Home » Articles » ஓ அன்றில் பறவைகளே!

 
ஓ அன்றில் பறவைகளே!


கந்தசாமி இல.செ
Author:

எதிர்பாராத சந்திப்பு பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது உண்டு. ஆனால் எனக்கு?

உடம்பெல்லாம்ம் நன்றாக வேர்த்துப் போயிற்று. பலமுறை முகத்தையும் நெற்றியையும் துடைத்துக் கொண்டேன். என்னால் இருக்கையில் அமர்ந்திருக்க முடியவில்லை.

வேறு நிகழ்ச்சியாக இருந்திருக்குமாயின் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி உடனே எழுந்து போயிருக்க முடியும். ஆனால், பட்டமளிப்பு விழாவில் அப்படிச் செய்ய முடியுமா? அதுவும் பட்டமளிப்பு விழாவில் பேருரை நிகழ்த்த வந்தவர் அப்படிச் செய்யலாமா?

விழாச் சடங்குகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தன். எப்படியோ ஒருவகையில் ஒன்றன்பின் ஒன்றாக ஒன்று விடாமல் இகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. கிராம்ப்புறங்களில் நடக்கும் திருமணச் சடங்கை மூடப்பழக்கம் என்கிறோம். படித்தவர்கள் நடத்தும் இந்தச் சடங்குகளை எல்லாம் என்னவென்று சொல்வது.

விழா முடிந்ததும், உரியவர்களிடம் தெரிவித்துவிட்டு விருந்தினர் மாளிகையில் எனக்கு என ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று கட்டிலில் சாய்ந்தேன்.

இன்னும் ஒரு மணி நேரத்திற்கு யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று பணியாளுக்குக் கட்டளை இட்டுவிட்டு உள்ளே தாழிட்டேன்.

இருபது ஆண்டுகளாக அடங்கிக் கிடந்த உணர்வுகள் எல்லாம் என்னுள் கிளர்ந்து எழுந்துவிட்டது போல் இருந்தது. வாய்விட்டு நன்றாக்க் கதறி அழவேண்டும் போல் தோன்றியது. ஆமாம், நன்றாக அழுதுவிட்டால் மழை பெய்துவிட்ட வானம் போல் மனம் நிம்மதி அடைந்துவிடுகிறது அல்லவா?

கண்ணிலிருந்து தாரைதாரையாகத் கண்ணீர் வழிந்தது; காதில் இறைந்து தலையணையையும் நனைத்தது.

“ஒரு ஆண்மகன் இப்படியா அழுவது?” என்று பகுத்தறிவு என்னைக் கேட்பதுபோல் இருந்தது. “உணர்ச்சி ஆட்கொள்ளும்போது அறிவு ஓடி ஒளிந்துகொள்கிறது” என்பது எவ்வளவு உண்மை. அப்படித்தான் என் அறிவும் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது.

ஏன் இவ்வாறு உணர்ச்சி வசப்பட வேண்டும்? என்ன நடந்துவிட்டது? எதைக் கண்டாலும் கலங்காத என் கல்மனம் இன்று ஏன் இவ்வாறு கலங்குகிறது? அடிமனத்தின் ஆழத்தில் அமிழ்ந்து கிடந்த உணர்ச்சிகளெல்லாம் இன்று கட்டுக்கடங்காமல் கரைபுரண்ட வெள்ளமாகிவிட்டதே ஏன்? ஏனா? எல்லாவற்றிற்கும் காரணம்? அவள்தான்.

ஆமாம்; அவளேதான்!

அவள் ஏன் இங்கு வந்தாள்? இந்த நகரில் முக்கியமானவர்களில் ஒருத்தியாக இருப்பாளோ? என் பார்வை அவள்மீது படாமலே இருந்திருக்கக் கூடாதா? இதைத்தான் “விதி” என்று சொல்கிறார்களோ?

விதி யாரை விட்டது? என்னை மட்டும் விட்டுவிட. ஒரு காலத்தில் அவளாள்தான் நிம்மதி என்றால் என்ன என்பதையே உணர்ந்தேன். ஆனால் அந்த நிம்மதி நெடுங்காலம் நீடிக்கவில்லை. அவளால்தான் என் நிம்மதியும் போயிற்று. அதுவும் நெடுங்காலம் ஆகி என் மனப்புண் ஆறி இருந்தது.

இன்று?

நீறு பூத்த நெருப்பாக அல்லவா என் உள்ளம் இன்று வரை இருந்துள்ளது என்பதை உணர முடிகிறது. அவளுக்கும் இத்தகைய உணர்வுகள் எப்போதாவது தோன்றி இருக்க முடியுமா? நிச்சயம் தோன்றி இருக்காது. இருந்திருந்தால் அதை அவள் அன்று வெளிப்படுத்தி இருக்கலாம் அல்லவா? எந்தவித உணர்ச்சியுமின்றி ஒரே வார்த்தையில் “விருப்பமில்லை” என்றல்லவா சொல்லிவிட்டாள்.

அப்பப்பா! அந்த இரவை நினத்ததால்? வேண்டாம். வேண்டவே வேண்டாம். அத்தகைய நிலை ஒருவருக்கு என்றும் வரக்கூடாது. அதை நினக்கவே என் உள்ளம் கூசுகிறது.

ஒரு ஆண் மகன் அந்த அளவிற்குத் தாழ்ந்து ஒரு பெண்ணிடம் கேட்பானா? கெஞ்சினேன். அந்தக் கெஞ்சலில் கண்ணீரும் கலந்திருந்தது. கண்ணீருக்கும் கூட அவள் மனம் கரையவில்லை. அந்த – “விருப்பமில்லை” என்ற வார்த்தையைக்கூட இரண்டாம் முறையாகச் சொல்ல அவள் விரும்பவில்லை. இடத்தை விட்டு “விடுவிடு” என்று சென்று விட்டாள்.

அந்த சில நாட்கள், நாங்கள் கடைசியாக அமர்ந்து இருந்த் இடம், அங்க வளர்ந்திருந்த புற்கள், அருகில் இருந்த பூஞ்செடிகள், ரீங்காரம் செய்து வட்டமிட்டுத் திரிந்த வண்டுகள், அவற்றின் ஒலிகள், எங்களையே பார்த்துக்கொண்டு சென்று கால் இடறி வீழ்ந்த அந்த அம்மையார், எல்லாம் இருபது ஆண்டுகள் கழிந்ததும் நேற்று நடந்ததுபோல் இடைவெளி இன்றிக் கண்முன் தோன்றுகின்றன. இவ்வளவும் ஏன்?

நான் மேடைமீது அமர்ந்து பொதுவாகப் பட்டம் வாங்கும் இளைஞர்ளைப் பார்த்துக் கொண்டே அவர்களது எதிர்காலம் பற்றி கற்பனையில் மூழ்கி இருப்பதுபோல் எனக்குத் தோன்றியது. அந்த இளைஞர்களை விட அவர்களது பெற்றோர்கள் செய்யும் கற்பனையைக் காண வருகையாளர் பக்கம் பார்வையைச் செலுத்தியபோதுதான்…..

ஆமாம். ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக – அதுவும் இருபது ஆண்டுகள் கழித்து! – அவ்வளவு கால இடைவெளியும் போன இடம் தெரியவில்லை. ஒருமுறை பலமுறை பார்த்தேன். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் சில ஆண்டுகள் பார்த்தப் பழகிய எனது கண்கள் அவளைத் தயக்கமின்றி கண்டுவிட்டன. அவள்தான் என்று கண்டதும் என்னுள் ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

விழா முடிந்து தேசியகீதம் இசைக்கும் போதும்கூட என் கண்கள் என் வசமில்லை. அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தது. வழக்கமாகப்பாடும் அந்தப்பாடலை வாய் எந்திரமாக முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அதற்குமேல் மனம் என் வசமில்லை. பழைய நினைவுகளால் முற்றுகையிடப்பட்டேன். அதனால்தான் விரைவாக தனிமையை நாடினேன்.

