Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:

நிஜத்தையும் வெல்ல முடியும்!

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் ஆச்சரியப்படுகிறீர்களா?

ஒரு உண்மைக் கதை.

சார்லி சாப்ளின் ஒரு தமாஷ் நடிகர் என்பதை உலகமே அறியும்.

ஒரு போட்டி வைத்தார்கள்.

சாப்ளின் போலவே திறமையாக யார் வேடமிட்டு நடிக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு – என அறிவிப்பு.

பத்துக்கும் மேற்பட்டோர் அந்தப் போட்டியி கலந்து கொண்டனர்.

எல்லோரும் சாப்ளின் போல தொப்பி, கோட்டு அணிந்து அவரைப் போலவே நடந்தார்கள். ஒரு சில தமாஷ்களைப் பேசினார்கள்.

யாருக்கும் தெரியாமல் சாப்ளினும் அந்தப் போட்டியில் ஒருவராகக் கலந்து கொண்டார்.

அவரும் மற்றவர்களைப் போலவே வேடிக்கை செய்தார்.

இறுதியில் போட்டியின் முடிவு வந்தது.

உண்மையான சாப்ளினுக்கு மூன்றாம் பரிசுதான் கிடைத்து.

அவரைப் போல வேடமிட்டு போட்டியில் பங்குபெற்ற மற்ற இருவருக்கே முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் கிடைத்தன.

உண்மையான சாப்ளினையே வென்ற போட்டியாளர்களின் முகபாவனையும் சிரிப்பும்தான் அதற்கு முக்கியக் காரணம்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

நாம் மூன்று வகையாகத்தான் பிறரிடம் பழகுகிறோம். நமக்கு ரொம்பவும் பிடித்தமானவர்களென்றால் மனங்குளிர சிரிப்போம். வரவேற்போம். இது முதல் வகை.

நமக்கு பேசியே ஆகவேண்டிய நிர்பந்தம் இருந்தால் சம்பிரதாயதிற்காக உபசரிப்போம். கடனுக்காகச் சிரிப்போம். இது இரண்டாம் வகை.

நமக்குப் பிடிக்காதவர்கள் அல்லது எதிரானவர்கள் அல்லது புதிதாக பார்ப்பவர்கள் என்றால், முகத்தையே திருப்பிக் கொள்வோம். இது மூன்றாம் வகை.

இந்த மூன்றாவது வகை சூழ்நிலையிலும் நம்மால் சிரிக்க முடியுமென்றால், பார்த்தவுடன் புன்னகை புரியமுடியுமென்றால், அதுவே உயர்ந்த மனநிலையின் அடையாளம்.

மீண்டும் சொல்வேன், முன்பின் அறியாத மனிதர்களிடம் முழு மனதோடும், புன்னகையோடும் உரையாட முடியுமானால் அதுவே வெற்றிப் புன்னகை.

ஒரு புன்னகை என்னவெல்லாம் சொல்கிறது? என்று பாருங்கள்.

நான் உங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களை விரும்புகிறேன்.

உங்கள் நலனை விரும்புகிறேன்.

உங்களுக்கு உதவ நினைக்கிறேன்.

உங்களிடம் நம்பிக்கையானவன்.

உங்கள் மீது நன்மதிப்பு கொண்டவன்.

உங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவேன்.

உங்களை நம்புகிறேன்.

என் மனம் இனிமையானது.

நான் அன்புள்ளம் கொண்டவள்.

இப்படி பல அர்த்தங்களைக் கொடுக்கிறது.

உங்களின் ஒரு துளி புன்னகை எண்ணற்ற நல்லெண்ணங்களைப் பிறரின் மனதில் உருவாக்கி விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சரி, எப்படி சிரிப்பது என்பதைப் பார்ப்போம்.

உள் மனத்திலிருந்து வரவேண்டும்.

உதட்டின் அசைவு மட்டும் போதாது, கண்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.

கன்னங்களிலும் அது வெளிப்பட வேண்டும்.

அத்துடன் அன்பு, உற்சாகம், மகிழ்ச்சி, பாராட்டு ஆகியவற்றுடன் கூடிய வார்த்தைகளைப் பேசினால் புன்னகையே பொன் நகையாகிவிடும்.

இதை மருத்துவ ரீதியாகப் பார்த்தால், எண்ணற்ற நன்மைகள் உண்டு.

மன அழுத்தம் குறைகிறது.

இரத்த அழுத்தம் குறைகிறது. இதயத்துடிப்பு சீராகிறது.

நுரையீரல் நன்கு விரிந்து சுருங்குகிறது.

இரத்தத்தில் நன்மைகளை உண்டாக்கும் இராசயனப் பொருட்கள் உண்டாகின்றன.

இரைப்பையில் அமிலச் சுரப்பு குறைகிறது இதனால் குடல்புண் உண்டாவது தடுக்கப்படுகிறது.

எல்லா தசைகளும் தளர்வு அடைகின்றன.

உடலின் எதிர்ப்பாற்றல் கூடுகிறது.

இதற்கு மாறாக மன இறுக்கம் கொண்டிருந்தாலோ முதலில் முகம் விகாரமடைகிறது.

இரத்த அழுத்தம் அதிகமாகிறது. உடலில் மேலும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

புன்னகை பற்றி சில பொன்மொழிகள்.

‘இன்று நீங்கள் சிரித்தால், மற்றவர்களை சிரிக்க வைத்தால், நீங்கள்தான் பணக்காரர்.’

‘நீங்கள் கோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திலும் அறுபது மணித்துளிகளின் சந்தோஷத்தை இழக்கிறீர்கள்.’

‘கோபமான வார்த்தைகள் எலும்புகளை உடைக்காது. ஆனால் இதயத்தை உடைத்துவிடும்.’

‘நடந்ததைப் பற்றிய குற்ற உணர்வுகளும், கவலைகளும் மனதில் நிறைந்துவிட்டால் இன்றைய மகிழ்ச்சி ஓடிவிடும். புன்னகை மறைந்து விடும்’.

‘சிரிப்பதற்காக நேரத்தை ஒதுக்குங்கள். அது தான் ஆன்மாவின் இசை’

‘மனம்விட்டு சிரிக்க முடியாதவன் இதயத்தை சுமைகளில் அமுக்கி வைத்துள்ளான்.’

‘சிரிக்கத் தெரியாதவன் எந்த தொழிலிலும் வெற்றி பெற முடியாது.’

‘புன்னகைத்தத் தெரியாதவர்கள், வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்காமல் வேறு ஒருசரியானநபரை அமர்த்தி வாடிக்கையாளர சந்திக்குமாறு செயல்படவேண்டும்’.

‘புன்னகைத்த தெரிந்தவர்களே சமுதாய உறவுகளை வளர்க்கிறார்கள். வெற்றியை அடைகிறார்கள்’.

சிலர், எனக்குப் போலியாக சிரிக்க முடியாது என்பார்கள்.

முகம்மலர சிரித்துப் பேசுதல் போலியல்ல, உயர்ந்த பண்பு. இப்படி நான் சொல்லும்போது,

‘படிக்கறதுக்கெல்லாம் சரி, எனக்கிருக்கிற பிரச்சனையில் சிரிப்பா வரும்?’ என்று சிலர் நினைப்பதையும் அறிவேன்.

எதைப் பார்த்து சிரிப்பது?

இதமான காற்றை ரசித்து சிரிக்கலாம்.

காலை வெயில் மேலே பட்டதும் உண்டாகும் புத்துணர்வை ரசித்து சிரிக்கலாம்.

பறவைகள் பாடி மகிழ்வதைப் பார்த்தும், கேட்டும் சிரிக்கலாம்.

சிரிப்பதற்கான காரணத்தை தேட வேண்டாம்?

உங்கள் குழந்தை செய்யும் குறும்புகளை நினைத்து மகிழுங்கள்.

முட்டாள்தனமாக நீங்கள் செய்த சம்பவங்களை நினைத்து நீங்களே உங்களைப் பற்றி சிரிக்கலாம்.

சரி, இதுவரை நடந்த ஏதாவது ஒரு சந்தோஷத்தை நினைத்தாவது சிரிக்கலாம்.

முடிவாக ஒன்றைச் சொல்வேன்.

நீங்கள் ஒரு தொழிலைச் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.

அதில் உயர்ந்த லட்சியத்தை நினைத்து சரியாக திட்டமட்டு கடுமையாக உழைக்கிறீர்கள்.

அந்த நிலையில் ஒரு வேளை உங்களுடைய லட்சியத்தை அடைவது நிஜமே இல்லை என்று இருந்தாலும் உங்கள் முகத்தில் வெற்றிப் புன்னகை இருக்கமானால் அந்த நிஜத்தையும் நீங்கள் வெல்ல முடியும்.

சாப்ளின் என்ற நிஜத்தையே வென்றுவிட்ட முகபாவனைபோல, உங்களுடைய புன்னகை முகபாவனை நிச்சயமாக எதையும் வென்றுவிடும்.

பாராட்டு அஸ்திரத்தை வீசுவதைப் பற்றி கடந்த கட்டுரையில் அறிந்து கொண்ட நீங்கள் இனி புன்னகை கவசத்தை அணிந்து கொண்டு அந்த அஸ்திரத்தை வீசுங்கள்.

நிச்சயமாக நிஜத்தையும் வெல்ல முடியும்.

(தொடரும்….)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்