Home » Articles » ஓ அன்றில் பறவைகளே!

 
ஓ அன்றில் பறவைகளே!


கந்தசாமி இல.செ
Author:

எனது இளமைக்கால நண்பர் முத்து வந்திருந்தார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. உருவத்திலும் உடையிலும் இருந்த மாறுதலைக் கண்டபோது என்ன சொல்லுவது என்று தெரியாமலும் தயங்கினேன்.

‘வாருங்கள்’ என்றேன்.

‘என்ன வாருங்கள்? வாடா என்று சொல்’ என்றான்.

நானும் அவனும்தான் படித்துப் பதவிகளை அடைந்த பிறகும் “டாம போட்டுப் பேசிக்கொள்கிறவர்கள். வேறுயாராவது பார்த்தால் அநாரிகமாக இருகும் என்றாலும், எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை அந்த ‘டா’ வே தெளிவாக உணர்த்தியது. என் நலனில் அக்கரைகொண்ட மிகச்சிலரில் முத்துவும் ஒருவன்.

அவனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். அவனுக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் இருந்தது இல்லை. ஆனால் நல்ல மனம் உடையவன். முன்னேற வேண்டும் என்ற துடிதுடிப்பும், ஏழைகளின் இன்னல்களை அனுதாபத்தோடு பார்ப்பதில் இளகிய மனமும் உடையவன்.

நாங்கள் இருவரும் தூக்குப் போசியில் சோற்றைத் தூக்கிக்கொண்டு, தினம் இரண்டு மைல்கள் நடந்து பள்ளிக்குச்செல்வோம். மதிய உணவின்போது அந்தக் கோயிலில் உள்ள ஊர்க்கிணற்றில் நீர் இறைத்துச் சாப்பிட உட்காருவோம். ஒருவருக்கொருவர் சோற்றை மாற்றிக்கொள்வோம். சிறப்பான நாட்களில் பள்ளிக்குப் போகும் போதே பேச்சு உணவைப் பற்றியதாகத்தான் இருக்கும். எப்பொழுது மணி அடிக்கும் என்ற எண்ணம் இருவர் உள்ளத்திலும் இருந்து கொண்டிருக்கும்.

உண்ட பிறகு சிற்சில சமயங்களில் உணவு மீதமிருக்கும். எங்களையே நம்பயிருக்கும் அந்த நாய், சிற்சில சமயங்களில் ஆறு, ஏழு வயதுள்ள அந்த நொண்டிப் பையன், இவர்களுக்கு மாறி மாறிக் கிடைக்கும். சில பையன்கள் மிஞ்சியதை சாக்கடையில் கொட்டும் போதும், மணலில் ஊற்றும்போதும், இருவரும் வருந்திப் பேசியதும் உண்டு. அவனைப் பார்த்ததும் அந்தக்காட்சிதான் என் நினைவுக்கு வந்தன.

“சரி, எப்படி இருக்கிறாய்? இன்னும் சாமியாராகத்தான் இருக்கிறாயா? நீ வந்திருப்பதாகப் பேப்பரில் பார்த்தேன். எப்படியாவது சந்திக்க வேண்டும். என்று வந்தேன்” என்றான் பத்து ஆண்டுகட்குமுன் ஒருமுறை சந்திக்கிறோம்.

பத்தாண்டுகளில் அவனுடைய வளர்ச்சியைக் கேட்டு வியந்து போனேன். கிராமத்தில் இருந்த மூன்று ஏக்கர் நிலத்தை விற்று சைக்கிள் கடையில் தொடங்கியவன், இன்று இரண்டு பஸ்ஸுக்குச் சொந்தக்காரன்; பங்களா, கார் இவை எல்லாவற்றையும் விட இவ்வளவு பெரிய நகரத்தில் மிகப்பெரிய தொழில் அதிபர்களும், அரசியல் வல்லுநர்களும் இருக்கின்றபோது, இவன் போட்டியில்லாமல் நகரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொண்டாற்றுகிறான் என்று கேள்விப்பட்டதம், பதவியும் அவன் காலடியில் சரண் அடைந்தன. வளமாகும் அதைவிட மனநலத்தோடும் இருப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.

“எதிலும் போட்டி இடுவதற்குத் தயங்குவதில்லை. ஆனால் வெற்றி அடைந்தாலும், தோல்வி வந்தாலும், அதனால் நான் பெரிதாகப் பாதிக்கப்படுவதில்லை. அதுதான் நான் உயர்ந்துகொண்டு இருப்பதற்கு காரணம்’ என்று கூறினான். பையனைப் பி.ஏ. வரை படிக்க வைத்து தனது தொழிலிலேயே வைத்துக்கொண்டதும், இரண்டு பெண்களில் ஒன்றை பயிரத்தொழில் செய்யும் தன் மைத்துன்னுக்கே திருமணம் செய்து கொடுத்துவிட்டதும், சிறிய பெண் மனையியல் கல்லூரியில் படத்துக் கொண்டிருப்பது பற்றியும் கூறினான்.

விட்ட இடத்தில் இருந்து தொடங்குவது போன்ற அவனது செயலையும் பத்தாண்டுகட்கு பறகு நான் எவ்வாறு இருக்கிறேன்? என் மனநிலை என்ன? என்பதைப பற்றியும் கவலைப்படாமல், தனக்கே உரிய முறையி பேசிச் சென்றது எனது மனதுக்கு இதமாக இருந்தது. பேச்சின் இடை இடையே தான் கிராமத்தை விட்டு வராமல் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த முன்னேற்றம் அடைந்திருக்க முடியாது என்பதை வலியுறுத்தியது எனது சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது.

வாழத் தெரிந்தவன். மேம்போக்காகப்பார்க்கும்போது அவனது வளர்ச்சியில் நேர்மையும் நியாயமும் இருப்பதாகத் தோன்றினாலும், நுணுகி ஆராய்ந்தால் அவனது வளர்ச்சியால் எத்தனையோபேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்? எத்தனை பேர் உழைப்பு அனுடைய சுக வாழ்விற்குக் காரணமாக இருந்திருக்கும்? என்பதும் என் உள்ளத்தில் ஓடியது.

எனது ஓட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் டெலிபோன் மணி ஒலித்தது. பட்டமளிபு ‘விழாவைத் தொடர்ந்து அவ்வூர்த் தொழலதிபர் ஒருவர் அளக்கும் விருந்தில் கலந்து கொள்ளும் அழைப்பு அது. முன்னரே ஒத்துகொண்டதுதான் அதற்காகத் தயாரானேன்.

ஆடம்பரமான விருந்து, அதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அதில் வீணாவதை எண்ணும்போது? படித்தவர்கள், அறிவும் தெளிவும் உடையவர்கள் எல்லாம் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? மேடையில் சிக்கனம் பற்றியும் நாட்டின் முன்னேற்றம் பற்றியும் பேசுகின்றவர்களே இப்படி இருந்தால்? என்ன போலித்தனமான வாழ்க்கை? நாடு எப்படி முன்னேறும்? சாப்பாடு முடிந்த பிறகு என் அருகில் அமர்ந்து சாப்பிட்ட அந்தப் பெரியவர் வேதனையோடு இவற்றைக் கூறினார்.

இவையெல்லாம் என் உள்ளத்திலும் எழுந்தன. கடந்த பல ஆண்டுகளாகவே இத்தகு எண்ணங்கள் எழும், ஆனால் ஒரு நாளாது வாய்விட்டுக் குறிப்பிட்டதில்லை. நாட்டில் படித்தவரகள் எவ்வளவு கோழைகள் ஆகிவிட்டார்கள்? நானே அதற்கு எடுத்துக்காட்டாக அல்லவா இருக்கிறேன் என்று எண்ணும்போது, எனக்குள் நான் நாணிக் கொண்டேன்.

வாய்ப்பும், வசதியும் உள்ள எல்லோரும் இப்படி இருப்பதால்தான், நாடு விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன நிலையிலும் இப்படியே தேங்கிக்கொண்டு இருக்கிறது.

இவற்றையெல்லாம் எண்ணி என்ன பயன்? எண்ணியதைத தைரியமாகச்சொல்ல வேண்டாமா? சொன்னதைச் செய்வதற்கு முயலவேண்டாமா? இவற்றைச் செய்யமுடியாத போது என்ன பயன்? கல்லாத பேர்களே தலைவர்கள் என்று குறிப்பிட்ட அறிஞனை நினைத்துப் போற்றியது என் மனம்.

விருந்துக்குப்பின் விருந்தினர் இல்லம் வந்தேன். எனக்காக வண்டி காத்திருந்தது. மீண்டும் அந்தப்பெண்ட சாந்தி வந்திருந்தாள்.

அறைக்கு வந்ததும் உடனே டில்லி புறப்பட வேண்டிய செய்தி காத்திருந்தது. செய்தி பழையதுதான். இருப்பினும் அவசரமாக அழைப்பதால் ஏதேனும் முடிவு எடுக்க ஏண்டி இருக்கும் என்று எண்ணிப் புறப்பட வேண்டிய மன நிலையில் இருந்தேன்.

சாந்தியிடம் நிலைமையை விளக்கக் கூறி, “இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி வருவேன், வரும்போது உங்கள் இல்லத்திலேயே தங்குகிறேன். அம்மாவிடம் சொல். வருத்தப்படப் போகிறார்ள்ள்” என்று அன்பாகச்சொல்லி அனுப்பிவைத்தேன்.

அவள் கார் மறையும் மட்டும் அதனைப்பார்த்துக் கொண்டே நின்றேன். நான் தலைநகர் சென்று செய்ய வேண்டிய பணியைவிடத் தங்கத்தின் நினைவே என் உள்ளத்தில் நிறைந்திருந்தது.

தங்கத்தின் மகள் சாந்தியைப் போல் எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால்? எனக்குக்கூடப் பிள்ளைப் பாசமா? என்னுடைய பிள்ளைப் பருவமே என் கண்முன் நின்றது.

விருந்தில் அதிகம் உண்டதாலோ என்னவோ உறக்கம் வரவில்லை.

மீண்டும் வந்த பிறகு தங்கத்தைச்சந்தித்த என்ன பேசுவது? என்ன கேட்பது? என்று என்னென்னவோ எண்ணினேன். சந்திப்பதால் என்னுடைய அமைதி கெட்டு விடுமோ? என்று கூட அஞ்சினேன். இன்னும் என்ன சலனம்? இது என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்வி. இளமயில் அரும்பிய ஆசைகள் மனிதனை எவ்வாறு ஆட்டிப்படைக்கின்றன.

பத்தாம் வகுப்பில்தான் நாங்கள் சந்தித்தோம். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு. சந்தித்தோம் என்று சொல்வதைவிட சண்டையிட்டுக் கொண்டோம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஏதேனும் ஒரு பாடத்தில் நான் இரண்டு எண்கள் கூடுதலாகப் பெற்றுவிட்டால்கூட அவளால் பொறுக்க முடியாது. அன்று முழுவதும் அவள் முகம் வாடிப்போயிருக்கும். எனக்கோ அவள் வாட்டத்தில் ஒரு மகிழ்ச்சி, வெற்றிக்களிப்பு.

இப்படித்தான் பத்தாம் வகுப்பு முடியும் வரை இருந்தது. ஆனால் பதினொன்றில்? அதற்கு முன் பத்தாம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் எங்களூர் மாரியம்மன் திருவிழாவில் சந்தித்த போது அவளடைய பார்வையில் அன்பு நிறைந்திருந்தது. எங்களுக்குள் இருந்த போட்டி மனம் ஏங்கேயோ அந்தக் கொஞ்சநாள் இடைவெளியில் ஓடி மறைந்திருந்தது. பள்ளி திறக்கும் நாளை ஆவலோடு எதிர்நொக்கி இருந்தேன்.

சில வார இடைவெளிக்குப் பின் எங்கள் உள்ளத்தில் அன்பும் மலரத் தொடங்கி இருந்தது. ஆனால் துன்பத்தைவிட இன்பத்திற்கு ஆயுள் குறைவு என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எங்களை வெவ்வேறு வகுப்பில் பிரித்துப் போட்டுவிட்டார்கள். அந்த வேதனையை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவளால் மட்டுமா?

அன்று மாலையில் பள்ளி விட்டாலும் என்னைத் தேடி வந்தாள். கண்கள் கலங்கி இருந்தன. இருவரும் வீட்டுக்குப் புறப்பட்டு வரும்பொழுது எங்கள்புது வகுப்புக்களைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தோம்.

“அந்த அறிவியல் ஆசிரியர் செய்த வேலை இது. என்னைத் தன் வகுப்பில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தாராம். அவரே கூறினார்.” என்றாள். ஆசிரியர்கள் கூட இப்படியும் செய்வார்களே? என்று எண்ணினேன்.

நாங்கள் பிரியும் இடம் வந்தது. அவள் மேற்காகச் செல்ல வேண்டும். அவள் ஊர் எங்களூருக்கும் அடுத்த அல்லியூர். ஊரின் பெயர்தான் வேறே தவிர எங்களுக்கும் அவள் ஊருக்கும் இடைவெளி கொஞ்சங்கூட இல்லை.

எல்லாம் புன்செய் நிலங்கள். அதைக்கடந்தால் அவள் ஊர். எங்கள் ஊர் முல்லைக் காட்டூர். அது படிக்காத மக்கள் நாவில் தவழ்ந்து மொள்ளக்காட்டூர் என்று வழங்கியது. நான் வடக்காக வரவேண்டும். அந்தப்பிரியும் இடத்தில் நெடுநேரம் எங்கள் வருங்காலம் பற்றித்திட்டமிட்டோம். இந்த ஆண்டு மிகவும் நன்றாகப் படிக்க வேண்டுமென்றும் முதல் எண்கள் நமக்குள்தான் இருக்கவேண்டும் என்றும் உறுதிசெய்து கொண்டோம்.

எங்கள் அன்பு ஒருபுரியாத புதிராக இருந்தது. இரவு உறங்கும்வரை தங்கத்தின் நினைவாகவே இருந்தேன். காலயில் சற்று நேரத்திலேயே புறப்பட்டு எங்கள் இரண்டு ஊர்ப்பாதையும் சேரும் இடத்தில் தங்கத்தை எதிர்பார்த்திருந்தேன். மற்ற வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் – ஏன் அண்ணா இங்கேயே நிற்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, ஏதோ ஒரு பொய்யைச் சொன்னேன். திடீரெனப் பொய் எப்படி வந்தது என்பது எனக்கே விளங்கவில்லை. அன்பின் மிகுதியால், எதுவும் கைவந்த கலையாகிவிடும்போல இருக்கிறது.

நீண்ட, நேரம் ஆகியும் தங்கம் வரவே இல்லை. ஒரு வேளை எனக்கு முன்னதாகச்சென்றிருக்கக்கூடுமா? என்று எண்ணினேன். வகுப்புக்குத் தாமதமாகிவிட்டது.முதல் வகுப்பில் ஆங்கிலப்பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் கடுமையாகத் திட்டினார். நன்றாகப் படிக்கின்ற மாணவர்களே இப்படி இருந்தால்? எனக் கேட்டுவிட்டு அனுமதித்தார்.

எனக்குப் பாடத்திலம் மனம் இல்லை. அவர் திட்டியதும் படவில்லை. அன்று முழுவதும் என்னவோபோல் இருந்தது. மறுநாளும் தங்கம் வரவில்லை. அன்று அவள் ஊர்ப் பையன்களைக் கேட்டதில் அந்த அக்காவுக்கு காய்ச்சல் என்றார்கள். பத்து நாட்கள் ஆகிவிட்டன. எனக்குப் பாடத்தில் மனம் செல்லவில்லை.

ஒருநாள் மாலை, பள்ளி விட்டதும் தங்கம் வீட்டிற்குச் சென்றேன்; கிராமத்தில் வீட்டைக் கண்டுபிடிப்பது கடினமா என்ன? தங்கம் பத்து நாட்களுக்குள் எவ்வளவு இளைத்துப் போயிருந்தாள்! என்னைக் கண்டதும் பெரிதும் மகிழ்ந்தாள். பத்து நாட்களாக நடந்த பாடங்களையெல்லாம் சொன்னேன்.

கவலைப்படாமல் இரு.நான் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துவிடுவேன். உனக்காக மிகவும் நன்றாகப் படித்து வைத்திருக்கிறேன். பத்து நாட்களாக நீ இல்லாத்து எனக்கு என்னவோபோல் இருந்தது. அதனால் தான் இன்று பார்க்க வந்தேன்” என்றேன்.

“எனக்கும் அப்படித்தான் கனாகூடக் கண்டேன்” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அப்போது அவள் அம்மா வரவே பேச்சுத் தடைப்பட்டுவிட்டது. என்னை யார்என்று அறிமுகப்படுத்தினாள். அந்த அம்மாவோ ஏதோ ஒரு முறையில் உறவு கண்டு பிடித்துக்கொண்டிருந்தார்கள். விடை பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

அந்த ஆண்டும் விரைவாகச் சென்று கொண்டிருந்தது. எங்கள் அன்பும் வளர்ந்தது. பலமுறை அவள் வீட்டிற்குச் சென்று வருவதும் வழக்கமாகிவிட்டது. தங்கமும் ஒருமறை தன் தாயை அழைத்துக்கொண்டு எங்கள் இல்லதிற்கு வந்திருந்தாள். என் தாய்க்கு அன்று ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அம்மாவின் கற்பனையும் அளவு மிஞ்சிப் போயிருந்தது. ஆனால் அவர்கள் ஏராளமான நிலபுலம் உடையவர்கள் ஆயிற்றே? என்று ஒரு வினா எழுப்பி, கற்பனைக்கு முற்றுப்புள்ளி இட்டார்கள்.

இவற்றையெல்லாம் இப்பொழுது நினைத்துப்பார்த்து என்ன பயன்? இப்பொழுதும் பாவாடை தாவணியில் என் கண் முன் நற்கிறாளே? தங்கம்! ஏன் என்னை இப்படித் தவிக்கவிட்டாய்?

அவள் வகுப்பில் படித்த பையன் முகுந்தன். அவளுக்குக்காதல் கடிதம் எழுதிவிட்டான். அதை யாரிடமும் காட்டாமல் என்னிடம் மட்டும் காட்டி அழுதாள். அவள் அழுத்தைப் பார்த்தபிறகு, அச்செய்தி தலைமையாசிரியர் வரை எட்டிவிட்டது. அப்பொழுதெல்லாம் என்னைப்பற்றி என்ன எண்ணியிருப்பாள்?

அவள் மனதுக்கு ஏற்படும் துன்பங்களுக்கெல்லாம் நான் சுமைதாங்கியாக இருந்தேனா சுமைதாங்கியாகவே என்னை ஆக்கிவிட்டாளே! சுமைதாங்கிகளுக்குச் சுமப்பதே ஒரு சுகம் என்பதாலா?
அந்த நிகழ்ச்சியை நினைத்தாலும் மெய் சிலிர்க்கின்றது. அன்று தனி வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடந்தது. சாப்பிட உட்காரும்போதுதான் என் சாப்பாட்டுக்கேரியர் மாறி இருந்தது தெரிந்தது. திறந்து பார்த்தால் நான்தான் மாற்றிக் கொண்டேன். தங்கம் என்ற சீட்டு உள்ளே இருந்தது. அன்று சாப்பிட்ட அந்த உணவுக்கு ஈடாக இதுவரை உண்டதில்லை. ஏன்? இனி என்றுமே இல்லை. எவ்வளவு துடுக்குத்தனம்?

டிபன் கேரியர் மாறிப்போய்விட்டதாக வீட்டில் அம்மா சொன்னார்கள். மறுநாள் அவள் கொண்டு வந்ததை வழியிலேயே மாற்றிக்கொண்டேன். எத்தனை இன்பமான நாட்கள்? அவை எல்லாம் என் வாழ்க்கையின் வசந்தகாலம்? அக்காலம் ஏன் இவ்வளவு விரைவில் முடிந்துவிட்டது?

அவள் ஏதேனும் ஒன்று தெரியவில்லை என்று கேட்டாள், அந்தப் புத்தகம் முழுமையும் ப டித்து வந்து சொல்வேன். அவளால்தான் நான் பள்ளியில் சிறந்த மாணவனானேன் என்பது எனக்குத்தானே தெரியும்.

தேர்வில் நான் அவளுக்கு விளக்கிச் சொன்ன கணக்குகளில் இரண்டு வந்தது. அதில் ஒன்றை நான் வேண்டுமென்றே போடாமல் விட்டுவந்தேன். தெரிந்த கண்கைப் போடாமல் யாரேனும் விட்டுவருவார்களா? அவளது அன்பு என்னை அவ்வாறு விட்டுக் கொடுக்கத் தூண்டியது என்றுதான் சொல்ல வேண்டும். அன்பு எதையும் தியாகம் செய்யும் என்ற காந்தியடிகள் எழுதியது எவ்வளவு உண்மை. அந்தத் தேர்வில் அவள் முதல் எண் பெற்றிருந்தாள். என்னைவிட ஐந்து எண்கள் கூடுதல் விடைத்தாளை ஒப்பிட்டுப் பார்த்தபோது எனக்கு தெரிந்த கணக்கை – அவளுக்குச் சொல்லிக் கொடுத்த அந்தக் கணக்கைப்போடாத்தைக் கண்டுபிடித்துவிட்டாள்.

“ஓகா! எனக்காகத்தான் விட்டுக் கொடுத்தீர்களா? இதில் எல்லாமா விட்டுக் கொடுப்பார்கள்? உங்களோடு டூ” என்று அவள் பார்த்த பார்வை! எங்களை இறுகப் பிணைத்து இருந்தது.

ஆனால் அந்தப் பிணைப்பு? அன்று விட்டுக் கொடுத்ததால்தான், நீயிலிருந்து என்னை நீங்களாக உயர்த்தி இருந்தது.

தங்கம்! விருப்பமில்லை என்ற ஒரு வார்த்தையில் என்னைத் தன்னந்தனியாக விட்டுவிட்டாயே! இதற்கெல்லாமா விட்டுக் கொடுப்பது கூடாதுதான். போராடி, இருக்க வேண்டும். ஆனால் நீயே விரும்பாதபோது நான் போராடிப்பெறுவதால் என்ன பயன்? என் வாழக்கையில் உனக்காக எல்லாறையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தேன். ஆனால் நீயோ? நான் மட்டும் எதற்கு? என்னையும் விட்டு விடுங்கள் என்பதுபோல்..

ஏன் அந்தப் பழைய நினைவுகள் எல்லாம்? சிலருக்கு பழைய நினைவுகள்தான் இன்பம் தருகின்றன. ஏனென்றால் அதற்குப் பிறகு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் அவர்கள் வாழ்க்கையில் நிகழ்வதில்லையே! என்னுடைய வாழ்க்கையும் அப்படித்தான் ஆகிவிட்டது.

மரகட்டையாகிவிட்ட என் உள்ளத்திற்கு என் பாலவைன வாழ்விற்கு – அந்த நினைவுகள் சிற்சில வேளைகளில் சோலையாகி மகிழ்விக்கின்றன. அதுவும் இல்லாவிட்டால்? ஒருவேளை நான் விலங்காகவும, ஆகியிருப்பேன். ஆனால் இதை நீ விரும்பவில்லை என்று சொல்ல முடியாதல்லவா? கற்பனைக்குத் தடைபோட யாரால் முடியும்? ஏக்கத்தால் இருளடைந்துவிட்ட உள்ளங்களுக அது ஒன்றுதானே கைவிளங்கு.

தங்கம்! என் மூச்செல்லாம் நீயாக நிறைந்து இருக்கின்றாய். இதை எப்படி உனக்கு உணர்த்துவேன்? உணர்த்தினாலும் அதை விரும்புவாயா? உணர்த்துவதால் என்ன பயன்? எல்லாக் காரியங்களையும் பயன் கருதியா செய்கிறார்கள்? மனதுக்கு அமைதி நல்குவதை விடச் சிறந்த பயன் ஒன்று உண்டா? அந்த அமைதிக்காக, என் எண்ணங்கள் எங்கெல்லாம் அலைகின்றன தெரியுமா?

நான் மட்டும் ஓவியக் கலைஞனாக இருந்திருந்தால் அந்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நீ நடந்துகொண்டதை அப்படியே ஓவியமாக்கி இருப்பேன். சிற்பியாக இருந்திருந்தால் சிலையாக வடித்திருப்பேன். ஆனால் நகல் அசல் ஆகுமா? என்ன இருந்தாலும் அசல் அசல்தான்!

நீ எனக்கு என்னவாக இருக்கிறாய் தெரியுமா என்னுடைய நிழலாக இருக்கின்றாய். நிழல் எப்போதாவது பிரிவதுண்டா?

தொடரும்….


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2002

உள்ளத்தோடு உள்ளம்
பொக்கிஷம் ஏது?
தோல்வி உங்களைத் துரத்துகிறதா?
பொதுவாச் சொல்றேன்
ஓ அன்றில் பறவைகளே!
உறவுகள் உணர்வுகள்
வாசகர் கடிதம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
மனித சக்தி மகத்தான சக்தி
கேள்வி பதில்
மனம் விரும்பும் பணம்
தொழில்முறை பரிமாற்றம்
நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே