Home » Cover Story » நம்பிக்கையும் நானும்

 
நம்பிக்கையும் நானும்


ஞானசம்பந்தன் கு
Author:

டாக்டர் கு. ஞானசம்பந்தன் பேசுகிறார்.

உங்கள் இளமைக்காலம் பற்றி?

மதுரைக்குப் பக்கத்திலுள்ள சோழவந்தான் எனது சொந்த ஊர். என் தந்தை திரு. குருநாதன் ஒரு தமிழிலக்கியங்களில் கடுமையான பயிற்சியுண்டு. என்னை தினம் தினம் சில பாடல்கள் ஒப்பிக்கச்சொல்வார். அவர் எனக்குச் சொன்னது மன்னம் செய் என்பதுதான்.

ஒரு பாடல் ஒப்பித்தால் 1 ரூபாய் தருகிறேன் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார். எனக்கோ மருத்துவராக வேண்டுமென்று ஆசை. எனவே, பியூசி-யில் 2 -வது குரூப் எடுத்துப் படித்தேன். திடீரென்று ஆங்கில மீடியம் சேர்ந்தது பெரிய சிரமமாகி விட்டது.

அதுவரை 5 வகுப்புகள் தமிழில் நடக்கும். 1 வகுப்பு ஆங்கிலத்தில் நடக்கும். பியூசியிலோ 5 வகுப்புகள் ஆங்கிலத்திலும் 1 வகுப்பு தமிழிலுமாக மாறிவிட்டது. பி.யூ.சி -யில் என்னளவுக்கு பெயிலானவர்கள் உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது.

அப்போதெல்லாம் இன்று இருப்பதுபோல் ஒரு பேப்பரில் தோல்வி அடைந்தால் அதை மட்டும் எழுதுகிற முறை கிடையாது. 4 ஆண்டுகள் தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டேயிருந்தேன். எனக்கு படிப்பு வராது என்று கருதி என் தந்தை கோத்தாரி கெமிக்கல்ஸில் லேப் – அஸிஸ்டெண்டாக சேர்த்து விட்டார்.

நாளொன்றுக்கு 5 ரூபாய் சம்பளம். தினமும் சைக்கிள் பஞ்ராகிவிடும். செருப்பு அறுந்துவிடும். செருப்பை தூக்கி கேரியரில் வைத்துக்கொண்டு, சைக்கிளை தள்ளிக்கொண்டே வருவேன். பிறகு, விவசாயம் பார்த்தேன். இன்றும் எனக்கு உழுவது, உரமிடுவது, நாற்று நடுவது என்று எல்லாம் தெரியும்.

பிறகு படிப்பை எப்படித் தொடர்ந்தீர்கள்?

இனிமேல் படிப்பதில்லை என்ற முடிவோடுதான் இருந்தேன். “கலையோசை” என்கிற பத்திரிகையை கிராமத்துக்குள் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது திரு. சிவக்குமார் என்கிற நண்பர்தான் 2வது குரூப் மாற்றி அஞ்சல் வழியில் 3வது குரூப் எழுதலாம் என்று சொல்லி என்னை அதில் சேர்த்து விட்டார்.

சித்திரை 1-ம் தேதி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது என் தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டார். மறுநாளே இறந்தும்விட்டார். கொள்ளி போடுகிற அன்றே தேர்வு எழுதுகிற சூழல். அப்பா என்னிம் “பரீட்சை எழுதுகிறாயா?” என்று கேட்டார். “எழுதுகிறேன்” என்றேன்.

தேர்வு முடிவுகள் வெளியானதும் ஒருவரை போய் பார்த்துவிட்டு வரச்சொன்னேன். அவர் வந்து, நான் பெயிலாகிவிட்டதாகச் சொன்னார். நான் சோர்ந்துவிட்டேன். பிறகு படிப்பு வரவில்ல எம்ப்ளாய்ட்மென்ட் எக்ஸ்சேன்ஜில் பதிவு செய்துவிட்டுவா என்று தந்தை அனுப்பினார்.

பதிவு செய்யப்போனவன் அருகிலிருந்த பல்கலைக் கழகத்திற்குள் எதேச்சையாகப் போய்ப்பார்த்தேன். நான் உண்மையில் பாசாகியிருந்தது அப்போதுதான் தெரிந்தது.

பிறகு, என் தந்தை தியாகராய கல்லூரியில் சேர்த்துவிட்டார். பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி. என்று இடைவிடாமல் படித்ததோடு பல்கலைக் கழக அளவில் ரேங்க் வாங்கி தேறினேன்.

நீங்கள் பேச்சுத் துறைக்கு வந்தது பற்றி?

என் தந்தை எங்கள் ஊரிலுள்ள திரௌபதி அம்மன் கோவிலில் மார்கழி மாதத்தில் திருப்பாஐ, திருவெண்பாவை விளக்கம் சொல்லுவார். என்னை அழைத்துச் செல்வதோடு சில சமயங்களில் என்னையும் பேசச் சொல்லுவார்.

12 ஆண்டுகள் காலம், இந்தத் துறையில் அசுர சாதகம் மேற்கொண்டது போல இத்தகைய அனுபவங்கள் அமைந்தன. இடையில் நாங்கள், நடத்திய பத்திரிகையைப் பார்த்து சாவி இதழில் தேர்வு செய்தனர். அப்போது திரு. மாலன் ‘திசைகள்’ என்கிற பத்திரிகையை நடத்தி வந்தார். அவர் என்னை அழைத்தார். கோவையில் திரு. பிரதிபா ராஜகோபாலன் “முகங்கள்” என்கிற பத்திரிகைக்கு என்னை அழைத்தார். ஆனால், கல்வித் துறையில் இருந்த நாட்டம் காரணமாய் பத்திரிகைத் துறைக்குப் போகவில்லை.

உங்கள் ஆய்வுகள் பற்றி?

எங்கள் சொந்த ஊராகிய சோழவந்தானிலுள்ள மாரியம்மன் கோவில்பற்றி ஒரு ஆய்வினை மேற்கொண்டேன்.

எனது முனைவர் பட்ட ஆய்வக்கு பழம் பெரும் தமிழறிஞர் அரசன் சண்முகநார் அவர்களின் இலக்கண நூல்களை எடுத்துக் கொண்டன். அது மிகவும் கடுமையான பணி. அவர் வ.உ.சி. பண்டித மணி கதிரேசன் செட்டியார், போன்றவர்களுக்கெல்லாம் ஆசிரியர்.

மதுரை சேதுபதி பள்ளியில் அவர் வேலை பார்த்த இடத்தில்தான் மகாகவி பாரதி தற்காலிக பணியில் அமர்ந்தார். இந்த ஆய்வுப் பணிக்கு அமர்ர் டாக்டர் நா.ஜெயராமன் பெரிதும் வழிகாட்டினார்.

பேச்சுத் துறையில் தனி முத்திரை பதித்த நகைச்சுவை ஒரு கருவியென்பதால் அதனை கைக்கொண்டீர்களா?

ஒருவர் திட்டம் போட்டு நகைச்சுவைப் பேச்சாளராக முடியாது. அப்போது அதுவே பெரிய நகைச்சுவையாகிவிடும்.

தொடக்க காலங்களில் நான் மேடைகளில்மிகவும் சீரியசாகப் பேசிக் கொண்டிருப்பேன். பேரா. தொ. பரமசிவம் எனது முக்கியமான வழிகாட்டிகளில் ஒருவர். அவர் என்னிடம் ‘தனியாகப் பேசும்போது நகைச்சுவையாகப் பேசுகிறீர்கள். மேடையில் ஏன் சீரியஸாகப் பேசுகிறீர்கள்’ என்று கேட்டார். பிறகுதான் நகைச்சுவையாக மேடைகளில் பேசத்துவங்கினேன்.

பொதுவாக பட்டிமன்றக் குழுக்கள் மிகக் கடுமையாக இருப்பதுண்டு. ஒரு குழுவில் உள்ளவர்கள் மறு குழுவோடு பேசுவதில்லை. விட்டால் தனித்தனியாக சீருடைகூடக் கொடுத்து விடுவார்களோ என்று நான் நினைப்பதுண்டு. எனவே, தனியுரைகள் நிகழ்த்திக் கொண்டிருந்தேன்.

பிறகு ஒருமுறை மதுரையில் சித்தாஸ்ரம்ம் என்ற இடத்தில் முதல் முதலில பட்டிமன்ற நடுவராக அமர்ந்தேன். எனக்கு நாடக நடிகனாக வேண்டும் என்றும், திரைப்படத் துறைக்குப் போக வேண்டும் என்றும் ஆசை. ஆனால், காலம் என்னை இலக்கியப்பேச்சாளர் ஆக்கியிருக்கிறது.

அதேபோல டாக்டர் சேதுராமன் அவர்கள் தூண்டுதலால் நகைச்சுவை மன்றம் ஒன்றை மதுரையில் துவங்கினேன். இப்போது அது 10 மாவட்டவாரியாக மக்களிடையே மகிழ்ச்சியை வநியோகம் செய்யும் முயற்சிதான் இது.

இன்று தமிழிலக்கிய மேடைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமாகக் காணப்படுகிறதே?

தமிழ்நாடு, திரைப்படத்தில் நடப்பவற்றை வாழ்க்கை என்று நம்புகிறது. எனவே, எல்லாத் துறைகளிலும் அதன் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

மேடைகளிலும் “பாட்டுமன்றம்” என்ற வடிவம் வந்ததும் ஊருக்கு ஊர் பாடத் தெரிந்தவர்களெல்லாம் புறப்பட்டு வந்து விட்டார்கள்.

நல்ல தகவல்கள் சார்ந்த மேடைகளை பொதுமக்கள் விரும்பி வந்து கேட்டாலும் கூட பலர் பாட்டுப் பாடுவதையே மேடைகளில் தொடர்ந்து செய்கிறார்கள்.

‘ஜனரஞ்சகம்’ என்கிற பெயரில், போதிய மொழியறிவோ, நூற்புலமையோ இல்லாத சிலர் மேடைகளுக்கு வந்ததுதான் இதற்குக் காரணம். மேடையில் பேசும் பலருக்கு இன்று ஒரு பத்திரிகையை ப்ரூஃப் திருத்தச் சொன்னால் தெரியாது. இத்தகைய சூழ்நிலைகள்தான் தமிழ் மேடைகள் பொழுதுபோக்குஇ மடமாக முக்கியக் காரணம்.

வாழ்க்கை உங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடம் என்ன?

எங்கெங்கோ போயிருப்பதாகக் கருதி திரும்பிப் பார்த்தால் தொடங்கிய இடத்தில்தான் இருக்கிறேன் என்று தெரிகிறது.

எங்காவது ஒரு நட்சத்திர உணவு விடுதியின் ஏசி அறையில் பேசுவேன. ஏசி – காரில் அழைத்து வந்து பஸ்நிலையத்தில் விடுவார்கள். நான் போக வேண்டிய பேருந்தில் நிற்கக்கூட இடமிருக்காது.

ஆயிரம் ரூபாய் வாடகையுள்ள ஏ.சி. அறையில் தங்கியிருக்கும் அதே உற்சாகத்துடன் விடிய விடிய பேருந்து நிலையங்களில் விழித்திருக்கிறேன். இரண்டையும் சமநிலையில் ஏற்றுக் கொள்கிறேன்.

வாழ்வில் வெகுமதி, சோதனை இரண்டையும் சமநிலையில் ஏற்றுக்கொண்டால் மனத்தளர்ச்சி வராது.

பல இளைஞர்கள், நண்பர்களின் காரில் வருவார்கள். அந்தக் காரை தன்னுடையது என்று நம்புகிறார்கள். அப்படி நம்புவது அவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. ஆனால் கார் கிளம்பிப் போனதும கவலைப்படுகிறார்கள். இது தவறு.

வாழ்வை இயல்பாக எடுத்துக் கொண்டு, எதிர்மறை சிந்தனைகள் இல்லாமல் இருக்க நகைச்சுவை உணர்வு எனக்கு கைகொடுக்கிறது. எனவே, நகைச்சுவை என்மேடை வெற்றிக்கு மட்டுமின்றி வாழ்க்கை வெற்றிக்கும் காரணமாய் அமைகிறது.என்றால் அது மிகையாகாது.

 

2 Comments

Post a Comment


 

 


April 2002

நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கேள்வி – பதில்
கோடை தரும் கொடை
“சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்
"சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
உள்ளத்தோடு உள்ளம்
இயற்கை உங்கள் நண்பனா? விரோதியா?