Home » Articles » சிரிப்போம் சிறப்போம்

 
சிரிப்போம் சிறப்போம்


ஞனசம்பந்தம் கு
Author:

“பொங்கல் வரப்போகுது. வீட்டை சுத்தப்படுத்தணும். பொங்கல் வைக்கணும். கரும்பு வாங்கணும், ஒட்டடை அடிக்கணும், இன்னிக்கு எங்கேயும் போகாதீங்க” என்று மனைவி சொன்னதும் எனக்கு குளிர்காய்ச்சலே வந்தது. காரணம், எங்கள் வீடு பெரிய வீடு, பழைய பொருட்கள் ரொம்ப அதிகம்.

வீட்டை இரண்டு பகுதிகளாகப் பிரித்து முன்பாதியை நானும்,பின் பாதியைக் குழந்தைகளும் ஒட்டனை அடிக்கத் தொடங்கினோம்.

“தடால்” என்று ஏதோ விழுந்து நொறுக்கியது. நான் “என்ன” என்று கேட்க “ஒன்றுமில்லை” ஒருபாத்திரம்” என்றான் பையன்.

“சிலிங்” என்றொரு இனிய சத்தம், “ஒன்றுமில்லை ஒரு கண்ணாடி கிளாஸ்” என்றேன் நான்.

“டாமால்” இப்போது என் பெண். “ஒன்றுமில்லை பழைய வால்கிளாக்தான்” என்றாள்.

அப்போது பார்த்து என் மனைவி. மணி பார்த்துச் சொல்லுமாறு என் பையனைக் கேட்க அவன் பேசாமல் இருக்க அவன் விடாமல், “பெரிய முள் எங்க இருக்கு” சின்னமுள் எங்க இருக்கு?” என்று கேட்க…

பையன் “பெரியமுள் வாசல்படியிலும் சின்னமுள் ஜன்னல்லேயும் இருக்கு”. என்றான். அதோடு சரி எங்களை யாரும் ஒரு வேலையும் சொல்வதில்லை. நாங்கள் பாட்டுக்குத் திரிந்தோம். வீடு சுத்தமானது.

அடுத்து, வீடு ஒதுங்க வைத்தோம். அப்போது பரீட்சைப்பேப்பர் ஒன்று என் கையில் சிக்கியது. அதில் கணக்கில்10க்கு 2 என்று இருக்க என் கண்கள் சிவந்தன.

என் பையனைக் கூப்பிட்டு என்ன படிக்கிறாய் நீ! இங்க பார் உன் லட்சணத்தை நீ எப்படிப் பெரியவனாக வருவாய்” என்று பயங்கரமாய்ச் சத்தம் போட்டு… “எங்கிட்டே காட்டக் கூடாதுன்னு ஒளிச்சுவச்சு இருக்கிற இல்லையா?” என்று மிரட்டிக்கேட்டேன். அவன் நடுங்கிப்போய் பேசாமல் இருந்தான்.

சத்தம் கேட்டு வந்த என் மனைவி “எதுக்கு பிள்ளையை மிரட்டுறீங்க” எனக் கேட்டு பேப்பரை வாங்கிப் பார்த்தாள்.

“நீயும் சேர்ந்து மறைச்சிருக்கே இல்லை.. இவன் படிக்கிற லட்சணத்தப் பாரு” என்று குதித்தேன்.

“இதென்ன… உங்கள பேர்ல போட்டிருக்கு, கஷ்டகாலம். இது நீங்க படிக்கிறப்ப வாங்கின மார்க். என்னடா.. ரொம்ப몮 பழசா இருக்கேன்னு பார்த்தேன். நீங்க.. கொழந்தைய மிரட்டுறீங்க இல்லயா?” அவள் போட்ட சத்தத்தில் நான் நடுங்கிப் போனேன்.

அதிலிருந்து பொங்கல் வருகிறது வீடு சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்றாலே எனக்குப் பிடிப்பதில்லை. இந்த மாதிரி விசயத்தில் நீங்களும் கவனமா இருக்கணும். எக்குத் தப்பா சிக்கிடக்கூடாது.

அடுத்த நாங்கள் கரும்பு வாங்கப் போனோம். “கவனமாய் பார்த்து வாங்கிட்டு வாங்க நல்ல கரும்பா இருக்கட்டும்” அசரீரியாக உள்ளே இருந்து சத்தம் கேட்டது.

நானும் பையனும் கரும்பு விற்கும் இடத்திற்குப் போனோம். “வாங்க வாங்க சார் வாங்க போன வருஷம் பார்த்தது. டேய்.. சாருக்கு நல்ல கரும்பா எடு..”.

நான் பூரித்துப் போனேன். எங்கு போனாலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். போன வருடம் பார்த்தை அவன் நினைவில் வைத்திருக்கிறானே என்று மகிழ்ச்சி…

“சார் அப்புறம் அந்தப் பொண்ணு என்ன ஆச்சு?”

“எந்தப் பொண்ணு?”

“அந்த வாளியத் திருடிட்டுப் போச்சே”

“எந்த வாளி?”

“பட்டாணிக் கடையில இருந்த வாளி”

“எந்தப் பட்டாணிக்கடை?”

அவன் நொந்துப் போனான்.

“சார் தெரியாம கேட்டுட்டேன். இந்தாங்க கரும்பு.. ஒண்ணு இரண்டு ரூபாய்…”

“ரெண்டு ரூபாயா? கொஞ்சம் கொறச்சுக் குடுப்பா”.

“சரி” அவன் கரும்பை வெட்டிப்பாதியாகக் கொடுத்தான்.

“நான் வெலையக் குறைக்கக் சொன்னா நீ கரும்பைக் குறைக்கிறீயே”.

“சரி சார், தெரிஞ்சு ஆளாப் போயிட்ட… ஒரு கரும்பு ரெண்டு, ரூபாயும், ரெண்டா வாங்கிட்டா அஞ்சு ரூபாய்” என்றான்.

“அப்படி வா வழிக்கு” என்று சந்தோசமாக வாங்கிக்கொண்டு வந்தேன்.

ஈடிற்கு வந்ததும் என் மனைவி “ஆளைக்க மறுநாள் மாட்டுப் பொங்கள் லாருங்க.. அதனால் இதையும் கன்னுக்குட்டியைய்யும் ஆத்துகு ஒஓட்டிட்டுப் போய்ட்டு வாங்க்” என்று சொன்னாள்.

“ஏன், முருகப்பன் என்ன ஆனான்?”

“அவன், பொங்கலுக்கு ஊருக்கு போயிட்டான்”

எங்கள் வீட்டு மாடு மிகவும் பாசமானது. யாரையும் கூசாமல் முட்டும். எந்த மாட்டுடனும் வம்பு இழுக்காமல் வராது. முருகப்பன் இருந்தால்தான் அதற்கு சரிப்பட்டு வரும்.

“நாளைக்கு மறுநாள் தானே மாட்டுப் பொங்கல் நாளைக்குப் போனால் என்னழ்ழ” சோகத்தோடு கேட்டேன்.

“சார் வாங்க, எங்க வீட்டு மாட்டோட ஆத்துக்குப் போவோம்” என்று கூப்பிட்டார். அடுத்த வீட்டு நண்பர். சரி அவரே மாடு பிடித்துப் போகும் போது நாம் போனால் என்ன?

ரெண்டு பேரும் கிளம்பினோம்.

கயிற்றைக் கழற்றிக் கையில் பிடித்ததும் எங்கள்மாடு பாய்ந்து ஓடத் தொடங்கியது. நான் அதன் பின்னால் ட இதைக்கண்ட அடுத்த வீட்டுக்காரனின் மாடு எதிர்திசையில் ஓட, அவர் அத்திசையில் ஓடினார். ரெண்டுபேரும் எதிரெதிர்திசையில் பறந்தோம்.

எங்கள் மாடு முதலில் ஒரு வீட்டிற்குள் புகுந்து நேராக ஓடி அந்த வீட்டுக் கொல்லைப்புறும் ஓடியது. நானும் அதேபோல் செய்தேன். வீட்டிற்குச் சொந்தக்காரர்கள் எட்டுத் திசையிலும் ஓடினார்கள்.

எங்கள் மாட்டு யாரையும் லட்சியம் செய்யாமல் ஓடி ஆறாவது தெருவில் அடுத்த வீட்டுக்காரனின்மாட்டை நேருக்கு நேர் சந்தித்து மோதி, தெருப்புழுதியைக் கிளப்பியது.

மாடுகள் ஒருபுறம் சண்டைபோட, நாங்கள் தனித்தனியாக ஒருவரை ஒருவர் திட்டினோம்.

“எதையும் கண்டிச்சு வளர்க்கணும் சார், படிச்சிருந்தாப் போதுமா?”

“யோவ் மாடு படிக்கவே இல்லைய்யா. உம்மாட்டை அடிச்சு வளர்க்கணும் நீ.. அடியாத மாடு படியாது” இது நான்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது ரெண்டு மாடுகளும் எங்களை நோக்கி வர, நாங்கள் சண்டையைத் தற்காலிமாக நிறுத்தி விட்டு ஓடத் தொடங்கினோம்.

நான் அன்றைக்கு எங்கள் ஊரில் இருந்த எல்லாத்தெருக்களையும் அலசி, ஆத்துக்குப் போய், தோப்புக்குப் போய் மாட்டைக்காணாமல் எரிச்சலோடு வீட்டிற்கு வந்த போது… என் மகன் எங்கள் மாட்டைப் பிடித்து அதன் கழுஇத்தைக் தடவிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் இந்த மாடும் முட்டுமா என்பது போல் பார்த்தது.

“நான்தான் மாட்டை ஆத்துக்குக் கூட்டிப் போய் குளிக்க வச்சேன்” என்றான் என் மகன பெருமையோடு.

அடுத்த வீட்டுக்காரர், அவர் மாட்டைத்தேடி இன்னும் ஓடிக் கொண்டிருந்ததது எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆக, வீடு வெள்ளையடித்தாகி விட்டது. மாடும் ரெடியாகிவிட்டது. பொங்கள் வர வேண்டியதுதான் பாக்கி.

விடிந்தது. பொங்கல் வந்தது. எங்கும் மங்கள இசை. தமிழர் திருநாள். வீட்டிற்கு வந்த நண்பர்களை வரவேற்றுப் பொங்களும் கரும்பும் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தேன்.

“எந்த வேலையைச் செய்தாலும் அதில் ஒரு ஒழுங்கு இருக்கணும். சுத்தமாகச் செய்யணும். அதிலும் இகுறிப்பா எதையும் எங்கையால செய்தாத்தான் எனக்குத் திருப்தியா இருக்கும்” என்று நான் கூற, பொங்கள் சாப்பிட்ட நண்பர்களும் ஆமோதித்தார்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்