ஒளிவீசும் அவளது கண்கள்! அன்பைச் சொரியும் அவளது மருண்ட பார்வை! படபடவென்று அடித்துக் கொள்ளும் அவளது இமைகள்! எதையாவது செய்து கொண்டே இருக்கும் அவளது கைவிரல்கள்! அவைகள் எல்லாம் எங்கே?

கண்ணாடி அணிந்திருந்தாள். ஓ! முதுமையின் ரேகைகள் முகத்தில் படர்கின்ற காலம் உனக்கும் வந்து விட்டதோ! யாருக்கோ உரிமை உடைய அள்மீது முதுமை படிந்தால் நமக்கென்ன? அவளுகு முதுமை வருவதையும் என் மனம் விரும்பவில்லையோ? அவள் யாருக்கு உரிமையுடையவளாக இருந்தாலும் அவள் என்னை வெறுத்தாலும் நான் அவளை வெறுக்கவில்லையே!

ஏறக்குறைய எனக்கும் அவளுக்கும் ஒரே வயதுதான். அதிகம் இருந்தால் ஓரிரண்டு ஆண்டுகள் அவள் இளையவளாக இருக்கலாம். இந்த நாற்பதிலும் அவள் அழகாகவே இருந்தால். அவள் ஏன் என்னைப் பலமுறை பார்க்க வேண்டும் ஏன் விழாவிற்கு வரவேண்டும்ழ ஒருமுறை என்னைப் பார்த்து புன்முறுவல் செய்தது போன்றும் தோன்றியதே! சேச்சே! இருக்காது. அவள் ஏன் என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கவேண்டும்? எனது மனக்கோளாறு – இப்படி எல்லாம் எண்ணத் தோன்றுகிறதே!

கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எனது நினைவுகள் கலைந்தன. இதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிட்டதா? முகத்தை அலம்பிக் கொண்டு கதவைத்திறந்துவிட்டுமீண்டும் சென்று இருக்கையில் அமர்ந்தேன். பணியாள் ஒரு முகவரியைக் கொண்டு வந்து கொடுத்து, அவர்கள் தங்களைப் பார்க்க விரும்புகிறார்கள் என்றான்.

முகவரியில் பெயருக்குப் பின்னால் இருந்த எம்.பி.எஸ் தான் என் கண்ணில் பட்டது. ஆமாம். அந்தப் பட்டம்தான் எங்கள் இருவரையும் பிரித்தது.பெயரோடு சாந்தி வளமனை, கோயமுத்தூர் – 2 என்ற ஐவரி அட்டையைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன். “சிறிது நேரத்திற்கு பிறகு, வரச்சொல் என்றேன்” பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தைச் சந்திக்கின்றோம் அதுவும் தனியாக என்று இனம் புரியாத உணர்வு மேலிட, எதிர்பார்த்து இருந்தேன்.

ஆனால்!…

‘வணக்கம்’ என்ற சொல் கேட்டு நிமிர்ந்தேன். இருபதுக்கும் குறைவாக இளம் பெண் ஒருத்தி என்முன் நின்றாள்.

‘அம்மா உங்களைப பார்த்துவரச் சொன்னார்கள். எந்த நேரம் தங்களுக்கு வசதியாக இருகும்? அவர்கள் தங்களைக் கண்டு பேச விரும்புகிறார்கள்’ என்றாள்.

‘எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அவர்களைச் சந்திப்பதற்கு எத் தனிய நேரம் ஒதுக்க வேண்டுவதில்லை. ஆமாம். உங்களைப் பட்டமளிப்பு விழாவில் பார்த்த மாதிரி இருக்கிறதே!” என்றேன்.

“ஆமாம்.மூன்று முறை தங்களிடம் பரிசு வாங்கனேன்” என்றாள்.

“ஓ! வாழ்த்துக்கள். அமருங்கள்” என்றேன்.

நன்றி கூறி அமர்ந்தாள்.

அந்தப் பெண்ணின் அம்மாவைச் சந்திக்கும் முன் ஏதேதோ கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தேன் . ஆனால் எதுவும் கேட்க இயலவில்லை அம்மா உங்களைப் பற்றிச் சொன்னார் என்று அந்தப் பெண்ணே பேச்சைத் தொடங்கினாள்.

“ஆமாம். உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம்’ என்று பேச்சைத் தொடர்ந்தேன்.

“அம்மா எங்கு பணியாற்றுகிறார்கள்?”

“முதலில் அரசினர் மருத்துவ மனையில் வேலை பார்த்தார்கள். அப்பாவுக்குப் பிறகு அள குரலில் துக்கம் தொனித்தது. ‘இப்பொழுது தனியாக மருத்துவமனை ஏற்படுத்தி அவர்களே நடத்துகிறார்கள். அரசாங்க மருத்துவர் வேலையை விட்டு விட்டார்கள்.”

“அப்பாவுக்குப் பிறகு என்றால்..”

“அவர்கள் எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார்கள், இரண்டு ஆண்டுகள் ஆகின்றன”

“ஏன்? என்ன காரணம்?”

அதற்குள் அவள் கண்கள் கலங்கி இருந்ததை அறிந்து அதற்குமேல் அதுபற்றிப் பேசாமல் பணியாளை அழைத்து இரண்டு கப் காபி கொண்டுவரச் சொன்னேன்.

‘அம்மாவையும் உடன் அழைத்து வந்திருக்கலாமே? நான் பார்க்க இயலாது என்றா கூறிவிடுவேன்” என்று வேறு வகையில் பேச்சை மாற்றினேன்.

“அவர்கள் வரத்தான் இருந்தார்கள். கார் வரை வந்தார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ? என்னைப் போய், எங்கு தங்கி இருக்கிறார்? பார்க்க முடியுமா? எப்போது பார்க்கலாம்? என்று அறிந்துவர சொன்னார்கள்” என்றாள்.

அவள் கலக்கம் கொஞ்சம் குறைந்திருந்தது. காப்பி வந்தது குடித்துக்கொண்டே பேசினோம்.

“இந்தப் படிப்பை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?”

“எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. அப்பாவுக்கு அறவே விருப்பமில்லை. ஆனால் அம்மாதான் கட்டாயப்படுத்தி இதில் சேர்த்தார்கள். மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் சேரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

“அவ்வளவாக விரும்பாத படிப்பில் சேர்ந்ததும் மிகச்சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, பரிசுகள் எல்லாம் பெற்றிருக்கிறீர்களே?”

“எல்லாம் அம்மா கொடுத்த ஆர்வம்தான். அதற்குள் வேறு சிலர் என்னைக் காண வந்துள்ளதுபற்றி அறிவிக்கப்பட்டது. அதனால் நாளை காலை எட்டு மணிக்கு அம்மாவை வரச்சொல்லுங்கள்” என்று அனுப்பி வைத்தேன்.

வந்தவர்களை எல்லாம் பார்த்துப் பேசிக்கொண்டு இருந்தேன். இருக்கிற பதவிகாகச் சிலர் பார்க்க வந்தனர். மரியாதைக்காகச் சிலர் பார்க்க வந்தனர். சிலர் தங்களைப் புதிதாக அறிமுகம் செய்து கொள்ள வந்தனர்.

பதவி, பல சமயங்களில் போலித்தனமான அன்பை வளர்க்கும் கருவியாக இருகிறதே என்று வருந்தினேன். சிலரிடம் அதிகாரியாகவும், சிலரிடம் வழிகாட்டியாகவும் இருந்து பேசினேன்.

அவர்களை எல்லாம் அனுப்பிவிட்டு, இறுதியாகத் தனிமையில் பார்க்க விரும்பிய நபரை உள்ளே வரச் சொன்னேன்.

அவர்…

தொடரும்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை