Home » Articles » உறவுகள் உணர்வுகள்

 
உறவுகள் உணர்வுகள்


செலின் சி.ஆர்
Author:

“என்னங்க, பாபா படம் போலாமா?”

“என்னடி போன வாரந்தானே யூத் படம் போயிட்டு வந்தோம்… இருநூறு ரூபா செலவாச்சில்ல?”

“போன வாரமா போனோம்? போயி நாலு வாரம் ஆச்சு.”

“பாபா படம்தான் ஊத்தி கிச்சே… படம் சுத்த போராம். ஷூ பறந்து பறந்து தாக்குதாம், தானா வந்து மாட்டிக்குதாம். இவரு நெனைச்சதெல்லாம் நடக்குதாம். என்னடி, காதில பூ சுத்தறாங்களா?”

“எனக்காக வாங்களேன்.”

– வீட்டுக்கு வீடு இம்மாதிரியான உரையாடல்கள் சர்வ சாதாரணம்.

ஒரு பக்கம் மனைவியின் உணர்வுப்பூர்வமான கெஞ்சல், மறு பக்கம் கணவரின் அறிவுப்பூர்வமான மறுப்பு.

அறிவு கத்தி போன்றது. அது எப்போதும், எல்லா விஷயங்களை யும் கூறுபோட்டு இரண்டு துண்டாக்கிக் கொண்டே இருக்கும். தயவு தாட்சண்யம் பார்க்காது.

“பாபா படம் எப்படி இருக்கிறது?” என்ற கணவனது விமர்சனத்தை மனைவி கேட்க வில்லை. படம் போகலாமா என்று தான் கேட்கிறாள். முடியாது என்று சொல்வதற்கு பதிலாக, படம் பற்றி மற்றவர் கருத்துக்களை, என்னவோ தானே பார்த்தது போல் கணவன் சொல்கிறான்.

அறிவு இப்படித்தான் அன்பிற்கு எதிராகவே எப்போதும் செயல்படும். உணர்வு களுக்கு எதிராகவே எப்போதும் செயல்படும். மென்மையான உணர்வுகளை அது மதிக்கவே மதிக்காது. கேவலம் என்று அருவெறுக்கும்.

உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும் உண்மையை அது பார்க்காது. எங்கோ, ஏதோ மூலையில் மறைந்து கொண்டிருக்கும் அசிங்கங்களையே பார்த்துக் கொண்டிருக்கும்.

அதற்கென்று அறிவு கேவலமானது, அது தேவையே இல்லாத ஒன்று என்று முடிவுகட்டிவிடக்கூடாது. ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு விடாமலிருக்க அணை போட்டு கட்டுப்பாடாக இயக்க அறிவு உதவும்.

“அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ண வேண்டியதுதான். அதுக்காக இப்படியா? வாங்கின சம்பளம் நாலாயிரம் ரூபா, அதில பியூனுக்கு ஐநூறு, கிளர்க்குக்கு ஆயிரம், மேலதிகாரிக்கு ரெண்டாயிரம் கொடுத்திட்டு வீட்டுக்கு வெறும் ஐந்நூறு ரூபாவா தர்றது?”

– இப்படி ஒரேயடியாக சிலர் அன்பு மயமாகி, கருணை வெள்ளமாகி யார் கேட்டாலும், எதைக் கேட்டாலும் தூக்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். தனக்கென்று மனைவி, மக்கள், குடும்பம் இருக்கிறதே என்று யோசிக்கவே மாட்டார்கள்.

இப்படி உணர்ச்சி வசப்படுவதும் ஆபத்துதான்.

நிறைய வீடுகளில் அண்ணன், தம்பி, உற்றார் உறவினர் என்று கொடுத்துக் கொடுத்தே கணவன் மனைவிக்குள் சண்டை வந்து பிரிய நேர்ந்திருக்கிறது.

அன்போ, கோபமோ, வெறுப்போ, விருப்போ எல்லா உணர்வுகளும் எல்லை மீறாமலிருக்க அறிவை உபயோகப்படுத்த வேண்டும்.

ஆனால், அறிவேதான் சரி என்று உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டு,

எல்லாவற்றையும் அறிவுப்பூர்வமாக அலசிக் கொண்டே இருக்கக் கூடாது.

உணர்வு கோயிலென்றால் அறிவு காவலாளன்.

கோயிலில் மக்கள் கூட்டம் நெருக்கியடித்து கடவுளைப் பார்க்க போகும்போது போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவார்கள். அறிவு போலீஸ், உணர்வு தெய்வம்.

போலீஸ்காரரின் வேலை கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது மட்டுமே. அவருக்குக் கடவுளைப் பற்றித் தெரியாது. அவருக்குக் கடவுளை விமர்சனம் செய்யத் தகுதியில்லை.

மனம், சொல், செயல், மூன்றையும் கட்டுப் படுத்த அறிவை உபயோகிக்க வேண்டும்.

எதை நினைக்க வேண்டும், எதை நினைக்கக் கூடாது என்று அறிவினால் ஆராய்ந்து கட்டுப் படுத்த வேண்டும்.

“ஐயய்யோ அவரு நல்லவரு. அவரப் பத்தி இப்படி தப்பா நெனைக்கக் கூடாது என்று கட்டுப்படுத்த வேண்டும்”. “சே… என்ன இப்படி ஒரு கட்டுப்படுத்தாத ஆசை…? அப்படி என்னதான் அதில இருக்கு?” என்று அணைபோட வேண்டும். “எப்பவும் அரசாங்கத்தப் பத்தி தப்பாவே நினைக்கக்கூடாது. அவங்க ஆட்சியில நல்லதே செய்யலையா என்ன?” என்று நல்ல திசையில் எண்ணங்களைத் திருப்ப வேண்டும்.

எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்று அறிவினால் ஆராய்ந்து கட்டுப் படுத்த வேண்டும்.

“சொல்றதுக்கு முன்னாடியே யோசிச்சிருக் கனும் சொல்லிட்ட பிறகு வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? உங்க அம்மாவப் பத்தி அப்படி எல்லாம் சொல்லலாமா? நாக்கில நரம்பு இல்லாம பேசலாமா?” என்று சொல்வாங்க.

சொன்ன சொல்லையும் எறிந்த கல்லையும் திரும்ப எடுக்க முடியாது என்பது பழமொழி.

ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன்வரை அது உங்கள் சொத்து. பேசிய பிறகு அது அடுத்தவர் சொத்தாகி விடுகிறது.

எனவே, வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். அதற்கு அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று தெரியாமல் தவிக்கும்போது அறிவை உபயோகிக்க வேண்டும்.

இன்னிக்கு ஆபீஸ் போலாமா? வேண்டாமா? இந்த வழியா போலாமா, அந்த வழியா போலாமா? – இப்படி எந்த செயல் செய்வது என்று முடிவெடுக்க அறிவை உபயோகிக்கலாம்.

உணர்வுகளுக்கு எதிராக மட்டும்தான் அறிவை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். ஏனெனில், உணர்வுகள் நுட்பமானவை. கெட்ட உணர்வுகள் அறிவினால் நசுக்கப்பட வேண்டும். ஆனால், நல்ல உணர்வுகள் மலர்போல் மென்மை யானவை. அவற்றை பூட்ஸ் காலால் நசுக்கிவிடக் கூடாது.

உணர்வு கோயில். அறிவு காவலாளி.
– தொடரும்…..

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி