Home » Articles » இன்றைக்கும் காந்தீயம்

 
இன்றைக்கும் காந்தீயம்


admin
Author:

பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் சிந்தனைகள்

20-ம் நூற்றாண்டின் இணையற்ற மாமனிதராகத் திகழ்ந்தவர் மகாத்மா காந்தியடிகள். சத்தியம், தர்மம், அஹிம்சை ஆகியவற்றின் மேன்மையை அண்மைக் காலத்தில் நிலைநிறுத்திய பெருமை அவருக்கே உரியதாகும்.

“இப்படியும் ஒரு மனிதர் உண்மையில் வாழ்ந்திருக்க முடியுமா!” என்று உலகம் இன்றளவும் எண்ணி வியக்கும் வண்ணம் வாழ்ந்த பெருமை அவருக்கு உண்டு. “என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்” என்றும் “என் வாழ்க்கையே என் செய்தி” என்றும் சொன்ன பெருமையும் அவருக்கு மட்டுமே உண்டு.

“குறிக்கோள் உன்னதமானதாக இருந்தால் மட்டும் போதாது அதை அடைய நாம் கையாளும் மார்க்கமும் உன்னதமானதாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியவர் அவர். அதே போல, எளிமையான வாழ்வும் உயர்வான சிந்தனை மட்டுமே மனிதனுக்கு சிறப்புச் சேர்க்கும் என்றும் அவர் நம்பினார்.

மகாத்மா காந்தி நம் தேசத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவரது செயல், சிந்தனை அனைத்தும் பாரதத்தின் மிகப் பழமையான உணர்வுகளின் வெளிப்பாடாகவே இருந்திருக்கிறது.

“நான் புதிதாக எதையும் சொல்ல வரவில்லை – நான் சொல்லுவது அனைத்தும் ஏற்கனவே இங்கு அனைவருக்கும் தெரிந்ததுதான். சத்தியம், தர்மம், அஹிம்சை எல்லாம் நம் வேதங்களில் சொல்லப்பட்டவைதான் – அவை எல்லாக் காலங்களுக்கும் பொருந்தக் கூடியவையும் ஆகும்” என்று பகிரங்கமாகச் சொன்னார்.

நேற்றைய சிறப்புகளை (Wisdom) இன்றைய சவால்களைச் சந்திப்பதற்கு மிகுந்த விவேகத்தோடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு உன்னத அணுகுமுறையை நமக்குத் தந்த பெருமை அவரைச் சாரும். இல்லை என்றால் அஹிம்சா முறையில் வலுமிக்க ஒரு ஏகாதிபத்தியத்திடமிருந்து ஒரு நாடு சுதந்திரம் பெறமுடியும் என்ற உண்மையை உலக வரலாற்றில் முதன் முறையாக நடைமுறைப்படுத்திக் காட்டி மகாத்மாவால் ஒரு அற்புதத்தை நிகழ்த்தி இருக்க முடியாது.

சத்தியத்தின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை அசைக்க முடியாத ஒன்றாகும். இல்லையேல் “சுதந்திரம்” என்பது உண்மையில் சாத்தியமா? அதை நம் வாழ்நாளில் நாம் காணப்போகின்றோமா என்று எல்லாம் கொஞ்சமும் சந்தேகிக் காமல் லட்சியமே முக்கியம் என்று அயராது போராடியிருக்க முடியாது. மேலும், அது அவருக்கு இருந்த ஆன்ம பலத்தைக் காட்டுவதேயாகும்.

மகாத்மா பழமையில் மூழ்கிப்போயிருந் தாலும், முற்போக்கான சிந்தனைக்கு உரியவராகவும் இருந்தார். தீண்டாமை போன்ற கொடுமையை வாழ்நாள் முழுவதும் கண்டித்தும், எதிர்த்தும் வந்தார். விஞ்ஞானத்தை மகாத்மா ஒருபோதும் எதிர்க்கவில்லை – ஆனால் அதேசமயம் அது மனிதனின் இயல்பான சொரூபத்தைக் கெடுத்துவிட நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.

இன்று மனித வாழ்வு இயந்திரமயமாகி சுயமாக சிந்திக்கவும், துணிச்சலுடன் செயல்படவும் முடியாமல் வலுவிழந்து நிற்கின்ற அவலத்தை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

மகாத்மாவின் “இலக்கு” அரசியல் சுதந்திரம் அன்று. மாறாகப் பொருளாதார மேம்பாடும் அதன் மூலம் ஒரு ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதும் – இறுதியாக ராமராஜ்யமே அவரது இறுதி லட்சியமாகும்.

தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் அவர் ஒழுக்கத்தை வலியுறுத்தி வந்தார். மகாத்மா காந்தி வந்துதான் சுதந்திரப் போராட்டம் துவங்கியதா என்றால் இல்லை. அவர் வருவதற்கு முன்னமே அது துவங்கிவிட்டது. ஆனால், அவர் வருகைக்குப் பிறகுதான் அந்தப் போராட்டம் வலுப்பெற்றது. ஒரு நாடு தழுவிய மக்கள் இயக்கமாக அது உருவெடுத்தது. அதற்குக் காரணம் மகாத்மா காந்தி அவர்கள் வருவதற்கு முன்பிருந்த தலைவர்கள் சதந்திரத்தை அறிவுப்பூர்வமாக மட்டுமே பார்த்தார்கள் – ஆனால் மகாத்மாவோ அதனை உணர்வுப்பூர்வமாகப் பார்த்து மிகச் சாதாரண பாமர மக்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புக் களையும் பிரதிபலிக்கும் வண்ணம் செயல் பட்டதேயாகும்.

மேலும், மகாத்மா அவர்கள் நமக்கு சுதந்திரத்தை மட்டும் பெற்றுத் தரவில்லை. சுதந்திர பாரதம் எப்படி அமையவேண்டும் என்பதற்கும் ஒரு விரிவான செயல் திட்டத்தையும் தந்துள்ளார். ஆனால், நாம் அவற்றை அநேகமாகப் புறக்கணித் ததன் விளைவாக இன்று அனைத்து நிலையிலும் பல சிரமங்களுக்கும் சோதனைகளுக்கும் ஆளாகி, செய்வது என்ன என்று தெரியாமல் மனம் போன போக்கில் போய்க்கொண்டு இருக்கின்றோம்.

உண்மை நிலை இப்படி இருக்க காந்தீயம் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்புடையதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றோம்.

மகாத்மா ஒரு அரசியல் ஞானி – அனைத்தையும் ஒரு ஆன்மீகக் கலப்போடு தத்துவார்த்தமாக பார்த்தார். இன்றைய அரசியல் அறிஞர்களுக்கும், பொருளாதார மேதைகளுக்கும், சமூக சிந்தனையாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இல்லையென்று சொன்னால் உங்களுக்கு சுதந்திரம் வேண்டுமா அல்லது அமைதி வேண்டுமா என்று கேட்டபோது சுதந்திரம் வரும்போது வரட்டும்-அது முக்கியம் அல்ல எனக்கு அமைதி தான் வேண்டும் என்று ஒரு மகாத்மாவால் மட்டுமே தான் சொல்லியிருக்க முடியும்.

ஒரு நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தர காந்தீயம் உதவியிருக்க முடியுமானால் அந்த சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள அது உதவாமலா போகும்?

தேவையற்ற சந்தேகத்தையும், ஆராய்ச்சி யையும் விட்டுவிட்டு எல்லாக் காலங்களுக்கும் ஏற்புடையதாகக் காலத்தையும் கடந்து நிற்கக் கூடியதாக உள்ள காந்தீயத்தைப் பூர்ணமாக முழு நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு இந்தியா உலகிற்கு வழிகாட்ட வேண்டும்.

மகாத்மாவை நாம் நமது தேசப் பிதாவாகக் கொண்டிருப்பது நாம் செய்த பாக்கியம். அறிதான இம் மாமனிதரைப் பற்றி சொல்லும்போது ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் – “இப்படியும் ஒரு மனிதர் இப்பூவுலகில் உண்மையில் வாழ்ந்திருப்பாரா என்று வருங்கால சந்ததியர் நம்பக்கூட தயங்குவர்” என்றார்.

வாழ்க அவரது புகழ்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி