Home » Articles » நிறுவனர் பக்கம்

 
நிறுவனர் பக்கம்


admin
Author:

ஒத்திப்போடுதல்

இன்று செய்யலாம. நாளை செய்யலாம் என்று நாளைக் கடத்திக் கொண்டே போவது பலருக்கு வழக்கமாகிட்ட ஒன்றாகும். ஒத்திப் போடுதல் (Postponement) என்பது ஒரு வகையான பழக்க நோய் (Habit disease) தான். இந்த நோய்க்கு ஆளானவர்கள் தங்கள் காலைக் கடன்களை கூட, குளிப்பதைக்கூட தள்ளி வைப்பார்கள். இதனால் என்னவாகும்? உடல் நலம், மனநலம் எல்லாம் கெட்டுபோகும்; அன்றைய நாள் வீணாகும்.

ஒத்திப் போட்டதன் விளைவு

பருவ மழையில் மரம் நட எண்ணியதை ஒத்திப்போடுவதால் என்ன நிகழும் என்று எண்ணிப்பாருங்கள். பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் காலத்தில், நமது குழந்தைகளையும் சேர்க்காவிட்டால் எவ்வளவு பாதிப்பு நேரும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

சிலர் நல்ல வாய்ப்புகள் வரும் போதெல்லாம் திருமணத்தை ஒத்திப்போட்டு விட்டு, பிறகு திருமணம் நடந்தால்போதும் என்ற நிலைக்கு ஆளாவதை மனக்கண்முன் நிறுத்துங்கள்.

ஒரு பொருளை வாங்க நினைப்பதும் வேறு எந்தக்காரணமும் இன்றி நாளைக்கு நாளைக்கு என்றுதள்ளிப் போடுவதால் அந்தப் பொருளின் விலை இரண்டு மடங்காக ஏறிவிடுவதைக் கணக்கிட்டுப் பாருங்கள்.

அலுவலகங்களில் கடிதங்களும் கோப்புகளும் தாமதமாக அனுப்பப்படுவதால் பொதுமக்கள் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். உரியகாலத்தில் கடிதங்களுக்குப் பதில் எழுதாவிட்டால் எதிர்பார்ப்பவர்கள் எவ்வளவு அல்லல் உருவார்கள் என்பதை நம் அனுபவத்தை முன் நிறுத்திச் சிந்தியுங்கள்.

இப்படி, எந்த் துறையை எடுத்தாலும் ஒத்திப்போடுதல் அல்லது தள்ளி வைத்தல் என்பது, பல்வேறு வகையான தொல்லைகளையும் இழப்புகளையும் எதிர்கால வளர்ச்சிக்குப் பாதிப்புகளையும் உருவாக்கும் என்பது நடைமுறையில் காணும் உண்மையாக இருக்கிறது.

சீழ்பிடித்த நிலையில் உள்ள ஒரு நோய்க்கு மருத்துவம் பார்ப்பதைத் தள்ளி வைத்துக் கொண்டே இருந்தால், புரையோடி அந்த உறுப்பை எடுக்க வேண்டி வரும். அல்லது உயிருக்கே ஊறும் நேரலாம் அல்லாவா? கையொடிந்த உடனே மருத்துவரிடம் சென்று கட்டுப் போட்டு சரி செய்து கொள்ளாமல், அடுத்த நாள் சென்றால் வீக்கம் ஏறபட்டு உயிர்போகும் வலியை அடையும் சூழ்நிலையை எத்தனை பேரிடம் பார்த்து இருக்கிறோம்.

கடன் வாங்கியவர்கள் கடனைக் கட்டுவதைத் தள்ளி வைத்துக்கொண்டே, வேண்டாத வெவ்வேறு பணிகளில் செலவு செய்து கொண்டிருந்தால், வட்டியும் முதலுமாகச் சேர்த்துத் திரும்பக்கட்ட முடியாமல் சொத்தையே இழந்தவர்கள் எத்தனைபேர்?

பலபேர் புத்தகம் எழுதி வெளியிடுவதில் காலத்தைத தள்ளிக்கொண்டே செல்வதால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நூல் வெளியிட வேண்டிய அவசியமே இல்லாமல், அதே கருத்துள்ள நூல்கள் எத்தனை வெளிவந்து விடுகின்றன.

இவ்வாறு அன்றன்று அவ்வப்பொழுது செய்ய வேண்டிய பணிகளை தள்ளிப் போடுவதால் பலவேறு இழப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. முன்னேறத்துடிபவர்கள் இழப்புகளை அடைந்தால் எப்படி முன்னேறுவது? சாதனைகளை நிகழ்த்துவது? அதனால் அவற்றுக்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றைப் போக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஏன் ஒத்திப் போடுகிறீர்கள்?

1. பலருக்குத் தாங்கள் எடுத்துக் கொண்ட செயலை எப்படி தொடங்குவது என்று தெரியாமலேயே தள்ளிப் போடுகிறார்கள்.

2. இப்போது நினைப்பதைவிட மிகவும் நன்றாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் பலரை தொடங்க விடாமலேயே தடுத்து விடுகிறது.

3. நம்மால் முடியுமா என்ற அவநம்பிக்கையால் பலர் செயல்களை ஒத்திப் போட்டுக் கொண்டே போகிறார்கள்.

4. பலருக்கு சோம்பல் ஒரு காரணமாகலாம்.

5. இன்னும் சிலர் ஒத்திப் போடுவதால் சில சிக்கல்கள் தாமாக சரியாகிவிடும் என்பதால் ஒத்திப் போடுவது உண்டு.

6. பலருக்கு பொருளாதாரம், வேறு சிலருக்கு சோதிடம், இன்னும் சிலருக்கு நேரம் சரியில்லை, எதைத் தொட்டாலும் தோல்வியாகவே முடிகிறது. இப்படி பலவேறு காரணங்கள்.

ஒத்திப் போடுவதால் விளையும் தீமைகள்

1. அதை அதை அந்தந்த காலத்தில் செய்யாவிட்டால் அதற்குரிய பலன் கிட்டாமல் போய்விடும்.

2. ஒத்திப் போடுதல் என்பது ஒரு கெட்ட பழக்கம். அவரா! எதைச் சொன்னாலும் நாளைக்குப் பார்க்கலாம் அடுத்த முறை பார்க்கலாம் எனபார். நாம் வேறு ஆளைப் பார்ப்போம் என்ற நிலை உருவாகி வளர்ச்சியே பாதிக்கப்படுவது உண்டு.

3. ஒத்திப் போடுவதால் வேலைகள் எல்லாம் குவிந்துவிடும். அதனால் ஒரு மலைப்பு ஏற்பட்டு எந்த வேலையையும் செய்யமுடியாத ஒரு மந்த நிலை ஏற்படுவதும் உண்டு.

4. சில செயல்களை ஒத்திப்போடுவதால் நட்டம் கூடுதலாகும். உழவுத் தொழிலில் உரிய காலத்தில் களை எடுக்காவிட்டால் உரிய காலத்தில் அறுவடை செய்யாவிட்டால் நட்டம் தான் மிகுதியாகும்.

5. ஒத்திப் போடும் பழக்கம் சமுதாயத்தில் நம்மை மதிப்பிழக்கச் செய்துவிடும். நம் குடும்பத்தில் உள்ளவர்களும் இதே முறையைப் பின்பற்றினால் காலைச்சிற்றுண்டி மதியம் தான் கிடைக்கும்.

என்ன செய்யவேண்டும்?

1. ஒரு செயலை நன்றாகச் செய்யவேண்டும். சில காலம் பொறுத்திருந்து செய்தால் நன்றாக இருக்கும் என்பதெல்லாம் தவறான எண்ணம், ஒன்றைத் தொடங்கிச் செய்யும் போதுதான் அனுபவமும் தெளிவும் முழுமையும் உண்டாகும்.

2. முன்னேறுகிறவர்கள் கால நேரம் பார்த்துக் கொண்டு இருப்பதில் பயனில்லை. தேர்வுகள் எந்த நாளாயினும் 10 மணிக்குத்தானே தொடங்குகிறது. பேருந்து, புகைவண்டி, விமானம் எல்லாம் ஒவ்வொரு நாளும் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானே புறப்படுகிறது. ஒவ்வொன்றிற்கும் சோதிடம் பார்த்துக் கொண்டிருந்தால் இந்த உலகம் இயக்கம் நடைபெறுமா?

3. அன்றைய வேலைகளை கூடுமானவரை அன்றன்றே செய்து முடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நமக்கு வரும் கடிதங்களுக்கு அன்றே பதில் எழுதி விடுவது மிகச்சிறந்த பழக்கமாகும். கடிதத்தில் செய்தி மட்டும் இருந்தால் போதும், கடிதத்தையே கட்டுரையாக எழுதும் வழக்கத்தை விட்டு விட்டால் வேலை எளிதாகிவிடும். டாக்டர் மு.வ.வின் கடிதங்களைப் பார்த்தால் நறுக்கென்று நாலுவரியில் இருக்கும்.

4. முடிக்கக்கூடிய பணிகளையே, முடியக்கூடிய வேண்டுகோள்களையே ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றவற்றை முடியும், முடியாது என்பதை நயமாகவும் நாகரிகமாவும் எடுத்துச் சொல்லிவிடவேண்டும். இந்தப் பழக்கம் நீண்டநாள் பணியில் மிகுந்த நன்மையை விளைவிக்கும்.

5. ஒத்திப்போடுவதால் நம்மையும் அறியாமல் மனக்கவலைதான் மிகுதியாக உண்டாகும். காரியங்களை அவ்வப்போது செய்து விடுவதால் நமக்குள் ஒரு தெளிவும் துணிவும் தெம்பும் உண்டாகும்.

அதனால் இவை சிறுசிறு வேலைகள் தானே என்றோ, நாளைக்கு செய்யலாம் என்றோ, நீங்கள் முன்னேற்றத்தைத் தள்ளி வைக்கிறீர்கள். என்பதுதான் பொருள்.

நீங்கள் சூரியனைப் போல சுழன்று கொண்டே இருங்கள். அவ்வாறு சுறுசுறுப்பாக இயங்குகின்றவர்களால்தான் இந்த கதிரொளியின்கீழ் எதையும் சாதிக்க முடியும் அவர்கள் தாம் சாதனையாளர்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்