Home » Articles » உறவுகள் உணர்வுகள்

 
உறவுகள் உணர்வுகள்


செலின் சி.ஆர்
Author:

நிகழ்வுகள் முடிவை நோக்கி இட்டுச்செல்ல்லாம். முடிவுகளின் அடிப்படையில் நிகழ்வுகள் அமைந்துவிட்டால்…’

இந்த இரண்டு வரிகளை குறைந்தபட்சம் மூன்று முறையாவது படித்த பிறகுதான், ஏதோ புரியற மாதிரி இருக்கு என்று நினைத்துக்கொடிருப்பீர்கள். சரிதானே..?

கணவன் – மனைவிகிடையேயான உறவு சிக்கல்களுக்கு, சந்தேகம், வெறுப்பு, விருப்பமின்மை, என பல பெயர்கள் இட்டுக் கொண்டு, வெவ்வேறு சாயம் பூசி வெளிப்படுத்திக் கொண்டாலும், ஆழமான அடிப்படையான காரணம் மேற்சொன்னதுதான்.

போன மாசம் வரைக்கும் நாங்க ரெண்டுபேரும் நல்லாதாங்க இருந்தோம். அப்புறம், அதென்னவோ தெரியல எங்களையறியாமலேயே ஒரு இடைவெளி வந்திருச்சு.”

“சாப்பிட்டாச்சா?”

“ம்..”

“காபி வேணுமா..?”

“இப்ப வேண்டாம்…”

இப்படி இரண்டு வார்த்தை உரையாடல்களுகு மேல் எதவுமில்லை.

கல்யாணமாகி இந்த பதினெட்டு வருஷத்துல எங்களை மாதிரி சந்தோஷமா, ஜாலியா யாருமே வாழ்க்கையை அனுபவிச்சிருக்கவே முடியாது. அப்படி ஒரு பொருத்தமான ஜோடியா இருந்தோம். சொன்ன நம்ம மாட்டீங்க. ஒருமுறை துணிக்கடைக்குப் போயிருந்தோம். பையனுக்கு டிரெஸ் எடுக்க.

பெரிய கடை, நீளமான டேபிள்ல துணிகளைப் போட்டிருந்தாங்க. ‘நீ இந்தப் பக்கமிருந்து பார்த்துட்டு வா. நான் எதிர்பக்கம் பார்த்துட்டு வர்றேன். பிடிச்சதை எடுத்துக்கலாம்” னார். சரினு பார்த்தோம். ஐந்து நிமிஷம் கழிச்சிப் பார்த்தா ரெண்டு பேர் கையில இருந்ததம் ஒரே டிரெஸ். எங்களுக்குள் ஒரே டேஸ்ட்.

என் மனசுல நான் ஒரு விஷயத்தை நினைச்சா, அவர் கேட்டுடுவாரு. இன்னைக்கு பீச்சுக்ககுப் போனா நல்லாருக்குமேனு நினூச்சுட்டிருப்பேன். “என்ன இன்னைக்கு பீச்சுக்குப் போலாமான்னு”… அவர் கேட்பார். அந்த அளவுக்கு புரிதலோட, நெருக்கமா இருந்தோம்.

இப்ப எல்லாமே விட்டுப் போச்சு. வாழ்க்கை ஒரு பிடிப்பே இல்ல. எங்கேயாவது ஓடிடலாமானு இருக்கு. வெளிப்படையா சொன்னா, ஒரே ரூம்ல ஒரே பெட்லதான் இருக்கோம். ஆனா, எதுவும் இல்ல.

கணவனோ, மனைவியோ, நல்லா இருந்தோம். ஆனா, திடீர்னு மனசளவில் பிரிஞ்சுட்டோம்… என்ற வார்த்தைகளைச் சொல்லி புலம்புவதை நிச்சயமாய் நீங்களும் கேட்டிருப்பீர்கள். ஏன், சில நேரங்களில் நீங்களேகூட உங்கள் நண்பர்களிடம் இப்படி புலம்பியிருக்கலாம்.

ஏன்னு தெரியல..? ஏதோ ஒரு கணத்துல… ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி. என்பன போன்ற குத்து மதிப்புகளை, சால்ஜாப்புகளை ஓரம்கட்டிவிட்டு ஏன், எதனால்? என்றிலிருந்து என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே விடை கிடைத்துவிடும்.

பதினெட்டு வருஷத்துக்குப்புறம் புருஷனைப் பிடிக்காம போக என்னங்க காரணம்? ஏதாவது திட்டினாரா? அடிச்சாரா? என்று மெதுவாய் வலை வீசிப்பார்த்தால், தானாகச் சொல்வார்கள்.

“ம்.. எப்பத்துலேர்ந்து?” ஆங், ஒருமுறை படிக்கட்டுல இருந்து கீழே விழுந்துட்டேன். முதுகுல எலும்பு முறிஞ்சிடுச்சு. குனியவே முடியல. வலிக்குதுன்னு சொன்னேன். எனக்கு ஒரு வலின்னா உடனே துடிச்சிப் போயிடரவரு, அன்னைக்கு சாயங்காலம் பார்த்துக்கலாம்னு சொலட்டு ஆஃபீஸ் கிளம்பிபோயிட்டாரு. ஒரு வாரம் கழிச்சு எங்கம்மா ஊர்லேர்ந்து வந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனாங்க. அவர் அப்படி நடந்துக்கிட்டலயே எனக்கு பாதி நம்பிக்கை போயிடுச்சு.

அப்புறம், கொஞ்ச நாள் கழிச்சு, இன்னொரு சம்பவம் வேற. நான் சரியா பேசாத்தால, மதியானம் வீட்டுக்கு சாப்பிட வரமாட்டாரு. எங்கேயும் வெளில சேர்ந்து போறதில்லை. கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் அவாய்ட் பண்ண ஆரம்பிச்சிட்டோம்.

அந்த சமயத்துலதான், ஒரு ஐயர் வீட்டு கல்யாணத்துக்கு பத்திரிக்கை வெச்சிருந்தாங்க. ‘ஐயர் கல்யாணம் பார்த்ததே இல்லைங்க. என்னையும் கூட்டிட்டுப் போங்க’னு சொன்னேன். “ரொம்ப க்ளோஸ்னா பரவாயில்லை. எனக்கு தெரிஞ்சவங்களோட தெரிஞ்சவங்க கல்யாணம். இதுக்கெல்லாமா குடும்பத்தோட போகமுடியும்’னு? கேட்டாரு. ‘நாம என்ன சாப்பிடறதுக்குன்னா போறாம்..” அப்படினு பதில் பேச ஆரம்பிச்சேன், ‘ப்ச், வேண்டாம்னா, வேண்டாம்’னு சொல்லிவிட்டுப் போயிட்டார்.

இது எனக்கென்னவோ ரொம்ப வித்தியாசமாப்பட்டது. அவர் திரும்பி வந்ததும் கேட்டேன். ‘ஏன் யாரையாவது டிராப் பண்ணிட்டு வந்தீங்களானு?’ ‘இல்ல, ஏன்? அப்படீன்னார்’

“எனக்கு எல்லாம் தெரியும். பொய் சொல்லாதீங்கனு சொன்னேன்.

“இங்க பாரு இன்னைக்கு யாரையும் டிராப் பண்ணல. ஒரே ஒரு நாள்தான் ஆடிட்டர் ஆஃபிசுக்கு அந்தப் பெண்ணைக் கூட்டிட்டுப் போனே’னு சொன்னார். எனக்கு ஒன்னும் புரியல. என்னடா இது கிணறு வெட்ட பூதம் கிளம்புதேனு தோணுச்சு.

ஒரு வேளை இவர் மேனேஜர் யாரையாவது கல்யாணத்துக்கு அழைச்சிட்டுப் போயிருப்பாரோங்கற சந்தேகத்துலதான் கேட்டேன். ஆனா, விஷயம் எங்கேயோ போகுதேனு மலைச்சுப் போயிட்டேன்.

டிராப் பண்ணினது தப்பில்ல. ஆனா, அதை ஏன் எங்கிட்டேயிருந்து மறைக்கணும்? அப்ப, இவர் மனசுல குற்றவுணர்ச்சி இருக்கறதாதானே அர்த்தம்.? அன்னைலேர்ந்து, இவர் கூட படுத்துக்கவே பிடிக்கல. கையை, காலை மேல போட்டாக்கூட போடானு திட்டிடறேன். எனக்கு மட்டும் ஏன் இந்தக் குழப்பம்…?

எவ்வளவு நீளமான நூல் அழகாக, அடுக்கடுக்காக வரிசையாக சுற்றப்பட்டு நூல்கண்டாக இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தாலே அந்த ஒழுங்கும், வடிவமும் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். கொஞ்சம் இழுத்து, எங்கேயாவது ஒரு இடத்தில் சிக்கலாகிவிட்டால், அதன் கதி..? அவ்வளவு அழகும், ஒழுங்கும் கெட்டு அதன் அமைப்பே குப்பையாகிவிடுகிறது.

நாமும் அப்படித்தான். பல நேரங்களில், ஒரு சின்ன குழப்பத்துக்கு இடம் கொடுத்து, வாழ்க்கையையே, உறவுகளையே, சிக்கலாக்கிக் கொள்கிறோம். உயிரோடும், உடலோடும் கலந்திருக்கும் கணவன் – மனைவிகளுக்கிடையே அதல பாதாளமே தோன்றிவிடும் அபாய்தை தடுப்பதற்குத்தான் மேற்சொன்ன பெரிய்ய உதாரணம்.

அந்தப் பெண்மணி சொன்னதைப்படித்தீர்களல்லவா? உடல் நலமில்லாதபோது கணவன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவில்லை.

இந்த சமயத்தில் கணவன் இப்படிச் செய்வான் என்ற, ஒரு முடிவை ஏற்கெனவே மனதில் பதிய வைத்திருக்கிறார். 1+1 =2 போல, பலரும் மனதிற்குள் இப்படி ஒரு Formula வை வரையறுத்து வைத்திருக்கிறோம். அது கொஞ்சம் பிசகினாலும் நமக்கு பலத்த அடியாக இருக்கும்.

குறிப்பாக கணவனோ, மனைவியோ தாங்கள் எதிர்பார்த்தபடி தன் துணை நடந்து கொள்ளாதபோது, கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஒரு விஷயத்தை அவள் அப்போதே பேசி, தீர்த்து சரி செய்திருக்கலாம். அப்படி செய்யாமல், கணவனுக்கு தன் மேல் அன்பில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.

முடிவுகளின் அடிப்படையில், நிகழ்வுகள் அமைந்துவிட்டால்….

ஆம்… அப்படித்தான் அமைந்துவிட்டது.

நமக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது என்றால், அவர் நம்மை முதுகில் நாலு நாலு சாத்து சாத்தினாலும் ஆஹா, உடம்பு வலிக்கு என்ன இதமாக இருக்கிறது. என்போம். இதே, பிடிக்காதவர் ஆசையாய் பழரசம் கொடுத்தால்கூட என்ன கொழுப்பு பார் இவனுக்கு. எனக்கு ஜலதோஷம் வரட்டுமென்றே இவ்வளவு ஐஸ் போட்டு கொடுக்கிறான்…. என்று திட்டுவோம்.

அதே கதைதான்.. இங்கேயும். கணவனுக்கும் – நமக்கும் இடைவெளி வந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்தவள், அதற்கேற்பவே தன் செயல்களை அமைத்துக்கொண்டாள். கணவனது செயல்கள் அனைத்துமே வித்தியாசமாய் அமைந்துவிட்டதைப் போன்ற ஒரு கற்பனை.

இந்தக் கற்பனைகள் நாளடைவில் உண்மையைப் போன்றே தோற்றமளிக்கும். கற்பனை எண்ணங்களை இது நகல் என்று கண்டறியும் மனோபாவம் வளர அதிக மெச்சூரிட்டி தேவை.

கணவனை பழிவாங்கும் நோக்கிலேயே அவளும் நடந்துகொண்டாள். நீ இப்படி செய்தாயா? நான் உன்னை என்ன செய்கிறேன் பார்? என்ற பழிவாங்கல். பல வருடங்கள் நெருக்கமாயிருந்தவர்கள் கூட இந்த உணர்வுக்கு ஆட்பட்டால் அன்னியராகி விடுவார்கள். ஒருவர் இப்படி நடந்து கொள்ளும்போது, இதற்கு எப்படி React செய்வது என்று புரியாமல் எதிராளி குழம்பி நிற்பார். இந்த Emotional Gap தான் பிரிவுக்கு இட்டுச் செல்கிறது.

அடுத்தது, இவள் தன் பழிவாங்கலுக்கு எடுத்துக்கொண்ட ஆயுதம் செக்ஸ். கணவனைக் கட்டிப்போடவும், பழிவாங்கவும் பெண்கள் எடுத்துக் கொள்ளும் முதல் ஆயுதம் செக்ஸ், அடுத்தது அழுகை. அழுகைக்கு இப்போதெல்லாம் பெரிய மதிப்பில்லாததால் (சீரியல்களில் பார்த்து பார்த்துதான் பழகிப்போய் அழுத்துவிட்டதே!) முழு முதல் ஆயுதம் செக்ஸ்தான்.

இப்படிச் செய்ய வேண்டும், படுக்கையறையில் அவனை ஒதுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள் அதற்கான காரணங்களைத் தேட ஆரம்பித்தாள். இங்கும் ஒரு முடிவின் அடிப்படையில்தான் செயல்கள் நடந்தன.

ஒரு பெண்ணை டிராப் செய்தான் என்ற காரணம் கிடைத்ததும் ரொம்ப வசதியாகப் போய்விட்டது. அவகிட்டேயே போய்க்க. நான் எதுக்கு…? என்றுகேள்வி கேட்பது சுலபமாகிவிட்டது. இத்தனைக்குப் பிறகும் இவள் சந்தோஷமாயிருந்தால் பரவாயில்லை.

எனக்கே குழப்பமாயிருக்கே… என்ன செய்யறது? என்று இப்போது தலையைப்பிய்த்துக் கொள்கிறாள். இவளுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஒரே யோசனைதான். கணவன் – மனைவி உறவில் மட்டுமல்ல, எல்லா உறவுகளிலுமே நாம் இந்த Rule ஐப் பின்பற்றினால் போதும்.

“ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதற்கான காரணங்களைத் தேடுவதில் உங்கள் நேரத்தையம் உறவையும் சிதைத்துக் கொள்ளாதீர்கள்.

உறவுகளை வளமாக்க, இதை மட்டும் பின்பற்றினால் போதும்….

தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2002

எதிலில்லை…பாடம்….
நமது அதிர்ஷ்ட தேவதை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
உறவுகள் உணர்வுகள்
ஓ… அன்றில் பறவைகளே!
தயாராகுக! வெல்க!
தோல்வியின் மரணம்….!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
மணம் விரும்பும் பணம்
ஆன்மிக சூப்பர் ஸ்டார் வாணவராயர் சிந்தனைகள்
பொதுவாச் சொல்றேன்
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றிப் படிக்கட்டுக்கள்