Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

ஒரு காலத்தில் கெட்டவங்கிட்டேயிருந்து நல்லவங்களைக் காப்பாத்திஅரசாங்கம் நிறை பாடுபட்டது. அப்புறம் நல்லவங்க தீமையை நோக்கிப் போகாம தடுக்க பாடுபட வேண்டிய நிலைமை வந்துடுச்சு.

இன்னைக்கு அரசாங்கம் தனியார் அமைப்புகள் எல்லாமே என்ன பண்ணுது… ஜனங்களைப்பார்த்து மய்யா! தயவு செய்து தப்பு பண்ணாதீங்க! தப்பு செய்தாலும் பார்த்து பண்ணுங்க. தப்பையும் சரியாப் பண்ணுங்க” அப்படீன்னு கேட்குது.

நான் பொதுவாச்சொல்றேன். இப்ப நடக்கறதெல்லாம் மனுஷங்களை அவங்ககிட்டேயிருந்தே காப்பாத்திக்க வேண்டிய முயற்சித்தான்.

கொஞ்சகாலமா பேப்பரிலே பார்த்தா, கள்ளச் சாராய சாவு, கடன் அதிகமாகி தற்கொலை, சந்தேகத்தின் பேரில கொலை, இந்த மாதரி செய்திகள்தான் அதிகமா இருக்கு.

‘ஒழுக்கமா இருங்க’ அப்படீன்னு சொல்றதுக்கு பதிலா பாதுகாப்பா தப்பு பண்ணுங்க அப்படீன்னு தான் எய்ட்ஸ் தடுப்பு விளம்பரத்திலேயிருந்து எல்லாமே சொல்லுது.

நான் பொதுவாச் சொல்றேன், ஒழுக்க போதனை அப்படீங்கறது இந்த நூற்றாண்டிலேயும் அவசியமா இருக்குன்னா, அந்த அளவுக்கு நாம அலட்சியமா இருக்கோம்னு அர்த்தம்.

உதாரணத்துக்கு “கள்ளுண்ணாமை”, “புலால் உண்ணாமை” “பிறன்மனை நோக்காமை”ன்னு பல விஷயங்களை வள்ளுவர் தெளிவா சொன்னாரு.

இதிலே முதல் இரண்டு விஷயங்களை ஆதரிச்சு விளம்பரங்களே வெளிவருது. அப்ப மற்ற விஷயங்களும் விளம்பரமில்லாம தானா தனியா தொடருது.

குடும்பச்சூழ்நிலை, கல்விச் சூழ்நிலை, சமூகச் சூழ்நிலை, இதையெல்லாம் பொறுத்து தான் தனிமனிதனுடைய உணர்வுகள், அணுகுமுறை எல்லாமே இருக்கும்.

நான் பொதுவாச்சொல்றேன், பழைய காலங்களிலே முறைப்பையன், முறைப் பொண்ணு,அப்படீன்னு உறவுக்குள்ளேயே சில உரிமைகளை ஏற்டுத்தி வைச்சாங்க. பருவம் தெரிகிற வயசிலேயே திருமணமும் செய்து வைச்சாங்க. அது ஓவராப் போயி பால்ய விவாகத்திலே நின்னது.

நான் பொதுவாச் சொல்றேன். இன்னைக்கு அதெல்லாம் சாத்தியமில்லாம இருக்கலாம். ஆனா பண்புள்ள பிள்ளைகளை உருவாக்குவதற்குத் தகுந்த சூழல், குடும்பம், கல்வி, சமூகம், மூணிலும் இருக்கான்னு கண்காணிக்கணும்.

கள்ள மதுவை ஒழிக்க வேண்டும் அப்படீன்னு சொல்வது வேற, நல்ல மதுவையே குடிக்க வேண்டும் அப்படீன்னு சொற்லது வேற. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.

நான் பொதுவாச்சொல்றேன், எய்ட்ஸ் தடுப்பு விளம்பரத்திலே ஒழுக்க போதனை செய்யனும்னு முதல் எய்ட்ஸ் தடுப்பு வாரியம் நினைச்சுது. அது எடுபடாதுங்கறதாலே பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விரிவாப் பேச ஆரம்பிச்சுது.

தனிமனிதனிடம் விழிப்புணர்வு இல்லாத போது அவனுக்கு எது நல்லதுன்னு பார்த்துதான் சொல்லமுடியும். அப்ப இது அரசாங்கத்தின் தவறா? இல்லை தனிமனிதனுடைய தவறு.

கம்பராமயனத்திலே ஒரு இடம்.

பத்து மாசம் உயிரையும் கற்பையும் கையிலேயே பிடிச்சுகிட்டு சீதை ராமனுக்காக தவமிருந்த பிறகு, ராவணனைக் கொன்னுட்டு வருவாரு ராமன்.

சீதையைப் பார்த்ததும் தீக்குளிக்கிறாயா”ன்னு கேட்பாரு. மனசு விட்டுப் போயிடும் சீதைக்கு.

“இத்தனை காலமா, தவம் செய்தது. கற்பு காத்தது. உன்னையே நினைச்சது எல்லாம் ஒரு வார்த்தையாலே பயனில்லாம பண்ணீட்டியேராமா” அப்படீன்னு சீதை கேட்கிறதா ஒரு பாட்டு.
“எத்தவம் என்னலம், என்ன கற்பு, நான்
இத்தனை காலம் உழன்ற ஈதெலாம்
பித்து எனல்ஆய், அவரும் பிழைத்ததாமன்றே
உத்தமா, நீ மனத்து உணர்ந்திலாமயால்”

இது மாதிரி, இத்தனை கல்வி, இலக்கியம் உபதேசம், பண்பாடு, அறிவியல் எல்லாமே, மனுசனுடைய மனசைப் பண்படுத்த முடியாம போயிடுச்சுன்னு, பார்கறப்போ பண்பாடு அப்படீங்கற சீதை கண்ணீர் விடற மாதிரிதான் நமக்கு தோனுது.

நாம் பொதுவாச் சொல்றேன். தன்னுடைய வாழ்க்கைக்குத் தகுதியான நடவடிகைள்ளை நிர்ணயிச்சு பக்குவத்தோடு வாழ்ந்தாத்தான் நல்லது.

இல்லைன்னா, கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி ஒவ்வொண்ணும் மத்தவங்க சொல்லிகிட்டேதான் இருப்பாங்க. இதுதான் நம்ம தகுதி அப்படீங்கற தெளிவு ஏற்பட்டாலே குழப்பம் வராது.

தன்னை ஆள்வதே அடிப்படை அறிவு மண்ணை ஆள்வதெல்லாம் பிறகு.

தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment