Home » Articles » கேள்வி பதில் பகுதி

 
கேள்வி பதில் பகுதி


admin
Author:

ஒரு சராசரி மனிதனை எடுத்துக் கொண்டால், அவன் செய்கிற வேலைக்கு பலன் கிடைக்காவிட்டால் மனமொடிந்து போகிறான். கீதையில் சொல்ற “கடமையைச் செய்; பலனை எதிர்பார்க் காதே”’ என்ற வேதாந்தமெல்லாம் பக்குவப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், ஒரு இழப்பில் மனமுடைகிறவனுக்கு, பிறரைப் பார்த்து முடியவில்லை என ஏங்குகிறவனுக்கு, வாழ்க்கையில் திருப்தி இல்லாதவனுக்கு என்ன ஆலோசனை?

ஒரு நகைச்சுவையோடு இதனை ஆராய்வோம்.

மாலை வேளை,

கப்பல் பயணம்.

குளிர் காற்றை அனைவரும் ரசித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு குழந்தை தவறி கடலில் விழுந்தது.

எல்லோரும் பதறினார்கள். ஆனால், எவருமே கடலில் குதித்து அக்குழந்தையைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை.

ஒரு இளைஞன் திடீரென தண்ணீரில் பாய்ந்தான். குழந்தையைக் காப்பாற்றி கப்பலில் ஏறினான். எல்லோரும் அவனைப் பாராட்டி னார்கள்.

ஆனால், அவனோ அந்த கூட்டத்திலிருந்தவர்களில் அவனருகில் இருந்தவர்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் அவனை, “ஏன்” என்பதுபோல் விசித்திரமாகப் பார்த்தனர்.

‘யாருய்யா என்னை கடலில் தள்ளிவிட்டது?’ என்று ஆவேசமாகக் கேட்டான்.

நம்முடைய வாழ்க்கையிலும் நல்லதைச் செய்ய ‘தள்ளிவிடுதல்’ வேண்டும்.

அதை யார் செய்வார்கள்?

நம்மை நாமே தள்ளிவிட வேண்டியதுதான்.

அதிலும் தாழ்வான எண்ணமுள்ளவர்கள், ஏங்குபவர்கள், திருப்தியில்லாதவர்கள் எல்லோருமே தம்மைத் தாமே ஊக்குவிக்க கற்றுக்கொள்வது அவசியம். அதற்கு சில உண்மைகளை உணரவேண்டும்.

தோல்விகள் என்பது தற்காலிகமானதே. அச்சமயத்தில் உற்சாகமுடன் செயல்பட்டு அதிலிருந்து வெளியே வந்துவிட, மனதை உறுதிப்படுத்த வேண்டும்.

பிறரைப் பார்த்து ஒப்பிடுதல் பலரை மனமுடையச் செய்கிறது. பிறரைப் பார்த்து சில முன்னேற்ற வழிமுறைகள் அறியவேண்டுமே தவிர அவர்களைப் போல இல்லையே என ஏங்கினால், அதற்கு ஒரு எல்லையே இல்லாமற் போகும்.

‘திருப்தி’ என்பது மனநிலையைப் பொறுத்தது. ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் சம்பாதிப்பவன் கூட திருப்தியுடன் வாழமுடியும். அதுவே ஐயாயிரம் ரூபாய் சம்பாதித்தும்கூட திருப்தியில்லாத வனாகவும் இருக்கலாம். அதனால் அவரவர் தங்களுக்கென ஒரு வரைமுறையை உருவாக்கி, எப்போதும் திருப்தியை உண்டாக்கிக்கொள்ள வேண்டியதுதான். இது முற்றிலும் தனித்தன்மை யான விஷயம்.

கீதையில் ‘பலனை எதிர்பார்க்காதே’ என்று சொல்வது பலன் வராது என்ற பொருளில் அல்ல. கடமையைச் செய்வது நம்கையில் இருக்கிறது. பலன் என்பது பல்வேறு அம்சங்களால் கிடைப்பது. நம் கையில் இல்லாதது. எதை எதைச் செய்ய வேண்டுமோ அதையதைச் செய்து விட்டால் நல்ல பலன்கள் தாமாக வந்து சேரும். சில பலன்கள் உடனுக்குடன் கிடைக்கும். சில பலன்கள் சில காலம் கழித்து கிடைக்கும். சில பலன்கள் நாம் எதிர் பார்த்தவைகளுக்கு மேலாக நம்மையறியாமலேயே நமக்குக் கிடைக்கும். அதனால்தான் பலனை எதிர்பார்த்துக் கொண்டிராமல் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

அதுமட்டுமில்லாமல் பலனில் குறிவைத்துச் செயல்படும்போது கடமையைச் செய்வதில் குறை வரத்தான் செய்யும். அதனால் நல்ல பலன்கள் தவறிப்போகும்.

ஆகவே, சராசரி மனிதனின் இயல்பு தவறல்ல! ஆனால், முன்னேற வேண்டுமானால் ஒரு சில தியாகங்களை செய்தாகத்தான் வேண்டும். தியாகம் என்றால், சில விருப்பங்களை விலக்குதல், சில எதிர்பார்ப்புகளைக் குறைத்தல், சில ஏமாற்றங் களைத் தாங்கிக்கொள்ளுதல், சில ஆசைகளை ஒதுக்குதல் போன்றவைகளும் தான்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி