Home » Articles » உறவுகள் உணர்வுகள்…

 
உறவுகள் உணர்வுகள்…


செலின் சி.ஆர்
Author:

மக்கர் செய்த காரை மெக்கானிக் ஷெட்டில் விட்டுவிட்டு கொஞ்சம் காலாற நடப்போமே என்று சுவாரஸ்மின்றி நடந்து போய்க் கொண்டிருப்போம். குறிப்பிட்ட தெருவுக்குள் நுழைந்தவுடனே, பழக்கமான தெரு போலிருக்கே என்ற ஞாபகம் மின்னலடக்கும். அட நாம் முனபு குடியிருந்த தெரு என்ற நினைப்பு வர, தீவிரமாய் கண்களை அங்குமிங்கும் சுழற்றுவோம்.

இருபது வருடங்களில் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்திருக்கும். இருந்தாலும், அதை சந்துக்கு, நேர் வீடு என்ற கணக்கில் ஒப்பிட்டுப் பார்க்க. அட நம்ம வீடு, வாசல் அப்படியே தானிருக்கிறது. ஆனால், புதியதாய் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள்.

பால்கனியில் கலர்கலராய் குரோட்டன்ஸ் செடிகள். இருபது வயது பெண் ஒருத்தி அங்கு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்தால் பொறாமை பொங்குகிறது. “உனக்கு முன்னாலேயே இது என் வீடுடி” என்று கத்தத்தோன்றுகிறது. இதயத்தில் சுருக்கென வலி. நம் வயது, ஸ்டேட்டஸ் எல்லாவற்றையும் மீறி கண்களில் நீர் துளிர்க்கிறது.

காரணம், அந்த வீடு வெறும் கட்டடம் அல்ல. நம் குழந்தைப் பருவத்தோடு பின்னிப் பிணைந்த நினைவுச் சின்னம். பல வருடங்குக்குப் பிறகு அந்த வீட்டைப் பார்க்கும்போது சின்ன வயதில் வீட்டு வாசலில் பட்டாசு வெட்டித்தது. ரிக்ஷாவில் பள்ளிக்குச் சென்றது, திருமணக் கோலத்தில் நின்ற அக்காவுக்கு ஆரத்தி எடுத்தது. பால்கனியில் லவ்பேர்ட்ஸ் வளர்த்தது என வரிசையாய் பழைய நினைவுகள் அலை மோதும்.

வீட்டைக் காலிசெய்வது, வேதனை மிகுந்த, வலிமிகுந்த அனுபவம். ஒவ்வொரு பொருளாய் மூட்டைகட்டும் போது துக்கம் நெஞ்சை அடைக்கும். இந்த மூலைல உட்கார்ந்து படிச்சாதானே என் தலைக்குள்ள ஏறும். ஐயோ நான் பார்த்து பார்த்து போட்ட அரிசி மாவுக்கோலம் ஆச்சே என மனசு அடித்துக் கொள்ளும்.

பெருபம்பாலானோர், வீட்டைக் காலி செய்யும்போது வீட்டுக்காரர்களிடம் சண்டை போடுவதெல்லாம், அந்த வீட்டின் மீதுள்ள ஒட்டுதலை மாற்ற, மனம் தனக்குத்தானே செய்து கொள்ளும ஒரு சமநிலையாக்கல், முயற்சிதான். வீட்டைக் காலி செய்த கையோடு வேலை செய்த களைப்பு என காரணம் சொன்னாலும் உண்மையான காரணம், வீட்டுடனிருந்த உறவு முற்று பெற்றதால் எழுந்த வேதனையின் வெளிப்பாடுதான்.

வாடகை வீட்டின் கதை இப்படியிருக்க ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சொந்தவீடு கனவு சொல்லி மாளாது.

“நான் வளர்ந்து பெரியவனாகி, நிறைய காசு சம்பாதிகச்சு பெரிய வீடு கட்டுவேனாம். அதுல நான், நீ, அம்மா, அப்பா எல்லோரும் ஜாலியா இருப்போமாம்”. என மழலைக்குரலில் சபதமெடுப்பார்கள். நம் குழந்தைகள். தனக்கென்ற ஒரு இடம் வேண்டும் என்ற தாகம் நமக்கு கருவிலேயே உருவாகிவிடுகிறது. இது பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடு!

A house is built with
Bricks and Stones
But a home is built with
Hearts full of love

ஆம். இல்லம் எனபது வெறும் செங்கற்களாலும், சிமெண்ட்டாலும் கட்டப்பட்டதல்ல. இதயங்களாலும், அன்பாலும் உருவாக்கப்பட்டது.” என் உயிரே போனாலும் சரி நான் கட்டிய இந்த வீட்டை இடிக்க மாட்டேன் இந்த வீடு என் இரத்தத்தாலும், தசையாலும் கட்டப்பட்டது” என்று வயதானவர்கள்வபேசும்போது “என்ன டயலாக்காம் எல்லாம் இந்த மகா சீரியல் பார்த்துட்டு புலம்பற கேஸ்” என்று கிண்டல் செய்வோம். ஆனால், அந்த உணர்வுகள் பொய் அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

ஒற்றை குரோமோசோம் இன்னொன்றோடு இணைந்து கருவாகி, அந்தப் புள்ளி கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகி, குட்டி குட்டி, கைகால்கள் முளைத்து, பத்து மாதங்கள் கித்து, அப்ப்பா! ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட மசக்கை பிரச்சனையோ, மின்னல் வலியோ அவருக்கு நினைவிலிருக்காது. அனத்தையும் மறந்து அந்த ரோஜாப்பூ குவியலை அள்ளியெடுப்பாள்.

அதே போல்தான் ஒரு வீடு கட்டத் துவங்கும்போது பல கற்பனைகளோடும், கனவுகளோடும் ஆரம்பிக்கும் ஒருவர், நாளுக்கு நாள் பணப் பிரச்சனை, வேலையாட்கள் ஒத்துழைக்காததால் ஏற்படும் தலைவலி, திடீர் மழையால் தடைபடும் வேலை. நஷ்டம் என ஆயிரத்தெட்டு தடைகளையும், வலிகளையும் சந்தித்து இறுதியில்தான் தனது கனவு இல்லத்தைப் படைக்கிறார்.

“வீடு கட்டி முடிப்பதென்பது ஒரு யாகம்!”

“ஒரு பிரசவம்!”

வெயிலில் காய்ந்தாலும், மழையில் நனைந்தாலும் அடைக்கலம் புக நமக்கென்று ஒரு வீடு இருக்கிறது. என்ற நினைப்பே எவ்வளவு பெரிய பாதுகாப்பு?

வேலை பார்க்கும்இடதில் பிரச்சனை, கடன்காரனின் துரத்தல், என மனதிற்குள் ஆயிரம் போராட்டங்கள் இருப்பினும், இளைப்பாற நம் வீடு இருக்கிறது என்ற எண்ணம் எவ்வளவு பெரிய நம்பிக்கை, ஆறுதல்?

நிதமும்தான் சுவாசிக்கிறோம். நித்தமும் தான் இதயம் துடிக்கிறது? ஆனால் அதை நாம் உணர்வதில்லை. என்றாவது ஒருநாள் மூசுப் பிரச்சனை ஏற்பட்டாலோ, இதயம் வலித்தாலோ தான். இத்தனை நாட்கள் இவை சரியாய் இயங்கினவே என்ற நினைப்பு தோன்றும்.

வீட்டைப் பொறுத்தமட்டிலும் கூட இதே கதைதான் நமக்கென்று ஒரு வீடு இருக்கிறது என்ற சந்தோஷத்தை நாம் அனுபிப்பதேயில்லை. அதைப்பற்றிய விழிப்புணர்வே இல்லாமல், சதா அடுத்த வீட்டைப் பார்த்து பொறாமைப் பட்டுக்கொண்டிருக்கிறோம்.

டபுள் பெட்ரூமா, டிரிபிள் பெட்ரூமா என்பதைப் பொறுத்து சந்தோஷமில்லை. அறைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சந்தோஷம் சந்தோஷம் அதிகரிக்கப் போவதில்லை. தரையின் பளபளப்புக் கூடக்க்டூ நம் உடலில் முனிமினுப்பு ஏறப்போவதில்லை. இருப்பது ஒரு அறை என்றாலும் சுத்தமாக,மனதில் அன்போடு, வீடும் நம் குடுமபத்தில் ஒரு உறுப்பினர்தான் என்ற பாசத்தோடு பராமரித்தால், தானாக மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும்.

“வீடே கோயில்” என்று அந்தக் காலத்தில் சும்மா சொல்லவில்லை. இறைவன் குடியிருக்கும் கோயிலை சாணமிட்டு மெழுகி, கோலமிட்டு, வாசனைப் பொருட்களை எரித்து பரமாரிக்கிறோம். சரி, அதேபோல்தானே, நம் உடலும் ஆன்மாவும் ஒருங்கேயிருக்கும் வீட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அழுக்குத் துணிகள் அடங்கிய மூட்டை ஒரு பக்கம். பழைய பாத்திரங்கள் ஒரு பக்கம் என அலட்சியமாய் குப்பைகளைப் பரப்பி வைத்தால், துர்நாற்றம் மட்டும் எழாது. அந்தச் சூழல் நம் மனதையே அழுக்காக்கிவிடும்.

நான்கு சுவர்களும் ஒரு கூரையும் சேர்ந்ததுதான் வீடு என்ற வரையற வைத்திருந்தால், அதைக் கொஞ்சம் மாறிக் கொள்ளுங்கள். முன்பே சொன்னதுபோல் “வீடு” என்றால் உணர்வுகள். அப்படியெனில் தெருவில் படுத்துறங்குபவரகளுக்கு?

பிளாட்ஃபார்மில் படுப்பவர்கள்கூட பெரும்பாலும் ஒரே இடத்தில்தான் தொடர்ந்து படுப்பார்கள். அவர்களுடைய உணர்வுகளும், வாழ்வும் பின்னிப் பிணைந்த இடம். அந்த எண்ணங்கள்தான் அவர்களுக்கு இந்த இடம் நம் வீடு என்ற திருப்தியைத் தருகிறது. சாலையையே வாசலாய் நினைப்பார்கள். நாம்தான் “ஐயோ இவர்களுக்கு வீடில்லையே” என்று பரிதாபமாய் பார்ப்போமே யொழிய, அவர்களுக்கு அந்தக் கவலை இருக்காது. காரணம் – அதுதான் அவர்கள் வீடு.

“வீடு” என்பது ஒரு கன்செப்ட் ஒரு உணர்வு, என்பது இவர்களை உற்று கவனித்தாலே (Observe) நமக்குப் புரியும்.

அதேபோல்தான், சில குறிப்பிட்ட இடங்களுக்கும், நமக்கும் உள்ள தொடர்பும் ஒவ்வொரு ஊரிலும் சில குறிப்பிட்ட இடங்கள் நம் மனதை ஈர்க்கும். மீண்டும் மீண்டும் அங்கே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

உதாரணமாக சென்னையில் பெசன்ட் நகர் பகுதியைச் சொல்லலாம். மரங்களடர்ந்த அந்த பகுதியில் நடந்து செல்லும்போதே, ஒரு வித்தியாசமான, சந்தோஷமான உணர்வு தோன்றும். காரணம், அந்தப் பகுதி பல ஞானிகள் வாழ்ந்த, அற்புதமான இடம். அன்னிபெசன்ட், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்ற யோகிகளின் Vibration தான் நமக்கும் அத்தகைய மனநிலையை ஏற்படுத்துகிறது.

அதேபோல், பட்டனப்பாக்கம்கடற்கரைப் பகுதிக்குச் செல்லும்போது ஒரு வித ஆன்மிக உணர்வு ஏற்படும்.

“எங்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட்டமாக வசிக்கிறார்களோ, அவை சாதாரண இடங்களல்ல ஞானிகள் வாழ்ந்த, ஆசீர்வதிக்கப்பட்ட பகுதிகள், எண்ணங்கள். இது உண்மைதான் என்பது மதுரை, ராமேஸ்வரம் ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது புரியும்.

உறவுகள் மனிதர்களோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. வீடு, நிலம், கடல் என அகல பரப்புகளோடும் தொடர்வதுதான். இவற்றோடான உறவுகளும், உணர்வுகளும் தொடர்ந்து வரும் – ஜென்ம ஜென்மங்களாய்!

– தொடரும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை