Home » Articles » அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?

 
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?


admin
Author:

வாழ்க்கைப் பயணத்தின் திசையைத் தீர்மானிக்கும் தேர்வு வரப்போகிறது. ஒரே ஒரு மதிப்பெண்கூட இந்த போட்டிகள் மிகுந்த உலகத்தில் உங்களை ஆயிரத்தில் ஒருவராக உயர்த்திக்காட்டி’ உமது இலட்சியத்தை அடைய உதவலாம். ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியமானது. எனவே, கூடுதலாக மதிப்பெண்கள் பெற இக்கட்டுரை வழிகாட்டும்.

மாணவ மணிகளே தேர்வு வந்துவிட்டதா?

தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

நன்கு படித்திருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளத்தில் இருந்தால் நடுக்கம் உங்களை அணுகாது. தன்னம்பிக்கை இல்லாத உள்ளத்தில் பயம் பாய் போட்டுப் படுத்துக்கொள்ளும்.

இனி செய்ய வேண்டியது

இந்த வினாடியிலிருந்து நீங்கள் முயற்சித்தால் கூட வெற்றி பெறலாம். படிப்பதை படம் பார்ப்பதைப் போல ஒரு சுவையான அனுபவமாக எடுத்துக்கொண்டால் படித்ததெல்லாம் மனதில் பதியும்.

விருப்பத்தோடு படித்தால் விறுவிறுவென பாடம் புரியும். புத்தகங்களுடன் போராட்டம் நடத்தாமல் விரும்பிப் படிக்கும்போது, ஆவலுடன் கேட்கும்போது இதயத்தில் ஆழமாக் பதியம் போடப்படுகிறது.

ஒரு திரைப்படத்தைப் பார்த்தால் அப்படியே தொடக்கம் முதல் முடிவுரை திரும்ப நினைவில் கொண்டவர முடிகிறதே எப்படி? வசனம், பாடல், காட்சிகள் அனைத்தும் நெஞ்சில் நிறைந்து விடுகின்றன. காரணம் முழு கவனமும் படம் பார்ப்பதில் இருந்ததுதான்.

உங்களால் முடியும்

இருக்கிற குறுகிய காலத்தை கவனமாகக் கையாண்டால் கூடப் போதும். வெற்றி நிச்சயம் – முடியும் உம்மால் முடியும். உனக்குள் இருக்கிற பேராற்றலைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

நான் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினாலும் ஆர்வத்தின் காரணமாக அஞ்சல் வழியில் எம்.ஏ., தமிழ் இலக்கியம் படித்தேன். மே மாதம் தேர்வு மார்ச் மாதக் கடைசியில் பாடங்கள் வந்து சேர்ந்தன.

தொல்காப்பியம், நன்னூல் போன்ற நூல்களைப் பாடமாக வைத்திருந்தார்கள். ஒரு கல்லூரிப் பேராசிரியரைச் சந்தித்து தொல்காப்பியம், நன்னூல் பாடம் சொல்லித்தருமாறு வேண்டினேன்.

“தேர்வுக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது’ என்றார். “35 நாட்கள்” என்றேன். “முப்பத்தைந்து நாட்களில் படிக்க முடியாது இந்த வருடம் விட்டுவிடுங்கள். அதற்குள் படிக்க முடியாது. அடுத்த ஆண்டுதேர்வு எழுதுங்கள்” என்று சொன்னார். அது எனது ஆற்றலை குறைத்து மதிப்பிடுவதாக உணர்ந்தேன். அவர் பேசியது என்னை வேகப்படுத்தியது.

வீடு திரும்பிய நான் வைராக்கியத்தோடு படிக்க அமர்ந்தேன். தினம் 6 மணி நேரம் படித்தேன். படித்தப் படித்து – சுருக்கி எழுதி வைத்தேன்.. ஒரு பக்கம் படித்தால் அதை ஓரிரு வழியில் எழுதி வைத்தேன். 25 நாட்களில 5 தாள்களுக்கும் உரிய பாடங்களைப் படித்து முடித்து குறிப்பெடுத்தேன்.

தேர்வுக்கு இன்னும் 10 நாட்களே இருந்தன. அதற்குள் ஒரு முறை, பிறகு தேர்வுக்கு முந்திய நாள் ஒரு உமறை திருப்பிப் பார்த்தேன். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற முடிந்தது.

உங்களாலும் முடியும் இப்போது. உங்களுக்குத் தேவை உங்கள் ஆற்றலில் உங்களுக்கு நம்பிக்கை.. இப்போதே தீர்மானத்துடன் படிக்க முடியும் என்று முடவெடுங்கள். மிஞ்சியுள்ள நாட்களே போதும்.

தேர்வுக்கு எவ்வாறு நேரத்தை ஒதுக்கிப் படிப்பது, எந்த நாளில் எந்தப் பாடத்தைப் படிப்பது என்பனவற்றை எல்லாம் நாள் வாரியாக பாகுபடுத்தி ஓர் அட்டவணையைத் தயார் செய்ய வேண்டும்.

ஒரே பாடத்தை தொடர்ந்து வாசிக்கும் போது சலிப்பும், சோர்வும் ஏற்படும் நேரம் ஆக ஆக படித்ததையே தொடர்ந்து படிக்காமல் மாற்றி வெவ்வேறு பாடத்தை வாசிக்க வாய்ப்பாக அட்டவணையிட வேண்டும்.

நேரத்தை திறம்படச் செலவழிக்கும் வகையில், தேர்வுக்காகப் படிக்கும் சமயங்களில் அங்கும் இங்கும்செல்வதையும், நேரத்தை பலியிடும் வெட்டிப்பேச்சுகளையும் கட்டுப்படுத்துங்கள். சலிப்பு தோன்றுமானால் சிறிது நேரம் வெளியில் நடந்து வரலாம்.

புத்தகம் முழுவதையும் படிப்பதற்கு போதிய நேரமிலை என நினைத்தால் உடனே செய்ய வேண்டியது இதுதான். கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குரிய பழைய வினாத்தாள்களை எடுத்துக்கொண்டு அதில் உள்ள வினாக்களுக்கு தேர்வில விடையெழுதுவதற்கு ஏற்ப தயாரித்துக் கொண்டால் அதுவே வெற்றிக்குப் பெருந்துணை புரியும்.

ஆனால், சாதனைகளைப்புரிய நினைக்கிறவர்கள் அனைத்துப் பாடங்களையும் படிக்க வேண்டும். தேர்வுக்குப் படிக்கும் போது வேறெதிலும் மனம் செலுத்தாமல், படிப்பதில் செலுத்த வேண்டும். எந்தப் பாடம் படித்தாலும், படிக்கிறபோது அந்தப் பாடமாகவே மாறிவிட வேண்டும்.

படிக்கும் இடத்தை அடிக்கடி மாற்றாமல் பழக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து படித்தால் மனம் சிதறாமல் விரைவில் குவியும். ஒவ்வொரு முறையும் படிக்கத் தொடங்கும் முன் மனத்தைச் சம நிலைக்குக் கொண்டு வரும் பயற்சியை கண்களை மூடிக்கொண்டு ஓரிரு மணித்துளி செய்துவிட்டு (இப்பயிற்சி முன்பே தன்னம்பிக்கை இதழில் ‘நினைவாற்றல் மேம்பட வழி’ என்ற எமது கட்டுரையில் வெளிவந்துள்ளது. அதைப் படிக்க வாப்பு இல்லாதவரகள் தற்போது தன்னம்பிக்கை வெளியிட்டுள்ள நினைவாற்றல் மேம்பட வழிகள் என்ற புத்தகத்தைப் படித்துப் பயன்பெறலாம்.)

கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் உரைகளை (Notes) வாங்கிப் படித்தே, பலரும தேர்வு எழுதுகிறார்கள். தேர்வுக்குத் தயாரக்கும் போதே அந்தக் உரைகளை, வழிகாட்டிகளை அடிபடையாகக் கொண்டு சொந்த நடையில் குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டால் – கூடுதலான சில விபரங்களையும் சேர்த்து எழுதிவைத்துக் கொண்டால் மற்றவர்களில் இருந்து நமது விடை வேறுபட்டு இருக்கும்.

மேலும், எழுதும் விடைக்கு ஏற்ப படங்கள், புள்ளி விவரங்களையும் சேர்த்து எழுதினால் மிகுந்த மதிப்பெண் பெறமுடியும். காரணம் கடைகளில் கிடைக்கும் வழிகாட்டிகளை, உரைகளை வாங்கி படித்து எழுதுபவர்களின் விடை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். இது மதிப்பிடுபவர்க்கு எரிச்சலூட்டும்.

ஓய்வும் – உணவும் – உடற்பயற்சியும்

எந்நேரமும் படித்து கொண்டே இருந்தால் உடல்நலம் கெடும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய. எனவே, தேர்வு சமயத்தில் உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டால் முதலுக்கே மோசமாகிவிடும். உடலுக்கும் மூளைக்கும் நிறைய வேலைகொடுப்பதால் அதிக சக்தி செலவாகும்.

படிப்பில் ஆர்வமாக இருக்கையில் வயறுபுடைக்க உண்ண விருப்பம் இருக்காது. அதிகம் உண்டாலம் உறக்கம் வந்துவிடும். எனவே அளவாகவும் அதே சமயம் சத்துள்ள உணவாகவும் உண்ண வேண்டும். சான்றாக, கடலை மிட்டாய் தின்று நிரம்பத் தண்ணீர் குடிக்கலாம்.

இரவில் படிப்புக்கு இடையில் சோர்வு நீங்க கோப்பை கோப்பையாக காப்பிஉம், தேநீரும், காப்பியும் அருந்துவது நல்லதல்ல. பழச்சாறு, தேன் கலந்த நீர் அருந்தலாம்.

கண்களுக்கும், உடலுக்கும் ஓய்வு தருவது அவசியம். தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு நிமிடம் கண்களை மூடி கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் படிக்கத் தொடங்கலாம்.

மேலும், உள்ளங்கையலோ அல்லது கண் கிண்ணத்திலே (Eye cups) (இயற்கை மருத்துவ மனைகளில் மற்றும் மருந்துக் கடைகளில் கிடைக்கும்) தண்ணீரை எடுத்துக் கொண்டு விழிகளை அதில் நனைத்து சுழலவிட்டுக் கழுவலாம். இதனால் கண் வெப்பம் குறைந்து புத்துணர்ச்சி பெறும். மேலும், கண் எரிச்சல் இருப்பின் கால்பாதங்களைக் குளிர்ந்த நீரில் நனைக்க வேண்டும்.

தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்காமல் பாடத்தின் ஒரு பகுதியை படித்து முடித்து விட்டால் (ஓரிரு மணி நேரம் படித்தவுடன் ) 10 நிமிடம் உடலைத் தளர்த்தி கண்களைமூடி உட்கார்ந்து கொண்டு படித்ததை நினைதுப் பார்க்க வேண்டும். இது ஆழமாக மனதில் பதிய வைக்கவும் உதவும் உடல் ஓய்வு பெற்று புதிய தெம்புடன் மீண்டும் படிக்கவும் முடியும்.

கூடிப்படித்தலும் எழுதிப்பார்த்தலும்

படிக்கும்போது நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது நல்லது. தனியாகப் படிப்பதைவிட, கூடிப்படிக்கும் போது உவர் படிதை மற்றவர்களிடன் சொல்லிப்பாப்பதால், விவாதிப்பதால் படித்தவர் படித்ததை நினைவில் கொண்டு வரவும். அதைக் கேட்டவர் மனதில் பதிய வைத்துக் கொள்ளவும் முடியும். ஏனென்றால், படிப்பதைவிட படித்ததை காதில் கேட்பதால், பாடம் மிக எளிதில் மனதில் ஆழப்பதியும். ஒருவருக்கு விளங்காததை மற்றவரிடம் கேட்டுத்தெளிவு பெறலாம்.

பாடங்களை படித்து முடித்தவுடன் நேரம் ஒதுக்கி முந்தைய வினாத்தாளை வைத்து தேர்வு எழுதிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் நாம் எந்த அளவிற்குப் படித்திருக்கிறோம் என்பதும், உரிய நேரத்திற்குள் விரைவாக விடைகள அனைத்தையும் முழமையாக விரைவாக எழுத முடிகிறதா என்பதும், படித்ததை சரியாகவும் தெளிவாகவம் எழுதுகிறோமா என்பதும் சரியாக எழுத முடியவில்லையானால் எந்தப் பாடங்கள் மறந்து போகின்றன என்பதும் விளங்கும்.

தேர்வு எழுதுவதில் உங்களுக்கு இருக்கிற குறைபாட்டை நீங்களே தற்சோதனை மூலம் நெறிப்படுத்தி மெருகேற்றிக் கொள்ள இதுதான் வழி.

தேர்வு பயம்

அரையும் குறையுமாகப் படித்திருந்தால் பயம் ஏற்படும் அய்யோ படித்து வருமோ அல்லது எளிதாய் இருக்குமோ? என்றெல்லாம் உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றி பயத்தை ஏற்படுத்தும்.

வதந்திகளை நம்பாதீர்

கேள்வித்தாள் அவுட்டாகிவிட்டது என்ற வதந்திகளை தேர்வு நேரங்களில் சாதாரணமாக பரப்பிவிடுகிறார்கள். இதை தயவு செய்து நம்பாதீர்கள். இத்தகு நம்பிக்கைகள் உங்கள் ஆர்வத்தைச் சிதைத்து சீரழிந்துவிடும். அதேபோல தேர்வு நிகழும் இடத்திற்குச் சென்றால் மற்றவர்களுடன் கலந்துரையாடுவதை (தேர்வு அன்று) தவிர்த்துவிடவும். ஏனென்றால், சிலர் அந்தக் கேள்வி வருது, இந்தக்கேள்வி வருது என்று உங்களைக் குழப்பிவிடுவார்கள். வருடம் முழுவதும் படிக்காததை அந்தக் கடைசி அரைமணி நேரத்தில் படித்து ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.

ஒரு மணி நேரம் முன்னதாக

தேர்வு நடக்கும் இடத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாக சென்றுவிட வேண்டும். சரியாக மணியடிக்கும்போது சென்றடைவீர்களானால் உங்களுடைய இடம் எந்த அறையில் எந்த வரிசையில் இருக்கிறது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தால் ஒரு வழியாக உங்கள் இடத்தைத் தேடிப் பிடிப்பதற்குள் மற்றவர்கள் தேர்வு எழுத ஆரம்பித்துவிட்டால், பதற்றம் ஏற்படும். இதனால் மனம் சமநிலை இழந்து படித்ததைக்கூட மறந்துவிட நேரிடும்.

தேர்வுக்கூடம் நடந்து செல்லும் தொலைவில் இருப்பவர்களுக்கு அவ்வளவாக சிரம்ம் இருக்காது. ஆனால் தொலைவில் இருந்து வருகிறர்கள் பேருந்து மோட்டார் வண்டி அல்லது மிதி வண்டியை நம்பி வரவேண்டி இருந்தால் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பேருந்து வராமல் போகலாம். வண்டி வழியில் பழுது ஆகலாம். எனவே, எந்த நிலையிலும் உரிய நேரத்திற்கு 1 மணி நேரம் முன்னதாகவே தேர்வு நிகழும் இடத்தைச் சென்றடைய வேண்டும்.

தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளுடன் சென்றிருப்பினும் சிலருக்கு ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருகும். மனம் சமநிலையில் இருக்காது. இது பொதுவாக எல்லோருக்கும் இருக்கக் கூடியதுதான்.

எனவே, தேர்வு அறையில் சென்று அமர்ந்தவுடன் ஒரு மணித்துளி நேரம் கண்களை மூடிக் மனத்தைச் சமநிலைக்கு கொண்டுவரும் பயிற்சிகளைச் செய்யுங்கள்.

முதலில் வசதியாக அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொள்ளுங்கள. நன்கு மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கவும். மூச்சுக்காற்றை உள்ளே இழுக்கும்போது ஏற்படும் ஒளியை உங்கள் செவிகளால் உணருங்கள். பிறகு உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வாய்வழியாக மூக்கு வழியாக அன்று! மெல்ல மெல்ல வெளியிடுங்கள்.

அப்படி வெளியிடும்போது மனதுக்குள் Relax, Relax, சொல்லுங்கள். இவ்வாறு ஓரிரு நிமிடம் செய்தால் போதும் இந்தப் பயிற்சியால் உங்கள் தவப்பு குறைந்துபோயிருக்கும். மனம் சமநிலையில் இருந்தால் படித்தது மடமடவென நினைவுக்கு வரும்.

தேன்நீர்

தேர்வு நாட்களில் உடல் நலம் குன்றினாலும் தவிர்க்க முடியாமல் தேர்வு எழுத வேண்டிய நிலை வரும். குறிப்பாகப் பெண்களுக்கு இயற்கையில் நிகழும்உடல் நலக்குறைவு தேர்வு சமயத்தில் ஏற்பட்டிருந்தால் உடல் சக்தியற்றுத் தேர்வு நன்கு எழுதி முடியாத நிலை ஏற்படும்.

இத்தகு நிலைகளை ஓரளவு சமாளிக்க, தேர்வுக்குச் செல்லும்போது ஒரு தண்ணீர் பாட்டிலில் தேன் கலந்த நீர் எடுத்துச் செல்லுங்கள். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது களைப்பு தோன்றினால் தேன்நீர் சிறிது அருந்தினால் போதும். உடனே அடுத்த வினாடியே புத்துணர்ச்சியும் சக்தியும் பெறலாம்.

பத்து மணிக்குத்தேர்வு என்றால் 9-45 மணிக்குச் சென்று உங்கள் இருப்பிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். பத்து மணிக்குத்தான் வினாத்தாள் தருவார்கள். ஆனால் விடைத்தாளை (Answe Book) முன்னதாக தந்து விடுவார்கள். அதை வாங்கியவுடன் அதில் உரிய அளவு சரியாக தாள்கள் இருக்கின்றனவா? அவை சரியாக பின் அடித்த இணைக்கப்பட்டுள்ளனவா? எனப் பரிசோதித்து குறைபாடு இருந்தால் வேறு விடைத்தாள் வாங்கிக்கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் தேர்வு எண், பக்க எண் ஆகியவற்றை எழுதி தாளின் இடது பக்கத்தில் மார்ஜின் போடாமல் இருந்தால் கோடு போடுங்கள்.

இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2002

உள்ளத்தோடு உள்ளம்
பொக்கிஷம் ஏது?
தோல்வி உங்களைத் துரத்துகிறதா?
பொதுவாச் சொல்றேன்
ஓ அன்றில் பறவைகளே!
உறவுகள் உணர்வுகள்
வாசகர் கடிதம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
மனித சக்தி மகத்தான சக்தி
கேள்வி பதில்
மனம் விரும்பும் பணம்
தொழில்முறை பரிமாற்றம்
நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே