Home » Articles » வாடிக்கையாளரே மன்னர்

 
வாடிக்கையாளரே மன்னர்


கருணாகரன் ஆர்
Author:

நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டத்தைக் குறைக்கவும், நாட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி சுய தொழில்கள் மூலம் தனி மனிதர்களை வளப்படுத்தி நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றவும் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தொழில் துவங்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தொழில் துவங்க பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துகின்றன.

புதிதாகத் தொழில் துவங்குபவர்களுக்கு அரசு தரப்பிலும், பல தனியார் நிறுவனங்களும் தொழில் முனைவோர் பயற்சிகளை நடத்தி வருகின்றன. இது போன்ற பல பயிற்சிகளில் பயிற்சி அளிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

பயிற்சி பெறுவோர் பலரும் பொதுவாகக் கேட்கும் கேள்வி, “வாடிக்கையாளரைக் கவருவது எப்படி?” என்பதுதான்.

ஒவ்வொரு மனிதனிடமும் அந்த காந்த சக்தி உள்ளது. அதனை அடையாளம் கண்டு கொள்வதில்தான் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுகிறான்.

ஒரு வாடிக்கையாளரை கண்டுபிடிக்க பல மாதங்களாகும், வாடிக்கையாளரை இழக்க ஒரு வினாடி போதும்.

(It takes months to find a customer: it takes seconds to lose a customer).

என்ன தொழில் செய்கிறீர்கள்? என்ன படித்திருக்கிறீர்கள்? என்பதெல்லாம் வாடிக்கையாளரிடம் செல்லாது.

நீங்கள் செய்யும் தொழில் ஒரு பெரிய நிறுவனத்திற்கு மூலப் பொருட்களாக இருக்கலாம். உதிரி பாகங்களாக இருக்கலாம். அல்லது ஏதாவதொரு சேவையாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்களுடைய சேவையில் அன்பும், பண்பும், நேர்மையும் கலந்திருக்க வேண்டும்.

வீட்டு வேலைக்கு ஒரு ஆள் வைத்தால்கூட அவர்கள் செய்யும் வேலையை விட அவர்களுடைய நடவடிக்கை, பேச்சு போன்றவற்றை வைத்துதான் அடுத்தவர்களுக்கு நாம் பரிந்துரைப்போம். அப்படியானால் நாம் செய்யும் தொழிலுக்குப் பரிந்துரை வேண்டாமா?

நண்பர்கள்:

வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். இப்போதெல்லாம் அடுக்கு மாடி கட்டிடங்கள் பெருகிவிட்டன. எதிர் வீட்டில் யார் இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கூட தெரியாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நண்பர்கள் குழாம் இல்லை என்றால் எதைச் சாதிக்க முடியும்?

நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, உங்களது சேவையை யாருக்கு வழங்குவீர்கள்?குறிப்பாக அன்றாட உபயோகிக்கக்கூடியபொருட்களான சோப்பு, மசாலா வகைகள், நீலம், பெனாயில், ஊறுகாய் வகைகள், அப்பளம் போன்ற பொருட்களை அதிக முதலீட்டில்லாமல் வீட்டிலேயே கூட தயாரித்து பலர் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

இவர்களெல்லாம் பெரிய நிறுவனங்களின தொழில் யுத்திகளுக்கு எப்படி தாக்குப்பிடிப்பது? பெரிய நிறுவனங்கள் விளம்பர யுத்திகளினாலும், பணபலத்தாலும் புதிய பொருள் சந்தையில் அறிமுகப்படுத்தும்போது டெஸ்ட் மார்கட்டிங அல்லது சர்வே செய்து பார்த்து, தங்களது தயாரிப்புகளுக்கு நுகர்வோரிடையே உள்ள வரவேற்பைத் தெரிந்து செயல்படுவார்கள்.

அவர்களுக்கு வியாபார யுத்திகளும், விளம்பரங்களும், நாடு முழுதும் பரந்து விரிந்து கிடக்கும். அதற்கு சில்லரைக் கடைகளும் துணைபுரியும். ஆனால் ஒரு தனிமனிதன், தானே சிரமப்பட்டு தயாரித்த பொருளை யாரிடம் டெஸ்ட் மார்க்கெட்டிங செய்வது?

இன்று மிகச்சிறந்த தொழில் அதிபராக விளங்கும் “நிர்மா” புகழ் கர்ஸன் பாய் படேல் இதற்கு ஒரு பெரிய உதாரணம்.

அவர் ஒரு நிறுவனத்தில் கெமிஸ்ட் ஆக வேலை பார்த்து வந்தார். சுய தொழில் செய்ய வேண்டுமென எண்ணம் வந்தது. தமக்குத்தெரிந்த, அனுபவமுள்ள துறையையே தேர்ந்தெடுத்தார்.

அச்சமயம், நிறைய பெண்கள் நமது நாட்டில் வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தார்கள். கையில் சோப்புப்போட்டு துணி துவப்பதைவிட சுலபமான ஒரு வழி தேவைப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் கிடைத்ததோ சர்ப் பவுடர் ஒன்றுதான். அதுவும் மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்டுத்தக் கூடியப்பொருளாக இருந்தது. கர்ஸன் பாய் படேல் அதற்கு ஒரு விடையளிக்க முற்பட்டார்.

அவர் தனது வீட்டிலேயே சோப்பு பவுடரை சிறிய அளவில் தயாரிக்க ஆரம்பித்தார். தான் தாயாரித்த பவுடரை முதலில் தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று தான் எடுத்துச் சென்று குறைந்த விலையில் விற்பனை செய்தார். அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்தார். அதற்கேற்ப சில மாற்றங்களையும் செய்து தேவையான அளவில் பாக்கெட்டுக்களில் அடைத்து விற்பனை செய்தார்.

முதலில் தான் இருந்த இடத்தில் விற்பனை, பின்பு அந்த தாலுகா, மாவட்டம், பின்னர் மாநிலம் அதன்பின் அகில இந்தியா என தனது தயாரிப்பிற்கு பெரிய சந்தையை ஏற்படுத்திக் கொண்டார். வெற்றி கண்டார். இன்று பல கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரர். அவரது வெற்றிக்கு காரணம் நட்பும், நண்பர்களும்!

இன்று பல இளைஞர்கள் வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் உடனே பெரிய தொழில் அதிபராகிவிட வேண்டும், கோடிகளைப் பார்க்க வேண்டும். கார், பங்களா வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் வெற்றி வியர்வையை சிந்தித்தான் வளர வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடுகிறார்கள்.

இரண்டாவதாக, தயாரிக்கத் துவங்கிய உடனேயே மாநில அளவில் விற்பனை செய்ய வேண்டும். அகில இந்திய அளவில் விற்பனை செய்ய வேண்டும். என நினைத்து விற்பனை பிரதிநிதிகளை நியமிக்கிறார்கள். பின்னர் – தோல்வியைத் தழுவுகிறார்கள். ஆனால் பெரிய நிறுவனங்களில் உள்ளதுபோல் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொள்ள தனித்தனிப் பிரிவுகளில்லை. எல்லாம் தனிமனிதனாக நின்று கவனிக்க வேண்டும்.

நீங்கள்தான் முதலாளி, முதன்மை நிர்வாகி, நிதி நிர்வாகி, விற்பனை நிர்வாகி, பிரதிநிதி, செய்தித் தொடர்பாளர் என எல்லா நிலைகளிலும் பரிணமிக்க வேண்டும். 24 மணி நேரமும், சுழன்று கொண்டே இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் நேரமில்லை, நேரமில்லை எனக் கூறும் கூட்டத்திலிருந்து தனித்து நிற்க வேண்டும்.

புகார்களா? ஆலோசனையா?

வாடிக்கையாளர்கள் தரும் புகார்களை புகார்களெனக் கொள்ளாமல் ஒரு ஆலோசனையாக ஏற்றுக் கொண்டு உடனியாக செயலில் இறங்க வேண்டும்.

புகார் கொடுப்பவர் பணக்காரரா, ஏழையா, படித்தவரா, படிக்காதவரா, சிறியதா, பெரியதா, நிறைய பணம் கொடுத்து வாங்கிய பொருளா அல்லது குறைந்த விலை பொருளா என்றெல்லாம் தராதரம் பார்க்க்கூடாது. அதில் இலாப, நஷ்ட கணக்கிற்கு இடமளிக்க கூடாது. வாடிக்கையாளர் முழுத் திருப்தியடையும் வகையில் செயல்பட வேண்டும்.

இப்பொழுதெல்லாம் நுகர்வோர் அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அவர்களின் உரிமை என்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நுகர்வோர் விழிப்புணர்ச்சி தொழிலுக்கு சிறந்தது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது நிறைய நுகர்வோர் அமைப்புகள் இருக்கின்றன. நுகர்வோர் நீதி மன்றங்கள் உள்ளன. புகார்களை கவனமாக கையாளவில்லையெனில் நீதி மன்றங்கள் செல்ல வேண்டியதும் ஏற்படலாம்.

உங்கள் தயாரிப்பில் நம்பிக்கை இருந்தால் அப்பொருளை மாற்றிக் கொடுக்கவும் தயங்காதீர்கள். இந்தக் கருத்தைப் பல தொழில் முனைவோர் ஏற்பதில்லை. அவர்கள் கூறும் காரணம் புகார் கூறம் வாடிக்கையாளர்களுக்குப் பொருளை மாற்றிக் கொடுத்தாலோ, அல்லது பணத்தைத் திருப்பிக் கொடுத்தாலோ எல்லோரும் அப்படியே செய்வார்கள்” என்று இது தேவையற்ற அச்சம்.

எத்தனை நுகர்வோர் வாங்கிய பொருளைத் திருப்பிக் கொடுத்துக் காசு கேட்பார்கள்? அல்லது பொருளின் தரம் குறித்து புகார் செய்வார்கள்? நூற்றில் ஒன்றோ இரண்டோ? அது இருக்கத்தான் வேண்டும் தொழில் வளர்ச்சி பெற, நாம் செய்வதெல்லாம் சரி என்ற எண்ணம் வளர்ந்து விட்டால் மாற்றத்திற்கு இடமில்லை!

சமீபத்தில் ஒரு நிறுவனம் நடத்திய மேலாண்மை முன்னேற்றப் பயிலரங்கில் ஒன்றில் கலந்து கொண்டு பேசினேன். அப்போது ஒரு அதிகாரி சொன்ன கருத்து இது. அவர்களது தயாரிப்பான துணி துவைக்கும் இயந்திரங்கள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதாகவும், வட மாநிலங்களிலிருந்து நிறைய புகார்கள் வந்ததால், தங்களது பொறியியல் வல்லுனர்களை அனுப்பி சோதிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது ஒரு அதிர்ச்சியான உண்மை வெளியாகியிருக்கிறது.

அதாவது, துணி துவைக்கும் இயந்திரங்கள் வாங்கி சிலர் குளிர்பானக் கடைகளில் லஸ்ஸி தயாரித்து விற்பதற்குப் பயன்படுதியிருக்கிறார்கள். அப்படி லஸ்ஸி தயாரிக்கும் போது வெண்ணை போன்ற பொருட்கள் இயந்திரங்களில் அடைத்து சில பிரச்சினகள் ஏற்படுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

துணி துவைக்க தயாரிக்கப்பட்ட இயந்திரம் லஸ்ஸி தயாரிக்கவும் பயன்படுத்தலாம் என்ற உண்மை விளங்கியிருக்கிறது. நிர்வாகத்திற்கு! அந்த இயந்திரங்களில் சில மாறுபாடுகளைச் செய்தால் லஸ்ஸி தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாமே!

வாடிக்கையாளருக்கு முக்கியத்துவம் அளித்தல்

சாதாரணப் பெட்டிக்கடையிலிருந்து மிகப்பெரிய தொழில் நடத்துவதுவரை அனைத்துத் தொழில்களும், வியாபாரம் வாடிக்கையாளர்களையே நம்பியிருக்கிறது.

வங்கிகளிளெல்லாம் மகாத்மா காந்தி அவர்களின் வாசகத்தை எழுதி வைத்திருப்பார்கள். “வாடிக்கையாளர் என்பவர் உங்களுக்கு உபத்திரம் கொடுப்பவர் அல்ல, அவர்தான் உங்கள் பணிக்கே காரணம்” என்று. ஆனால் அங்கு சென்றால் நடப்பதோ வேறு. அங்கு செல்லும் வாடிக்கையாளர்களை வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் உபத்திரம் செய்ய வந்திருப்பதாகத்தான் கருதுகிறார்கள்.

வாடிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. பேன்ட் போட்டவனா வேஷ்டி அணிந்தவனா, தமிழில் பேசுகிறானா அல்லது ஆங்கிலத்தில் பேசுகிறானா என்பதைப் பொருத்ததுதான் வாடிக்கையாளருக்கு மதிப்பும் தரப்படும்.

இப்பொழுது வங்கித்துறையில் பலமாறுதல்கள் வந்து விட்டன. புது தனியார் வங்கிகளில் பணமெடுக்க அல்லது செலுத்த உரிய காசோலையோ அல்லது படிவங்களோ பூர்த்தி செய்து கொடுத்தால் யாரிடம் கொடுக்கிறோமோ அதே ஊழியர் உங்களுக்கு பணத்தைக் கொடுத்து ஓரிரு நிமடங்களில் அனுப்பி விடுகிறார். ஆனால் பொதுத்துறை வங்கிகளில் பாருங்கள் பணம் எடுக்க காசோலை கொடுத்தால் டோக்கன் கொடுத்து உட்கார வைத்து விடுகிறார்கள்.

இந்த இரு நிறுனங்களிலும் வேலை பார்ப்பவர்கள் இந்தியர்கள்தான். இந்த நாட்டு வங்கிகள்தான். முன்னவர்களால் எப்படி முடிகிறது. பின்னவர்களால் ஏன் சிறப்பான சேவை அளிக்க இயலவில்லை.எப்படிப் பார்க்கிறீர்களோ? அப்படித்தான் உங்கள் வாழ்க்கையின் உயரம் இருக்கும்.

ஒரு பிரபல ஜவுளிக்கடையில் தீபாவளிக்கு துணி எடுக்க, குடும்பத்துடன் சென்றோம். கடைக்குள் சென்று அனைத்துப் பிரிவுகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு துணி எடுப்போம் என்ற முடிவில் ஒரு பாலிதீன் பையில் அடைக்கப்படிருந்த துணி ஒன்றை எடுத்துப் பார்க்க முயன்றோம்.

அப்போது விற்பனைக் கௌண்டரிலிருந்த விற்பனைப் பெண் “நீங்கள் அதை வாங்குவதாய் இருந்தால் பிரித்துப் பாருங்கள் இல்லையென்றால் பிரிக்கக்கூடாது” என்று அச்சுறுத்தும் குரலில் மிகக்கண்டிப்பாகக் கூறினார். உடனே அந்க் கடையை விட்டு வெளியேறி விட்டோம்.

எனது மனைவி “கடை என்றால் அப்படித்தான் இருக்கும். வாங்க பார்க்கலாம்” என்றார். “அந்தக் கடையிலிருக்கும் விலையுயர்ந்த ஜவுளி ரகங்களை இலவசமாகக் கொடுப்பதாய் இருந்தால் கூட அது எனக்கு வேண்டாம். எந்தக் கடையில் மதிப்புக் கொடுக்கிறார்களோ அங்கு இதைவிட விலை அதிகமாக இருந்தாலும் வாங்கிக் கொள்வோம்” எனக் கூறி சென்றுவிட்டோம்.

இந்த இடத்தில் மரியாதை என்றால், வரும் வாடிக்கையாளர்களையெல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று, குளிர்பானங்கள் கொடுத்து மதிப்பு தரவேண்டுமென்பதில்லை.

அதேபோல் மற்றொரு கடையில் ‘எனது மகளுடன் அதிகவிலை கொடுத்து சோளி ஒன்று வாங்கினேன். மிகவும் நன்றாக ஜரிகை வேலைப்பாடுகளுடன் அழகாக இருந்தது. ஜரிகை வேலைப்பாடுகளுக்கெல்லாம் உத்திரவாம் கொடுத்தனர். எனவே, வாங்கிச்சென்றோம். ஆனால் ஒருமுறை உடுத்தி துவைத்ததும் ஜரிகைகளெல்லாம் பிரிந்து சுருக்கம் ஏற்பட்டுவிட்டது. உடனே அந்தக் கடைக்கு எடுத்துச் சென்றோம்.

கடையிலிருந்த விற்னைப் பிரதிநிதிகள், நீங்கள் துவைத்தது சரியில்லை. இயந்திரத்தில் துவைத்திருப்பீர் என்று எங்களை சந்தேகித்தனர். நான் கூறினேன் “அதிகவிலை கொடுத்து இந்தத் துணையிஐ வாங்கியிருக்கிறேன். அதை எப்படி துவைப்பது, எப்படி பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியாதா? என்று பின்பு கடை முதலாளியிடம் பேசினேன். அவர் சில சோதனைகள் செய்ய வேண்டும். துணியில் தவறுயிருந்தால் அதை மாற்றித் தருகிறோம் என வாங்கிக்கொண்டார். பின்னர் ஓரிரு மாதத் தாமதத்திற்குப் பின் பலமுறை தொலைபேசியில் பேசிய பின்னர் அதனை மாற்றி புதியதைக் கொடுத்தார்கள்.

மாற்றிக் கொடுப்பதில் மகிழ்ச்சிதான் என்றாலும் பூரண திருப்தி இல்லை. ஏனென்றால் முதலில் வாடிக்கையாளரை சந்தேகித்தார்கள். அது மிகவும் தவறான அணுகு முறை. நம்முடைய துணியிலும் தவறு இருக்கலாம் என்பதை முதலில் உணர வேண்டும். சிறப்பான சேவைக்கு!

வாய்ச் சண்டை

பல இடங்களில் கடைக்காரருக்கும், வாடிக்கையாளருக்கும் வாக்குவாதம் நடப்பதை நம் அன்றாட வாழ்வில் சந்திக்கலாம்.

தமது பொருள்தான் சிறந்தது என கடைக்காரர் சொல்லுவார். இல்லையென வாடிக்கையாளர் சொல்லுவார். சொற்போர் நடக்கும், சொற்போரில் யாருமே வெல்வதில்லை, ஒருவரை காயப்படுத்தி ஒருவர் வெற்றியடையவதாக எண்ணிக் கொள்கிறோம்.

வியாபாரத்திலும் சரி தனி மனித வாழ்விலும் சரி சொற்போரின் மூலம் தோல்வியையே தழுவுவோம்.

முன்னால் இங்கிலாந்து பிரதமர் திரு. உட்ரா வில்சன் கூறுகிறார். “உனது முஷ்டியை மடக்கிக் கொண்டு என்னிடம் சன்டைக்கு வ்தால், நான் இருமடங்கு சக்தியுடன் முஷ்டியை மடக்கி கொண்டு வருஏன். ஆனால், அமர்ந்து பேசுவோம் என்று வந்தால் எங்கே நாம் வேறுபடுகிறோம், என்பதை அறியலாம். அப்படிப் பேசும்போது வேறுபாட்டைக் காட்டிலும் ஒற்றுமை அதிகமாயிருப்பதைக் காணலாம். அந்த வேற்றுமையை மட்டும் களைய வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இருந்தால் ஒன்றுபடலாம். என மிக அருமையாகக் கூறியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் மனதில் கொண்டால் உங்கள் வாடிக்கையாளர் மன்னர் என்றால் நீங்களோ உங்கள் தொழிலில் முடிசூடா மன்னர் என்பதில் ஐயமில்லை!

 

3 Comments

  1. P.S.Karthikeyan says:

    Very Very Supper and nnice
    thanks

  2. P.S.Karthikeyan says:

    நான் படித்தேன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது …..நன்றி

Leave a Reply to P.S.Karthikeyan


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்