Home » Articles » தயாராகுக! வெல்க!

 
தயாராகுக! வெல்க!


சூரியன்
Author:

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாம் இருக்கின்றது. மனிதர்களுக்கு இந்த உலகத்தில் எது வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்து அதை அடையும் வல்லமை அளிக்கப்பட்டிருக்கிறது.

மனிதன் எதை அடைய நினைத்தாலும் அடையலாம். அடைய முடியாது என்பது ஏதும் இல்லை. மாறாக அதை அடையும் வழிமுறை தெரியவில்லை என்பதே உண்மை.

தக்க அறிவு, திறமை, அணுகுமுறை, வழிமுறை தெரிந்தால் எதையும் இந்த வாழ்க்கையில் அடையலாம். ஒன்றை நினைத்து அடைய முடியாமல் இருந்திருந்தால் – தோல்வி அடைந்திருந்தால் – மேற்கண்ட நான்கில் ஏதேனும் ஒரு குறை இருந்திருக்கலாம். அது என்ன என்று கண்டுபிடித்து மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

ஆகவே, வாழ்விலும், தொழிலிலும் தொடர்ந்து வெற்றி பெற, தொடர்ந்து தயாராகுதல் – தகுதியை உருவாக்கிக்கொள்ளுதல் அவசியம்.

நான் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எனது இயந்திரவியல் பேராசிரியர் ஒரு கருத்தை அடிக்கடி சொல்வார். அது ஓர் பெரிய வாழ்வியல் உண்மையும் கூட.

நாம் எதற்குத் தகுதியுடையவராய் இருக்கிறோமோ அதைக் கடவுள் நமக்கு கொடுப்பார். ஆகவே, நாமாக தேடிப்போகாவிட்டாலும் நமக்குத் தகுதியிருந்தால் அது கொடுக்கப்பட்டுவிடும்’ என்பதுதான் அது. எனவே, வாழ்க்கையில் வெற்றிப்பெறுவது நாம் நம்மைத் தகுதியுடையவராக ஆக்கிக்கொள்வதிலேயே இருக்கிறது.

தொடர்ச்சியான வளர்ச்சி, வாழ்வின் நியதி. வாழ்க்கை பற்றியும், தொழில் பற்றியும் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நல்ல நூல்களைப் படிக்கவும், நல்ல நூல்களைப் படிக்கவும், நல்ல நண்பர்களோடு தொடர்பு கொள்ளவும் நேரம் ஒதுக்க வேண்டும். தனி மனித மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கு செல்வது மிகுந்த பயனளிக்கும். ஒவ்வொரு பயிற்சியாளரிடமும் புதிய கருத்துக்கள், புதிய அணுகுமுறைகள் இருக்கும்.

கடந்த இருப்பத்தைந்து வருடங்களாக இன்று வரை தொடர்ந்து நான் மனோத்த்துவ – வாழ்வியல் நூல்களைப் படித்து வருகிறேன். ஒவ்வொரு முறை வெளிநாடுகளுக்கு செல்லும்போது உலகப் புகழ்பெற்ற வெளிநாட்டு பயிற்சியாளர்களின் பயிலரங்குகளில் புதிது புதிதாக கற்று வருகிறேன்.

ஓர் அறிஞர் சொன்னார் – தெரிந்து பகுதியினுடைய அளவு அதிகரிக்க அதிகரிக்க தெரியாத பகுதிஇன் பேரளவு பெரு வியப்பினை அளிக்கிறது’ என்று. அது முற்றிலும் உண்மை.

நிறையச் சாதனையாளர்கள் – வெற்றியாளர்கள் – கோடீஸ்வரர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் ஒரு சொல் – ஒரு வரி – ஒரு கருத்து – ஒரு சம்பவம் – ஒரு நூல் – ஒரு ஆசிரியர்… வாழ்வின் மாற்றத்துக்கும், உயர்ச்சிக்கும் காரணமாயிருப்பது தெரிகிறது.

சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன்.

அதில் – வாழ்வில் மாற்றம் வருவதற்கு ஒரு நிமிடச் சிந்தனை போதும்’ என்கிறார்.

இப்போது ஒரு முடிவெடுப்போம் – தயாராவோம் – வெல்வோம். அது உங்களால் முடியும்!

நீங்கள் எப்போதும் இன்பமாக இருக்க வேண்டுமானால், கடுமையாக உழைத்துக் கொண்டே இருங்கள்.

– சீனப் பழமொழி

நீண்ட காலம் வறுமையில் வாடியாயிற்று. அதனால் ஏற்பட்ட அவமானங்களைப் பொறுமையாகத் தாங்கியாயிற்று.

என்று ‘ஆழ்மனம்’ என்னும் அற்புத மான தேவதை நமக்குள் இருப்பதாக அறிகிறோமோ, அன்றுதான் வறுமையை விரட்டிவிட்டு, வளமையைத் திரட்ட முடியும் என்னும் நம்பிக்கை நமக்கு வந்தது.

நம்பிக்கை வந்தவுடன் நீங்கள் செய்பாட்டில் இறங்கி இருக்க வேண்டாமா? ஆசையை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டிருந்தால் வறுமை போய்விடுமா?

அல்லது குறிக்கோளை மட்டுமே உள்ளத்தில் வைத்துக் கொண்டிருந்தால் போய் சேரவிரும்பும் இடத்தை அடைந்துவிட முடியுமா?

சேரவேண்டிய இடம் எதுவோ அதை நோக்கிய திசையில், ஏதேனும். ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து முதலடியை எடுத்து வைத்தால் தானே அடுத்த அடியை எங்கே வைப்பது என்று நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

ஆகே, பத்து ஆண்டுகளில் வளமையை அடைய முடிவான முடிவு எடுத்துவிட்ட நீங்கள், தொழில் அல்லது வணிகம் அல்லது சேவையை உடனடியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுத்த தொழில் மூலம் செல்வத்தை ஈட்ட குறையற்ற ஒரு திட்டம் வேண்டும். மாதக்கணக்கில், ஒவ்வொரு நாளும் அரைமணி நேரம், கண்களை மூடி நான் என்ன வணகம் செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும்? என்னும் வினாக்களை உங்கள் ஆழ்மனத்திடம் கேட்டமையால் அருமையான ஒரு திட்டத்தையும் பெற்றுவிட்டீர்கள்.

இனி என்ன! செயல்பட வேண்டியது தானே! செயல்படலாம்தான்… ஆனால்… என்று இழுத்தீர்களானால் உங்கள் வெற்றிப் பயணம் அங்கேயே நின்றுவிடும்.

ஆனால்.. என்று ஏன் நீட்டுகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் சாக்குபோக்கு என்னும் நீரூற்று கிளம்பிவிட்டது. சாக்குப்போக்கு என்னும் ஊற்றுக்கண்ணை அடைக்காவிட்டால், அதன் உற்பத்தி தடைக் கட்டைகளாக அவை மாறிவிடும்.

சாக்குப்போக்கு உள்ள இடத்தில் சாதனை நிகழாது. சாதனை உள்ள இடத்தில் சாக்குபோக்கு உயிர்வாழாது.

அறிவும், திறனும், ஆற்றலும் உடைய பலர் தம்மையும் அறியாமல் சாக்குப்போக்குகளை உற்பத்தி செய்து, அதில் சுகம் கண்டு, திட்டங்களைச் செயற்படுத்தாமல், திட்டமாக வைத்துக்கொண்டு,பகற்கனவு கண்டுகொண்டிருகிறீர்கள்.

எந்த ஒரு தடையும், தெளிவாக முடிவெடுத்து, திட்டமாக முதலடியை எடுத்து வைக்கும்போது உடைந்து போகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எடுத்த குறிக்கோளில் நீங்கள் வெற்றி அடைய வேண்டுமென்றால், அதற்கு என்னென்ன தடைகள் உள்ளன என்று அறிவது மட்டும் போதாது. தடைகளை எவ்வாறு உடைப்பது என்று சிந்திக்க வேண்டும். தடையைத் தகர்க்க முடியும் என்று நம்ப வேண்டும். செயல்பட வேண்டும்.

தடைகள்தான் சாக்குப்போக்குகளைக் கூறச் செய்கின்றன. நன்கு கவனித்துப் பார்த்தால் தடைகள் உண்மையில் தடைகளல்ல. வாய்ப்புகள். அதனுள் புதைந்து கிடக்கின்றன.

தனி மனிதராயினும், நிறுவனும் ஆயினும் தன்னுள் இருக்கும் சாக்குப் போக்குகளை நீக்கவில்லையென்றால் முன்னேற்றம் காண முடியாது.

கடலில் கப்பல் பயணம் செய்கிறது. பனிப்பாறையின் கூர்மையான வடிவம் நீர்மட்டத்திற்கு மேல் தெரிகிறது. அதைக் கண்டு விலகிச் சென்றால் கப்பற்பயணம் தொடரும். இல்லையென்றால் உடைந்து சிதறும்.

நீர் மட்டத்திற்கு மேல் தெரியும் பனிப்பாறை மிகச் சிறியதாகவே தோன்றும். ஆனால், அச்சிறிய பகுதியைத் தாங்கி நிற்கும் அடிப்பாகம் மிகப் பரந்தது. அகன்றது.

பனிப்பாறையைத் தாங்கி நிற்கிற அடிப்பரப்பு போலவே சாக்கு போக்கு, என்னும் பனிப்பாறையை எதிர்மறை எண்ணம் என்னும் அடிப்பரப்பு தாங்கி நிற்கிறது. பனிப்பாறையின் அடிப்பரப்பை உடைத்து நொறுக்கி விட்டால் பனிப்பாறையை கடல் மட்டத்திறகுக் கீழ் இறங்கிக் காணாமல் போய்விடும்.

அதுபோன்று உங்கள் உள்ளத்தில் மறைந்து கிடக்கும். எதிர்மறை எண்ணங்களை உடைத்து நொறுக்க வேண்டும். நொறுக்கினால் சாக்குப்போக்கு மூழ்கிப் போய்விடும். வெற்றிக் கப்பலின் பயணம் தடைபடாது. விரும்பிய இடத்திற்குச் சென்று சேர்ந்துவிட முடியும்.

ஆகவே, உங்கள் உள்ளத்தில் மறைந்து கிடக்கும், எதிர்மறை எண்ணங்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

எதிர்கால நம்பிக்கையின்மை:

நல்லது எதுவும் நடக்கப் போவதில்லை. நிலைமை இப்படியேதான் இருக்கும்; என்ன செய்து என்ன ஆகப்போகிறது; நாம் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்று நினைக்கிறான்: இதுபோன்ற சிந்தனைகள் சாக்குபோக்குகளை உற்பத்தி செய்யும்.

தோல்வி பயம்:

தோல்வி வந்துவிடுமோ; நிறைவேறாமல் போய்விடுமோ? முதலுக்கும் மோசமாக விடுமோ? மற்றவர் கேலி பேசுவார்களோ? பணமும், காலமும் விரயம் ஆகிவிடுமோ? என்னும் சிந்தனை உயர்ந்த இலக்கு கொள்ளாமல் தடுத்துவிடும் சாக்குப்போக்குகள் கூறச்செய்யும்.

தள்ளிப்போடுதல்:

இப்போது ஒன்றும் அவசரமில்லை. நாளை பார்க்கலாம். இந்த மாதம் போகட்டும் போன்ற எண்ணங்கள் சாக்குப்போக்குச் சொல்வதில் கொண்டுபோய்விடும்.

சுய ஏமாற்றுதல்:

எனக்குத் திறமை போதாது. என்னால் முடியாது; போதிய அனுபவம் இல்லை; படிப்பு போதாது; போன்ற எதிர்மறை எண்ணம் சாக்குப்போக்கில் முடியும்.

முடியாதென்னும் மனப்பான்மை:

அது சாத்தியம் என்று தோன்றவில்லை. முடியவே முடியாது. அது வெறும் பகற்கனவு; அதைச் செய்ய எனக்கு அறிவு போதாது. முடியாது என்னும் மனப்பான்மை சாக்கு போக்குகளையே உற்பத்தி செய்யும்.

பழிபோதும் மனப்பான்மை:

நான் சரியாகத்தான் செய்தேன்; அவன் என்ன செய்தான் பார்த்தீங்களா? இவன் செய்வதே சரியில்லை; அவர் சரியான நேரத்தில் உதவியிருந்தால், தோல்விக்கு நான் காரணமல்ல; மற்றவரே காரணம் என்று பிறர் மீது பழிபோடும் மனப்பான்மை சாக்குப்போக்காக உருவெடுக்கும்.

நம்பிக்கையின்மை:

கொண்ட குறிக்கோளின் மீது நம்பிக்கையின்மை; தன் மீது; தன் அணியின் மீது நம்பிக்கையின்மை. வகுத்துள்ள திட்டத்தின் மீது, வழிமுறை மீது நம்பிக்கையின்மை. பெற விரும்பும் வெற்றியின் மீது நம்பிக்கையின்மை. இவை சாக்குபோக்குகள் உருவாக அடித்தளமாகும்.

பிற்போக்கு சிந்தனை:

நேரம் சரியாக இல்லை. இந்த மாதம் சனி தொடங்கியிருக்கிறது. மூன்று வருடத்தற்கு தொட்டது துலங்காது என்று சோதிடர் அடித்துச் சொல்லியிருக்கிறார். வெற்றியும், சாதனையும் நமக்குள்ளிருந்து புறப்படுகிறது என்பதை மறந்துவிட்டு, புறக் காரணங்களுக்கு நம்மை அடிமையாக்குதல் சாக்குப்போக்குகளுக்கே சந்தர்ப்பம் தரும்.

கையறு நிலை:

இனி ஒன்றும் செய்வதற்கில்லை முடிந்தவரை முயற்சித்தாயிற்று. வயதும் ஐம்பதைத் தாண்டி விட்டது. ஐம்பது ஆண்டில் சாதிக்க முடியாததையா ஐந்து ஆண்டுகளில் சாதித்துவிட முடியும்? இனி சும்மா இருப்பதே நல்லது; எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது போன்ற எண்ணம் சாக்குப்போக்குகளாக மாற்றுருவம் எடுக்கும்.

மேற்கூறிய எதிர்மறை எண்ணம் எங்கு இருக்கிறதோ அங்கு சாக்குப் போக்கு தொடர்ந்து உற்பத்தியாகும். சாக்குப்போக்குகள் நமக்கே நம்மீது சுய பரிதாபத்தை உண்டாக்கும். சுய பரிதாபத்தில் சுகம் கண்டு பழகினால் வறுமை நிரந்தரமாகக் குடியேறிவிடும்.

உங்களிடம் இவையுடன் இன்னும் பல எதிர்மறை எண்ணங்கள் குடிகொண்டுள்ளன. கடல் மட்டத்தின் கீழ் மறைந்துள்ள பரந்த அடிப்பரப்பை உடைய பனிப்பாறை போன்று உங்கள் வெற்றிக் கப்பலைச் சிதறடித்து மூழ்கச் செய்யும் வலிமை வெற்றிக்கு உண்டு.

நீர் மட்டத்திறகு மேல் தெரியும் பனிப்பாறை சிறயதுதான். அதுபோன்று சாக்குப் போக்கு சாதாரணமாக, தீமையற்றதாகவே தோற்றமளிக்கும். ஆனால் ஆபத்தானது.

நீங்கள் உண்மையாகவே வறுமையை விரட்ட விரும்பினால், வளமையைத் திரட்ட விரும்பினால், பத்து ஆண்டுகளில் சாதனை நிகழ்த்த விரும்பினால், பத்து ஆண்டுகளில் சாதனை நிகழ்த்த விரும்பினால் எதிர்மறை எண்ணம் என்னும்பனிப்பாறையை உடைத்து நொறுக்குங்கள்; மகத்தான வெற்றி பெறுவீர்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2002

எதிலில்லை…பாடம்….
நமது அதிர்ஷ்ட தேவதை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
உறவுகள் உணர்வுகள்
ஓ… அன்றில் பறவைகளே!
தயாராகுக! வெல்க!
தோல்வியின் மரணம்….!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
மணம் விரும்பும் பணம்
ஆன்மிக சூப்பர் ஸ்டார் வாணவராயர் சிந்தனைகள்
பொதுவாச் சொல்றேன்
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றிப் படிக்கட்டுக்கள்