Home » Cover Story » உலக குழந்தைகளுக்கான அமைதி மாநாட்டில் நம் உள்ளூர் அரும்புகள்!

 
உலக குழந்தைகளுக்கான அமைதி மாநாட்டில் நம் உள்ளூர் அரும்புகள்!


சாந்தி ஆசிரமம்
Author:

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என்பார்கள். உலக்க் குழந்தைகள் ஒன்றுகூடி அமைதியையும் மனித நேயத்தையும் கொண்டாடிய மகத்தான மாநாடு சமீபத்தில் இத்தாலியில் நடந்தது.

இந்த மாநாட்டிற்கு, தமிழ்நாட்டிலிருந்து நான்கு மாணவர்கள் அழைக்கப் பட்டிருந்தார்கள் என்பது நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டிய செய்தி.

தேசத்தை தலைநிமிரச் செய்த அந்தக் குழந்தைகளைப் பயிற்றுவித்து, ஊக்குவித்து, பயணத்திலும் துணை போனவர்கள் கோவைப்புதூர் சாந்தி ஆசிரம நிர்வாகிகள்.

விஜய், அருண், நிரஞ்சனா, பிரியங்கா. இந்த 4 மாணவர்களை, சாந்தி ஆசிரம இயக்குனர் டாக்டர். வினு அறம். இத்தாலிப் பயணத்தை ஒருங்கிணைத்த சாந்தி ஆசிரம தன்னார்வத்தொண்டர் திரு. பார்த்திபன் ஆகியோருடன் சந்தித்தோம்.

உற்சாக ஊற்றாய், சந்தோஷக் காற்றாய் அந்தப் பிஞ்சுத் தலைவர்கள், பேசினார்கள் நம்மிடம்….

இரண்டாம் உலக யுத்தம் ஏற்பட்ட போது, அதனால் எழுந்த பாதிப்புகளைக் கண்டு, இளம் இதயங்களில் அமைதி விதையைத் தூவும் நோக்குடன் உருவான அமைப்பு “போல்கா லாரியா”.

“க்யரா” என்கிற பெண்மணி துவக்கிய இந்த அமைப்பு, உலகெங்கும் உள்ள மாணவர்கள் மத்தியில் அன்பு, ஒற்றுமை ஆகிய உணர்வுகளை உருவாக்கி உலக அமைதிக்கு வழிவகுத்து வருகிறது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் குழந்தைகள் மாநாட்டுக்கு “சூப்பர் காங்கிரஸ்”
என்று பெயர்.

இம்முறை 92 நாடுகளிலிருந்து 10,000 குழந்தைகள் பங்குபெற்ற இந்த மாநாட்டில், “நிரஞ்சனா, பிரியங்கா, அருண், விஜய்” ஆகிய நான்கு பேர் கோவையிலிருந்து கலந்து கொண்டார்கள்.

இதில் மற்றொரு சிறப்பு உண்டு. “போல்கா லாரியா” என்கிற அமைப்பை உருவாக்கி யவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இதுவரை உலகெங்கிலும் இருந்து கத்தோலிக்க கிருஸ்தவக் குழந்தைகள் மட்டுமே பங்கேற்ற சூப்பர் காங்கிரஸில், வேறு சமயங்களைச் சார்ந்த இந்த நான்கு பேர் பங்கேற்றது இதுவே முதல் முறை.

இது எப்படி சாத்தியமானது? சாந்தி ஆசிரம இயக்குனர் டாக்டர் வினு அறம் விளக்கினார். (இவரது நேர்காணல், “நம்பிக்கை யும் நானும்” பகுதியில் தன்னம்பிக்கை-ஜுலை 2001 இதழில் வெளிவந்துள்ளது).

“போல்கா லாரியா” இயக்கத்தை உருவாக்கிய திருமதி க்யரா 2001ல், “காந்திய இயக்கம்” பற்றித் தெரிந்துகொள்ள இந்திய வந்திருந்தார். அப்போது பிற சமயங்களின் கலாச்சாரத்தையும் இந்த இயக்கத்தில் இணைத்துக் கொள்ள விரும்பி எங்களை அணு கினார். உடனே, தலைமைப் பண்பு, ஆங்கிலத் தில் பேசுகிற வல்லமை, விரிந்த பார்வை கொண்ட மாணவர்களைத் தேடினோம்.

கோவை பாரதீய வித்யா பவன் பள்ளியிலிருந்து செல்வி நிரஞ்சனா, கோவை சர்வஜனா மேல்நிலைப் பள்ளியிலிருந்து செல்வன் அருண், மணி மேல்நிலைப் பள்ளியிலிருந்து செல்வன் விஜய், இராமகிருஷ்ணா கல்லூரியிலிருந்து செல்வி ப்ரியங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பேச்சுக்கலைப் பயிற்சி, இந்தியப் பண்பாடு குறித்த பிரத்யேக வகுப்புகள் ஆகியவற்றை இவர்களுக்கு சாந்தி ஆசிரமம் தந்த பிறகு இத்தாலிக்குப் பயணமானார்கள் இந்தியாவின் இளம் தூதுவர்கள்.

முதல்நாள், “ஐஸ்பேலஸ்” என்கிற இடத்தில் பத்தாயிரம் குழந்தைகள் திரண்டனர்.

அது என்ன “ஐஸ்பேலஸ்”? இத்தாலியில் பிரபலமான ஐஸ்ஹாக்கி விளையாட்டிற்காக ஐஸ்கட்டிகள் நிறைந்த அரங்கம் அது! 10,000 பேரின் மூச்சு வெப்பம் நிறைந்திருக்கும் அரங்கில், குளுமை பரப்பியவை அந்த ஐஸ் கட்டிகள் மட்டுமல்ல! அன்பு, ஒற்றுமை ஆகிய உணர்வுகளின் குளிர்ந்த அலைகளும்தான்!!

மறுநாள் சந்திப்பு நிகழ்ந்த அரங்கம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. “கொலோஸியம்” என்பது அதன் பெயர்.

ரோமாபுரி அரசர்கள், அடிமைகளையும், விலங்குகளையும் மோதவிட்டு யாரோ ஒருவர் மாண்டு விழுவதைப் பார்த்து ரசித்த கொலைக்கூடாரமே கொலோஸியம்!

“அங்கே பத்தாயிரம் குழந்தைகள் கூடி உலக அமைதி குறித்த உரத்த சிந்தனைகளால் பகிர்ந்து கொண்டது பரவசமூட்டும் அனுபவ மாய் இருந்தது” என்கிறார் திரு. பார்த்திபன்.

“கருத்துப் பரிமாற்றம், கலாச்சாரப் பரி மாற்றம் ஆகியவை எங்கள் பார்வையை விரிவு செய்தன, பக்குவப்படுத்தின. 92 நாடுகள், 92 வகையான வாழ்க்கை முறை, வெவ்வேறு மொழி கள், சிந்தனை மட்டும் அன்பும், அமைதியும்” என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் விஜய்.

“இதயங்கள் இணைய மொழி ஒரு தடையில்லை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தோம்” என்கிறார் அருண். “ஆங்கிலம் தெரியாத அயல் நாட்டுக் குழந்தைகளுடன் அந்நியோன்னியமாக சைகை மொழியில் பேசிக் கொண்டிருந்தோம்” என்கிறார் இவர்.

இத்தாலி, பாகிஸ்தான், ஜோர்தான், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டுக் குழந்தைகளுடன் பயணம் போனபோது, இவர்கள் அனைவருக்கும் என்ன பொழுது போக்கு தெரியுமா…? பாட்டுக்குப் பாட்டு சர்வதேச அளவில் நடந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி அவரவர் நாட்டு தேசிய கீதத்துடன் தொடங்கியுள்ளது.

அதிலேயும் நிரஞ்சனாவுக்கொரு பெருமை “முதலில் இந்தியாவின் தேசிய கீதம் பாடினோம். எல்லோரும் எழுந்து நின்றார்கள். பிறகு பேருந்துகளில் நிற்கக்கூடாது என்று அங்கே ஒரு சட்டம் இருப்பது தெரிந்ததும் மற்ற நாட்டு தேசிய கீதங்களை அமர்ந்து கொண்டே கேட்டோம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது, கேன்டனீஸ், இத்தாலி என்று ஆறு மொழி களில் பாடினோம்” என்கிறார் நிரஞ்சனா.

“பாரதப் பண்பாட்டைப் பறைசாற்றும் விதமாக நாங்கள் இருவரும் அணிந்திருந்த தாவணி அனைவரையும் கவர்ந்துவிட்டது” என்கிறார் பிரியங்கா. (இந்தியப் பெண்களை தாவணியில் பார்க்க வேண்டுமென்றால் இத்தாலிக்கு தான் போக வேண்டுமோ?)

“உணவுக்காகக் காத்திருந்த வேளைகளிலும் நாங்கள் சும்மா இல்லை. செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று கும்மியடித்து ஆடினோம். கூடிய கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்” என்றார் பிரியங்கா.

அகிலம் முழுவதும் அன்பும் ஒற்றுமையும் பரவ உறுதி மேற்கொண்டதோடு நில்லாமல், கேண்டனீஸ் பாட்டு, இத்தாலிய எண்கள் என்று கற்றுக் கொண்டோம். இந்தியப் பாடல்களையும் எண் முறையும் சொல்லித் தந்தோம் என்கிறார்கள் இவர்கள்.

இத்தனைக்கும், இவர்களுக்கான பயணச் செலவை ஏற்றது ஒரு பெரிய நிறுவனமல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு குடும்பம் பயணச் சீட்டுக்கான செலவை ஏற்றிருந்தது. அந்தக் குடும்பங்களுடன் சில நாட்கள் தங்கி இருந்திருக்கின்றனர் இந்தக் குழந்தைகள்.

“எதிர்காலத்தில் இதுபோன்ற பயணங் களில், நகராட்சிப் பள்ளிகளில் படிக்கிற, கிராமப்புற குழந்தைகளை அனுப்பவுள்ளோம். அதற்கான தேர்வுகளும் முன்னேற்பாடுகளும் இப்போதே தொடங்கிவிட்டன” என்கிறார் வினு அறம்.

அன்பு, அமைதி ஆகிய அருங்குணங்களை போதிக்க வேண்டியவர்களால் இனம் – மதம் – சாதி – மொழி போன்றவற்றின் பெயரால் பாதிக்க மட்டுமே முடிகிறது. இந்த இளம் உள்ளங்களால், உலகளாவிய ஒற்றுமையை சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை இந்தச் சந்திப்பில் பெற்றோம்.

இவர்களை வாழ்த்தி விடைபெற்றபோது கவிஞர் ஈரோடு தமிழன்பனின் வரிகள் நமக்குள் நிழலாடின…

உலகக் குழந்தைகளே
உரக்கப் பாடுங்கள்…
உங்களுக்கு
சந்திர சூரியர்களைத்
தபலாக்கள் ஆக்கித் தருகிறோம்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2002

பாபாஜி என்ற மகான்
சிந்தனைத் துளி
மனம் விரும்பும் பணம்
முயற்சி வேதங்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நம்பிக்கை நிறைவே நலமிகு வாழ்க்கை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் பக்கம்…
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றியின் மனமே…
கேள்வி பதில் பகுதி
பொதுவாச் சொல்றேன்
உலக குழந்தைகளுக்கான அமைதி மாநாட்டில் நம் உள்ளூர் அரும்புகள்!
உள்ளத்தோடு உள்ளம்