Home » Articles » உறவுகள் உணர்வுகள்

 
உறவுகள் உணர்வுகள்


செலின் சி.ஆர்
Author:

“ தொட்டுவிட தொட்டுவிடத் தொடரும்….
கை பட்டுவிட பட்டுவிட மலரும்….. ”
“ தொடத்தொட மலர்வதென்ன……”
“ கோடிசுகம் வாராதோ
நீ எனைத் தீண்டினால்……”

பாடல் வரிகளைக் கண்மூடி ரசிக்கிறோம். மெய்மறந்து திரைக்காட்சிகளில் ஒன்றிப் போகிறோம்.

கண்மூடி கனவு காணும் தம்பதிகள், நிஜவாழ்வில் தலைகீழாக மாறிவிடுகிறார்கள். மனதிற்குள் தாங்களாகவே பலவித தடைகளை ஏற்படுத்திக் கொண்டு, ஒரு திரையைப் போர்த்திக்கொண்டு போலி முகங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மனோநிலை மாறினால், கணவன் மனைவிக் கிடையே மட்டுமின்றி, நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடத்திலும் உண்மையான, ஆரோக்கியமான, சுமூகமான உறவு மலரும்.

‘மேற்கத்திய நாடுகளில் உணர்வுகளை தொடுகையின் மூலம் வெளிப்படுத்துவது மிக சாதாரணமான விஷயம்…’ என்றுதான் நாம் நினைக்கிறோம், பேசுகிறோம். ஆனால், இது நம் கலாச்சாரத்திலும் ஊறிப்போனதுதான் என்பதற்கு சங்ககால இலக்கியங்களே சான்று.

கணவன் மனைவிக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லாது, ஒருவருக்கொருவர் தொடுகையின் மூலம் கருத்துக்களையும், காதலையும் பகிர்ந்து கொண்டதை உணர்த்தும் அகப்பாடல்கள் ஏராளம்.

“தான்” என்ற அகங்காரம் இல்லாது, மனைவிக்கு சேவைகள் செய்து, துவளும்போது தாங்கிப்பிடித்து, அழும்போது அணைத்து என பாசாங்கில்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். மனைவிகளும் வெட்கம் தவிர்த்து, வெளிப்படையாக தங்கள் காதலை ஸ்பரிசத்தின் மூலம் பரிமாறியிருக்கிறார்கள்.

ஆணுக்குப் பெண் சமமா என்ற கேள்வி எழுந்த காலகட்டத்தில் பெண்ணிடம் தன் காதலை வெளிப் படுத்துவது தன் ஆண்மைக்கு இழுக்கு என ஆண்கள் நினைத்திருக்கலாம். இந்த மனநிலை புரை யோடி பரந்து விரிந்து நாளடைவில் உருவாகி யிருக்கலாம்.

கடந்தகால காரணங்கள் எதுவாயிருப் பினும், நிகழ்கால நிகழ்வுகளை நாம் மாற்றி யமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

சாதாரண வார்த்தைகள்கூட அசாதாரண பிரச்சினைகளுக்கு வழிவகுத்து அதல பாதாளத் தில் தள்ளியிருக்கும் நிகழ்ச்சிகள் பலவற்றைக் கண்டிருப்போம்.

‘நான் எதுவுமே தப்பா சொல்லலை. எதுக்கு இப்படி கோவிச்சிட்டாருனு தெரியல. வரவர நான் எது பேசினாலும் அவருக்கு பிடிக்கறதில்ல…’ என மனைவிகளும், ‘எங்களுக்குள்ள இப்ப நெருக்கமே இல்ல. எவ்வளவோ ஆசைகளோட, கற்பனைகளோட கல்யாணம் செஞ்சேன். இப்ப எல்லாமே வெறுமையா இருக்கு. ஏதோ சாப்பிடறோம், வாழறோம். மத்தபடி வாழ்க்கைல ஒரு ஜீவனே இல்ல…’ என கணவர்களும் தினம் தினம் பொறுமிக்கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வில் பிடிப்பே இல்லாமல், ஜீவனே இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? திருமணமான புதிதில் சொர்க்கமாக தெரியும் வாழ்க்கை பிறகு ஏன் மாறிப்போகிறது?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மண மான புதிதில் யாருக்கும் தெரியாமல் மெதுவாய் தீண்டியதும், மென்மையாய் வருடியதும் இப்போது மறந்துபோய் விட்டதல்லவா?

குழந்தை உருவாகியதும் டாக்டர் செக்கப், பிரசவ நேரத்தில் கரைந்த பணம், அதை ஈடுகட்ட இன்னும் கடின உழைப்பு, பச்சை உடம்பு என்று ஆரம்பித்து கஷ்டமாயிருக்கு எனத் தொடர்ந்து தள்ளிப் போகும் மனைவி, பால் பவுடர், துணிமணிகள், பள்ளிக்கூடம் என வரிசையில் நிற்கும் கடமைகள்… இப்படி காரணங்களின் பட்டியல் நீளும்.

இந்த காரணங்கள் எதுவும் பொய் இல்லை, உண்மைதான். ஆனால், நாளை மழை வந்தால் எங்கு ஒதுங்குவோம் என்று கூட புரியாமல், வீதியில் வாழும் மக்களின் முகத்தில் சதா ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டிருக்கிறதே எப்படி?

அவர்களைக் கொஞ்சம் உற்று

கவனியுங்கள்.

தெருவோர மரநிழலில் மனைவியின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பான் கணவன். குழந்தைகள் அவன் மார்பிலும், முதுகிலும் குதித்து விளையாடிக் கொண்டிருப் பார்கள். வயதான பெண்கள் கூட யாருக்காவது தலைவாரிக் கொண்டிருப்பார்கள்… அக்கம் பக்கம் ரோட்டில் நடப்பவர்கள் பார்ப்பார் களே என்ற சங்கோஜம் துளியுமில்லாமல் கணவனுக்கு முதுகில் எண்ணெய் தடவி குளிப்பாட்டி விடுவாள் மனைவி.

இந்த சாலையோர நிகழ்வுகளைப் பார்க்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களது மகிழ்ச்சியின் குதூ கலத்தின் ரகசியம் இதுதான்.

ஏதோதோ காரணங்களைச் சொல்லி நெருக்கத்தை தவிர்க்கிறார்கள். விளைவு, காரணமேயில்லாமல், சம்பந்தமேயில்லாத இடத்தில் கோபம் வருகிறது. ஆத்திரம் வரு கிறது. காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் வீட்டில் நிம்மதியில்லை. நெருக்கம் இல்லை.

அறுபது எழுபது வயதான தம்பதிகள் கூட புதிதாய் திருமணமானவர்களைப் போல் சிரிப்பும் மலர்ச்சியுமாயிருப்பார்கள். உற்றுப் பார்த்தால் அவர்களுக்குள் இன்னமும் இழையோடிக் கொண்டிருக்கும் சீண்டல் களும், தொடுகையும், நெருக்கமும் புலப்படும். மகிழ்ச்சியின் ரகசியம் இதுதான்.

எதிரெதிராகவோ, இடைவெளி விட்டோ அமர்ந்து உங்கள் துணையுடன் பேசாதீர்கள். நல்ல விஷயங்கள் கூட இப்படி தள்ளியிருந்து பேசுவதால் சரியாக சென்றடையாது போய்விடும்.

பக்கத்தில் அமர்ந்து, கைகளைப் பிடித்துக் கொண்டு பிரச்சனைக்குரிய விஷயங்களைப் பேசினால் கூட அதற்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். காரணங்களைத் தேடிக் கொண்டி ருக்காதீர்கள். நீங்களே உருவாக்குங்கள்.

தலைவலி தைலம் தேய்த்துவிடுவது, எண்ணெய் தேய்த்து விடுவது எனக் காரணங் களுக்கா பஞ்சம். கோபம் வரும் சமயத்தில் அதை வெளிப்படுத்தாமல் அடக்கி வைத்திருப் பதால், இது போன்ற சந்தோஷமான வேளை களில் செல்லமாய் அடிப்பது போன்ற பாவனையில் பழிதீர்த்துக் கொள்ளலாம் என்பது பெண்களுக்கு ஒரு கூடுதல் வசதி.

கணவன் மனைவி உறவில் மட்டுமில்லை. நண்பர்களிடம் பேசும்போது கூட கைகளைப் பிடித்துக்கொண்டோ, பக்கத்தில் அமர்ந்தோ பேசும்போது உங்கள் மேல் ஒரு நம்பிக்கை ஏற்படும். நம் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ள லாம். உண்மையிலேயே இவன் நம்மேல் அன்பு வைத்திருக்கிறான் என்ற தெளிவு தோன்றும்.

‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்…’ என்ற பழ மொழியைக் கேட்டிருப்போம். தொடுகைக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை உணர்த்தும் பழமொழி இது.

எவ்வளவுதான் வார்த்தைகளால் கண்டித் தாலும் அதை உணர்ந்து கொள்ளாதவர் களுக்கு அடி மட்டும் எப்படி உணர்த்துகிறது. குறிப்பிட்ட அந்த செயலை செய்யும்போது எதிர்பாராத சமயத்தில் ‘பட்’ டென்று அடி வாங்கிய அதிர்ச்சி மனதின் ஆழத்தில் தங்கிவிடுகிறது. அதன் பிறகு அந்த செயலைச் செய்ய நினைக்கும்போதே அந்த அதிர்ச்சி உணர்வு நினைவுக்கு வர, அதே வலியை உணர் கிறான். அந்த செயலைத் தவிர்த்து விடுகிறான்.

எதிர்மறையான ஒரு விஷயத்திற்கே இவ்வளவு சக்தி இருக்கும்போது, அன்பான ஆறுதலான தொடுகைகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும்? நினைத்துப் பாருங்கள்.

நெருங்கிய உறவினர் இறந்துபோன துக்கத்திலிருப்பவரிடம் குடம்குடமான வார்த்தைகளைக் கொண்டு போய் கொட்ட வேண்டாம். ஆதரவாய் தொடுங்கள். தன் வாழ் நாள் முடியும் வரை அதை மறக்க மாட்டார்.

ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கிறானா? அவன் தோளைத் தட்டிக் கொடுங்கள். ஆசிரியரின் அந்த தொடுகை அவனுக்கு உற்சாக டானிக்.

மனைவியைக் கொஞ்ச வார்த்தைகளைத் தேட வேண்டாம்; தோளில் சாய்த்துக் கொள்ளுங்கள். சோர்வு அத்தனையும் பறந்து போய் உற்சாகப் பறவையாகிவிடுவாள்.

அண்ணி – நாத்தனார், மாமியார் – மருமகள் எல்லாம் எலியும் பூனையும் என்பதற்கான உதாரணங்கள் என்பது பொதுவான கருத்து. இல்லையா?

புதுவருடத்தன்றோ, திருமணநாள், பிறந்த நாள் அன்றோ உங்கள் மருமகள் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்து சொல்லிப்பாருங்கள். நாத்தனார் கன்னத்தில் கன்னம் வைத்து வாழ்த்திப்பாருங்கள். குடும்பத்தில் இத்தனை நாட்களாய் சூழ்ந்திருந்த இருள்வட்டம் போன இடம் தெரியாது.

தொடுகை….. காதலை வளர்க்கும்.

தொடுகை…… நட்பை உறுதிப்படுத்தும்

தொடுகை…. ஊழியர்களுக்கு உற்சாகமூட்டும்.

ஆகமொத்தம், உலகின் அத்தனை உறவு களையும் கட்டிப்போடும் வித்தை தொடுகைக்கு மட்டுமே கைவந்த கலை.

“தொட்டுவிட தொட்டுவிட தொடரும்…

கை பட்டுவிட பட்டுவிட மலரும்…”

எழுதிய கவிஞன் முற்றும் உணர்ந்த ஞானி!

– தொடரும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2002

பாபாஜி என்ற மகான்
சிந்தனைத் துளி
மனம் விரும்பும் பணம்
முயற்சி வேதங்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நம்பிக்கை நிறைவே நலமிகு வாழ்க்கை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் பக்கம்…
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றியின் மனமே…
கேள்வி பதில் பகுதி
பொதுவாச் சொல்றேன்
உலக குழந்தைகளுக்கான அமைதி மாநாட்டில் நம் உள்ளூர் அரும்புகள்!
உள்ளத்தோடு உள்ளம்