Home » Cover Story » வெற்றி முகம்

 
வெற்றி முகம்


மகாகவி பாரதி
Author:

“நதி நீர் இணைப்பு நாயகன்”

மகாகவி பாரதி

மகாகவி பாரதி… தேசம் சந்தித்த தலைசிறந்த தன்னம்பிக்கையாளர் இவரை தன்னம்பிக்கைச் சிந்தனையாளர் என்று சொன்னால் போதாதது, தன்னம்பிக்கை உயர்வாளர் என்பதே இன்னும் பொருத்தம்.

அத்தனை எதிர்ப்புகளும், இழி மொழிகளும் ஆலவட்டம் சுழற்றிய சூழலிலும் “எத்தனை கோடி இன்பம் வைத்தாய்” என்று இறைவனிடம் நன்றி பாராட்டிய நேர்மறைச் சிந்தனையாளர் பாரதி.

இவர் வாழ்வியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியவர். “பாப்பா பாட்டு” உளவியல் ரீதியில் உணரப்பட வேண்டிய ஒன்று.

பிஞ்சு வயதில் அன்னையை இழந்து தந்தையின் கடும் கண்காணிப்பில் வளர்ந்த பருவம் அது. பத்து வயதாகும்போது, ஒத்த வயதுள்ளவர்களுடன் விளையாடிக் களிக்க தந்தை அனுமதிக்கவில்லை. தோழர்கள் தண்ணீரில் குதித்து, மரத்தில் ஏறிக் களித்து மகிழ்ந்திருக்கும் சூழலில், புத்தகமும் கையுமாய், தனியாய் அமர்த்தப்பட்ட குழந்தைதான் பாரதி. இதை, தன் சுயசரிதையில் எழுதுகிறார்.

ஆண்டொரு புத்தினில் ஆடியும் ஓடியும்
ஆங்கொரு குளத்தினில் நீச்சிலும் பேச்சிலும்
ஈண்டு பன்மரத்து ஏறி இறங்கியும்
என்னோடு ஒத்த சிறுவர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான்
வீதி ஆட்டங்கள் ஏதிலும் கூடிவேன்;
தூண்டு நூற்கணத்தோடு தனியனாய்த்
தோழமை பிறிதின்றி வருந்தினேன்.

என்கிறேன்.

ஒடுங்கியே வளர்ந்த குழந்தையால் உடல் வலிவோடு வாழ முடியவில்லை. உடல் வலுவிற்கும், மன வலிமைக்கும் அரும்புப் பருவத்தில் ஏற்பட்ட சோதனை இது. அதனால்தான் பாப்பா பாட்டை எழுதும் போது முதல் வரியிலேயே “ஓடி விளையாடு பாப்பா – நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்று பாரதி பாடுகிறார்.

இது பாடல் மட்டுமா? பாடமும்தான். சமூக விரோதிகள், சீர்திருத்த வாதிகள், இருவருக்குமே அடிப்படையில் ஒரு ஒற்றுமை உண்டு. வாழ்க்கையின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டவர்கள்தான் இவர்களில் பெரும்பான்மையானவர்கள்.

தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்ககூடாது என்று சிந்திக்கிறவன் சமூக விரோதியாகிறான். தனக்கு கிடைக்காதது மற்றவர்களுக்காவது கிடைக்கட்டும் என்று கருதுபவன் சமூக சீர்திருத்தவாதியாகிறான். அத்தகைய சீர்த்திருத்தவாதி தான் மகாகவி பாரதி.

இந்திய சுதந்திரம் பற்றிப் பாடிய எழுச்சிக் கவிஞர் மட்டுமல்ல பாரதி. சுதந்திர இந்தியா எப்படி அமைய வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொடுத்த சிந்தனையாளரும் கூட.

இன்று திட்டக் குழுக்களும், உயர் மட்டக் குழுக்களும், திரண்டு தீட்டுகிற திட்டங்களையெல்லாம் புறம் காணுகிற அளவு புதுமைச் சிந்தனைகளை அன்றே உருவாக்கியவர் அவர்.

இன்று தேசமெங்கும் பரபரப்பாகப் பேசப்படும் நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்து அன்றே பாரதி ஒரு அரியல் சாசனத்துக்குரிய கவனத்தோடு கவிதையில் எழுதியிருக்கார்.

“வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்”

என்கிறார்.

அதிக அளவு தண்ணீர் பயன்படாத போது தேவை இருக்கும் இடங்களுக்குத் திருப்பிவிடச் சொன்னதால் நதிநீர் இணைப்புச் சிந்தனையின் நாயகனே பாரதிதான்.

இளமைப் பருவத்தில் காசியில் வாழ்ந்தவர் பாரதி. அங்கே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள். அதேபோல் கங்கைக் கரையில் கோதுமை விளைச்சல் அதிகம். தமிழர்களோ அரிசிச் சோற்றிலேயே அதிக கவனம் செலுத்தி, கோதுமையின் ஆரோக்கியவத்தை அந்த நாட்களில் இழந்திருந்திருந்தார்கள்.

கங்கைக் கரையில் வசிப்பவர்களுக்கு வெற்றிலை வேண்டும். காவிரிக் கரைக்கு கோதுமை அதிக அளவில் அறிமுகமாக வேண்டும் என்பதை கண்கூடாகக் கண்ட பாரதி

“கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்”

என்று அனுபவ அடிப்படையில் எழுதுகிறார்.

எல்லாற்றையும்விட, இந்தப்பாடல் குறித்து சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்கள் கூறிய கருத்து குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் யுத்தம் நடந்த நேரம். இமயமலை எல்லைக்குள் சீனப்படையினர் அதிகமாக ஊடுவியிருந்தனர். அவர்கள் தாக்குதலை முறியடிப்பதற்கு இந்திய இராணுவம் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

போர் முடிந்தபிறகு தளபதிகளை அழைத்து பண்டித நேரு கேட்டார், “இமயமலை எல்லையில் ஏன் அவ்வளவு சிரமம்? இந்திய இராணுவ முகாம்கள் அங்கே இல்லையா?” என்று, அதற்கு தளபதிகள் பதில் சொன்னார்கள். “அங்கே நம் வீரர்கள் முகாமிட்டிருந்தார்கள். ஆனால், குளிருக்கு பயந்து எதிரி எவ்வளவு தூரம் ஊடுருவலாமென்று கருதி இவர்களும் முகாமுக்குள்ளேயே இருந்து விட்டார்கள். நம் வீரர்கள் வெளியே போயிருந்தால் சீன வீரர்கள் வருவது தெரிந்திருக்கும். குளிர் காரணமாய் அதிக அளவில் நம் படை போகவில்லை” என்று. இதனை மேற்கோள் காட்டிவிட்டு சிலம்புச் செல்வம் ம.பொ.சி. “இதைத்தானே அன்றே பாரதி சொன்னார். வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்” என்று எனப்பேசுவது வழக்கம்.

தன்னைச் சுட்ட வறுமையின் நெருப்பும், தன்னைத் தங்கம் என்று காட்டிடத்தான் என்பது போலான பெருமிதம் நிறைந்த வாழ்க்கை, மகாகவி பாரதியின் வாழ்க்கை.

புன்னியம் செய்தவர்கள் என்று யாரைப் பாடலாம் என்று பாரதியைக் கேட்டால், அவர் தருகிற பதில் வித்தியாசமானது.

“பக்கத்தில் இருப்பவன் துன்பப்படுவதைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி”

என்கிறார்.

உலகம் மீது ஊற்றெடுக்கும் நேசமும், நிபந்தனையில்லாத பாசமும் பாரதிக்கே உரிய பண்புகள். அதனால்தான்.

“காக்கை குருவி எங்கள் ஜாதி
கடலும் மலையும் எங்கள் கூட்டம்”
என்று அவரால் பாட முடிந்தது.

சமூகப் பொறுப்புணர்வு, கடமையுணர்வு தோல்விகளிலும், துன்பங்களிலும் துவண்டுவிடாத வீம், இவைதான் ஆன்மீகம் என்று புதிய இலக்கணத்தை பாரதி வகுத்திருக்கிறார்.

யோகம் என்றால் என்ன? யாகம் என்றால் என்ன ? ஞானம் என்றால் என்ன? என்று பாரதியிடம் கேட்டால் மற்றவர்களுக்கு உழைப்பது யோகம், மற்றவர்கள் நலனுக்காக துன்பங்கள் தாங்குவது யாகம். யார் எதிர்த்தாலும் பதறாத நிதானம் தான் ஞானம் என்கிறார் பாரதி.

“ஊருக்கு உழைத்திடல் யோகம் – நலன் உற்றிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் – உள்ளம்
பொங்குதல் இல்லாத அமைதி மெய்ஞானம்”

என்கிறார் பாரதி.

வாழும் காலத்தில் அடையாளம் காணப்படாமல் அவதூறுகளுக்கு ஆளானாலும், நெஞ்சுரத்தோடும், நம்பிக்கையோடும், வாழ்வை நேசித்து, மண்ணை நேசித்து, உயிர்களையெல்லாம் நேசித்த மகாகவி பாரதி இலக்கியம் படைத்தவர் மட்டுமல்லவர் இலட்சியம் உரைத்தவர்.

பொருளாதாரத்தின் சின்ன சின்னத் தோல்விகளால் அவரது இலட்சியக் கனலை அணைக்க முடியவில்லை. இதோ.. காலத்தின் பக்கங்களில் மகாகவியின் முகம் வெற்றிமுகமாய் ஒளி வீசுகிறது நிரந்தரமாக!

(முகங்களின் சந்திப்பு தொடரும்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2002

பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
மாணவர் பெற்றோர் பக்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
புதிய விற்பனை உத்திகள்
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா!
மனம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
மனசுவிட்டுப் பேசுங்க
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
ஆசிரியருக்கு கடிதம்
வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
கனவே கண் வளராய்