Home » Articles » கோடை தரும் கொடை

 
கோடை தரும் கொடை


admin
Author:

கோடை வந்துவிட்டாலே குழந்தகளுக்குக் கொண்டாட்டம்தான். பள்ளிக்குச்செல்லத் தேவையில்லை. புத்தக மூடைகளைச் சுமக்கத் தேவையில்லை. வீட்டுப்பாடம், தேர்வு போன்ற சுமையான தொல்லைகள் இல்லை.

சிறைகளில் இருந்துவிட்டு விடுதலையான உணர்வோடு சுதந்திரமாக மகிழ்ச்சியாக விடுமுறையைக் கழிக்கப் போகிறார்கள் என்பதால் மாணவர்கள் கோடயை வரவேறகிறார்கள். கோடை சுட்டெரித்தாலும் அவர்களுக்குச் சுகமாகவே இருக்கிறது.

அட்டவணை தயார்

கோடை விடுமுறையை கொண்டாடி மகிழ இருக்கும் குழந்தைகளுகு கொடுமையான புதிய சுமை காத்திருக்கிறது. கோடைகான புதிய அட்டவணையைத் தயாரித்து விட்டார்கள் பெற்றோர்கள். ஆம்! காலையில் கம்ப்யூட்டர் பயிற்சி, மாலையில் கையழுத்துப் பயிற்சி, அந்தி மாலையில் அடுத்த ஆண்டு படிக்க வேண்டிய பாடங்களுக்கு தனிவகுப்பு இன்னும் பெற்றோர்களின் ஆசை, விருப்பங்களுக்கு ஏற்ப அட்டவணை தயார் செய்து வைத்துள்ளார்கள்.

சில பள்ளிகள்

கோடை வகுப்புகளை நடத்திட பள்ளிக்கூடங்கள், கம்ப்யூட்டர் மையங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இப்பொழுதெல்லாம் பதினொன்றாம் வகுபு படிக்கும் மாணவர்களுக்கு முதல் ஆறு மாத்ததிற்குள்ள் +1 பாடங்களை முடித்து விட்டு, அடுத்து உடனே +2 வில் படிக்க வேண்டிய பாடங்களை நடத்திடச் செய்கிறார்கள். அவர்கள் கோடை விடுமுறையை மட்டும் விட்டு வைப்பார்களா?

கோடை தரும் கொடை

முன்பெல்லாம் மாணவர்களுக்கு கோடை வந்து விட்டால் தாத்தா – பாட்டி, அத்தை – மாமன், சித்தப்பா – சித்தி மற்றும் பெரியப்பா – பெரியம்மா வீட்டிற்குச் சென்று, ஓரிரு வாரங்கள் அவர்களோடு களித்திருப்பார்கள். மாறுபட்ட புதிய சூழ்நிலையில் தங்களைப் புதுப்பித்துக் கொள்வார்கள். உற்சாகம் அணை உடைத்த வெள்ளமாய் பிரவாகமெடுத்து ஓடிவரும்.

புதியனவற்றை அறிந்து கொள்வார்கள். காலங்காலமாக கடைபிடித்து வரும் பண்பாடு, பழக்க வழகங்களை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வார்கள். அன்பு,பாசம், உறவு இவையெல்லாம் செழித்து அதன் அடர்த்தி அதிகமாகும்.

தாத்தா பாட்டியிடமிருந்து அவர்களது அனுபவ அறிவை பெற்றுக்கொள்வார்கள்.புத்தகத்தில் கிடைக்கப் பெற்றதை, பள்ளி, கல்லூரிகளில் படித்தறியாத பல தகவல்களை தாத்தா பாட்டியிடமும் மற்ற உறவினர்களிடமும் கேட்டறிவார்கள். ஆனால் இப்போது கோட தரும் கடை அந்த வகுப்பு இந்த வகுப்பு என புதுப்புது சுமைகளே!

அங்கிள் – ஆண்ட்டி

அத்தை – மாமா என்று பாசம் பொங்க அழைக்கும் வழக்கங்கள்மங்கி மறைந்த உறவினர்களை அங்கிள் – ஆண்ட்டி என்று அழைக்கும் போலித்தனம் ஒருசமூகத் தொற்று நோயாப் பரவி வருகிறது. இதை ஆரோக்கியமான மாற்றம் என்று சொல்ல முடியாது.

அத்தை – மாமா என்று அழைப்பதில் இருக்கும் கணமும், பாசப் பிணைப்பும் அங்கிள் – ஆண்ட்டியில் உண்டா? பெற்றோர்களே பிள்ளைகளை கோடையில் சொந்த சுற்றங்களோடு சென்று இருந்து வர வாய்ப்பு தந்திடல் நமது பண்பாடு பட்டுப் போகாமல் தழைக்கச் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் குழந்தைகளின் உள்ளம் செழுமையடையும். உண்மையில் சொல்லப்போனால் பெற்றோர்களே நீங்கள் உங்கள் குழந்தைகளால் போற்றப்படுவீர்கள்.

இதைச் செய்யத் தவறுகிறவர்கள் அதற்குரிய பயனை அனுபவித்தே ஆக வேண்டும். நமது சமூகத்தில் வேர்களே இவைதானே! அன்பையும் பாசத்தையும் பண்பாட்டையும் ஊட்டி வளர்க்க கோடை பயன்பட்டடும். ஆண்டு முழுவதும் அறிவியலும் பொருள் பெறத் தேவையான தகுதிகள் பெற என்னென்ன உண்டோ அனைத்தும் படிக்கட்டும். கோடையை மட்டுமாவது அன்மையும் பண்பையும் வளர்க்கப் பயன்படுத்துவோம்.

வாழ்க்கைக் கல்வி

நீங்கள் குழந்தைகளுக்கு ஏட்டுக் கல்வியை மட்டும் தருவதி பயனில்லை. அனுபவக் கல்வியை, வாழ்க்கைக் கல்வியைத் தருவது மிகவும் முக்கியம். குழந்தைகள் தாங்கள் பிறந்து வளர்ந்து வரும் மண்ணையும், மக்களையும் அவர்கள் நிலையையும், வளங்களையும், வழக்கத்தையும் அறியாமல் வெறும் பட்டங்களோடு பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியே வருவார்கள்.

எதார்த்த உலகத்தில் அடியெடுத்து வைக்கும்போது உலகமறியாதவர்களாக இருப்பதால் சின்னச் சின்ன ஏமாற்றங்களைக் கூட தாங்கும் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள். சமுதாய அடிப்படை நடைமுறைகளைக் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

விடுதிகளில்தங்கி கான்வென்ட்டுகளில் படித்துவிட்டு வரும்பிள்ளைகளுக்கு வீட்டிற்கு வரும் உறவின்களை “வாங்க” என்று மலர்ச்சியுடன் வரவேற்று வணங்கும் பண்பும், வந்தவர்களுகு முதலில் தண்ணீராவது குடிக்கக் கொண்டு வந்து மரியாதையுடனும் அன்புடனும் அளிக்க வேண்டும், அவர்களின் நலன் விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படை மரபுகள்கூட தெரியவில்லையானால், படித்து வாங்கிய பட்டமும் பதக்கமும் எதற்கு? அடித்தளமே இல்லாமல் கட்டடமா? அடிப்படையே அறியாமல் வாழ்க்கையா?

ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது, பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அவர் மகன் வீட்டிற்குள் நுழைந்தார். “தம்பி மாமா வந்திருக்காங்க” என்று என்னை அறிமுப்படுத்தினார் தந்தை. “ஹாய்” என்று கையசைத்துவிட்டு நிற்கக்கூட இல்லை சென்று விட்டார்.

குறைபாடு எங்கே இருக்கிறது எண்ணிப்பாருங்கள். குழந்தகளை சரியாக வழி நடத்த நாம் தவறிக் கொண்டிருக்கிறோம். அதற்கான விளைச்சலை சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.

சமநிலை

பல ஆயிரங்களை ஊதியமாகப் பெறுகிற வேலை வாய்ப்பை ஏற்கும் தகுதியை தங்கள் பிள்ளைகள் பெற்றிட வழி வகுப்பது மட்டுமே கல்வி என்று பல பெற்றோர்கள் நினைப்பது சரியல்ல. புற வாழ்வில் பெறுகிற வெற்றியை அவர்கள் அகவாழ்வில் பெற முடியவில்லை. பிறகு அது சமுதாயத்திலும் சமநிலை இழக்கச்செய்கிறது. இன்றைக்குச் சமுதாயத்தின் எந்தப் பக்கத்திலும் அமைதியில்லை, மகிழ்ச்சியில்லை. குடும்பங்களில் குஊகலமில்லை. பெரியோரை மதிக்கும் பாங்கு இல்லை.

ஏன் இந்த நிலை? குறைபாடு எங்கே இருக்கிறது. தெரிகிறதா? நமது வளர்ப்பு முறையில்தான். இப்போது கூட நாம் விழித்துக்கொள்ள முன்வரவில்லை என்றால் நாம் இழந்து கொண்டிருக்கிற அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வை மீட்டுத்தர யாராலும் முடியாது.

செய்ய வேண்டியது

பள்ளியில் படிப்பது போதாது என, கூடுதல் தகுதிகளைத் தங்கள் குழந்தைகள் பெறவேண்டும் என்றுபெற்றோர் விரும்பினால், கோடையில் ஒரு சில பயிற்சிகள் அல்லது ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரம் மட்டுமே அத்தகைய கூடுதல் பயிற்சிகளில் ஈடுபடச்செய்யலாம்.

வேலை வாய்ப்பு காரணமாக நகரங்களுக்கு குடிப்பெயர்ந்தவர்கள், விடுமுறையில் குழந்தகளைத் தங்கள் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அங்குள்ள உறவுகளை புதுப்பிக்கலாம்.. குழந்தைகள் விடுமுறையை அங்கு கழித்தால் மீண்டும் நகரத்திற்கு வரும் போது சில நல்ல பண்புகளை உள்ளத்தில் ஏந்திவர வாய்ப்பு இருக்கிறது.

கிராமங்களில் இயற்கையான சூழலில் பலவற்றைக் கண்டும், கேட்டும், உற்றும் உணர்ந்தும் கற்றுகொள்ள வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் பாடங்களில் படித்த பலவற்றையும் நேரடியாகப் பார்ப்பதற்கு அங்கேதான் வாய்ப்பு இருக்கிறது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது கோடை விடுமுறையிலேதான் எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தார்கள். மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுத்தார்கள். முதிவண்டி ஓட்டக் கற்றுக் கொண்டதும் அப்போதுதான் எனது ந்பர் ஒருவர் 40 வயதாகிறது, மிதி வண்டி ஓட்டத் தெரியாது, வேறு மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரியாது. அவசர காரியமாக எங்காவது செல்ல வேண்டியிருந்தால் அடுத்தவர் உதவியை நாடியாக வேண்டும். இப்படி இருப்பது முன்னேற்றதிற்குத துணைபுரியாது.

நீச்சல், வாகனங்கள் ஓட்டுதல், துணிகளை வெளுக்கவும், சலவை செய்யவும் பழகுதல், வாகனங்களில் சிறு சிறு பழுதுகளைச் சரிசெய்ய கற்றல், தேநீர் தயாராத்தல் மற்றும் எளிய உணவு வகைகள் சமைக்க அறிதல், இப்படி நமது தேவைகளை ஓரளவுக்கு நாமே நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் செயல்திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்.

இவற்றைக் கற்றுக் கொள்வதில் படித்து மனப்பாடம் செய்ய வேண்டிய எதுவும் இருக்காது. தேர்வு எழுத்த் தேவையில்லை. எனவே, மாணவர்கள் ஆர்வமாக கற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு பயனுள்ள பொழுதுபோக்காகவும் இருக்கும். விடுமுறை காலத்தில் பெற்றோர்கள் தாங்கள் செய்துவரும் தொழில் மற்றும் பணிகளில் அவசியமானவற்றை குழந்தைகளுக்கு கற்றுத் தரலாம்.

