Home » Articles » வெற்றிப் படிக்கட்டுக்கள்

 
வெற்றிப் படிக்கட்டுக்கள்


செலின் சி.ஆர்
Author:

தன் திறமை மீது கொண்டுள்ள நம்பிக்கையால், தன்குரல் மீது வைத்திருந்த அபார நம்பிக்கை யால் வானொலி நிலையத்திற்குச் சென்று வாய்ப்பு கேட்டார் அந்த இளைஞர். அவரது குரலைக் கேட்டதும் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு நபர், “”மிகவும் மோசமான கரடுமுரடான குரல் உனக்கு. இதை வைத்துக் கொண்டு என்ன தைரியத்தில் இங்கே வந்தாய்? உனது குரல் வானொலியில் ஒலிபரப்பவே லாயக் கற்றது…” என்று கடுமையாக விமர்சித்து அவரைத் திருப்பியனுப்பிவிட்டார். ஆனால்… இன்று… அதே மோசமான குரலுக்கு சொந்தக்காரர்தான், கரடுமுரடான குரல்… எதற்கு லாயக்கற்றவர் என விமர்சிக்கப் பட்டவர்தான்… தன் குரலுக்காகவே ஏகப்பட்ட ரசிகர்களை உலகெங்கும் சம்பாதித் திருக்கிறார். அந்த உயர்ந்த மனிதர் வேறு யாருமில்லை, நடிகர் அமிதாப்பச்சன் தான்.

பேசுவதற்கும், எழுதுவதற்கும் வேண்டு மானால் எளிதாயிருக்கலாமேயொழிய, உண்மை யில் அத்தகைய விமர்சனத்தை எதிர்கொண்ட போது அமிதாப்பின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? அவமான உணர்ச்சி ஒருபுறம் என்றால் தன் திறமையின்மீது தனக்கே ஏற்படும் சந்தேகம்… அதுதான் மிகப்பெரிய கொடுமை! “ஓ… இத்தனை நாட்களாய் எனது குரல் மிகவும் நன்றாயிருப்பதே நான் நினைத்துக் கொண்டிருந் தேனே, அது பொய்தானோ? சுமார் என்று கூட சொல்லாமல், சகிக்கவே முடியவில்லை என்று இந்த நபர் சொல்லிவிட்டாரே, அதுவும் இந்தத் துறையிலிருப்பவரே இப்படி சொல்லிவிட்ட பிறகு இனியும் நாம் இதே துறையில் முன்னேற நினைப்பது முட்டாள்தனமான செயல்…’ என நினைத்து, தன் திறமையின் மீது முழு நம்பிக்கையையும் இழந்து, அதன்பிறகு எந்த முயற்சியுமே எடுக்காமல் போயிருந்தால், அவரால் இன்று இவ்வளவு உயரத்திற்கு வந்திருக்க முடியுமா? இத்தனை வெற்றிகளைத் தான் குவித்திருக்க முடியுமா?

நிச்சயமாய் அவருக்கு அவமானமும், தன் திறமைமீது சந்தேகமும், விமர்சித்த நபர்மீது கோபமும் வந்திருக்கும்தான். ஆனால், அந்த உணர்ச்சிகளை மிக லாவகமாக, அழகாக கையாளும் கலை அவருக்கு கைவந்திருக்கும். “என் குரலைப் பற்றி கேவலமாக சொல்ல உனக் கென்ன தகுதியிருக்கிறது?’ என்று மல்லுக்கட்ட வில்லை. இனி இந்த துறையே வேண்டாம் என சோர்ந்து போகவுமில்லை. மாறாக யாரிடமாவது ஒரு நிபுணரிடம், “தன் நலம் விரும்பிகளிடம் உண்மையிலேயே என் குரல் எப்படியிருக்கிறது?’ என்று கேட்டுத் தெரிந்திருப்பார். நூறுபேர் “ஆஹா’ என்று பாராட்டும்போது, ஒரே ஒருத்தர், “அடச்சே’ என விமர்சனம் செய்தால், தவறு அந்த நபர்மீது தான். குறை நம்மேலில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பார். இன்னும் முக்கியமாக, தன் குரலை மேம்படுத்தும், மெருகூட்டும் வகையிலான பயிற்சிகளைக் கையாண்டிருப்பார். எதிர்மறையான விமர்சனங்களை ஒரு பொருட் டாகவே மதிக்காமல், தொடர்ந்து உங்கள் துறையில் கவனம் செலுத்திக் கொண்டே யிருந்தால்… இன்னும், இன்னும் என மேன்மேலும் உங்கள் துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொண்டேயிருந்தால், முயற்சிகளை முடுக்கி விட்டுக் கொண்டேயிருந்தால், நீங்கள் வெற்றிப் படிக்கட்டுகளின் உச்சத்தைத் தொடும் நேரம் வந்துவிட்டது என்றே அர்த்தம்!

அமிதாப்பச்சன் மட்டுமல்ல… “உன் முகத்தை இதுக்கு முன்னாடி கண்ணாடியில பார்த்திருக்கியா…’ என்ற விமர்சனத்தை எதிர் கொண்ட எத்தனையோ பேர் சினிமாத்துறையில் தங்களுக்கென்று மகத்தான இடத்தைப் பிடித்த நடிகர், நடிகைகளாயிருக்கிறார்கள். “இது பிரசுரத்திற்கு ஏற்றதல்ல’ என்ற விமர்சனத்தோடு திருப்பி அனுப்பப்பட்ட படைப்புகளுக்கு சொந்தக்காரர்கள், இன்று பிரபல எழுத்தாளர் களாகியிருக்கிறார்கள். “இவன் உருப்படவே மாட்டான்’ என்று என் கண்முன்னே தூற்றப் பட்ட எத்தனையோ இளைஞர்கள் இன்று பல்வேறு துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். “மாசாமாசம் ஏதோ சம்பளத்தை வாங்கினோமா, குடும்பத்தை ஓட்டினோமானு இல்லாம, ஒழுங்கா வேலைக்குப் போறதை விட்டுட்டு, உனக்கெல்லாம் எதுக்குடா பிஸினஸ்? டாடா பேரன்னு நினைப்போ… உள்ளதையும் விட்டுட்டு, தெருவுக்குத்தான் வரப் போறபாரு… ஒரு காரியத்துல இறங்குறதுக்கு முன்னாடி, நம்ம திறமை என்னன்னு யோசிக்க வேண்டாம்? நிச்சயமா நீ பிஸினஸ்க்கு லாயக்கில்லப்பா… என்று வெகு கடுமையாக விமர்சிக்கப்பட்ட எத்தனையோ இளைஞர்கள் வெற்றியாளர்களாய் வலம் வந்து கொண்டிருப் பதை, தொழில்துறையில் சாதித்துக் காட்டியதை படித்திருக்கிறோம்… நேரிலும் பார்க்கிறோம். இல்லையா?

எனவே, என் அன்பு நெஞ்சங்களே, உங்களை எதிர்மறையாய் விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள் மீது பதில் தாக்குதல் களைத் தொடுத்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காமல், உங்கள் வெற்றிப் பாதையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்! உங்கள் வெற்றிதான், நீங்கள் அவர்களுக்கு கொடுக்கப்போகும் பதிலடி!

பின்வாங்கி விடுதல்

இதற்கு முந்தைய மூன்று பதில் வினை களை விட ஆபத்தானது இந்த நான்காவது செயல். உங்கள் லட்சியத்திலிருந்து பின்வாங்கி விடுதல், உங்களது முயற்சிகளைக் கைவிட்டு விடுதல் என்பது பலவீனமான மனிதர்களின் செயல்பாடாகும். “பாடுவதற்கு லாயக்கற்றவர், பொறியில் மாட்டிக் கொண்ட எலி போல கீச்சென்று சத்தம், கச்சேரி செய்ய லாயக் கற்றவர்…’ என்ற விமர்சனத்தைப் பெற்றபிறகு, இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு கச்சேரிக்குப் போவது? இனி பாட்டும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்…” என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். இசைத்துறையில் நுழைவதற்கு முன்பே, வேரில் ஊற்றப்பட்ட வெந்நீரைப் போல… சில, பல எதிர்மறையான விமர்சனங்களால் கருகிப்போன திறமை யாளர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆரம்பகட்டத்திலேயே தொடுக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் என்ற அம்புகளால், தங்கள் திறமைகளை உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக் காட்டாமல், தங்களுக்குள் புதைத்துக் கொண்டவர்கள் எவ்வளவோ பேர்.

“உன் குரலில் ஏதோ ஒன்னு குறையுது…’ என சாம்பாரில் உப்பு, புளியைப் பற்றி சொல்வது போல் மதிப்பிட்டு…. இன்னும் பல டெக்னிக்கல் சமாச்சாரங்களைச் சுட்டிக்காட்டி பயமுறுத்தி, “”நமக்கெல்லாம் பாட்டே ஒத்து வராதுப்பா” என தலைதெறிக்க இதோ, “உன் குரலுக்கு என்ன குறைச்சல்?’ ரொம்ப இனிமையா இருக்குப்பா. உணர்வுகளை வெளிக்காட்டறமாதிரி, மனசுக்கு இதமா பாடினா போதும், காதும் குளிர்ந்து போகுமே. அதுவும், இந்த காலத்துல சினிமாவுல பாடறதெல்லாம் ரொம்ப ஈஸி. உனக்கிருக்கிற திறமையே போதும். தைரியமா இறங்கு. உணர்ந்து பாடினா போதும். அங்கங்கே தப்பும் தவறுமா பாடினாலும், கட் பண்ணிட்டு திரும்ப பாடிடலாம். ஈஸியா தொடர்ந்து பயிற்சி செய். நல்ல குருகிட்ட பாட்டு கத்துக்க. அப்புறம் பாரு “”எங்கேயோ போயிடுவ…” என நேர்மறையான விமர்சனத்தோடு கொஞ்சம் ஆலோசனையும் சொல்லிப் பாருங்கள். உங்கள் வார்த்தையே, நம்பிக்கை கொடுத்து… சாதாரண குரலுடைய வரைக்கூட மிகச்சிறந்த பாடகராக்கிவிடும். இந்தத் துறைதான் என்றில்லை. மளிகைக்கடை வியாபாரத்திலிருந்து விண்வெளி வீரராவது வரை தங்கள் மனதிற்குள் புதைந்து கிடந்த லட்சியங்களை, எதிர்மறை விமர்சனங்களுக்கு இரையாக்கிவிட்டு தவிப்பவர்கள் நிறைய.

என் அன்பிற்குரியவர்களே… நீங்கள் இப்போது என்ன தொழில் வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம். இதே தொழிலில் முன்னேற வேண்டுமென்ற நோக்கமோ அல்லது இனிமேல்தான் புதிதாய் தொழில் துவங்க வேண்டுமென்றால்… அந்த தொழில் துறையைப் பற்றியும், அதில் நீங்கள் சாதிக்க வேண்டிய லட்சியங்களைக் குறித்தும் மனதிற்குள் திட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் வெற்றியைக் குவித்து, பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நிற்கும் நாளைப் பற்றிக் கனவுகண்டு கொண்டிருப்பீர்கள். உங்கள் கனவுகளையும், முயற்சிகளையும் கலைத்து தூக்கி யெறிந்து விடக்கூடிய புயல்காற்றாய் பிறரது விமர்சனங்கள் அமைந்து விடக்கூடாது. எந்தக் காரணம் கொண்டும் உங்களது முயற்சியிலிருந்து நீங்கள் பின்வாங்கி விடக்கூடாது. உங்கள் திறமை வெளியே தெரியாமல், யாருக்கும் பயன்படாமல் போய்விடக்கூடாது.

எனவே, எதிர்மறை விமர்சனங்கள் எழும் போது மேற்சொன்ன நான்கு முறைகளிலும் பதில் வினை புரியாதீர்கள். மாறாக, நீங்கள் செய்ய வேண்டியது.

1. சுய இரக்கத்துடன் பேசாதீர்கள்.

2. அனைவரிடமும் புலம்பாதீர்கள்.

3. பதில் தாக்குதலுக்கு தயாராகாதீர்கள்.

4. உங்கள் வெற்றிப் பயணத்திலிருந்து பின் வாங்கி விடாதீர்கள்.

சரி. என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று இதுவரை பார்த்தோம். ஆனால், நான் ஏற்கனவே சொன்னபடி, வெற்றிப்படிக்கட்டு களில் “விமர்சனம்’ என்ற குறுக்கீடும் நிச்சயம் வரும்தான். அப்பொழுது, உடனடியாக நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? விவேகமான வெற்றியாளர்கள் “விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள். நம் மனதைப் பாதிக்காதவாறு கலசங்களைப் போட்டு விட்டாலும், பிறருக்குத் தெரியாமல், வெளிக் காட்டாமல், பொறுமையாய் நடந்து கொண்டாலும், மேலே சொன்ன நான்கு விஷயங் களையும் சரியாகப் பின்பற்றி விட்டாலும்… இன்னும் கொஞ்சமே, கொஞ்சம் விதிமுறைகள் மீதமிருக்கின்றன. “விமர்சனம்’ என்ற கடலுக்குள் சிக்கி அலைக்கழிக்கப்படாமல், அதிலேயே மூழ்கி முத்தெடுக்க நச்சென சில வழிகள் இருக்கின்றன. அவை என்னவென்று அடுத்த இதழில் பார்ப்போமா?

– தொடரும்

 

1 Comment

Post a Comment


 

 


June 2002

எதிலில்லை…பாடம்….
நமது அதிர்ஷ்ட தேவதை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
உறவுகள் உணர்வுகள்
ஓ… அன்றில் பறவைகளே!
தயாராகுக! வெல்க!
தோல்வியின் மரணம்….!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
மணம் விரும்பும் பணம்
ஆன்மிக சூப்பர் ஸ்டார் வாணவராயர் சிந்தனைகள்
பொதுவாச் சொல்றேன்
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றிப் படிக்கட்டுக்கள்