Home » Articles » உறவுகள் உணர்வுகள்

 
உறவுகள் உணர்வுகள்


செலின் சி.ஆர்
Author:

அறுபது வயதில் முடி, நரைத்து, தோல் சுருங்கி, உடல் தளர்ந்திருக்கும் போதும், சின்ன வயதில் மழைநீரில் காகதக்கப்பல் விட்ட நினைவுகளும் “டீன் ஏஜி-ல் நண்பர்களோடு மொட்டை மாடியில் கும்மாளமடித்த சந்தோஷத்தின் சுவடுகளும் அவ்வப்போது மனதில் தோன்றி ஏக்கத்தைக் கொடுக்கும்.

அவ்வப்போது மனதில் தோன்றும் என்று சொல்வதைவிட, சதா சர்வகாலமும் நெஞ்சத்தில் புதைந்திருக்கும் அந்நினைவுகள் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் என்று சொல்வது பொருத்தமாயிருக்கும்.

கல்லூரிப் பருவத்திலம், காதலிக்கும் கால கட்டத்திலும பட்டாம் பூச்சிகளைப் போல் சிறகடித்துப் பறந்தவர்கள் திருமணத்திற்குப் பிறகு கூட்டுப் புழுக்களைப் போல் சுருங்கிப் போய் விடுகிறார்கள். பெரும்பாலான தம்பதிகளின் முகத்தில் ஜீவனே இருப்பதில்லை. கடனே என்றுதான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலைநாடுகளில் கேட்கவே வேண்டாம். Seven year itch என்று திட்டவட்டமாய் பட்டமே கட்டிவிட்டார்கள்.

பொருட்களுக்கெல்லாம் இந்த கால கட்டத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்று expiry ஐ வரையறுத்து விடுவதைப் போல், கல்யாணம் செஞ்சுக்கறியா.. ம்… அதிக பட்சம் போனா ஏழு வருஷம்தான், அதுக்கு மேல காதலாவது, மண்ணாவது… என்று நாள் குறித்து விடுகிறார்கள்.

நம்மவர்கள் இன்னும் அதிகமாய் பாதிக்கப்பட்டவர்கள் என்று நினைக்கிறேன். ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள், என்று திருமணமான தொன்னூறு நாட்களுக்குள் சந்தோஷத்திற்கு சமாதி கட்டிவிடுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் “நட்பு” என்னும் வார்த்தையை உச்சரிக்கும் போதே சந்தோஷம் விளையாட்டு என்று சிலிர்க்கும் நம் மனம் திருமணம், குடும்பம், என்ற வார்த்தைகளுக்கு “டென்ஷன் இறுக்கம்” என்று அர்த்தப்படுத்திக் கொள்வதுதான்.

கணவன், மனைவி என்றாலே ஒருவர் ஹிட்லர், மற்றவர் அடிமை என்று முடிவுக்கு வந்து விடுகிறோம். கணவன், அவனுக்கு சேவகம் செய்ய வேண்டும் இல்லையென்றால் அவனை எந்த இடத்தில் எப்படிக் கவிழ்ப்பது என்று சதா திட்டமிட்டுக்கொண்டிருக்க வேண்டும். என்பது போன்ற தீர்க்கமான முடிவுகளை, விதிகளை நமக்கு நாமே வரையறுத்து வைத்திருக்கிறோம்.

இறுக்கமான மனதை தளர்த்தி, சிரிப்பு, விளையாட்டு இவற்றுக்கெல்லாம் நாம் நேரம் ஒதுக்குவதில்லை.

ஐயோ, இந்த வயசுல போய் விளையாடுவதா..? என நாணத்துடன் கேட்கும் பெண்களைப் பார்க்கும்போது சிரிப்பு வந்தாலும், குடும்பத்துடன் சிரித்துப் பேசுவது, விளையாடுவதையெல்லாம் எவ்வளவு அந்நியமாய் நினைக்கிறார்கள் என்று எண்ணும்போது வேதனையாயிருக்கும்.

இவர்களை குறை சொல்லியும் பயனில்லை. நம் சமூகம் சில பழமையான வழக்கங்களை இந்தா பிடி. என்று அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சீதனமாய் கொடுத்துவிட்டது.

கோயில், குளம், கணவனுன் சண்டை, குழந்தைகளிடம் சிடுசிடுப்பு, வருஷத்துக்குரெண்டு புடவை என்று மனைவி என்பவருக்கு சில பிரத்யேக விஷயங்களை ஒதுக்க வைத்தாயிற்று. மனைவி என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று பல பெண்களும், ஏன் சில ஆண்களும்கூட அந்த வட்டத்திற்குள்ளேயே தங்களைக் குறுக்கிக் கொள்கிறார்கள்.

அந்தக்கால கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் சந்தப்பங்கள் குறைவு என்பதால் வேறு வழியில்லாமல், கணவனிடம் சேர்ந்தாற்போல இரண்டு மணி நேரம் பேசக்கூட முடியாத நிலையில் இருந்திருக்கலாம். கணவன் – மனைவி இருவரும் தனியாகப் பேசக் கூட நேரம் கிடைக்காது. இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளத் தொடங்குவதற்குள் மனைவி கற்பமாகிவிடுகிறாள்.

அப்புறம் தாய் வீடு, குழந்தை பிறந்த ஒரு வருடம் அதை கவனிக்கவே நேரம் சரியாகிவிடும். இப்படியே வாழ்க்கை நகர்ந்து, இருவரும் பேசிக் கொள்ளத் தொடங்கும்போது பிரச்சனைகளின் மத்தியில் போராடி முடித்திருக்கும் போது அவர்களுக்கு வயது ஐம்பதைத் கடந்திருக்கும்.

தனிக்குடித்தனம் செய்பவர்களுக்கு நிறைய நேரம் கிடைத்தாலும், என்ன செய்வது என்று தெரியாமல் எதையாவது பேசி, ஏட்டிக்குப் போட்டியாக செய்து சண்டையில் வந்து நிற்பார்கள்.

சிரிப்பும், விளையாட்டும் வாழ்க்கையை ருசிக்கச் செய்யும் அற்புதமான மருந்து என்பதை வைத்துக்கொள்ளுங்கள். குடும்பதில் எல்லோரும் சேர்ந்திருக்கும் நேரத்தை குதூகலமாக்க, கேரம், செஸ்ஸிலிருந்து சாதாரண பிஸ்கட் விளையாட்டுக் கூட கைகொடுக்கும். அம்மா, அப்பாஉடன் உட்கார்ந்து இது குருவி முட்டை, இது கோழி முட்டை என்று சாப்பிட்டு கவளத்த வாயில் உருட்டிப் போட்ட இரவு நமக்கு எப்போதும் மறக்காது.

சின்ன சின்ன விளையாட்டுக்கள் வாழ்க்கையை எந்த அளவிற்கு சுவாரஸ்யமானதாக்கும் என்பதற்கு இந்த உதாரணமே போதும். சந்தோஷம் என்பதையும் தாண்டி உறவுகளுக்குள் ஆரோக்கியத்தை வளர்க்கும்.

“மனம் விட்டுப் பேசுங்கள்” என்று பல புத்தகங்களில் படித்ததை நினைத்து, எப்படிப்பேசுவது, என்ன பேசுவது என்று மனதிற்குள் குழப்பிக் கொள்பவர்கள் தனி ரகம். சிலர் ஏதாவது தவறாகப் பேசிவிடுவோமா என்ற பயத்தில் வாயை “கப்சிப்” என்று மூடிக்கொள்வார்கள்.

எந்த வரைமுறையும், பயமும் இல்லாமல் சுதந்திரமாய் பேசக்கூடிய ஒரே உறவு உங்கள் கணவனோ, மனைவியோதான், மன அழுத்தங்களுடன் எதிர்காலத்தைப் பற்றிய பயத்துடனுமிருக்கும்போது உங்களின் சிறுவயது ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்வது புத்துணர்ச்சியளிக்கும்.

எவ்வளவு முரட்டுதன மாணவரிடமும் அவர்களது குழந்தைப் பருவத்தை நினைவூட்டினால் மனமிளகி குஷியாகி விடுவார்கள். பள்ளி, கல்லூரியில் செய்த குறும்புகளும், அட்டகாசங்களும் இப்போது பகிர்ந்து கொள்ளப்படும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கும். காலத்தை திரும்ப வரச்செய்ய முடியாது. ஆனால், நம் மனதைப் பின்னோக்கிச் செல்ல வைப்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை..?

அலுவலகத்தில் கூட வேலை செய்பவர்களைக் கவர விழுந்து விழுந்து சிரித்து, ஜோக்கடிப்பார்கள். கூடி ஜோக்காயிருந்தால் கூட உலகத்திலேயே அதுதான் சிறந்த நகைச்சுவை என்பது போல் காட்டிக்கொள்வார்கள். வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் போதும். தாம் தூம் தான். சிரிப்பா கிலோ என்ன விலை..? என்று கேட்பது போன்ற முக பாவனை.

கண்டிப்பும், இறுக்கமும்தான் உங்களது துணையைக் கட்டிப்போடும் என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஸாரி, உங்கள் எண்ணம் தவறு. பணம், அழகு, திறமை அனைத்தையும் விட முக்கியம் என் வாழ்க்கைத்துணை நகைச்சுவை உணர்வுடையவராய் இருக்க வேண்டும் என்பது. இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் திருமணமாகாத இளைஞர்கள் இளம்பெண்களிடம் எடுத்தக் கருத்து மெஜாரிட்டி…!

உங்களுக்குத் தெரிந்த, படித்த, பார்த்த ஜோக்குகளைச் சொல்லுங்கள். பாக்கு மாற்றிக் கொள்வதைப் போல் ஜோக்க மாற்றிக்கொள்வோமா என்று சொந்தமாய், கற்பனையாய் கூட அள்ளிவிடலாம். நிஜமாய் கடிக முடியவில்லையே என்ற குறையை கடி ஜோக் சொல்வதன் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

இருவருக்குமிடயேயான பேச்சும், உணர்வுகளும் திணிக்கபட்டதாகவோ, கட்டாயமாகவோ இல்லாமல், இயல்பாயிருக்க வேண்டும். அறுபது, எழுபது வயதாகியும் அன்னியோனியமாய் வளைய வரும் தம்பதிகளின் முகத்தைப் பாருங்கள். குழந்தைத் தனமும், குதூகலமும் கொப்பளிக்கும். வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையன் ரகசியம் இதுதான். இவ்வளவுதான்..!

சில்லறை விஷயத்திலிருந்து, பெரிய சிக்கல் வரை மனம் விட்டுப் பேசுங்கள். சமையல், கோயில், அதிகபட்சம் போனால், “ஆம், இல்லை” என்ற பதில் இவற்றோடு நிறுத்திக்கொள்ளாமல் சின்ன சின்ன சீண்டல்கள், குறும்பு, விளையாட்டு, எதிர் பாராத பரிசுகள் என்று உங்கள் மனதையும், செயல்களையும் விஸ்தாராமாக்குங்கள். பிறகு, பிளவு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

பிரச்சனைகள் யாருக்குத்தான் இல்லை? வரு அதிகரிக்க அதிகரிக்க, தேவைகளும் அதிகமாகும். குறைகள் யாருக்குத்தான் இல்லை? பெரிய குறைகளைப் பட்டியலிடுவதைவிட சின்ன சின்ன நிறைகளைப் பாராட்டி அதன் அளவையும், வீரியத்தையும் அதிகப்படுத்துவது உங்கள் கையில்..! கலகலப்பான பேச்சும், நட்பும், உகளை இன்னும் நெருக்கமாய் இணைக்கட்டும்.

கணவன் – மனைவிக்கிடையேயான காதல் வெறும் ஏழுவருட விஷயமல்ல. ஏழேழு ஜென்மத்திற்கும் தொடர்ந்து வரும் பந்தம்… தமழ் சினிமா டயலாக் போல் சென்ட்டிமெண்டாய் தோன்றினாலும், இது பொய்யல்ல, வெறும் வார்த்தையல்ல.. உண்மை இதுதான்..!

தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment