா இடமிருக்கக்கூடாது?

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இடம் தராமல் பணம் சம்பாதிக்க வேண்டியது அவசியம் தான். கடமைதான். ஆனால், சதா கணக்கீடுகளுக்குள்ளேயே (Calculation) புதைந்திருந்தால் உணர்வுகள் மரத்துப் போய்விடாதா>

ஒரு சின்ன சிரிப்பும், இதமான பேச்சும், ஒரு முழ பூவும் பல பிரச்சனைகளைத் தடுத்துவிடுமே. மயிலிறகால் வருடும். இந்த மெல்லிய உணர்வுகளின் சந்தோஷம் பல அரிய அறிவுக் கணக்குகளைத் தீர்க்க எளிதாய வழி சொல்லுமே. மனதிற்குள் புரையோடிப்போன புண்களை வைத்துக்கொண்டு வாழும் மைதிலிகள் மறைந்து விடுவார்களே…

அறிவை வைத்துக்கொண்டு உணர்வுகளை மறந்தவர்களின் கதை இப்படியென்றால், இதற்கு நேர் மாறாய் இருப்பவர்களின் நிலைமை..?

குடும்பத்தில் குழந்தை பிறந்தால் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான். ரேவதி வீட்டிலும் அந்த சூழ்நிலையின் தன்மை மணம் பரப்பிக் கொண்டிருக்க, அப்படியே ரேவதியை உரிச்சு வைச்சிருக்கு.. என்று சொல்ல உணர்வுகளை சமாளிக்க முயன்றும் தோற்றுப் போனான் ஹரி.

குழந்தை அப்பா போல்தான் இருக்க வேண்டும். எப்படிச் சொல்லலாம் இப்படி…? என ஆரம்பித்த பேச்சு தாறுமாறாய் திரும்பியது. இரண்டு வருடங்களுக்கும் மேலாய் கணவன் – மனைவி பிரிந்திருக்கும்படி ஆகிவிட்டது என்றால் பாருங்களேன்.

படித்தவர்கள் கூட இப்படி நடந்து கொள்கிறார்களே ஏன்? என்று கேட்டால் படிப்புக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் எந்தத் தொடர்புமில்லை. நம்மனம் கோணலாக யோசிக்கும்போது அதைப்பிடித்து நேரே செலுத்தும் பக்குவம் கைவர வேண்டும்.

என் குழந்தை என்னை மாதிரி இருக்க வேண்டும்.. என மனம் நினைக்கும் வரை தவறில்லை. என்னை மாதிரி இல்லையே, இது எனக்குப் பிறந்ததா…? என்ற கேள்வியைக் கேட்கும்போது அதை அதட்டி வழிக்குக் கொண்டுவரும் பக்குவம் இல்லையென்றால், நீங்கள் அறிவைப் பயன்படுத்தவில்லை என்றுதானே அர்த்தம். அறிவுப்பூர்வமாய் சிந்திக்கும் யாருக்கும் இப்படி அபத்தமான கேள்விகள் தோன்றாது.

உணர்வுக்கோ, அறிவுக்கோ அடிமையாகிவிடாதீர்கள். இரண்டிலும் சம பாதியை அதுவும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே மனிதனாக முடியும். புரியும்படி சொல்ல வேண்டுமானால்,

“உணர்வு பாதி, அறிவு பாதி கலந்து செய்த மனிதராயிருந்தால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது..!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2002

பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
மாணவர் பெற்றோர் பக்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
புதிய விற்பனை உத்திகள்
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா!
மனம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
மனசுவிட்டுப் பேசுங்க
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
ஆசிரியருக்கு கடிதம்
வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
கனவே கண் வளராய்