Home » Articles » சிரிப்போம் சிறப்போம்

 
சிரிப்போம் சிறப்போம்


ஞனசம்பந்தம் கு
Author:

நாடகமேடை நகைச்சுவைகள் மிகவும் இனிமையாக இருக்கும்.

கலைவாணர் காலத்தில் நடந்ததாக ஒரு நகைச்சுவையைச் சொல்லுவார்கள். புதிய நடிகர் ஒருவர் நாடக ஒத்திகையின்போது மிக அருமையாக நடிப்பார், வசனம் பேசுவார் . ஆனால், மேடைக்கு வந்து மக்களைப் பார்த்துவிட்டால் போதும் நடுக்கம் வந்து சிரமப்படுவார்.

அவர், கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களிடம் வந்து ‘ஐயா, இந்த மேடை நடுக்கம் போக என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.

உடனே கலைவாணரும், ‘ஒண்ணும் கவலைப்படக்கூடாது. வசனம் பேசும்போது ஒரேயடியாக ஜனங்களைப் பார்த்தும் பேசக்கூடாது. கூட நடிக்கும் நடிகர்களையே பார்த்தும் பேசவும் கூடாது. அங்கே ஒரு வசனம் இங்கே ஒரு வசனம். நடிப்பு வந்துடும்” என்றார்.

பேறிஞர் அறிஞர் அவர்களின் நீதிதேவன்ன் மயக்கம் என்றொரு நாடகம். அண்ணா அவர்களே எழுதி அதில் இலங்கேஸ்வரனாக இராவணனாக நடித்தார்.

நாடகப்படி இராவணனை நீதிமன்றத்திலே வைது நீதிதேவன் விசாரணை நடத்தும் காட்சி. ஸ்ரீராமன் மனைவியான சீதா பிராட்டியைக் கவர்ந்து சென்ற குற்றவாளி என்று வழக்கு நடக்கிறது.

அண்ணா, இராவணனாகத் தோன்றி மிக வேகமாக வசனம் பேசி அடுக்குமொழியால் அரங்கத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறார். நீதிதேவனாக நடித்தவர் சமீபத்தில் மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள். அண்ணா அவர்கள் வசனம் பேசிய வேகத்தைப் பார்த்த நாவலர் அப்படியே அசந்து விட்டார். பதில் வசனம் பேசவில்லை.

உடனே அண்ணா அவர்கள், “நீதி தேவனே ஏன் மௌனமாய் இருக்கிறீர்? உமக்கு மறந்து போயிருக்கும். நீதி மறந்து போயிருக்கும். நேர்மை மறந்து போயிருக்கும்… ஏன் எல்லாமே மறந்து போயிருக்கும்’ என்று அவர் வசனத்தை மறந்து போன செய்தியை நினைவூட்டிப் பேசப்பேச மக்கள் புரிந்து கொண்டு ஆரவாரம் செய்தார்களாம்.

இந்த நினைவூட்டலுக்கு ஒரு நகைச்சுவை உண்டு. வெளியூருக்குச் சென்றிருந்த கணவனுக்கு மனைவி கடிதம் ஒன்றை எழுதினாளாம்.

‘அன்பு கணவனுக்கு,

உங்களைப் பிரிந்ததிலிருந்து வருத்தத்தோடு இருக்கிறேன். உங்களைக் காணப் பிரியத்தோடு உள்ளேன். உங்களை எதிர்பார்த்ததோடு…’

கடித்த்தைப் படித்த கணவன் புரிந்து கொண்டான். மனைவி, ஊருக்குச்செல்லும்போது ‘தோடு’ வாங்கி வரச் சொன்னாள் என்பை நினைவூட்டும் கடிதம்தான் இது என்று.

இது மேலோட்டமாகப் பர்த்தால் ஒரு நகைச்சுவைத் துணுக்காகத் தெனபடும். ஆனால், அடிபடையில் இது நினைவாற்றல் பயிற்சிக்கான ஒரு ஆலோசனை. ஒரு சொல்லை வெவ்வேறு பொருள்படும்படி தொடர்ந்து பயன்படுத்தும்போது அந்தச்சொல் ஆழ்மனதில் பதிந்து தேவையான நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

ஒரு திருமண வீட்டிற்குக் கணவனும்,மனைவியும் சென்றார்கள். போய் அமர்ந்ததும் மனைவியும் அனைவருக்கும் குளிர்பானம் கொடுத்தார்கள். கணவன் குடித்தபின், நேராக்க் குளிர்பானம் கொடுக்கும் இடத்திற்குப் போய் பலமுறை அதை வாங்கி வந்து குடித்துக்கொண்டிருந்தான்.

மனைவிக்குக் கோபம் வந்து விட்டது. இப்படி பல முறை வாங்கி வந்து குடிக்கிறீர்களே, அவர்கள் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்களா?’ என்றாள்.

‘நினைக்கமாட்டார்கள்’ என்றான் கணவன். ‘ஏன்’ என்றாள் மனைவி எரிச்சலுடன்.

‘ஏனென்றால், ஒவ்வொருமுறை குளிர்பானத்தை வாங்கும்போதும், என் மனைவிக்குத்தான் என்று உன் பெரைச் சொல்லித்தானே வாங்கி வருகிறேன்’ என்றானாம்.

சங்க காலத்தில் ஆண் மானும் பெண் மாணும் ஒரு கோடைக் காலப் பகலில் குடிநீர் அருந்தப் போய், குடிநீர் குறைவாக இருக்க, பெண் மான் பருகட்டும் என்று ஆண் மான் விட்டுத் தந்த காட்சிகளைப் படித்திருக்கிறோம்.

இன்றைய நவீன உலகில், கணவன் மனைவி உறவுக்குள்ளும் சுயநலம் புகுந்து கொண்டு ஆட்டி வைக்கிற சோகத்தை இந்த நகைச்சுவைத் துணுக்கு நாகிரீகமாக சுட்டிக் காட்டுகிறது.

ஒரு பேருந்து வேகமாகப் போய் விபத்துக்குள்ளாகி விட்டது. ஆளுக்கு ஒரு பக்கம் சிதறிக் கிடந்தார்கள். இரவு நேரம் இருட்டு. ஒருவன் கையைக் காணவில்லை என்று என்றான். அதற்குள் கண்டக்டர் ‘ என் காதைக் காணோம், காதைக் காணோம்’ என்று கத்த பயணம் செய்த ஒருவன் இருட்டில் ஒரு காதைத்தேடிக் கொண்டு வந்து, ‘இந்தக் காதா?’ என்று கேட்டான்.

கண்டக்டர் உடனே, “இல்லை இது என் காதில்லை’ என்றார். சொல்லி விட்டு ‘என் காதில் பேனா சொருகி வைத்திருந்தேன. அதுதான் என் காது’ என்றாராம்.

மனிதன் பழக்கத்திற்கு அடிமை. தேவைக்கு ஏற்றாற் போல பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளுகிற பக்குவம் இல்லாதவர்கள் இயந்திரம் போல் இயங்குவதையல்லவா இந்தக் கதை சொல்லுகிறது?

காது என்பது எதற்காக என்று திருவள்ளுவரைக் கேட்டால் நல்ல விஷயங்களைக் கேட்பதற்காக என்பார். இந்த கண்டக்டரோ அதனை பேனா செருகும் ஸடேண்டாகக் கருதியிருக்கிறார். நம்மில் பலருக்கும் கூட காது என்பது மூக்குக்கண்ணாடி மாட்ட மட்டும் தானே பயன்படுகிறது?

அடுத்த மாதமும் சிரிப்போம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்