Home » Cover Story » நம்பிக்கையும் நானும்

 
நம்பிக்கையும் நானும்


பெரியார்தாசன்
Author:

பேராசிரியர் பெரியார்தாசன் பேட்டி

பேராசிரியர் பெரியார்தாசன், தமிழகம் வியந்து பார்க்கும் வித்தியாசமான சிந்தனையாளர். பல்லாயிரக்கணக்கில் கூடும் கூடத்தை சொலால் கட்டிப்படோமு சொற்பொழிவாளர். 4-6 மணி நேர சொற்பொழிவு இடையில் இரண்டு இடைவேளை – கலையாமல் இருக்கு கூட்டம் இதெல்லாம் பேராசிரியர் பெரியார்தாசனின் மேடை ஆளுமைக்கு மேம்மைமிக்க சான்றுகள். 20 ஆண்டுகளாய், தன்னம்பிக்கைப் பயிற்சிகளை இவர் தந்து வருகிறார். இதோ… பேராசிரியர் பெரியார்தாசனுடன் நாம்..)
பெரியார்தாசன்.. பெயர்க் காரணம்?

எனக்குப் பெற்றோர் வைத்த பெயர் சேஷாசலம். அந்தப் பெயரிலேயே நான் கவிதைகள் எழுதியதும் உண்டு.

நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது ஒருமுறை தந்தைப் பெரியார் எங்கள் கல்லூரிக்கு வருகை புரிந்தார். அவரை வரவேற்று எழுதிய கவிதைக்கு கீழ் சேஷாசலம் என்று போட்டிருந்தேன்.

என் ஆசிரியர் ஒருவர், “பெரியாரை வரவேற்கிற கவிதைக்கு கீழே வடமொழியில் பெயரா?” என்று கேட்டார். உடனே அந்தப் பேரை அடித்துவிட்டு “பெரியார்தாசன்” என்று எழுதினேன். அப்போது உருவான பெயருக்குத் தகுதியாய் வாழமுயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

எப்படியெல்லாம் பெரியார்தாசனாக இருக்கிறீர்கள்?

பெரியார் கருத்துக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, எதற்கும் “முன்முடிவு” தேவையில்லை. என்கிற எண்ணம்தான். எதுவும் மாறுதலுக்கு உட்பட்டது. என்கிற தெளிவு நிபந்தனைகளிலிருந்து வாழ்வை விடுவிக்கிறது.

பெரியாரை சந்திக்கும் வரையில் விதியை மாற்ற முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சைக்களில் ஓட்டும்போது ஓட்டுவேன். சைக்கிள் நல்லபடியாகப் போய் சேர சிவபெருமான் அருள்செய்வார் என்று உறுதியாக நம்புவேன்.

பெரியாரிடம் வந்த பிறகு எல்லாமே மறு பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து மறுபரிசீலனை செய்யத் துவங்கினேன்.

அது எந்த அளவிற்குப் போனதென்றால் பெரியார் கருத்துக்களைக் கூட பெரியார் சொன்னார் என்பதற்காக மட்டும் ஏற்காமல்,கருத்தாய்வுக்கு உட்படுத்தி ஏற்கும் விதமாக இருக்கிறதா என்பதை எடை போட்டு முடிவு செய்கிற பழக்கத்தை மேற்கொண்டேன்.

எதையும், தானாக சிந்தித்து முடிவெடுப்பதே நல்லது என்பதைப் போதித்தவர் பெரியார். அந்த வித்த்தில் நான் பெரியாதாசன்.

நானாக முயற்சி செய்வதில் தன்னம்பிக்கை வளர வாய்ப்பு இருக்கிறதா?

நிச்சயமாக வளர்கிறது. சுயமாக முடிவெடுக்கும்போது, முயற்சியும் பயிற்சியும் கைகோர்க்கிறது.

இன்று, நான் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளன். ஆனால், 18 வயது வரை திக்குவாய்க்காரன், திக்குவாய்க்காரனாக இருக்கும்போதே சரளமாப் பேசுவது மட்டும் இலட்சியமல்ல,தமழகத்தின்பேச்சுத் துறையில் தன்னிகரில்லாத இடத்தைப் படிப்பதே இலட்சியம் என்கிற முடிவுக்கு வந்தேன்.

வறுமையில் வாடிய காலங்களில் மிக நல்ல உணவகங்களில் மிகுவும் தரத்தில் தலைசிறந்த உணவை உண்ணும் நிலைக்கு உயர வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதையும் எட்டியும் இருக்கிறேன்.

எந்த ஒரு துறையிலும் அதன் உச்சத்தை இலக்காக வைத்துக் கொண்டு, அதனை எட்டியும் வருகிறேன். அதில், எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. குறைபாடுகள் நிரம்பி இருந்த என்னால் இது முடியுமென்றால் எல்லோராலும் முடியும்.

“முன் முடிவுகள்” கூடாது என்கிறீர்கள்? ஆனால் தொழில் முறையில் நீங்கள் தத்துவப் பேராசிரியர். தத்துவங்கள் இந்த சமூகத்திற்கு சில அறிஞர்கள் சொல்லியிருக்கிற முடிவுகள் தானே?

தத்துவங்கள் என்ன என்பதை ஆசிரியர் தொழிலில் சொல்கிறேன். அப்போது நான் ஆசிரியன். தத்துவங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை மேடையில் சொல்கிறேன். அங்கே நான் சிந்தனையாளன்.

“முன் முடிவுகள்” கூடாது என்பதற்கு உலகில் தத்துவங்களே கூடாது என்று பொருளல்ல. அப்படிப்பார்த்தால் முன் முடிவுகளே வேண்டாம் என்பது கூட ஒரு தத்துவம் தான்.

அனுபவங்கள் த்த்துவ விதைகளாக விழுகின்றன. அந்த விதை செடியாகிறது. ஆனால், விதை செடியாவதென்பது, விதை நிலைக்கான மறுதலிப்பு அல்ல. வளர்ச்சி தத்துவங்களை முடிந்த முடிவாகக் கொண்டு தேங்கி நிற்கக்கூடாது.

முன்னேற நினைக்கிற மனிதன், இடையிலேயே தளர்ந்து போகும் நிலை எதனால் ஏற்படுகிறது?

தவறே வராமல் செயல்பட வேண்டும் என்இற தவறான வழிகாட்டுதல் இதற்குக் காரணம்.

மனிதனுக்கு ஆரம்பத்திலேயே அன்பு, சுறுசுறப்பு, உறுதி போன்ற இலட்சிய குணங்களை போதித்து விடுகிறோம். இவற்றில் ஒரு சிறு தடுமாற்றம் வந்தாலும் மனிதன் தளர்ந்து விடுகிறான்.

எனவே, நிறைகளில் தொடங்கும் மனிதன் குறைகளில் சென்று முடிகிறபோது குழப்பம் நேர்கிறது. மாறாக மனிதன் மனிதன் தன் குறைகளிலிருந்து தொடங்கி நிறைகளை நோக்கி நடைபோடுவதுதான் புத்திசாலித்தனம்.

மண்ணில் தொடங்கி மாளிகையில்முடிக்க வேண்டும். ஆத்திரம் நமது குணமாக இருந்தால் ஆத்திரத்தில் தொடங்கி அன்பில் முடிக்க வேண்டும். சோம்பலில் தொடங்கி சுறுசுறுப்பில் முடிக்க வேண்டும். ஐயத்தில் தொடங்கி உறுதியில் முடிவு செய்ய வேண்டும். அதற்குத்தான் தமிழிலக்கியங்கள் மனிதனைத் தயார் படுத்துகின்றன.

தமிழிலக்கியங்கள் வாழ்க்கைகான வழிகாட்டும் படைப்புகள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், பெரும்பாலும் தமிழிலக்கயங்கள் வாழ்விலிருந்து தள்ளி வைத்தே பார்க்கப்படுகிறதே, இது ஏன்?

ஒரு உதாரணம் சொல்கிறேன். வடமொழியில் வாழ்க்கை முறைக்கென்று “முனு சாஸ்திரம்” வழிகாட்டும் நூலாக கருதப்படுகிறது. அதில் அரசியல் குறித்தோ, இன்ப வாழ்க்கை குறித்தோ ஏதுமில்லை.

அரசியல் சாத்திரங்களை கௌடில்யரின் “அர்த்தசாத்திரம்” பேசுகிறது. அதில் சமூகம் குறித்தோ காதல் குறித்தோ சொல்லப்படவில்லை.

வாத்சாயனரின் “காமசூத்திரம்” அங்கு உண்டு. அதில் சமூகம் சிந்தனைகளோ, அரிசல் நெறி முறைகளோ பேசப்படவில்லை.

ஆனால், தமிழில் திருக்குறள் அறத்துப்பாலில் சமூக வாழ்க்கை குறித்துப் பேசுகிறது, பொருட்பாலில் அரசியல் நெறிமுறைகளைச் சொல்கிறது. காமத்துப்பாலில் காதல் வாழ்க்கை பற்றி சொல்கிறது. அது மட்டுமில்லை, துறவு, மெய்ஞானம் ஆகியவை குறித்தும் பேசுகிறது. நாம்தான் அதனை வெறும் இலக்கிய நூலாக மேடைகளில் மேற்கோள் மட்டும் காட்டுகிறோம். தமிழில் எழுதப்படும் பெரும்பாலான இலக்கியங்கள், குறிப்பாக தொன்மையான இலக்கியங்கள் வாழ்வில் வெற்றிக்கான சூத்திரங்கள்.

அந்த சூத்திரங்களை வாழ்வின் வெற்றிக்கு நாம்தான் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். உதாரணத்திகு திருக்குறளையே எடுத்துக் கொள்ளுங்கள்.

தொடிப்புழுத கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

இதில் ‘ஏர் உழுவது’ மிகவும் முக்கியம் என்கிறார். இன்னொரு குறளில் ‘ஏரினும் ன்றாம் எருயிடுதல்’ என்கிறார்.

ஓரிடத்தில் ஏர் உழவு முக்கியம் என்கிறார். இன்னொரு இடத்தில் எருயிடுதல்தான் முக்கியம் என்கிறார். ஏனென்றால் நன்செ நிலத்திற்கு எருவிடுதல் முக்கியம். புன்செய் நிலத்திற்கு ஏர் உழவு முக்கியம்.

தமிழனுக்கு இப்படியொரு விவசாய விஞ்ஞானம் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கிறது. இது ஜப்பானிலோ, இங்கிலாந்திலோ இல்லை. இந்தக் குறளை வேளாண் அறிவியலாக்க் காணாத்தால்தான் இந்த நூற்றாண்டுத் தமிழன் ரேஷன் கடைகளில் நின்று கொண்டிருக்கிறான்.

இங்கு பலர் தமிழைப் படித்திருக்கிறார்களே தவிர, தமிழில் உள்ளதைப் படிக்கவில்லை.

தமிழ் இலக்கியம் சொல்லும் வாழ்க்கை முறைகளை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அதனால்தான் ஆட்சி செய்பவர்கள் புறநாநூற்றைப் படித்துவிட்டு நாட்டுக்கு பட்ஜெட் போட வேண்டும்.

எனவேதான், நான் அமெரிக்காவில் பேசும்போது ‘அமெரிக்கர்களின் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆசியாவின் தீர்வு (ASIAN REMEDIES FOR MYSTERIES AND MISFORTUNES OF AMERICANS) என்று பேசினேன்.

திருமந்திரம் தந்த தந்திரங்களிலிருந்தும், திருக்குறளிலிருந்தும் தீர்வுகளைத் தந்தேன். மனிதகுல சிக்கல்களுக்கான தீர்வு தமிழிலக்கியங்களில் உள்ளது.

வெற்றி நோக்கிய வேக வேட்கையில் மற்றவர்களை அரவணைத்துச் செல்லும் மனப்பான்மையை மனித குலம் இழந்துவிடும் போலிருக்கிறதே?

ஒரு துறையில் செல்ல வேண்டும் என்கிற முனைப்பு, வெல்ல வேண்டும் என்கிற வெறியாக மாறினால் இந்த இடர்பாடு இல்லை. எல்லோரும் பங்கேற்கும் துறையில் தன் இலட்சியத்தை நோக்கி மனிதன் செல்ல வேண்டடுமே தவிர அடுத்தவர்களை வீழ்த்துவதில் கவனம் செலுத்துவது ஆக்கப்பூர்வமாகாது.

இத்தகைய மன விரிவுகளுக்கெல்லாம் இன்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் துணையாக இல்லையே ஏன்?

“வெகு ஜனங்களை, கருத்து பற்றினால் அது பௌதீக சக்தியாய் மாறும்’ என்றார் காரல் மார்க்ஸ். இது தேசியப் போராட்டத்திலும், திராவிட இயக்கப் போராட்டங்களிலும் உறுதியானது.

ஊடகங்கள் இருப்பதே இதற்குத்தான். ஆனால், இன்று பெரம்பாலான ஊடகங்கள் அடுத்தவர்களின் பணத்தை அபகரிப்பதற்கான கருவியாக உள்ளன. ஊடகங்களில் அடிப்படை நோக்கமே இன்று தவறாயிருக்கிறது.

கதை என்றால் கால் மணி நேரம், அரைமணி நேரம் சொல்லலாம். வாரம் முழுக, வருடக் கணக்கான அழுகைக் காட்சிகளை அரங்கேற்றும் மெகா சீரிய்கள் முதலில் ஒழிய வேண்டும்.

“தொலைக்காட்சி” என்பது தினமும் தெரிகிற சுவர் மாதிரி இருக்கிறது. புதிதாக எதுவுமேயில்லை இவையெல்லாம் எதற்கு?” யாரோ ஒரு சிலர் பிழைப்பதற்கு, அதுவும் இந்த விளம்பரங்கள் மூன்று ரூபாய்க்கு உற்பத்தியாகும் சோப்பை 30 ரூபாய்க்கு விற்க எத்தனை நிறுவனங்கள் போட்டி போடுகின்றன என்று பாருங்கள்.

வெளிநாட்டுக்காரன் ஒருவன் வந்து 1/2 மணி நேரம் நம்மூர் தொலைக்காட்சியைப் பார்த்தால் தமிழ்நாடுதான் அழுக்கான மாநிலம் என்கிற முடிவுக்கு வந்துவிடுவான். அவ்வளவு சோப் விளம்பரங்கள்.

இதற்கெல்லாம் காரணம் திறமைசாலிகளும், வாழ்க்கை பற்றிய மதிப்பீடு உள்ளவர்களும் ஒதுங்கியிருப்பதுதான். ஆற்றலுள்ளவர்கள் படையெடுப்பதுபோய் ஊடகங்களை தங்கள் திறமையால் கைப்பற்ற வேண்டும்.

பேசத் தெரிந்தவன் பேசுவதில்லை. எழுதத் தெரிந்தவன் எழுதுவதில்லை. பால்விற்பவர்கள் ஒதுங்கியிருந்தால், கள் விற்பவர்கள் பெருகத்தான் செய்வார்கள். திறமையாளர்கள் நினைத்தால் இந்த நிலை மாறும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்