Home » Articles » உறவுகள் உணர்வுகள்…

 
உறவுகள் உணர்வுகள்…


செலின் சி.ஆர்
Author:

அடையாறில் ஃப்ளாட், அண்ணா நகரில் பங்களா, ஊட்டியில் எஸ்டேட் என்று வாங்கிய பிறகும் சிறுவயதில் நாம் வாழ்ந்த ஒண்டுக்குடிடத்தன வீட்டை நம்மால் மற முடியுமா?

பட்டுப்புடவை, கோட்சூட் என்று போட்டு அசத்தும் போதும் சிறுவயதில் நாம் அணிந்த அரைநிஜாரை, பட்டுப்பாவாடை சட்டையை நம்மால் மறக்க முடியுமா?

மனிதர்களோடு நமக்கிருக்கும் உறவைப் போலவே உணவு, உடை, உறைவிடப் பொருட்களோடும் நமக்கு ஆழமான உறவு இருகிறது உணர்வுகள் இருக்கின்றன.

அண்ணன், தம்பி, தங்கைகள் சூழ அமர்ந்திருந்த ஒரு மழைநாளில் அம்மா நம் கையில் பிசைந்து வைத்த, அந்த சோற்று உருண்டையின் கதகதப்பு நம் இதயத்தில் என்றும் இருக்கும்.

வேர்க்க விறுவிறுக்க ஸ்கூலுக்கு மதியம் லஞ்ச ஹவருக்கு அப்பா கொண்டு வந்து கொடுத்த டிபன் பாக்ஸா, சோற்றுப் பொட்டலத்த்தை நம்மால் மறக்க முடியுமா?

வாழ்க்கையில் நமக்கு அன்பு கிடைக்காத போது கூட உணவு அதை ஈடு செய்கிறது. அன்புக்கு நேர்பதம் சொல்லச் சொன்னால் யோசிக்காமல் உணவு என்று சொல்லாம்.

ஒரே சாதம், ஒரே குழம்புதான் நாம் கையில் பிசைந்து சாப்பிடும்போது இல்லாத ருசி, அதே உணவை அம்மா பிசைந்து உருட்டி வாயில் ஊட்டி விடும்போது வருகிறது. அது எப்படி?

அம்மா உணவை மட்டும் கொடுக்கவில்லை. அதோடு அவள் அன்பையும் சேர்த்து ஊட்டுகிறாள்.

உணவைச் சமைத்தவரின், பரிமாறுபவரின் உணர்வுகள் நம்மைக் கட்டாயம் பாதிக்கும்.

மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது, அவருக்கு அஹிம்சைக்கு எதிரான உணர்வுகள் ஏற்பட்டனவாம். அவர் அந்த உணவை சமைத்தவரைப் பற்றி விசாரித்தபோது அவர் பல கொலைகளைச் செய்தவர் என்று தெரிய வந்ததாம்.

அன்பில்லாத, தனிமையில் வாடுகிறவர்கள் அதை ஈடுகட்ட உணவைத்தான் நாடுகிறார்கள். அதனால் தான நிறைய சாப்பிட்டு குண்டாகிவிடுகிறார்கள். சுயபச்சாதாபம் (Self – Pity) தான் இதற்குக் காரணம்.

வாழ்க்கையில் நமக்குக் கிடைக்காத அனபை நாம் தியானத்தி பெறலாம். இப்படிப்பட்டவர்கள் யோகவழியில் தியானம் செய்து அன்பை, அருளை அனுபவிக்கலாம்.

சிறுவயதில் பள்ளிக்கூட நண்பர்களோடு சேர்ந்து குழாய் அப்பளம், எலந்த வடை, பஞ்சுமிட்டாய், தேன் மிட்டாய் சாப்பிட்டிருப்போம். கடைவீதியி அவற்றைப் பார்க்க நேர்ந்தால் பழைய நினைவுகள் நம் கண்முன் வரும். வாங்கித் தின்னலாமா? என்று ஆசைவரும். ஆனால் கௌரவம் தடுக்கும். ஆசையை அடக்கிக் கொள்வோம்.

இப்படி அடக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நீங்களாக இருக்க இறைவன் கொடுத்த தருணங்கள் இவை.

