Home » Articles » உறவுகள் உணர்வுகள்….

 
உறவுகள் உணர்வுகள்….


செலின் சி.ஆர்
Author:

“டீன் ஏஜ்” பருவத்தில் எட்டிப் பார்த்து விட்டுச்செல்லும் இன்ஃபாச்சுவேஷனை, பப்பி லவ்வை காதல் என்று தவறாகக் கருத்துக் கணிப்பு செய்து கொண்டு தாடியும், சிகரெட்டுமாய் அலையும் பலரையும் பார்த்திருப்போம்.

நடுரோடு என்றும் பார்க்காமல் காதலிக்கு ரோஜா கொடுப்பதும், பட்டப் பகலில் சுடு மணலில் கடற்கரையில் உரசியபடி அமர்ந்து கொண்டு சூரியனை இரசிப்பதும், குடும்பத்துடன் அமர்ந்திருப்பவர்கள் கொஞ்சம்ம் சட்டை செய்யாமல் கும்மாளமடிப்பதும்….

போதையில் மயங்கி இவர்கள் அடிக்கும் லூட்டியைப் பார்த்தால் எங்கே மூளை கலங்கி விட்டதோ என்று கூட நமக்கு நினைக்கத் தோன்றும்

இதை சினிமாத்தனம், சுத்தப் பைத்தியக்காரத்தனம், வயசுக் கோளாறு, உடம்புக் கொழுப்பு என எப்படி வேண்டுமானாலும் நீங்கள் பெயரிட்டுக்கொள்ளலாம். அது உங்கள் விருப்பம்.

இவர்கள் வெளிப்பாடுகள்தான் தாறுமாறாக இருக்கின்றனவே ஒழிய, அடிப்படை, உணர்வு என்ன?அன்புதானே…? இது நல்ல அன்பு, இது கெட்ட அன்பு என்றெல்லாம் எதுவுமில்லை. அவரவர் சூழ்நிலையையும், மனப் பக்குவத்தையும் வைத்துதான் வெளிப்படுத்தும் விதமும் மாறுகின்றன.

சரி. இப்போது “டீன் ஏஜ்” காதலுக்கே வருவோம். எந்த மனநிலையில் இவர்களுக்கு காதல் வருகிறது? காதலுக்கு முன்பிருந்த நண்பர்கள் வட்டம் இப்போது என்னாயிற்று?

தங்கள் தனித்தன்மையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ள கும்பலாயிருக்கும்போது ஒருவரையொருவர் முந்திக்கொண்டு தங்களை பெரிய ஆளாய் காட்டிக் கொள்வார்கள்.

“டேய், சூப்பர்டா மச்சி” என்று ஆரம்பகால பாராட்டுக்கள் கிடைத்தாலும், போகப் போக “நீயா.. நானா” என்ற போட்டியில் எல்லாம் மங்கி, ஒருவித இறுக்கம் மட்டுமே மிச்சமிருக்கும்.

இந்த அலுப்பான காலக் கட்டத்தில்தான் ஒரு இளைஞனுக்கு தன்னை அங்கீகரிக்க ஒரு துணை தேவைப்படுகிறது. அதுவும் பெண்ணாக இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி. இவன் சாகசங்களை அவள் வாய்பிளந்து பார்க்கும்போது உலகையே மறந்து விடுகிறான். சந்தோஷக் கடலில் மூழ்கி விடுகிறான்.

அப்பாவைப் பார்த்தால் ஒளிந்து ஓடுவது, ஆசிரியரிடம் அடி வாங்குவது என சகத்தையும் மறந்து விடுகிறான். அந்தக் கணத்தில் ஒரு அரசனைப் போல, ஹீரோவைப் போல தன்னை உருவகித்துக் கொள்கிறான்.

தன்னையும் ஒருவன் நாடி வருகிறான் என்ற நினைப்பே அவனுக்கு போதையூட்டுகிறது. “பெரிய மனித” தோரணையைத் தருகிறது.

இந்த உணர்வுகளுக்கும் உண்மைக்கும் முரண்பாடு ஏற்பட்டாக வேண்டுமே…? ஆம் அந்தக் கணம் கொடுமையானது.

எப்போதுமே நம் எண்ணங்களும், நிகழ்வுகளும் ஒரே அலைவரிசையில் இருக்கும்போது பிரச்சனைகளோ ஏமாற்றங்களோ ஏற்படுவதில்லை. மனதிற்குள் நாம் ராஜா என்ற எண்ணத்தில், பெருமிதமாயிருக்கும்போது இல்லை நீ பிச்சைக்காரன் என்ற உண்மை முகத்தில் அறையும்படி ஏதாவது நிகழ்ந்தால் எப்படியிருக்கும்? அதே நிலைதான் இங்கும்.

நாம் மனதல் நினைக்கும் அங்கீகாரம், மரியாதை வீட்டிலும், படிக்கும் இடத்திலும் கிடைக்கவில்லையே என்று புழுங்கிப் போகிறான். அவனது ஒரேபிடிப்பு அவள்தான்.

“வானத்தை வில்லாய் வளைப்பேன். மணலைக் கயிறாய் திரிப்பேன்” என வசனம் பேசுகிறான். உனக்காக எதையும் செய்வேன் என்கிறான். தனக்கே தன்னால் எதையும் செய்ய முடியவில்லை என்பதை மறந்துவிட்டு,

சரி, இந்த இடத்தில் பெற்றோரின் பங்கு என்ன? என்ன செய்ய வேண்டும்? பெரிதாய் ஒன்றுமில்லை. உங்கள் “டீன் ஏஜ்” நாட்களைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

அன்றைக்கு எவையெல்லாம் உங்களுக்கு நியாயமாகப்பட்டன? அதே விஷயம் இன்று உங்கள் குழந்தை செய்யும்போது மட்டும் தவறாக படுகிறதென்றால் அதற்குக் காரணம் என்ன? உங்கள் மனநிலை மாறி விட்டது.

கட்டைச் சுவரின் மேல் உட்கார்ந்து கொண்டு பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கிண்டல் செய்தீர்கள். அன்று சந்தோஷம் பொங்கி வழிந்தது. இன்று அதே விஷயத்தை உங்கள் பையன் செய்யும்போது, “அடி செருப்பாலே நாயே” என்று திட்டத் தோன்றுகிறது.

காலம் காலமாய் ஒரே விஷயம்தான் தொடர்ந்து வருகின்றது. நாளை உங்கள் பையனும் இதையேதான் பின்பற்றப் போகிறான்.

வானம் நிலையாயிருக்கிறது. மேகம்தான் கடந்து போகிறது. அதேபோல்தான் டீன்ஏஜ் பருவமும். அப்போதுதோன்றும் உணர்வுகளும் கடந்து செல்பவைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் புரிதல் இருந்தால், உங்கள் மகனில் உங்கள் இளமைப் பருவத்தைக் கண்டு கொள்ளும் பக்குவமும் வரும். பிறகு கோபப்படுவதற்கு பதிலாக சிரிப்பீர்கள்.

“இப்ப என்ன, பையனைக் கண்டிக்கவே கூடாது என்ன செஞ்சாலும் சிரிச்சிட்டே ரசிக்கணும்கறீங்களா?” என்று கோபப்படாதீர்கள்.

எதற்குமே அதற்கே உரிய சில வரைமுறைகளும் எல்லைக் கோடுகளும் உள்ளன. எது இயல்பு, எதைத் தாண்டினால் விபரீதம் என்பதைப் பகுத்துணரும் தன்மை நம் எல்லோருக்குமே உண்டு.

இது விளையாட்டல்ல. இவன் வாழ்க்கையையே சூறையாடப் போகும் விபரீதம் என்உ எப்போது உங்கள் மனதில் எச்சரிகை விளக்கு எரிகிறதோ, அப்போது உங்கள் வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கலாம்.

அறிவுரை கேட்பது என்பது உலகத்திலேயே மிகமிக்க் கடினமான விஷயம். ஆனால் அடுத்தவருக்கு புத்திமதி சொல்வதென்பதோ அல்வா சாப்பிடுவது மாதிரி.

இதுநாள் வரை நாம் கேட்டுக் கேட்டு சேர்த்து வைத்திருந்த அறிவுரைகளையெல்லாம் கொட்டுவதற்கு வசமாய் ஒருவன் மாட்டிக்கொண்டான். என்று இஷ்டத்திற்கு வாரி வழங்காதீர்கள்.

இந்தக் கட்டத்தில் உங்கள் மகனுக்குத் தேவை ஆலோசனையே அன்றி அறிவுரை அல்ல என்பதை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

எலும்புத்துண்டை கடிக்கும்போது நாய் அதீத சந்தோஷத்தில் இருக்கும் உவகை மறந்து ருசித்துச் சாப்பிடும். ஆனால் உண்மையில் அது எலும்புத் துண்டின் ருசியல்ல.

எலும்பின் முனைகள் குத்தி வழியும் நாயின் ரத்தத்தின் ருசிதான். தன் ரத்தத்தை தானே சுவைக்கும் நாய்க்கு அது வலி என்பதே புரியாது. அதே நிலைதான் டீன்ஏஜினருக்கும்.

கட்டைச் சுவரின் மேல் உட்கார்ந்து கொண்டு பெண்களை ரசிப்பது என்பது சந்தோஷம் தரக்கூடிய செயலே அல்ல. அது அவர்களது ஏக்கம்தான், வேதனைதான், வலிதான்.

ஒரு பெண்ணை ரசிக்க, தீண்ட அவள் மனைவியாயிருக்க வேண்டும். அவளை மனைவியாக்கி குடும்பம் நடத்தக்கூடிய தகுதி வேண்டும். குடும்பம் நடத்த பக்குவமும் பணமும் வேண்டும்.

இவ்வளவு நீண்ட பாதையை மறந்துவிட்டு, அல்லது தெரிந்திருந்தும் அதைப்புறக்கணித்து விட்டு கடைசி கட்டத்திற்கு, பலனிற்கு மட்டும் ஆசைப்படுவது என்பது கொடுமையானது. வலியானது.

“ஏக்கம்” என்றாலே அதன் நேர்மறை வலிதான். இந்த வலியை, அது வலி என்று உணராமல் அனுபவிக்கிறார்கள். உலகிலேயே இது தான் உன்னதமான நிலை என்று உச்சி குளிர்ந்து போகிறார்கள். இது மிகவும் பரிதாபகரமான விஷயம். இதை உணர வைத்தாலே போதும்.

படுத்திருந்தால், அடுத்து தவழ்ந்து பிறகுதான் உட்கார முடியும். அதற்குப் பின்தான் எழுந்து நடக்க முடியும் என்ற நிதர்சனத்தைப் புரிய வைத்துவிட்டால் பொறுப்பு தன்னாலே வந்துவிடும்.

பெற்றோருக்கு இருக்கும் அதே பொறுப்புடன் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

“டீன்ஏஜ்” என்பது அழகிய நிலாக்காலம் தான். அதில் இலேசாகப் படியும் கறையைப் பக்குவமாகத் துடைத்தெறியக் கற்றுக் கொண்டால்..!

– தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2001

மனித சக்தி மகத்தான சக்தி
உன்னால் முடியும் தம்பி
சிந்தனைத்துளி
பொதுவாச் சொல்றேன்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.
விழுந்தாலும் எழுவேன்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே….
பெற்றோர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
தன்னம்பிக்கை பாதையில் நட!
மனசு விட்டுப் பேசுங்க!
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
வாழ்க்கை
விட்டு விடுதலையாவோம்
உறவுகள் உணர்வுகள்….