Home » Articles » காவிரி: அறுவடை யாருக்கு?

 
காவிரி: அறுவடை யாருக்கு?


முத்தையா ம
Author:

உழைப்பின் வேர்கள்
கசப்பானவை.
ஆனால், அதன் கனிகள்
இனிப்பானவை.

மாநிலங்கள் மோதிக்கொள்வதும் மழை வந்து சமாதானம் செய்வதுமாக ஆண்டாண்டு காலமாய் தொடரும் காவிரிச் சிக்கல் இந்த முறை எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டு சில நவரச நாடகங்களின் அரங்கேற்றத்திற்கும் காரணமாய் இருந்திருக்கிறது.

கர்நாடக மாநில திரைக்கலைஞர்கள் காவிரி சிக்கலில் போர்க்கொடி தூக்கியதும் தமிழக திரைக்கலைஞர்கள் சொந்த மாநிலத்திற்காக குரல் கொடுப்பதைக் கடமையென உணர்ந்து கூடிப் பேசினர். அதன் விளைவே 12ம் தேதி பேரணி.

“தமிழகத்திற்குத் தண்ணீர் விடக்கூடாது” என்று கர்நாடகக் கலைஞர்கள் வலியுறுத்தினால், “கர்நாடகத்திற்கு மின்சாரம் தரக்கூடாது” என்று வலியுறுத்தி தமிழ்நாட்டின் கலைஞர்கள் போராடுவது என்கிற வகையில், அர்த்தமுள்ள போராட்டமாகவே அது பிறப்பெடுத்தது.

இதற்குப்பிறகு நடந்த சம்பவங்கள் திரைப்படத்தின் நம்பமுடியாத திருப்பங்கள் போலவே மின்னல் வேகத்தில் அரங்கேறி, போராட்டத்தின் அடிப்படையையும் திசை திருப்பிவிட்டன.

எனவே, நடைபெற்ற சம்பவங்களையும், அதன் “நதிமூலங்களையும்” ஒருமுறை நினைவுபடுத்திக் கொண்டால், பலரின் ஒப்பனைகள் கலைந்து அவர்களின் உண்மை முகங்களை நம்மால் உணர முடியும்.

1. நடிகர்கள் பேரணியில் அரசியல் புகுந்தது என்பது முதல் குற்றச்சாட்டு. மறுக்கமுடியாத குற்றச்சாட்டும் கூட.

யாரால், எப்போது புகுந்தது? பேரணிக்குரிய இடத்தைப் பார்வையிட திரு.பாரதிராஜா நெய்வேலி சென்றபோது செய்தியாளர்களை சந்தித்தார். ஒரு சிறிய சொல் பிறழ்வு கூட வேறுமாதிரியாக வெளிப்படக்கூடிய இடம் செய்தியாளர்கள் சந்திப்பு.

தேர்ந்த அரசியல் தலைவர்கள் கூட தயாரிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையிலேயே செய்தியாளர்களை சந்திப்பார்கள். ஆனால், களம் காணும் பரபரப்பில் நிராயுதபாணியாகவே செய்தியாளர்களைச் சந்தித்தார் திரு.பாரதிராஜா.

“அனல் மின் நிலையத்தின் இரண்டாவது தொழிற்சாலை வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும், அதற்கான நேரத்தை அறிவிக்க இயலாது” என்பது அவர் சொன்னது.

செய்தியாளர் எழுப்பிய அடுத்த கேள்வி, “உங்கள் போராட்டத்திற்கு அனுமதி தர வில்லையே” என்பது. அதற்கு திரு.பாரதிராஜா தந்த பதில் பொதுத்தன்மை வாய்ந்தது. “போராட்டத் திற்கு யாராவது அனுமதி தருவார்களா? அனுமதியை மீறிப் போராடுவதைத்தானே போராட்டம் என்று சொல்ல முடியும்” என்றார்.

இதனை இயல்பாகப் புரிந்துகொள்வ தென்றால், எந்தவொரு போராட்டமுமே யாரும் அனுமதி தராமல் தான் நடக்கும். “எங்கள்

வாசலில் வந்து போராடுங்கள்” என்று எந்த நிர்வாகமும் அனுமதி தராது என்பதுதான்.

இதில்கூட, தடையைமீறி உள்ளே செல்வ தென்றோ, அனல்மின் நிலையத்தின் செயல் பாடுகளில் குறுக்கிடுவதென்றோ எந்த தொனியும் இல்லை. ஆனால், சொற்களில் நிகழ்ந்த இந்தச் சிறு சறுக்கலைக் கொண்டு, இது வன்முறை சார்ந்த போராட்டமாக இருக்கக்கூடுமோ என்கிற ஐயத்தை முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி எழுப்பிய தோடு, தி.மு.க. நடிகர்கள் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்தார். திரைக் கலைஞர்கள் அரசியல் ரீதியாக மனவேற்றுமை கொண்டது இங்கேதான்.

ரஜினிகாந்த் – தயக்கமும் முழக்கமும் :

தொடக்கத்திலிருந்தே திரு.ரஜினிகாந்த் நெய்வேலி போராட்டத்திற்கு எதிரான மனநிலையில் இருந்தார்.

அதற்கு அவர் சொன்ன காரணங்கள் எதுவும் ஏற்புடையதாக இல்லை. “பாதுகாப்பாக நடிக நடிகையரை அழைத்துச் செல்ல முடியுமா?” என்றார். “தமிழக அரசு அதற்குப் பொறுப் பேற்கிறது” என்றனர் குழுவினர். “40 லட்சம் தமிழர் களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?” என்றார், போராட்டம் என்பது மனு கொடுப்பது என்பதைக் கூட அறியாதவர் போல, “அங்கே போய் துவம்சம் செய்வீர்களா?” என்று கேட்டார். ஆதங்கத்தை விடவும் ஏதோ ஒரு கோபம் அவரது அணுகு முறையில் வெளிப்பட்டது.

“காவிரிக்குத் தண்ணீர் கொடுங்கள்” என்று சொல்வதும், “கர்நாடகத்திற்கு மின்சாரம் மின்சாரம் தரக்கூடாது” என்பதும் வேறுவேறு விஷயங்கள். இதில், இரண்டாவது அம்சம்தான் அவரது தயக்கத் திற்குக் காரணம் என்று நாம் கருத இடமிருக்கிறது.

“ஒரு நடிகரான நான் நடிகர் சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவேன்” என்ற அவரின் உறுதி மொழி காற்றில் பறந்தது. தனியாக உண்ணாவிரதம் என்று அறிவித்தார். அதன்பிறகு அரசியல் சதுரங்கத்தின் காய்கள் நகர்த்தப்பட்டன. தங்கள் போராட்டத்தைப் புறக்கணித்தவரை நடிகர் சங்க நிர்வாகம் புறக்கணிக்காததும், மாறாக அவரது உண்ணாவிரதத்தை ஒருநாள் ஒத்தி வைத்தால் ஆதரவு தருவோம் என்று தெரிவித்ததும் புரிந்து கொள்ள முடியாத ஆச்சரியங்கள்.

உண்ணாவிரத மேடையில், ஒரு திரைப் படத்தின் வெற்றிவிழாவில் குவிவதைக் காட்டிலும் பலமடங்கு கூடுதலாய்க் குவிந்த சால்வைகள், மாலைகள், எல்லாமே ஏதோ காவிரி நீரைக் கொண்டுவந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின.

ஒரு தொலைக்காட்சியோ, அவர் அமர்ந் திருக்கும் கோலத்தையும், எழுந்து நிற்கும் வேகத்தையும், வணக்கம் சொல்லும் பாவத்தையும், அமைதிகாக்கும் ரூபத்தையும் தொடர்ந்து ஒளிபரப்பி தமிழகத்தையே பரவசத்தில் ஆழ்த்தியது. காந்த் காந்தியாக முடியும் என்று நம்பவைப்பது போல இருந்தது அந்த ஒளிபரப்பு.

இனி, திரு.ரஜினிகாந்த்தோ, அவரை ஆதரிக் கும் கட்சிகளோ காலில் விழும் கலாச்சாரத்தைக் குறைசொல்ல முடியாது. வயது பேதமின்றி விழுந்து எழுந்தனர் பலரும். தமிழ்நாட்டின் பொதுப் பிரச்சனையில் கூட ஒருமித்த குரலை சகித்துக் கொள்ள முடியாத சந்தர்ப்பவாதிகள், பொம்ம லாட்டம் நடத்துவதுபோல் பலரையும் ஆட்டி வைத்து, ஆதாயங்களை அறுவடை செய்து கொண்டதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.

கர்நாடகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன் மனுவில் குறிப்பிட்ட கையோடு நதி நீர் இணைப்பு பற்றிய திரு.ரஜினிகாந்த்தின் கருத்துக்கள் (ஒரு) கோடி பெறும். அதற்கு நிதி திரட்டலாம் என்று யோசனை ஆக்கபூர்வமானதுதான். ஆனால், வாடி நிற்கும் தமிழக விவசாயிகளுக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று ஒருமித்த குரலில் உணர்த்தும் வாய்ப்பை திரைக்கலைஞர்கள் தவற விட்டிருக்கிறார்கள். உண்மையான உணர்வின் அடிப்படையில் அடிப்படையில் உருவான போராட்டத்திற்கும் அணை கட்டிவிட்டனர் சிலபேர். இருவேறு முகாம்களும், இரண்டிலும் காட்டப்பட்ட முகங்களும், நமக்கு ஒன்றே ஒன்றை உணர்த்தியிருக்கிறது.

நாம் நம்ப வேண்டியது

இவர்களையல்ல… இயற்கையை!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி