Home » Articles » விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்

 
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்


முத்தையா ம
Author:

இதழ்களில் வெளியாகும் விளம்பரங்களை எவ்வளவு பேர் படிக்கிறார்கள்? தொலைக் காட்சிகளில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் போது எவ்வளவுபேர் சேனலை மாற்றாமல் பார்க்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை நம்மிடமிருந்து தொடங்கலாம்.

காலையில், நாளிதழை விரித்ததும் தலைப்புச் செய்திகளை முதலில் பார்க்கிறோம். பிறகு நிதானமாக ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டுகிறோம். நம் கண்கள் எத்தனையோ விளம்பரங்களைக் கடந்து போகின்றன. கருத்தில் அனைத்தும் நிற்பதில்லை.
வாசகர்களை விளம்பரங்கள் ஈர்க்க 3 அம்சங்கள் அவசியம். 1. படைப்பாக்கப் புதுமை, 2. ஊடகப் புதுமை, 3. சலுகை.
படைப்பாக்கப் புதுமை பற்றிய பல்வேறு உதாரணங்களை இதுவரை பார்த்துள்ளோம். ஒரு முழுப்பக்கத்தில் பரபரப்பான செய்திகள் – கொலை கொள்ளை தகவல்கள் நடுவே வாசகரின் கவனத்தைக் கவரும் அளவு புதுமையை படைப்பாக்கத்தில் கொண்டு வரவேண்டும்.

சில வாடிக்கையாளர்கள், விளம்பர நிறுவனங்களை நம்பாமல் வெறும் அறிவிப் பாகவே தங்கள் விளம்பரத்தைத் தாங்களே எழுதி, நேராக பத்திரிகை அலுவலகத்தில் கொடுத்து விடுவார்கள். இதன் முலம் பணம் மிச்சம் ஆனதாகக் கருதிக் கொள்வார்கள்.

ஆனால், விளம்பரம் வெளிவந்த பிறகு, அது யாருடைய கவனத்தையும் கவரவில்லை என்று ஏமாற்றமடைவார்கள். இவர்கள் தங்கள் விளம்பரத்தைத் தனியான அளவில் பார்த்து “இதுபோதும்” என்ற முடிவுக்கு வந்திருக் கிறார்களே தவிர, குவிந்து கிடக்கும் தகவல்கள் – செய்திகள் – விளம்பரங்கள் நடுவே அது தனித்தன்மையோடு திகழுமா என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை. எவ்வளவோ தகவல் களுக்கு நடுவே இருந்தாலும் பளிச்சென்று இருக்கிற விளம்பரங்களே ஈர்க்கிற விளம்பரங்கள்.

ஊடகப் புதுமை (Media Innovation) மிகவும் முக்கியம். இது விளம்பரத்தின் அளவை குறிக்கும். விளம்பர நிறுவனங்களில் 20 ஷ் 3 என்று சொன்னால் மொத்தம் 60 பத்தி-செ.மீ. என்று பொருள். 20-சென்டி மீட்டரையும் 3-பத்தியையும் குறிக்கும். அதாவது 20 செ.மீ. உயரத்தில் 3 பத்தி அகலத்தில் விளம்பரம் வேண்டும் என்று அர்த்தம்.

இதில் 60 பத்தி சென்டி மீட்டர் அளவுக்கு செலவு செய்யலாம் என்று வாடிக்கையாளர் சொல்கிறார். இந்த 60, என்ன வடிவம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை விளம்பர நிறுவனம் முடிவு செய்யலாம். 30 செ.மீ. 2 பத்தி என்று போகலாமா, 15 செ.மீ 4 பத்தி என்று போகாலாமா என எவ்வளவோ வாய்ப்புகளைப் பரிசீலித்து முடிவு செய்யலாம்.

நாளிதழ்களோடு நல்ல தொடர்பு வைத்திருந்தால், இன்னும் சில ஊடகப் புதுமைகளை விளம்பர நிறுவனத்தால் சாதிக்க முடியும்.

அடுத்து, சலுகைகள். போட்டிகள் நிறைந்த உலகில், தரம் ஒன்றை மட்டும் பார்த்துப் பொருள்கள் வாங்குவோர் மிகவும் குறைவு. எனவே, விளம்பரங்களில் எப்போ தாவது ஒருமுறை சலுகைகளை அறிவிக்கலாம். இந்த விளம்பரத்தைக் கொண்டுவந்தால் 10% சலுகை என்றோ, அழகிய ஹேன்ட்பேக் இலவசம் என்றோ அறிவிப்புகள் வெளிவருவதைக் காண்பீர்கள். இவை, நுகர்வோர்களை வாங்கத் தூண்டும் உத்திகள்.

அதேபோல, அறிவுத்திறன் போட்டி என்று வைத்து சரியான விடை எழுதுவோருக்கு பரிசுகள் என்ற அறிவிப்பையும் பார்த்திருப்பீர்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதைத் தடை செய்ய பல சட்டங்கள் உண்டு. எனவே அறிவுத்திறன் போட்டி வைப்பது அவசியமாகி விட்டது.

விற்பனை உத்தியின் மிக முக்கியமான அங்கமாக விளம்பரம் திகழ்வதால் எத்தனை தகவல்களை – சலுகைகளை – புதுமையாகவும் வசீகரமாகவும் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சொல்ல வேண்டும்.

மக்கள் மனதில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக, தேசத்தின் முக்கிய விழா நாட்களில் வாழ்த்து விளம்பரங்களையும் பல நிறுவனங்கள வெளியிடுவதுண்டு. அதில் சலுகைகள் அறிவிக்க இடமில்லை என்றாலும், போதிய தாக்கத்தை அவை ஏற்படுத்தும்.

அப்படி, படைப்பாக்கப் புதுமை, ஊடகப் புதுமை இரண்டும் சேர்ந்த விளம்பரம் ஒன்றை கடந்த சுதந்திர தின விழாவின் போது

ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் உணவகங்களுக்காக SAP அட்வர்டைசிங் மூலம் வடிமைத்து வெளியிட்டோம்.

இதில் ஊடகப் புதுமை என்ன இருக்கிறது என்கிறீர்களா? இந்த தமிழ் விளம்பரம் ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டது. ஆங்கிலச் செய்திகள் – விளம்பரங்கள் நடுவில் தமிழ் விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. பாராட்டையும் பெற்றது.

(இந்தப் புதுமை அடிக்கடி நிகழ முடியாது. ஏனெனில் ஹிந்து நாளிதழைப் பொறுத்தவரை தமிழில் விளம்பரம் வெளியிட 100% கூடுதல் கட்டணம்)

சலுகைகள் அறிவிக்கும்போது சட்ட சிக்கல்கள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். அளவுக்கு அதிகமான சலுகைகள், நுகர்வோர் மனதில் சந்தோஷத்தை மட்டுமல்ல, சந்தேகத்தையும் ஏற்படுத்தும். இவ்வளவு சலுகைகள் தருகிறார்களே, அப்படி யானால் அசல் விலை என்ன என்கிற கேள்வி எழும்.

அதனால்தான் உற்பத்தியாளர்களே முந்திக் கொண்டு “ஃபேக்டரி சேல்” “அசல் விலை விற்பனை” “தறி விலை விற்பனை” என்று ஆடி மாதத்திலும் பிற மாதங்களிலும் சலுகைகளை அறிவிப்பதுண்டு.

வாடிக்கையாளரை உடனே வாங்கத் தூண்டும் உத்திகள் சலுகைகள்தான் யோசிக்க இடம் தராமல் “இன்றே இப்போதே” என்று தூண்டும் உத்திகளை நிறையப் பார்த்திருப்பீர்கள்.

அதுசரி, யோசிக்க விட்டால் என்னாகும்? வாங்குவதைத் தள்ளிப்போடவும் தவிர்க்கவும் செய்யலாம். எப்போதோ கிடைக்கிற வாய்ப்பு என்கிறபோது அதனை நழுவவிட நுகர்வோருக்கு மனம் வராது.

அசல் விலை – விற்பனை விலை குறித்து ஒரு நகைச்சுவைத் துணுக்கு எங்கேயோ படித்தேன். ஒரு புடவைக் கடையில் புதிதாக ஒருபையன் வேலைக்கு சேர்ந்தான். புடவைகளில் விலையை ஒட்டி வைத்திருந்தார்கள். 81 ரூபாய் புடவையை 18 ரூபாய் என்று நினைத்து விற்பனை செய்து விட்டான். கடை உரிமையாளருக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் கடுமையான கோபம் வந்தது. “அறிவிருக்கா உனக்கு. 81 ரூபாய் புடவையை 18 ரூபாய் என்று விற்றுத் தொலைத்தாயே! இப்போது என்ன செய்வது” என்று நீண்ட நேரம் சத்தம் போட்டவர், பிறகு தானே சமாதானமாகி “சரி சரி, முதலுக்கு மோசமில்லை போய் வேலையைப் பாரு” என்று அனுப்பினாராம்!

கற்பனைதான் என்றாலும் சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா!

(தொடரும்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2002

ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்
எழுமின்! விழிமின்!
சிந்தனைத்துளி
உறவுகள்.. உணர்வுகள்…
“சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்?
MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
சிந்தனைத் துளி
பெற்றோர்கள் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
மலரட்டும் நல வாழ்வு
வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?
மகாபாரத்த்தில் நிர்வாகவியல்
வெற்றி
கேள்வி பதில் பகுதி
சிந்தனைத்துளி
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
நிறுவனர் பக்கம்
சிந்தனைத் துளி
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்