Home » Articles » பொக்கிஷம் ஏது?

 
பொக்கிஷம் ஏது?


இராமநாதன் கோ
Author:

சீனக்கதை ஒன்று:

அறுபது வயதான அந்தப் பெண், தன்னிடமிருந்த சொத்துகளையெல்லாம் தன் நான்கு மகன்களுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தாள்.

தன்னுடைய மீதி நாட்களை ஒவ்வொரு மகன் வீட்டிலும் ஒரு வருடத்தில் மூன்று மாதங்களுக்குத் தங்கி அவர்களின் பராமரிப்பில் காலந்தள்ள முடிவெடுத்தான்.

மகன்களின் உபசரிப்பு ஆரம்ப காலத்தில் திருப்தியாகவே இருந்தது.

நாளாக நாளாக, அந்த வயதான தாய், உடனிருப்பதை தங்களுக்கு பாராமாக்க் கருதினார்கள் மகன்கள்.

கவனிப்பு குறைந்து கொண்டே போயிற்று. சில சமயங்களில் ஊதாசீனமும் செய்தார்கள்.

மனம் நொந்து போனான் அவள். ஒருநாள் அவளுடைய பழைய தோழி, அவளைப் பார்க்க வந்தாள்.

அவளது பரிதாப நிலையைப் பார்த்து மனம் வெதும்பினாள் அவளுக்கு ஒரு யோசனை சொல்லிவிட்டுப் போனாள்.

அதன்படியே ஒருநாள் மாலை, சூரியன் மறைந்ததும் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினான்.

அடுத்த நாள் திரும்பினாள். கையில் ஒரு அழகிய தங்கப்பெட்டி மண்ணிலிருந்து தோண்டி எடுத்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன. “என்ன அது?” மிக்க ஆவலுடன், மகன் கேட்டான்.

“நமது வாழ்க்கைய்யே மாற்றி அமைக்கும் பொக்கிஷம் இதிலிருக்கிறது” என்றாள்.

“அப்படி என்ன அதற்குள்ளே?” மகன்.

“அதை, நான் இறந்த பிறகு நீங்கள் பெறலாம்” – என்றான்.

இப்பொது மகன்களுக்கு மேலும் ஒரு சந்தேகம். நம் அம்மா இன்னும் நிறைய பொருட்களை வைத்திருக்கிறாள் போலிருக்கு. எங்கே புதைந்திருக்கிறாள் என்பது யாருக்குமே தெரியாதே என பேசிக் கொண்டனர்.

மேன்மேலும் அவளிடம் வற்புறுத்திப் பார்த்தனர். அந்த தங்கப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது? இன்னும் வேறேதும் இருக்கறதா? என்பதை அவள் சொல்லவே இல்லை.

இதற்கிடையில் மகன்களும் மருமகள்களும் விழுந்தடித்துக் கொண்டு நல்ல உபசரிப்பு செய்து வந்தார்கள். எல்லா வகையிலும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

இப்படி இருபது ஆண்டுகள் கழிந்தபிறகு ஒருநாள் அவள் தூக்கத்திலேயே காலமானாள். அவளுடைய அடக்கத்திற்கு வந்த அவளுடைய தோழி அந்தத் தங்கப்பெட்டியின் சாவியைக் கொடுத்தாள்.

மகன்களும் மருமகள்களும் ஆர்வத்தோடு திறந்தனர். திறப்பதற்குள் கைகள் பதறின.

பெட்டியைத் திறந்து பார்த்தால் சாதாரண துணிகள் இருந்தன. சரி, அதற்கடியில்தான் பொக்கிஷம் இருக்குமென எல்லாவற்றையும் எடுத்தனர்.

அடியில் ஒரு பேப்பரில் எழுதியிருந்தது. “பணத்தை மட்டுமே எதிர் பார்த்து மனித நேயங்களை மறந்துவிடுகிற மனிதர்களுக்கு பெரிய ஏமாற்றமே காத்திருக்கும்” என்று.

தன் சொத்தையெல்லாம் மகன்களிடம் பிரித்துக்கொடுத்துவிட்டு, அவர்கள் தன்னை கவனிப்பதற்காக ஒரு தந்திரத்தைக் கையாள வேண்டிய நிலை அந்த தாய்க்கு வந்தது பெரிய பரிதாபம். அதன் மூலம், அடிப்படை குணங்களே மகன்களுக்கு இல்லையென்பது மட்டுமல்ல, அவர்களைப் பெற்ற தாயும் அதற்கு காரணம் என்பதே உண்மை.

“உங்களுக்கு மனநிலையை மாற்றி வாழ இன்னும் ஆயுள் உள்ளது. அதனால் மனதை மாற்றி வாழுங்கள். இதுதான் என்னுடைய கடைசி ஆசை. இதுதான் அந்த பொக்கிஷம்” என்றும் எழுதியிருந்தது.

இனி விஷயத்திற்கு வருவோம். பல பெற்றோர்கள் சொல்வதைப் பார்ப்போம்.

என்னுடைய பிள்ளைகளுக்குத் தானே அல்லும் பகலும் உழைத்து பணம் சேர்க்கிறேன் என்று சொல்லிவிட்டு பிள்ளைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் சிலர் இருக்கிறார்கள்.

பணத்தினுடைய முக்கியத்துவத்தை யாரும் மறுக்கமுடியாது. அதே சமயத்தில் பணத்திற்கு அப்பாற்பட்டு பல அம்சங்களை உணர வேண்டும்.

இந்த இடத்தில் மனித மனத்தின் ஈடுபாடுகளில் உண்டாகும் மாற்றங்களையும் பெற்றோர்கள் உணருதல் அவசியம்.

குழந்தை பிறந்த ஓரிரு வருடங்களுக்கு அதற்கு தாயின் மீதுதான் மிகுந்த ஈடுபாடு இருக்கும்.

அடுத்ததாக, தந்தை மற்றும் உடன் பிறந்தோர் மீது ஈடுபாடு ஏற்படும்.

விவரம் தெரிய ஆரம்பித்ததும் படிப்பு மற்றும் தொழில் மீது ஈடுபாடு ஏற்படும்.

திருமண வயதில் தங்களுடைய குடும்பம், குழந்தைகளென ஈடுபாடு, வளர்ந்ததும் சமுதாயத்தில் ஈடுபாடு இப்படி ஒவ்வொரு வயதிற்கேற்ப அதன் ஈடுபாடு மாறிக் கொண்டே இருக்கும்.

இதில் பெற்றோரின் தேவை மற்றும் பெற்றோர் மீது ஈடுபாடு என்ற மன உணர்வுகள் முதல் இருபது ஆண்டுகளில் தான் அதிகமாகிறது.

அந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளுடன் சேர்ந்து பழகும் நேரத்தின், அளவிற்கேற்ப பெற்றோர் – பிள்ளை உறவிலும் அதிகமான உறுதி ஏற்படும்.

மற்ற காலகட்டங்களில் பெற்றோர் மீது பற்று இருந்தாலும், நடைமுறையில் மற்ற பல்வேறு விஷயங்களில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் உருவாகிவிடும்.

ஆகவே, குழந்தைகளுக்குத் தேவையான நேரத்தில், பெற்றோர்கள் தங்களுடைய நேரத்தை ஒதுக்குவதே அவர்களின் வளர்ச்சிக்கும் பயனளிக்கும்.

அந்த நேரத்தில் பிள்ளைகளுக்கு பல விஷயங்களை எடுத்துச் செல்ல வாய்ப்பு கிட்டும். அப்போதும் மனித நேயத்தை எடுத்துச் சொல்வதைவிட அதற்கு எடுத்துக்காட்டாக தாங்களே இருப்பதுதான் சிறப்பு.


Share
 

1 Comment

Post a Comment


 

 


February 2002

உள்ளத்தோடு உள்ளம்
பொக்கிஷம் ஏது?
தோல்வி உங்களைத் துரத்துகிறதா?
பொதுவாச் சொல்றேன்
ஓ அன்றில் பறவைகளே!
உறவுகள் உணர்வுகள்
வாசகர் கடிதம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
மனித சக்தி மகத்தான சக்தி
கேள்வி பதில்
மனம் விரும்பும் பணம்
தொழில்முறை பரிமாற்றம்
நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே