Home » Articles » ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்

 
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்


admin
Author:

ஏழை எளிய குடும்பங்களில் பிறந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்வியின் வாசத்தை நுகர்ந்திடும் வாய்ப்பினைப் பெற்றவர்கள், வளமாக வளர்ந்த நாடுகளில் பணியாற்றும் அளவுகு தகுதிகளை வளர்த்து வரலாறு படைக்கின்ற சாதனையாளர்களாகத் திகழ்கின்றார்கள் என்றால் அது நமது பாராட்டுக்கு உரியது அல்லவா! அத்தகையவர்களில் ஒருவர்தான் மாரியப்பன். மற்றொருவர் பழனி.

இவர்களை டாக்டர். இராஜாராமன் இல்லத்திற்குச் சென்றபோது அவரது துணைவியார் ஸ்ரீதேவி எமக்கு அறிமுகம் செய்தார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நான் பட்ட மேற்படிப்பு படித்த காலத்தில் அதே கல்லூரியில் படித்தவர் டாக்டர் இராஜா ராமன்.

தற்போது பிரிஸ்பன் நகரில் உள்ள இராயல் பிரிஸ்பன் மருத்துவ மனையில் தோல் புற்றுநோய் வராமல் தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும், உணவுப்பாதையில் ஏற்படும் புற்றுநோய்க்கு மரபணு மருத்துவம் கண்டறிவதிலும் ஆரய்ச்சி மேற்கொண்டுள்ளார்.

குயின்லாந்து பல்கலைக்கழத்திலிருந்து டாக்டர் இராஜா ராமனுடன் ஒரு நாள் தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். அன்று மாலையே அவரது வீட்டிற்கு எம்மை அழைத்தார்.

வின்ட்சார் (Windsor) என்ற இடத்தில் அவரது குடியிருப்பு அமைந்திருந்தது. அவரது துணைவியார் ஸ்ரீதேவி பிரிஸ்பனில் உள்ள இந்தியன் கான்சலேட் (Indian consulate) அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அவருக்கு என்னை அறிமுகம் செய்யும்போது கல்லூரியில் நாம் தமிழ்மன்றச் செயலாளராக இருந்ததையும், எமது அக்கால மேடைப் பேச்சுக்களையும் இராஜா நினைவு கூர்ந்தார்.

“இன்னும் கவிதை எழுதுகிறீர்களா?” என்று இராஜா கேட்டார். எடுத்துச் சென்றிருந்த எமது கவிதை நூல்கள் சிலவற்றை அவர்களுக்கு வழங்கினேன்.

அப்போதுதான் ஸ்ரீதேவி, பிரிஸ்பன் தமிழ்ச் சங்கத் தலைவரை அறிமுகம் செய்கிறேன் என்று பழனியையும், மாரியப்பனையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

படித்து முடித்து விட்டு வேலை கிடைக்கவில்லைஏ என்று சோர்ந்து சோகசுகவாசிகளாக பலர் உலவுகின்ற இந்தக் காலட்டத்தில், புதிய வாய்ப்புகளைத் தேடி வந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் டாக்டர் இராஜாராமன்.

சில மாதங்களில் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் புற்றுநோய் பற்றிய மாநாட்டில் கலந்துகொண்டு தனது ஆராய்ச்சிக் கட்டுரையை படிக்க அங்கு செல்ல இருப்பதாக இராஜா சொன்னார். திறமைகளை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புகளுக்கு வானமே எல்லை என்பது இவரைப் பார்த்தால விளங்குகிறது.

கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெறு இறைக்குமனித குலத்தை புற்று நோய்களிலிருந்து காக்கும் ஆராய்ச்சியில் வெற்றிப் படியில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் இவர்.

நமது ஊர் உணவை சமைத்துப் பரிமாறினார் ஸ்ரீதேவி. உணவு முடித்துப் புறப்பட்டேன். கணவன் மனைவி இருவரும் பேருந்து நிறுத்தம் வரை வந்து வழியனுப்பினர். அப்போது, பிரிஸ்பனில் சென்று பார்க்கக்கூடிய இடங்கள் பற்றியும், பேருந்தில் “Off peak saver” என்ற வசதி இருப்பது பற்றியும் சொன்னார்கள்.

பிரிஸ்பன் பேருந்துகளில் 4.40 ஆஸ்திரேலிய டாலர்கள் செலுத்தி ஒரு சீட்டு வாங்கிக்கொண்டால் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரையிலும் பிறகு இரவு 4 மணிக்குப் பின்பும் அன்றைய தினம் நகரில் எங்கு வேண்டுமானாலும் பயணம் சென்று வரலாம். அவர்கள் சொன்ன அந்தத் தகவல் மிகவும் பயனுடையதாக இருந்தது.

நமது மாநகரங்களில் இந்த பேருந்து வசிதகளை செய்தால் ஒரே நாளில் பல இடங்களில் பயணம் செய்கிறவர்களுக்கு உதவியாக இருக்கும். ஒருமுறை சீட்டு வாங்கிவிட்டால் பேருந்து நெறிசலில் நடத்துனரிடம் சீட்டு வாங்க பொழுதும் போராடத் தேவையில்லை. ஒவ்வொரு முறையும் சில்லரை இல்லை என்ற சிக்கல் இருக்காது.

அடுத்த நாள் மாலையில் மாரியப்பனை சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தது. பிரிஸ்பனில் புறநகரப் பகுதியில் “கிளேபீல்டு” என்னும் இடத்தில் அவரது குடியிருப்பு இருந்தது. டூவிங்குவில்லேஜ் (Toowing village) ரயில் நிலையத்திலிருந்து இரயில் மூலம் ஈகிள ஜங்கசன் சென்று இறங்கினேன். அங்கிருந்து மாரியப்பன் என்னை அவரது காரில் அழைத்துச் சென்றார்.

பிரிஸ்பனில் ”Union swithc and signal” என்ற பன்னாட்டு நிறுவனதில் பணியாற்றுகிறார். பாளையங்கோட்டை அருகில் உள்ள மேலப்பாளைம் குறிச்சி இவரது ஊர். எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பட்டயம் படித்தவர். தொடக்கத்தில் பெங்களூரில் பணியாற்றியதாகவும், சிறப்பாக பணியாற்றியதால் கம்பெனியே அவரை ஆஸ்திரேலியாவில் பணியாற்ற அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.

மாரியப்பன் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து படித்து முன்னேறியவர். இவரது தந்தை கட்டிட வேலை பார்க்கும் கொத்தனார் குடும்பத்தை வறுமை கொத்திப் பசியாறிய கொடிய சூழ்நிலையில் தான் தனது பட்டயப்படிப்பை முடித்ததாகவும், வீட்டில் மூத்தபிள்ளை இவர் என்பதால் பொறுப்புகள் அதிகம் என்றும் தெரிவித்தார்.

அயல்நாடு வந்து ஏராளமாக பொருள் ஈட்டி, வளமாக வாழ்ந்தாலும் பெற்றோரையும், உற்றாரையம் உடன்பிறந்தோரையும், அவர்தம் நனையும், வளர்ச்சியையும் எண்ணிப் பார்க்கிறவராக மாரியப்பன் இருக்கிறார். மாதந்தோறும் தவறாது வீட்டிற்று பணம் அனுப்பி வைப்பதாகவும், ஆண்டுக்கு ஒரு முறை தமிழகம் வந்து செல்வதாகவும் கூறினார்.

இங்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது என்றும் விரைவில் அவரது தம்பியையும் இங்கு அழைத்து வந்து பணியமர்த்த இருப்பதாகவும் தெரிவித்தார். பெற்றோரையும் ஒருமுறை இங்கு அழைத்து வந்து ஆஸதிரேலியாவை காட்ட இருப்பதாகவும் அதற்கான விசா பெற முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் தகுதிகளை வளர்த்துக்கொள்ள பிரிஸ்பனில் உள்ள மாலை நேரக் கல்லூர ஒன்றில் தகவல் தொழில்நுட்பம் படித்து வருவதாகவும் தெரிவித்தார். அலுவலகத்தில் அந்த ஊர் ஆங்கிலேயர்கள் தமது வளர்ச்சியை விரும்பாமல், பல்வேறு இடையூறுகளை விளைவிப்பதாகும் கூறினார்.

திறமையும், கடின உழைப்பும் தன்னை நிச்சயம் வாழ்வில் மேலும் உயர்த்தும் என்று, நம்பிக்கையுடன் இருக்கிறார் மாரியப்பன். அவர் வீட்டில் நுழைந்தபோது புதியதாக வாங்கி வந்திருந்த பொருள் ஒன்று வரவேற்பு அறையில் இருந்தது. என்னவென்று வினவியபோது விபரம் தெரிந்தது. அது புகை அலாரம் (Smoke Alaram) என்று.

பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இதை வைத்திருக்கிறார்கள் என்றார். காரணம் இங்கு காடுகள் புதர்கள் தீப்பிடித்துக் கொள்வதும், வீடுகள் பெரும்பாலும் மரத்தால் ஆனதால்தீ பரவும் வாய்ப்பு எளிது. எனவே வீட்டில் பக்கத்தில் புகை வந்தவுடன் அலாரம் அலர ஆரம்பித்துவிடும். பாதிப்புகளிலிருந்து தப்பி விடலாம் என்றார்.

மேலும் ஒரு சுவையான தகவலையும் சொன்னார். நம்மவர் வீடுகளில் பூசை செய்யம போது சாம்பிராணி புகை போட்டால் கூட அலாரம் அடிக்கத் தொடங்கிவிடும். எனவே சாம்பிராணி போடுவதாயின் அலாரத்தை அமுக்கிவிட்டுத்தான் போடுவார்கள் என்றார்.

கொத்தனாரின் மகனாக, ஏழை எளிய குடும்பத்தில், தமிழகத்தில் ஒரு கடை கோடி குக்கிராமத்தில் பிறந்து பிரிஸ்பனில் சுடர்விடும் மாரியப்பன் ஒரு தன்னம்பிக்கை மாணிக்கம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்