Home » Cover Story » நம்பிக்கையும் நானும்

 
நம்பிக்கையும் நானும்


கிருஷ்ணராஜ் வாணவராயர் பி.கே
Author:

(இளைஞர் நலம் குறித்து இடையறாமல் சிந்திக்கும் உள்ளம். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்கிற மகாகவியின் வாக்கிற்கேற்ப தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உணர்ச்சியும், தெளிவும் கரைபுரண்டோடும் உரை வெள்ளம். தெளிந்த தொலைநோக்கு, இவரதான் வாணவராயர், வெள்ளாடை விவேகானந்தர் என்று அன்படன் அழைக்கப்படும் இந்தத் தேர்ந்த தொழிலதிபர், சமீபத்தில் வாடிகன் நகரில் போப் இரண்டாம் ஜான்பால் பிரார்த்தனை மாநாட்டில் இந்தியாவிலிருந்து அழைக்கபட்ட மூவரில் ஒருவர், இனி அவருடன் நாம்…)

டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகிறார்

சமத்தூர், அரச பரம்பரையில் பிறந்த நீங்கள் ஒரு சமூக சிந்தனையாளராய் வடிவம் கொண்டது எப்படி?

விவரம் தெரியாத வயதில், பண்டித ஜவகர்லால் நேரு மீது ஒரு பெரிய கவர்ச்சி எனக்கு ஏற்பட்டது. அந்தக் காலத்தில் டெலிவிஷன் கிடையாது. திரைப்படங்களுக்குப் போகும்போது நியூஸ் ரீல் போடும் போது அவரது உருவம், வேகம், உற்சாகம் ஆகியவை ஈர்ப்பை ஏற்படுத்தின. பிறகுதான் காந்தியடிகள் பற்றி தெரிந்து கொண்டேன்.

என் மாணவப் பருவத்தில், வித்யாலயத்திற்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் வருவதாக்க் கேள்விப்பட்டு, அவரது பேச்சினைக் கேட்கப் போயிருந்தேன். தூரத்தில் நின்று அவர் பேச்சைக் கேட்டது. மறக்க முடியாத ஒரு அனுபவம்.

பெருந்தலைவர காமராஜரை சந்தித்து அவருடன் நெருங்கிப்பழகினேன். இப்படியாக, பொது வாழ்வில் நாட்டம் அரும்பியது. பிறகு ஒருமுறை கிரிதாரி பிரசாத் அவர்கள் சுவாமி விவேகானந்தரின் புத்தகம் ஒன்றைத் தந்து படிக்கச் சொன்னார். அதன்பிறகு, என் தேடல்கள் நிறைவு பெற்றன.

ஒரேயொரு மனிதர் அத்தனை துறைகளுக்குமான விடைகளின் களஞ்சியமாக விளங்குவதை விவேகானந்தரிடம் தான் கண்டேன்.

தொடக்கத்திலிருந்தே என்னிடம் சாதி, மொழி, மதம் சார்ந்த் பாகுபாடுகள் ஏதுமில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்திலிருந்தபோதே மாணவர் தேர்தலில் ஒரு சீக்கியரை ஜெயிக்க வைத்தேன். விவேகானந்தரைப் படித்தபிறகு என் தேடல்களுக்கான விடைகள் கிடைத்தன.

காமராஜரோடு நெருங்கிப் பழகியதாய் சொன்னீர்கள். அந்த அனுபவம் பற்றி..?

குன்னூரில் எங்களுக்கொரு பங்களா உண்டு. சட்டக் கல்லூரி தேர்வுக்கா அங்கு தங்கி நான் படித்துக் கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்த பங்களாவில் அவர் இருந்தார். கேள்விப்பட்டு பார்க்கப் போனேன். நீண்ட நேரம் பேசக் கொண்டிருப்போம். குன்னூர் வீதிகளில் நான் கார் ஓட்ட, அவர் பக்கத்தில் அமர்ந்துகொண்டு வருவார். அது அரசியல் உலகில் அவர் சரிவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம்.

அவரது எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. முதல் சந்திப்பிலேயே என்னை முழுமையாக ஈர்த்தவர் அவர். இயல்பாக இருப்பார். யாராவது வந்தால் சில தலைவர்கள் செயறகையான சுபாவங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். அத்தகைய குணங்கள் எதுவும் காமராஜரிடம் கிடையாது.

என்னிடம் அவர் ‘ நீ பொது வாழ்வுக்கு வரவேண்டும்’ என்றார். அப்போது அருகிலிருந்த என் சக மாணவருக்குத் தமிழ் சரியாகத் தெரியாது. ‘அப்படியானால் நீங்கள் மாணவர்களை அரசியலுக்கு இழுக்கிறீரகளா’ என்றார். உடனே காமராஜர் “Public life is different from Politics” (பொது வாழ்க்கை என்பது வேறு, அரசியல் என்பது வேறு) என்று ஆங்கிலத்தில் சொன்னார். அவரது கூர்மை அத்தகையது.

அதன் பிறகு அவரிடம் நெருங்கிப் பழகினேன். சென்னையிலும் தொடர்ந்து சந்திப்பேன். ஒரு வாரம் போகாவிட்டால் தொலைபேசியில் கூப்பிடுவார். அல்லது ஆளை அனுப்புவார். அந்த அளவுக்கு நெருக்கமானோம்.

இளைஞர்கள் நலன் குறித்த உரத்த சிந்தனை உங்களிடம் அதிகம் உள்ளது. இன்று கல்வியில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர் இளைஞரகள். இது ஆரோக்கியமான போக்குதானே?

இது அறிவின் யுகம் (Ers of Knowledge) என்பது உண்மைதான். ஆனால், எது அறிவு என்பது பற்றிய தெளிவு வேண்டும். வெறும் தகவல்களோ, அறிவியல் வளர்ச்சியோ அறில்ல. தன்னை, தன் தகுதிகளை உணரும் அறிவே இந்த யுகத்துக்கான அறிவு. அடிப்படையில் அந்த அறிவை இளைஞர்கள் பெற்றால், எந்தச் சூழலையும் அவர்களால் கையாள முடியும். பூரண ஞானம் என்பது இதுதான்.

இந்தியா இயல்பாகவே இந்தத் தளத்தைக் கொண்டுள்ளது. உலகின் பல்வேறு சமுதாயங்கள் அறிவியலை வெறுத்த காலகட்டத்தில் அறிவியலை வரவேற்ற நாடு இந்தியா. உள்நிலையில் தெளிவு இருந்த காரணத்தால் புறச்சூழலை இந்தியா தெளிவோடு அணுகியது என்பது மறுக்க முடியாத உண்மை.

பிரிட்டன் நாட்டின் வரலாற்றறிஞர் அர்னால்ட் டாய்ன்டு ஒருமுறை ‘மனித குலம் இந்தியாவின் வழிதான்’ என்றார். இதனை பேசும்போது கூடக் குறிப்பிட்டேன்.

இந்த அடிப்படைத் தகுதியை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் மத்தியில் இந்தப் பண்பு எப்படி வளரும் என்று கருதுகிறீர்கள்?

கல்வி மற்றும் ஆன்மீகம் மூலமாகத்தான் கலாச்சாரம் வளர முடியும். ஆன்மீகம் இல்லாத இந்தியாவுக்குப் பெருமையில்லை.

ஆன்மீகம் உள்நிலை வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மனித நேயம், ஆன்ம நேயம் இவைதான் நுட்பமான அறிவியல் பயிலும் இளைஞர்களுக்கு இந்தத் தெளிவை நாம் தர வேண்டும்.

இளைஞர்கள் சில துறைகளில் ஈடுபட்டு, புகழும் பொருளும் பெற முற்படலாம். இது நிச்சயம் தேவைதான். ஆனால், அவர்கள் தொழிலில் வளர்வது மட்டும் இலட்சியமாகாது. இலட்சியம் என்பது சமூகத்திற்கு, அவர்கள் செய்ய விரும்பும் தொண்டு நல்ல புகழம் பொருளும் ஈட்டுவது, சமூகத்திற்கும் உதவுவது என்பதுதான் வாழ்வன் வழியாக விளங்க வேண்டும்.

எத்தனயோ பொறியாளர்களும் மருத்துவர்களும் இன்று உருவாகிறார்கள். பொறியாளர்கள் அத்தனைபேரும் விஸ்வேஸ்வரய்யா விருது வாங்க விரும்புகிறார்கள். மருத்துவர்கள், வி.சி. ராய் விருது வாங்க விரும்புகிறார்கள். விஸ்வேஸ்வ ரய்யா, பி.சி ராய் இருவரும் தங்கள் துறையைத் தாண்டியும் சமூகத்திற்குப் பயன்பட்டவர்கள். எனவே, அவர்கள் முன்னுதாரணங்களாகத் திகழுகிறார்கள்.

இளைஞர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சுய தேவைகளை நிறைவு செய்யத்தான் தொழில் செய்கிறோம். ஆனால், சுய தேவைகள் அனைத்தும் பூர்த்தி பெற்றபிறகும் நிறைவு கிடைப்பதில்லை. உள்மனம் எதையோ நாடுகிறது. அதுதான் சமூகத்திற்குப் பயன்படும்படி வாழ்வது. அதைப் புரிந்து கொள்ளாமல், ஜோதிடம், பரிகாரம் கோவிலாகப் போவது என்று தொடங்கிவிடுகிறார்கள்.

பணம் – பதவி – புகழ் மூன்றையும் பாடுபட்டு மனிதன் அடைய வேண்டும். ஆனால், நிம்மதியும், மகிழ்ச்சியும் இந்த மூன்றில் மட்டும் இல்லையென்று புரிந்து கொண்டால் போதும்.

அப்படியானால், ஆன்மீகத்திற்காக மனிதன் உலக வாழ்விலிருந்து ஒதுங்க வேண்டியதில்லை அப்படித்தானே?

நிச்சயமாக வாழ்விலிருந்து மனிதனை அந்நியப்படுத்த முயலும். சமயங்கள் செல்வாக்கிழந்து போகும்.

பணம் – பதவி – புகழ் தேடு என்று சொல்வது லௌகீகம். பணம் – பதவி – புகழ் மூன்றையும் முறையாகத் தேடு என்பது ஆன்மீகம். அப்படி பெற்றவறை சமூகத்திற்கும் பகர்ந்து கொடு என்று ஆன்மீகம் சொல்கிறது. சமயங்களின் பார்வையும் – அணுகு முறையும் இதைத்தான் வலியுறுத்த வேண்டும். புதிய யுகத்துக்கான புதிய மதம் இதைத்தான் சொல்ல வேண்டும்.

ஆனால், இன்று பக்தி வளர்ந்திருக்கும் அளவு இந்தத் தெளிவு வளர்ந்ததாக தெரியவில்லையே?

மதம் – சமயம் போன்றவையெல்லாம், பாமர்ர்களிடம் ஆன்மீகத்தை கொண்டு சேர்ப்பதற்கான ஏற்பாடுகளாகத்தான் தோன்றின. படித்தவர்களுக்கு மதம் தேவையில்லை. அவர்கள் படித்தது சரியாக இருந்தால் அவர்கள் எண்ணமே இறைத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். காலப்போக்கில், வழிபாடு என்பது சுய தேவைகளுக்காக விண்ணப்பம் போடும் வேலையாகப் போய்விட்டது. கோவில் – பண்டிகை – நாள் – நேரம் என்று மாறிவிட்டது.

இப்படி பூஜை, புனஸ்காரத்தில் மட்டும் ஈடுபாடு காட்டும் பழைய இடங்களை விடவும், ஆன்மீகத்தை, நடைமுறைக்கு ஏற்ப புதிய முறையில் நேர்மறை எண்ணம் ஊட்டும் வதமாகப் பயிற்றுவிக்கும் புதுமையான துறவிகளிடம் கூட்டம் கூடுகிறது. பழைய இடங்களில் கூட்டம் குறைகிறது.

பல்வேறு மகான்களும் சமூகம் சார்ந்து, மனிதர்களின் உள்நிலை சார்ந்து, தங்கள் நெறியை வளர்த்தனர். இத்தனைக்கும் சுவாமி விவேகானந்தரன் தாக்கம் ஒரு முக்கிய காரணம். இதனை அரவிந்தர் ” I owe everything to Swamy Vivekanada” என்றார்.

மனிதனை தன்னம்பிக்கை மிக்கவனாக வடிவமைப்பதைத்தான் நவீன யுகத்தின் ஆன்மீகம் செய்து வருகிறது.

புகழ் பெற்ற விஞ்ஞானி ராஜா ராமண்ணாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் – காலம் முழுவதும் புறத்தை ஆய்வு செய்தேன். ஓய்வு பெற்றபின் சில ஆன்மீகப புத்தகங்களைப் படித்தேன். ஆய்வுகளுக்கான விடை அனைத்தும் ஆன்மீகத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்” என்றார்.

எனவே, ஆன்மீகம் என்பது ஆதாயங்களைப்பெறவும், ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் உதவும் என்கிற மனநிலை மாற வேண்டும்.

பயத்தைப் போக்க ஆன்மீகம் உதவிப் பயனில்லை. பயமே இல்லாத தெளிவைத் தருவதுதான் ஆன்மீகம். “தர்கத்துக்கு உட்படும் வலிமையில்லாத மதங்கள் இருந்துபயனில்லைம என்றார் சுவாமி விவேகானந்தர்.

“If a religion cannot stand the test of reasoning. It has o business to exist என்றார் அவர்.

எனவே, சமூகத்தில் வெற்றியுடனும் மனித நேயத்துடனும் வாழ வழி செய்யும் ஆன்மீகம்தான் நமக்குத் தேவை. மோட்சம், சொர்க்கம், நரகம் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் பிரதிநிதியாய், போப் இரண்டாம் ஜான்பால் அவர்களின் அழைப்பை ஏற்று ரோம் நாட்டிற்கு சென்று வரும் பெருமயைப் பெற்றுள்ளீர்கள். அந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

உலகிலுள்ள பதட்டமான சூழலைக் கருத்தில் கொண்டு அமைதிக்கான பிரார்த்தனை நாள் புனிதமிகு போப் இரண்டாம் ஜான்பால் அவர்களால் கூட்டப்பட்டது. சர்வ தேச முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரார்த்தனையில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 150 சமயத் தலைவர்கள் பங்கேற்றனர்.

23-1-2002 அன்று நிகழ்ந்த கருத்தரங்கில் 17 பேர் பேசினர். அவர்களில் நானும் ஒருவனாய் அழைக்கப்பட்டிருந்தேன். ஆங்கிலம், இத்தாலி ஜெர்மனி, பிரெஞ்சு, அரபிக் ஆகிய மொழிகளில் அந்த உரைகள் மொழிபெயர்க்கபட்டன.

24-1-2002 அன்று போப் அவர்கள் தலைமையில் வாடிகனிலிருந்து அமைதிப் பயணம் துவங்கினோம். இரண்டு மணி நேர ரயில் பயணத்தில் வழியெங்கும் மக்கள் திரண்டு ஆர்வத்துடன் வரவேற்றனர்.

வாடிக்கனிலிருந்து அஸிஸிக்கு எங்கள் பயணம். வாடிகனில் வழியனுப்பியவர் இத்தாலியப் பிரதமர். அஸிஸியில் வரவேற்றவர் இத்தாலிய ஜனாதிபதி அங்கும் மக்கள் ஆயிரக் கணக்கில் கூடி, இந்த அமைதிப் பயணத்தின் வெற்றிக்கா கடுங்குளிலிரும் விடிய விடியப் பிரார்த்தனை செய்தனர்.

25-1-2002 அன்று, வந்திருந்த 150 சமயத் தலைவர்களுக்கும் போப் விருந்து வைத்தார். அப்போது எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. அங்கிருந்த கார்டினல் என்னிடம் ‘இந்தியா மிகத தொன்மையான நாடு. அதன் பாரம்பரியமிக்க நாகரீகம் மீது எங்களுக்கு பெரும் மரியாதை உண்டு. அதனை வெளிப்படுத்தும் விதமாக விருந்தில் போப் அவர்கள் அமரும் மேசையிலேயே (Table) உங்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொன்னதும் நான் சிலிர்த்தேன்.

அதேபோல், நம் நாட்டு மரபுப்படி போப் அவர்களுக்கு ஒரு பொன்னாடை அணிவிக்க என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர்களுக்கு அது புரியவில்லை. “தவிர்த்து விடுங்களேன்” என்றார்கள். அப்போது ஜென்மன் நாட்டின் கார்டினல் அங்கே வந்து – உலகின் 1/5 மனித சமூகம் வாழும் நாடான இந்தியாவிலிருந்து இவர் வருகிறார். உலகின் மிகப் பழமையான நாகரீகம் இந்தியாவுக்கு உரியது. உலகின் மிகப் பழமையான நாகரீகம் இந்தியாவுக்கு உரியது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா! அங்கிருந்து வரும் இவரின் விருப்பத்தை நாம் எப்படித் தடுப்பது? நீங்கள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்” என்று அனுமதி தந்தார்.

இந்தியா மீது அவர்கள் கொண்டுள்ள பெரும் மரியாதையை இந்த சம்பவங்கள் உணர்த்தின.

இந்தப் பயணத்தின் விளைவாக இந்திய இளைஞர்களுக்கு உங்கள் செய்தி?

இந்தியாவிடம் உலகம் நிறைய எதிர்பார்க்கிறது. வாடிகனில், போப் அவர்களின் இருப்பிடத்தின் பிரமாண்டமான சுவர்களல் மகாத்மா காந்தியடிகளின் படம் மாட்டப்பட்டு இருக்கிறது. இந்தியாவால் உலகுக்கு வழிகாட்ட முடியம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஜோர்டன் இளவரசர் என்னிடம் வந்து “ஒருவர் உலகம் முழுவதும் பயணம் செய்து இந்தியாவுக்கு செல்லாமல் திரும்பினால் உலகத்தை அவரால் புரிந்துகொள்ள முடியாது’ என்றார். அந்த அளவுக்கு நம் தேசம் மதிக்கப்படுகிறது.

இந்திய இளைஞர்கள் தங்களை மேலும் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். புதிய உலகிற்கு ஒரு புதிய மார்க்கத்தை இந்தியா தொடங்கி வைக்க வேண்டும். தொடங்கி வைக்கும் என்பது என் நம்பிக்கை.

இளைஞர்கள்தான் இந்தியாவின் பொக்கிஷங்கள். ஆன்மீகத்தை சரியாகப் புரிந்து கொண்டு வாழ்வில் அதை பின்பற்ற வேண்டும். தெளிவு, துணிவு, நம்பிக்கை, பரிவு போன்றவற்றை ஆன்மீகத்திலிருந்து பெறவேண்டும்.

இளைஞர்கள் தங்களுக்காக மற்றவர்கள் எதிர்காலம் என்று ஒன்றை ஏற்படுத்துவார்கள் என்று காத்திருக்காமல், வருகிற எதிர்காலம் எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் எதிர்காலம் என்பதே நிச்சயமற்ற தன்மையில் இருக்கிறது. அதனை எதிர்கொள்ள ஆன்ம்பலம் மிகவும் தேவை.

புறச் சவால்கள் எப்படி இருந்தாலும் அகத்தில் தெளிவும் துணிவும் இருந்தால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2002

வணக்கம் தலைவரே!
வாசகர் கடிதம்
வேலை தேடுகிறீர்களா?
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
ஓ அன்றில் பறவைகளே!
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
கேள்வி பதில்
சிறந்த விற்பனையாளர் யார்?
பொதுவாச் சொல்றேன்
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்