Home » Articles » உறவுகள் உணர்வுகள்

 
உறவுகள் உணர்வுகள்


செலின் சி.ஆர்
Author:

உறவுச் சிக்கல்களில் உழன்று கொண்டிருக்கிறீர்களா? முதல் காரியமாக, உங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தினீர்களா, என்று யோசித்துப் பாருங்கள்…

கணவன் – மனைவிக்கிடையே, பெரும்பாலான பிரச்சனைகள் மேற்சொன்ன காரணத்தாலே விளைகின்றன. மனிதர்கள் அனைவருமே ஒருதனி தீவுதான். ஒவ்ஒரு மனிதருகுள்ளும் உணர்வுக்குவியல்களே புதைந்திருக்கும். தங்களுக்குள்ளேயே பலவித போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

அம்மா, அப்பா, உடன் பிறந்தோர், நண்பர்கள் என அனைவரிடமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு பழகுகிறோம். சிறு வயதில் கோபம் வந்தால் அடித்து உதைத்து அதை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய உரிமையை உடன் பிறந்தோரிடம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

வளர்ந்த பிறகு நம் மனதிற்குள்ளேயே ஒரு ஃபில்டர் வைத்துக் கொள்கிறோம். தேவையற்ற விஷயங்களை வடிகட்டி விடுகிறோம். அந்தரங்கமான உணர்வுகளுக்கு சென்சார் போட்டு விடுகிறோம். எடிட் செய்த விஷயங்களையும், உணர்வுகளையும் மட்டுமே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். தொன்னூறு சதவீத தருணங்களில் நமக்குள்ளேயே பேசி, சிரித்து வெட்கப்பட்டு, ஒரு தனி உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பத்து, பதினைந்து வருட இடைவெளிக்குப் பிறகு திருமண பந்தத்திற்குள் நுழையும்போது மனசுக்குள் பூ பூக்கும். நமக்கென்று, நம்முடைய எல்லா உணர்வுகளையும் கொட்டித்தீர்க்க ஒரு துணை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் அடிவயிற்றில் பட்டாம் பூச்சிகள் சிறகடிக்கும்.

திருமணமான முதல் வாரம் முழுவதும் காதல்போதையில் மூழ்கிவிட்டு, ஹனிமூனுக்கென,.. மூட்டையைக் கட்டுவார்கள் பாருங்கள். இருவரின் முகத்திலும், கடைசியாகத் தெரியும் மனமார்ந்த உண்மையான சிரிப்பு அதுமட்டும்தான். தேனிலவுக்கு கிளம்பும் தம்பதிகளின் முகத்தில் தோன்றும் அந்த கடைசி புன்னகையை ஆசை தீரப் பார்த்துக் கொள்ளுங்கள். வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விட வேண்டாம். போனால் கிடைக்காது.

பத்து நாட்களுகு எந்த தொந்தரவுமில்லாத இனிமையான தனிமை என்ற கற்பனையில் மிதந்து செல்வார்கள். முதல் இரண்டு நாட்கள் பயணக் களைப்பு. ஊர் சுற்றதல் என ஓடிவிடும். அதற்கடுத்த நாட்களில் நிறை நேரம் இருப்பதால், ம்.. நாம நல்லா பேசி ஒருத்தரைப்பத்தி ஒருத்தர் புரிஞ்சுக்கலாமே.. என்று கணவன் ஆரம்பித்து வைப்பார்.. நாக்கில் சனி புகுந்துவிட்டது என்று அர்த்தம்.

இருபத்ததைந்து வருடங்களில் தனக்கு நிகழ்ந்த அனைத்தையும், இருபத்து நான்கு மணி நேரத்தில் மனைவியின் தலைக்குள் புகுத்திவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் தன் சிறு வயது ஞாபகங்களைப் பற்றி பேச ஆரம்பிப்பார். அந்த Chapter கொஞ்சம் interesting ஆக இருக்கும்.

பள்ளிக்கூடத்தல் தான் அடிவாங்கிய காட்சிகளைப் பற்றி விவரிக்கும்போது மனைவி விழுந்து விழுந்து சிரிக்கும் அழகில் மயங்கி இன்னும் விவரிப்பார். இதோடு நிறுத்தியிருந்தால் பரவபாயில்லை. மனைவியிடம் எந்த விஷயத்தையும் மறைக்கக்கூடாது… என்று யாரோ உத்தமர் எப்போதோ ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதி வைத்ததைப் படித்தது இப்போதுதானா நினைவுக்கு வந்து தொலைக்க வேண்டும்..?

பள்ளிக்கூடத்தில் பக்கத்து பெஞ்ச் மீனாவை தான் சைட் அடித்ததை “அழகி” பார்த்திபன் ரேஞ்சுக்கு உருகி உருகி விவரிப்பார். அப்போதே மனைவியின்முகம் எண்ணைய் கத்தரிக்காய் போல் சுருங்கி விடும். இவருக்கு அதெல்லாம் கண்ணில்பட்டால்தானே.

தனக்கும் தன் தாய்க்குமிடையேயான பாசப் பிணைப்ப்பை பத்தி பத்தியாக விவரிப்பார். “நீ அவருக்கு பணிவிடை செய்வது உன் முதல் கடமை” என்று சந்தடி சாக்கில் Advice செய்வார். மனைவிக்கு இலேசாய் பொச்சிவ்னெஸ் எட்டிப் பார்க்கும். இதற்குப் போய் சண்டை போடலாமா என்ற தயக்கத்தில் அமைதியாயிருந்து விடுவார்.

தன்னுடைய உயிர்த் தோழனைப் பற்றியும், நட்பைக்கூட கற்பைப் போலெண்ணும் தன் உயர்ந்த குணத்தையும் பற்றி லெக்சர் அடித்து, மனைவியை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்ற பிறகுதான் அந்த கிளைமாக்ஸ் காட்சிக்கான விஷயத்தை தொடுவார்.

“குட்டி, நான் ஒரு விஷயத்தை சொல்வேன் தப்பா எடுத்துக்கக்கூடாது. என்னோட கஷ்டத்தைப் பகிர்ந்துக்கறதுக்கு உன்னைவிட்டா யார் இருக்கா?” என்ற பீடிகையில் ஆரம்பித்து, சுற்றி வளைத்து, ‘நான் ஒரு பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தேன்..” என்ற பாயிண்ட்டில் முடிப்பார்கள். “போன மாசம்தான் அவளுக்கு கல்யாணமாச்சு. எனக்கு மனசு தாங்கலை.. ஆனாலும் அம்மா மனசு நோக்க் கூடாதுனு உன்னைக் கட்டிக்கிட்டேன்…”

இதைக் கேட்க கேட்க அவளுக்கு வயிறெரியும். காதலிச்சே சரி கல்யாணம் பண்ணிக்க தைரியம் வேண்டாம். செய்யறதை செஞ்சுட்டு இப்படி பொம்பளை மாதிரி புலம்பறியே என்ற வெறுப்பு ஒரு புறமும், நேற்று படுக்கையறையில் ஞாபகம் வராத விஷயம் இப்ப ஞாபகம் வந்திடுச்சா? இப்ப உருக வேண்டிய அவசியம் என்ன என்ற கோபம் மறுபுறமும் பொங்க, சண்டை தூள் பறக்கும். அநேகமாய் எல்லா கணவன் மனைவிக்கிடையேயும் வரும் முதல் சண்டை இதுவாகத்தானிருக்கும்.

இத்தனை வருடங்களாக வளர்த்த அம்மா அப்பாவிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத, அதற்கு தைரியமில்லாத உணர்வை மனைவியிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது ஏன்…? இவ்வளவு வருடங்கள் இல்லாத மனச்சிக்கல் இப்போது புதியதாய் முளைத்து விட்டதா.

வாழ்க்கைத் துணையிடம் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்தான். ஆனால், இந்த காதல் விஷயத்தில் பிரயோஜனமிருக்கிறதா? தேவையற்ற சஞ்சலங்களை மனைவி மனதில் சுமத்துவதைத்தவிர, வேறு என்ன நடக்கிறது?

புதிதாய் ஏற்பட்ட ஒரு உறவில் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பிடிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் இப்போது பாதுகாப்பாற்ற உணர்வு மட்டுமே மனைவிக்கு எஞ்சி நிற்கும். ஆரம்பகாலகட்டத்தில் “நீ ரொம்ப அழகா இருக்கே தேவதையே பூமிக்கு வந்துட்டதோ – உலக அழகி போட்டிக்கு நீ போகலாமே…” என்ற சம்பிரதாய வார்த்தைகளோடு நிறுத்திக் கேளுங்கள்.

ஒருவர் மீது ஒருவருக்கு பிடிப்பும், புரிதலும் ஏற்பட்ட பிறகு மனதை வாட்டும் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளல் அவசியம்தான். ஆனால், உங்கள் மனதில் தோன்றும் எல்லா குழப்பங்களையும், பயங்களையும் கொட்டும் குப்பைத் தொட்டியாக உங்கள் துணையைப் பயன்படுத்தாதீர்கள்.

இத்தனை வருடங்களாக எப்படி சுயமாக அலசி ஆராய்ந்து பிரச்சனைளைத் தீர்த்தீர்களோ அதே போல் இப்போதும் நடந்து கொள்ளுங்கள். முடிவெடுக்க முடியாத பிரச்சனைகளையும் இரண்டு பேரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம். சரியான நேரத்தில் சரியான முறையில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

சிலருக்கு விஷயத்தை எங்கு ஆரம்பித்து, எப்படி முடிப்பது என்றே தெரியாது. முற்றுப் புள்ளியே வைக்காமல், கமாவிற்கு மேல், கமாவாப் போட்டுபேசிக் கொண்டே போவார்கள். சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக நேரடியாக சொல்லுங்கள். உங்களுக்கே குழப்பமாக இருகும். விஷயத்தைப் பற்றி அடுத்தவரிடம் பேச வேண்டாம்.

உணர்வுகளின் உச்சக்கட்டத்திலிருக்கும் போது, எந்த கருத்தையும் வெளிப்படுத்த வேண்டாம். மனம் ஒரு அமைதி நிலைக்கு வந்பின்பு பேசுவதே நலம். இல்லையெனில், வார்த்தைகள் தவறாக வெளிப்பட்டுவிடும். கோபமோ, வருத்தமோ எதுவாயிருந்தாலும் கொஞ்சம் ஒத்திப்போடுங்கள். அந்த உணர்வுகளின் வீரியம் குறைந்தவுடன் பிரச்சனையை அலசுங்கள். உங்களது பலவீனத்தை அப்படியே வெளிப்படுத்திடவிட வேண்டாம்.

சிலர், ஒரு உத்வேகத்தில் தங்களது மனக்குறைகளையோ, அடுத்தவர்மீதான குற்றச்சாட்டையோ பேசத் துவங்குவார்கள். இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச முடியாது. தடுமாற்றத்தினால் நாகுழறும் அல்லது அழுகை பொங்கும் பேச முடியாமல், அழுகை தடுக்கும். இது போன்ற நிகழ்வார் சம்மந்தப்பட்ட அனைவருமோ ஒரு இக்கட்டான சூழலில், மாட்டிக்கொள்ள நேரிடும். உங்களைப் பற்றிய குறைவான மதிப்பீடு ஏற்படவும் காரணமாகிவிடும். அதனால், நூறு முறை மனதிற்குள் மறு பரிசீலனை செய்து, நிகழ்வுகளை rewind செய்து பார்த்து, அதன் பாதிப்புகளை மனதிற்குள்ளே அனுபவித்துவிட்டு, விஷயத்தை மட்டும் தெளிவாக சொல்லக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கணவனும், மனைவுயும் தனித்திருக்கும் போது இருப்பதைவிட பல மடங்கு ஜாக்கிரதை உணர்வு, உறவுகளோடு சேர்ந்திருக்கும்போது அவசியம். உங்கள் துணையின் மேல் ஆயிரம்தான் கோபம் இருந்தாலும் அதை மற்றவர்களின் முன்பு வெளிப்படுத்த வேண்டாம். உங்கள் வாழ்க்கையே பறிப்போக் கூடிய அளவிற்கு பெரிய பிரச்சனைகளாயிருந்தால் பரவாயில்லை. ஆனால் பெரும்பாலான தம்பதியர்கள் மற்றவர்கள் முன்னிலையில் தங்கள் துணையைக குறை சொல்வதையே ஒரு பொழுது போக்காக வைத்திருப்பார்கள்.

“எங்க, இவருகு ஒரு சின்ன விஷயத்தை உருப்படியா செய்யத் தெரிஞ்சா தானே…?” என்பதிலிருந்து, “இவ செய்யற ரசத்தை பார்க்கக்கூட முடியாது. அப்புறம் எப்படி சாப்பிடறது..?” என்பது வரை விரிப்பார்கள். இது போன்ற சின்ன சின்ன முடிச்சுகள் நூல் கண்டையே சிக்கலாக்கி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்களது நியாயமான, உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை நேரடியாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். பாராட்டுக்களை மற்றவரின் முன்னிலையில் தெரிவியுங்கள். எதறகுமே இடம், பொருள் உண்டு. உணவு உண்பதற்கும், துணையுடன் கூடுவதற்கும் பிரைவஸி எவ்வளவு முக்கியமோ, அதே முக்கியத்துவத்தை உங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும் கொடுங்கள்.

மன உணர்வுகளை சரியான வழியில், நாகரீகமான முறையில் வெளிபடுத்தக்கூடிய சக்தி மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. அதிகபட்சம் நாம் மனிதர்களாக வாழ்ந்தாலே போதும்.. அதையும் தாண்டியெல்லாம் புனிதமாக வேண்டாம்…!

(தொடரும்..)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2002

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நல்ல விதைகளைத் தூவுவோம்?
மனசுவிட்டுப் பேசுங்க
பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே…!
உறவுகள் உணர்வுகள்
ஆக்க மனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்…
வாணவராயர் சிந்தனைகள்
மனம் விரும்பும் பணம்
அனுபவமில்லாதவர் அப்துல்கலாம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
பொதுவாச் சொல்றேன்
உள்ளத்தோடு உள்ளம்