![]() |
Author: புருஷோத்தமன்
|
அப்படி இப்படின்னு டிசம்பர் மாசம் வந்தாச்சு! இப்பத்தான் 2002 புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன ஞாபகம். அதுக்குள்ளே 2003 வரப்போகுது. காலண்டரைக் கிழிக்கறது தொடர்பா வாரியர் சுவாமிகளின் விளையாட்டாச் சொன்னார், “காலம் டர் – டர் ன்னு கிழியறதுக்குப் பேர்தான் காலண்டர்” அப்படீன்னு.
நான் பொதுவாச்சொல்றேன், காலண்டர் இருக்கிற தேதியிலேயே நாமல்லாரும் இருக்கோமா? கிடையாது. இப்ப, தன்னம்பிக்கை அலுவலகத்தையே எடுத்துக்குங்க. நவம்பர் 1-ம் தேதியே டிசம்பர் மாத இதழுக்கான வேலை தொடங்கறாங்க! அப்ப, அவங்களுக்கு நவம்பரிலேயே டிசம்பர் வந்தாச்சு. ஏன்னா இலக்கு நிர்ணயிச்சாச்சு!
நம்ம ஜனாதிபதி அப்துல்கலாம், இப்ப 2002 – லியா இருக்காரு? 2020 – லே இருக்காரு. அதுக்குள்ள என்ன என்ன செய்யணும்னு திட்டமிட்டு தொலைநோக்கோட பார்க்கிறாரு.
நான் பொதுவாச்சொல்றேன், ஒரு மாசம் முன் கூட்டி யோசிக்கிற பத்திரிக்கைகாரங்க, ஒரு வருஷம் முன்கூட்டி யோசிக்கிற வணிகர்கள்னு பட்டியல் நீண்டுகிட்டே போறது பெரிய விஷயமில்லை. சில வீடுகளிலே காலண்டரை கிழிக்காம விட்டிருப்பாங்க பார்த்திருக்கீங்களா? வாரம், ஏன் மாசக்கணக்கிலேகூட காலண்டர் கிழிக்காம இருக்கிற வீடுகளும் உண்டு.
நான் பொதுவாச் சொல்றேன், மனிதர்களிலேயே பலபேர் அப்படித்தான் கடந்த காலத்திலேயே இருக்காங்க. நிகழ்காலத்துக்கு வேண்டியதை செய்யற மனிதர்கள், இவர்களுக்கு மத்தியிலே, கடந்தகால ஞாபகங்களிலே வாழற மனிதர்கள் பலபேர் இருக்காங்க.
நிகழ்காலத்தில் நம்ம நிலை என்ன? நம்ம எதிர்காலம் எப்படி இருக்கும்?ன்னு எந்தக் கவலையும் இல்லாமல் கடந்தகால கதைகளையே பேசுவாங்க. காலத்தால பின் தங்கியிருக்காங்கன்னு அர்த்தம்.
எல்லோருக்குமே கடந்தகால நினைவுகள் நிச்சயமாக இருக்கும். சோர்ந்திருக்கிற நேரத்திலே மனசுக்கு ஆறுதல் கிடைக்கவும், புத்துணர்ச்சி பெருகவும் பழைய நினைவுகள் உதவும்.
ஆனா, அதுதான் நிலைன்னு நினைச்சு இன்றைய நடவடிக்கைகள் எதிலேயும் ஒட்டாம “இதென்னங்க பிரமாதம்! நான் அந்த ஆபிசிலே இருக்கறச்சே” அப்டீன்னு பலபேர் தொடங்குவாங்க.நிகழ்காலத்தோட ஒத்துபோக முடியாதவங்களாலே மத்தவங்க சாதனையை, சாதனைன்னே ஒத்துக்கு முடியாது. ஓடாத கடிகாரம் மாதிரி உபயோகம் இல்லாம எப்படியாவது சரி செய்தாலும் திரும்பத் திரும்ப தகராறு பண்ணிகட்டு இருப்பாங்க!
நான் பொதுவாச்சொல்றேன், எவ்வளவு வயசானாலும், காலத்தோட ஓட்டத்துக்கு தகுந்த மாதிரி தங்களை புதுப்பிச்சுக்கிட்ட நிறைய பெரியவங்க நதி மாதிரி ஓடிகிட்டு இருக்காங்க.
ஒவ்வொருநாளும் புதுசா பிறக்குது. அதுவும் எத்தனை யுகங்கள்.. நாம அதிகபட்சம் நூறு வயசு இருப்போமா? அதுக்குள்ள பழசாயிட்டா எப்படி? மனச எதிர்காலத்திலேயே வெச்சுகிட்டா நிகழ்காலம் நம்பிக்கையா இருக்கும். இருப்பீங்களா!
நினைத்துப்பார்க்க கடந்த காலம்!
நம்பி நடக்க நிகழ்காலம்
நினைத்து கிடைக்க… எதிர்காலம்!

December 2002



















No comments
Be the first one to leave a comment.