காடும் மலையும்

கடந்த ஆண்டு விடுமுறையில் எமது கிராமத்திற்கு சென்றிருந்தோம். அப்போது என் மகனை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள மலைக்குன்று ஒன்றுக்கு சென்உ வந்தேன். காடு தொடங்கியதிலிருந்து மலைக் குன்றின் உச்சிக்குச் சென்று திரும்பி வருவது வரை அங்குள்ள மரம், செடி கொடி வகைகள் அவற்றின் சிறப்புகள் ஆகியவறை விளக்கினேன்.

மலையில் செல்லும்போது பாதைகள் நேராகவும், சமமாகவும் இருக்காது. மேடும் பள்ளமுமாக, குன்றும் குழியுமாக முள்ளும் புதருமாக இருக்கும். கையில் ஒரு கவைக்கோல் கொண்டு முட்செடிகளையும், புதர்களையும் விலக்கிய வண்ணம் தடம் அமைத்துக் கொண்டே சென்றோம்.

வழியில் இருந்த நாரைப் பழம், நாணாப பழம், நாதாணப் பழம், பெருங்கலா, சிறுங்கலாப் பழங்கள், அளிஞ்சை மற்றும் நாவல் பங்களைப் பறித்துத் தின்ற வண்ணமே பயணம் செய்தார். அந்தப் பழச்செடிகள், மரங்கள்பற்றியும், காட்டில் கிடைக்கக்கூடிய பல்வேறு கிழங்குகள் பற்றியும் சொன்னேன்.

அங்கே ஆடு,மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களையும் வழியில் கண்டோம். அவர்களிடம் உரையாடத் தூண்டினேன். அவர்களிடமிருந்து பல பயனுள்ள செய்திகளை அறிந்து கொண்டார். குறிப்பாக மலையில் இருக்கும்போது தாகமெடுத்தால் சுனை நீர் அருந்துவது, சுனை என்றால் என்ன? திடீர் மழை வந்தால் கற்குகைகளில் அடந்த புதர்களில் ஒதுங்குவது, காட்டில் மேயும் கால்நடைகளின் கழுத்துக்களில் ஏன் மணி கட்டுகிறார்கள் போன்றவைகளையும் அறிந்து கொண்டார்.

பாடத்தில் படிக்காத பலவற்றை பார்த்து அறிந்ததாகவும், தாவரவியல் பாடங்களில் படித்தவறை அங்கே கண்டதாகவம், கரடுமுரடான மலைப்பாதையில் பயணம் செய்து மீண்டு வந்தது தைரியத்தை அளித்ததாகவும் என் மகன் சொன்னது இப்போதும எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது . பெற்றோர்களே கோடை விடுமுறையில் வாய்ப்பிருந்தால் பிள்ளைகளை கிராமங்களுக்கு அனுப்புங்கள்.

கிராம மக்கள் பற்றியும், அவர்தம் வாழ்க்கை முறை பற்றியும் அவர்களுக்குகள்ள இன்னல்கள் பற்றியும் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். இளமையிலேயே இதையெல்லாம்பார்த்தாவது நாளை படத்து முடித்து மருத்துவராக, எஞ்ஜினியராக பதவிக்கு வரும்போது கிராமத்திற்குச் சென்று பணியாற்றும் எண்ணம் வரும். ஈரமுள்ள இளைய நெஞ்சில் பதிந்த மக்களின் துயரம் அவர்களுக்குத் தொண்டு செய்யவும் மனித நேயத்தை வளர்க்கட்டும். குறிப்பாக இந்த நாட்டின் முதுகெலும்புகளாம் விவசாயிகளை அறிந்துகொள்ளவும் உழைப்பின் மேன்மையை ஓரளவுகேனும் உணர்ந்து கொள்ளவும் நேரிடும்.

அதேபோல், கிராமங்களில் படிக்கிறவர்கள் நகரத்திற்குச்சென்று வருவது நல்ல படிப்பினையாக அமையும். ஒரு முறை கிராமத்திலும், கிராமத்தை ஒட்டிய நகரத்தலுமே படித்து பட்ட மேற்படிப்பு படித்த ஓர் இளைஞர் முதல் முறையாக பெருநகர் ஒன்றில் முனைவர் பட்டப் படிப்பு படிக்கச் செல்வதற்காக இரயில் நிலையம் வந்தார்.

முன்பே பதிவு செய்ய பயணச்சீட்டு அவரிடம் இருக்கிறது. அவரை வழியனுப்ப பெற்றோரும் நண்பர் ஒருவரும் வந்தள்ளனர். இரயில்நிலையத்திற்குள் செல்ல வேண்டுமானால் பிளாட்பாரம் டிக்கட் வாங்க வேண்டும் என்று நண்பர் சொல்ல சரி நானே வாங்கி வருகிறேன் என்று சென்ற அந்த இளைஞர் 4 டிக்கட்டுகள் வாங்கி விடுகிறார். எதற்கு நான்கு டிக்கட் என்று நண்பர் கேட்க, என்னோடு சேர்த்து நான்கல்லாவா என்கிறார்.

முனைவர் பட்டப்படிப்பு படிக்கச் செல்கிற ஒரு இளைஞருக்கு பிளாட்பார்ம் டிக்கட் வாங்குவது குறித்த உலகியல் அறிவுகூட இல்லை. அவரிடம் பயணச்சீட்டு இருக்கிறது. எனவே, பிளாட்பார்ம் டிக்கட் வாங்கத் தேவையில்லை என்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை. இதையெல்லாம் எந்தப் பாடத்தில் படிப்பது. இப்படித்தான் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெறும் புத்தகப் படிப்பு மட்டும்தான் கல்வி என்று கடிவாளம் போட்ட குதிரையைப் போல வளர்க்கிறார்கள்.

குறிப்பாக வங்கிக்குச் சென்று பணம் எடுக்கவோ, செலுத்தவோ தெரியாமல் இருக்கும் பலரும் உள்ளனர். அஞ்சலகம் சென்று சிறுசேமிப்பு செய, பணவிடை அனுப்ப அறிவதும்,தொலைபேசி, மின் கட்டணம் போன்றவற்றை செலுத்த அறிந்திருப்பதும், கடைகளுக்குச் சென்று காய்கறி முதல், மருந்துகள் வரை எப்படி வாங்குவது என்பதை அறிந்திருப்பதும் தன்னம்பிக்கையை வளர்க்கும். உலகியல் அறிவும், வாழ்க்கைக் கல்வியும் இல்லாத வளர்ச்சி வளர்ச்சியாகாது.

கோடையில் உப்பு

கோடையில் உங்கள் குழந்தைகளுகு பயனுள்ள அனுபவக் கல்வியை அளிக்கத் தயாராகுங்கள். அத்தோடு இந்த ஆண்டு கோடை, தொடக்கமே சூடாக இருக்கிறது. குழந்தைகளை நிறைய தண்ணீர் குடிக்கச்சொல்லுங்கள். மோர், இளநீர், பழச்சாறு போன்ற இயற்கை பானங்களை குடிக்க அளிப்பது நல்லது. பனை நுங்கும் பயன்தரும். கோடை வியர்வையில் உப்பு மிகுதியும் வெளியேறு. அதை ஈடுகட்ட மோரில் சிறிது உப்பு கலந்து குடிப்பதும், இளநீர் அருந்துவது அவசியம். செயற்கை பானங்களைத் தவிர்க்கலாம்.

பெற்றோர்களே! இந்தக் கோடையில் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை, பழக்க வழக்கங்கள, நுட்பமான வாழ்க்கை நடப்புகளை கொடையாகக் கொடுங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment