Home » Articles » வணக்கம் தலைவரே

 
வணக்கம் தலைவரே


முத்தையா ம
Author:

தலைமைப் பண்புக்கு தாயாராவது என்றாலே, சிலர், சுறுசுறுப்பாகப் போய் நான்கு செட் வேஷ்டி ஜிப்பா – விதம் விதமாய் சால்வைகள் என்று வாங்கி வந்து, கண்ணாடி முன் நின்று கும்பிடு போட்டுப் பழகத்தொடங்குவார்கள்.

தலைமைப்பண்புக்குத் தயாராவது, முழுக்க முழுக்க மனத்தளவில் தான் நிகழவேண்டும்.

“குடும்பத்தலைவர்” என்றால், எவ்வளவு பொறுப்புகள் உள்ளன. ரேஷன் பொருட்கள், கரண்ட்பில் தொடங்கி பட்டியல் நீண்டு கொண்டே போகும். பொது வாழ்வில் தலைவராகும்போது பொறுப்புகள் இன்னும் அதிகம்.

எல்லாப்பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு, எங்கே தொடங்குவது, எப்படி முடிப்பது என்று திண்டாடுவதற்குப் பெயரல்ல தலைமைப்பண்பு. எத்தனை பொறுப்புகள் இருந்தாலும், எதை எப்படி செய்வது என்கிற தெளிவுக்குப் பெயர்தான் தலைமைப்பண்பு. “தெளிவு” தலைமைக்கான முக்கியத் தகுதி.

இலக்குகளை வகுப்பது, இலக்குகளை எட்டிடத் திட்டங்கள் தீட்டுவது, உரியவர்களைத் தேர்ந்தெடுப்பது, தேர்ந்தெடுத்தவர்களை கை பிரிப்பது, வகைபிரித்துப் பொறுப்புக்கள் கொடுப்பது, அமைப்பை இயக்கி ஜெயிப்பது, ஜெயித்த பிறகும் நிதானமாக இருப்பது.. இந்த எட்டு குணங்களையும் எட்டுபவர், எவரோ அவரே தலைவர்.

தலைமை தெளிவாக இருக்குமேயானால் எந்த நெருக்கடியையும் இயக்கமோ நிறுவனமோ எளிதாக்க் கடந்துவிடும். தொழிலகங்களுக்கான நிர்வாக ஆலோசகர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது “நெருக்கடி நிலை நிர்வாகம்” என்கிற சொல்லைப் பயன்படுத்தினேன் (Crisis Management). சிறிது யோசித்து விட்டு அவர் சொன்னார் “நிர்வாகம் என்றாலே போதும், அது நெருக்கடி நிலை நிர்வாகத்தைக் தான் குறிக்கும்” என்று (The very word management denotes crisis Management only)

சராசரியாய் இருக்கிறவர்களுக்குத் தான் நெருக்கடி ஒரு புதிய சிக்கல். தலைவர்களுக்கோ, அவர்கள் கையாள வேண்டிய இன்னுமொரு சூழல். அவ்வளவுதான். சிலர் செல்வாக்கை மட்டும் பெற்றிருப்பார்கள். தலைமைக்குரிய தெளிவு இருக்காது. இயக்கம் தள்ளாடிக் கொண்டிருக்கும்… தலைவரைப் போலவே.

தலைமைப் பண்பின் பத்தொன்பதாவது விதி.

இதயம் குழம்பும் தலைவர்களால் இயக்கம் குழம்பித் தடுமாறும்.

தலைவருக்கு இருக்க வேண்டிய தெளிவிலேயே மிக முக்கியமானது, “எதற்கு முதலிடம்” என்பதுதான். வகுத்துக் கொண்ட கொள்கைகள் ஒருபுறம். வசூலுக்காக வளைந்து கொடுப்பது மறுபறும் என்றிருக்கும் தலைவர்களால் எப்போதும் ஆபத்துதான். “எந்த நேரத்திலும் இதனை விட்டுக் கொடுப்பதில்லை” என்று ஒன்றை வகுத்துக் கண்டு அதை எப்போதும் கடைபிடிப்பது தலைமைக்குத் தகுந்த பண்பு.

சில நிறுவனங்களில் “வாடிக்கையாளர் மன நிறைவே நோக்கம்” என்று வகுத்துக் கொண்டிருப்பார்கள். அங்கே தயாரிப்புகளை வாங்கிச்சென்ற வாடிக்கையாளர் என்ன புகார் சொன்னாலும் அதற்கு முதலிடம் என்று வகுத்துக் கொண்டு நிறுவனத்தின் தலைவர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரையில் அதற்கு முதலிடம் தருவார்கள்.

ஒரு நிறுவனமோ, பொது இயக்கமோ பொழுது போக்கு சங்கமோ, எதுவாயினும், எதற்கு முதலிடம் (Priority) என்பதைத் தெளிவாக நிர்ணயித்து அதன்படி நடக்கிறதா என்று கண்காணிப்பது அதன் தலைவரின் முக்கியக் கடமை.

இந்த வகையில் பார்க்கிறபோது, முதலிடம் பெறுவது அந்த அமைப்பின் கொள்கைதான். அமைப்பில் உள்ளவர்களை இணைக்கிற விஷயமாக இது தான் இருக்கும். அந்தக் கொள்கையில் தலைவர் காட்டுகிற உறுதியைத்தான் மற்றவர்கள் பின்பற்றுவார்கள்.

தலைமைப் பண்பின் இருபதாவது விதி.

கொள்கையை அலட்சியம் செய்பவர்கள் தவறான தலைவர்கள் கொள்கையே லட்சியம் என்பவர்களே தரமான தலைவர்கள்.

அமைப்பின் கொள்கைகள் வலிமையானவை என்பதை, அந்த் தலைவர் வார்த்தையால் மட்டுமல்ல. வாழ்க்கையாலும் உணர்த்த வேண்டும். ஏனெனில் தொண்டர்களைப் பொறுத்தவரை, இயக்கதின் கொள்கைகளுக்கு தரப்பட்ட மனித வடிவமே தலைவர்தான். எனவே, அவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மறைமுகமாக இயக்கக்கொள்கைகள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

“உண்ணாவிரதப் போராட்டம் மூலம் நாம் நாட்டையே இன்று உலுக்கப் போகிறோம். தியாக உள்ளத்தோடும் தளராத நெஞ்சத்தோடும் இதோ உண்ணாவிரதம் என் தலைமையில் தொடங்குகிறது” என்று முழக்கமிட்ட கையோடு தலைவருக்கு ஏப்பமும் வந்து, பிரியாணி வாசனயும் வந்தால் தொண்டர்கள் “சே” என்று வெறுத்து விடுவார்கள்.

தலைமைப் பதவிக்கு வந்ததும் அலட்சியமும் மிதப்பும் ஆக்கிரமித்துக் கொண்டால் தொண்டர்களிடமிருந்து தலைவர் வெகு தூரம் விலகிவிடுவார். முதல் தொண்டனாக த்தன்னை வரித்துக்கொள்ளும் தலைவர்களே செல்வாக்கு மிக்க தலைவர்கள்.

தன்னால் அறிவிக்கப்பட்ட எந்தவொரு கொள்கையையும் முதலில் தான் செயல்படுத்தினார் காந்தியடிகள். தொண்டர்கள் தொடர்ந்தார்கள். “உத்தமத் தொண்டனே! கிளர்ந்து புறப்படு கடலில் உப்பெடு” என்று சொல்லி விட்டு அவர் ஓய்வெடுக்கப் போகவில்லை. தானே முதல் ஆளாய் தண்டியாத்திரையில் நடந்தார். குறைவாகத்தான் கூட்டம் இருந்தது. போகப்போக கடல் போல் கூட்டம் சேர்ந்தது. களத்தில் இறங்கும் தலைவர் மீதுதான் மக்களுக்கு மரியாதை இருக்கும்.

தலைமைப் பண்பின் இருபத்தோராவது விதி!

சரியான தலைவர்கள் தங்களைத் தொண்டர் என்றே கருதுவார்கள். பிறர்தான் அவரைத் தலைவரென்று சொல்லுவார்கள்.

தவறான தலைவர்கள் தங்களைத் தாங்களே தலைவர் என்றே அழைப்பார்கள். பிறரோ அவரை ஏளனமாய் பார்ப்பார்கள்.

இன்றும் பல இயக்கங்களில் “நியமனத் தலைவர்கள்” இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மக்கள் தலைவர்களாக மேன்மை பெறுவதில்லை.

ஏன் இப்படி…? அடுத்த இதழில்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்