கடைக்கோ, பொருட்காட்சிக்கோ குடும்பத்துடன் செல்லும்போது உங்களுக்குப் பிடித்த பஞ்சுமிட்டாயை வாங்கி குழந்தையின் குதூகலத்தோடு சாப்பிட்டுப் பாருங்கள். பல வருடங்களுக்கு முன்பிருந்த உற்சாகமும் புத்துணர்ச்சியும் உங்களைத் தொற்றிக் கொள்ளும்.

பெரிய பதவியிலிருக்கும் சிலர் எப்போதும் உற்சாகமாய் இருப்பார்கள். உற்றுக் கவனித்தால் ரகசியம் புரியும்.

முக்கியமான விஷயமாய் நீங்கள் பேசப் போயிருக்கும் சமயத்தில், மேஜை டிராயரிலிருந்து ஒரு கடலை பர்பியை எடுத்து நீட்டுவார். இதுதான் அந்த இரகசியம்…! எத்தனை பொறுப்புகள் வந்தாலும் அதே குழந்தைத்தனத்துடன் வாழ்க்கையை ரசிக்கும் வித்தைதான் இது.

ஓட்டலில் தன்னந்தனியாய் அமர்ந்து தனக்குப் பிடித்த அடை அவியலை, பஜ்ஜி, போண்டாவை சாப்பிடும் வயதான தாத்தா, பாட்டியை கவனித்திருக்கிறீகளா?

வீட்டில் தயிர்சாதம் பிசைந்து ஊட்டி வளர்த்த அதே மகனோ அல்லது மகளோதான் இன்று, சாப்பாட்டுத் தட்டை “டங்” கென்று எதிரில் வைத்துவிட்டு “கொட்டிக்க” என்று சொல்லாமல் சொல்வது. அந்த சோகம்தான் ஓட்டலில் தனியாக தனக்குப் பிடித்ததை வாங்கி சாப்பிட வைக்கிறது.

நமக்கு ஊட்டி விட்டார்களே அந்த வாய்ப்புக்கு நாம் பதிலுக்கு ஊட்டி விட்டால்தான் என்ன? குறைந்த பட்சம் அன்போடு பரிமாறினால்தான் என்ன?

உணவைப் போலவே உடைகளும் உணர்வுகளால் நெய்யப்பட்டவைதாம்.

பழைய புகைப்படங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட படத்தின் மேல் கண்கள் நிலைத்து விடும். ஓரங்களி பழுப்பு புடிந்திருந்தாலும் மனதிற்குள் பசுமையாய் நினைவுகள் விரியும். காரணம், அந்த உடை, புத்தம் புதியதாய் அந்த வண்ணங்கள் நம் கண்ணுக்குத் தெரியும்.

அடுத்தநாள் தபாவளி முதல் நாள் ரவு கொட்டும் மழையில் நனைந்தபடி வீட்டுக்குள் நுழைந்த அப்பா, ஆசையாய் பையை சிரிப்புடன் கொடுக்க, பிரித்துப் பார்த்த நம் கண்களில் தெரித்த சந்தோஷ மின்னல், “செல்ல அப்பா” என்று நாம் கட்டிக் கொண்டவினாடி, அப்பாவின் முகத்தில் மின்னிய நிம்மதி வரிசையாய் நினைவுக்கு வரும்.

சிறுவயதில் உடுத்திய உடைகளை சிலர் பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். பழைய சட்டை, அரை நிஜார், பாவாடை, தாவணி இப்படி அவற்றை என்றாவது எடுத்துப் பார்த்தாலோ, வருடி நெஞ்சோடு அணைத்தாலோ பழைய நினைவுகள் பீறிட்டுக் கிளம்பும்.

பாட்டியின் முந்தானையைப் போர்த்திக் கொண்டு, அந்த கதகதப்பில் தூங்கிய நாட்களை மறக்க முடியாமல், பாட்டியின் மறைவிற்குப் பிறகும், அந்தப் புடவையை அணைத்துக் கொண்டு படுப்பவர்கள் இருக்கிறார்கள். அம்மாவின் புடவை பலருக்கு அவளது அன்பை நினைவுபடுத்தும்.

காதலியின் உடைகளை காமத்தோடு பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். இதே உணர்வு மனநோயாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இதை ஆங்கிலத்தில் Fetishism என்று அழைப்பார்கள். இவர்களுக்கு ஆழ்மனக் கட்டளைகளைக் கொடுத்து சிகிச்சை தரலாம்.

குழந்தைகளின் உடைகளைப் பார்க்கும் போது நமக்குள் குதூகலம் பீறிடும். சின்ன சட்டை, சின்ன ஜட்டி என்று பார்க்கும்போது நமக்கே குழந்தையாகிவிட்ட உணர்வு ஏற்படும்.

நாம் ஒவ்வொரு முறை உண்ணும் போதும் உடையை உடுத்தும்போதும், அந்த உணவு, உடை கிடைக்காதவர்களை, ஏழைகளை நினைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த உணவிற்காக, உடைக்காக நாம் ஆண்டவனுக்கு நன்றி செலுத்தும் அதே கணம் அவை இல்லாதவர்களுக்கு உதவி செய்இயும் அன்பும், கருணையும் பொங்க வேண்டும்.

சில பிச்சைகார்ர்கள் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இலையில் சாப்பாடு, நடுவில் குழி தோண்டி, சாம்பார் ஊற்றி, வேகமாய்ப் பிசைந்து புறங்கையில்குழம்பு ஒழுக அள்ளி, அள்ளி சாப்பிடுவார்கள். எங்கே கொஞ்சம் அசந்தால் யாராவது வந்து எடுத்தக் கொள்வார்களோ என்பது போல் ஒரு அவசரம் தெரியும்.

“ஐயோ எப்படி வழித்து, நக்கி சாப்பிடறான் பாரு” என்று சிலர் அருவெறுப்பு அடைவார்கள். ஆனால் அந்தக் காட்சிக்குப் பின்னாலிருக்கும் அவன் பசியை, வேதனையை, நாட்பட்ட ரணத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தால், அருவெறுப்பிற்கு பதிலாக அன்புதான் பொங்கும்.

அப்பா, அம்மா கட்டாயப்படுத்தி உணவை ஊட்டி விடாத குறையாகத் திணிக்கும்போது, ‘ஹையோ சாப்பாடு சுத்த போர் பா’ என்று தோன்றும். வெளியூரில் வேலை செய்யும் போதோ, கல்லூரி ஹாஸ்டலில் தங்கியிருக்கும் போதோதான் வீட்டுச் சாப்பாட்டின் மகத்துவம் தெரியும்.

பலநாள் கழித்து நம் வீட்டிற்கு வந்து உண்டால் அந்த சாப்பாடே தேவார்மிதர்தமாய்த் தெரியும். ஒரு பிச்சைக்காரனைப் போல்தான் நாமும் உண்போம்.

அடுத்தவர் வயிறு குளிர நம் அளிக்கும் அன்னதானத்தைப் போலவே வஸ்திரதானம் எனப்படும் உடைதானமும் மகத்துவமானதுதான்.

அடுத்தவர் வயிராற உண்டு பசியாறும் காட்சி நமக்குள் ஏற்படுத்தும் அதே ஆனந்தத்தை அடுத்தவர் நமது உடையை அணிந்து கொண்டாலும் ஏற்படும்.

சிலர் பழைய துணிகளை தானம் தந்தால் தரித்திரம் வரும் என்று பொய் சொல்வார்கள். பழைய துணிகளைப் போட்டால் எவர் சில்வர் பாத்திரம் கிடைக்குமே என்ற நப்பாசையில் இப்படி கஞ்சத்தனம் செய்வார்கள்.

ஆனால், புதுத்துணி வாங்கித்தர முடியாவிட்டாலும் பரவாயில்லை. பழைய துணியையாவது அது நல்ல நிலையிலிருக்கும் போதே ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்துவிடுவது உத்தமம். அந்த உடையை அவர்கள் உடுத்தி இருக்கும் காட்சி, நாம் அதைப் புதியதாய் அணிந்த போது ஏற்பட்ட அதே மகிழ்ச்சியைத் தரும்.

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment