Home » Cover Story » நம்பிக்கையும் நானும்

 
நம்பிக்கையும் நானும்


வீரபாண்டியன் தி
Author:

– சன். டி.வி. திரு. தி. வீரபாண்டியன் பேசுகிறார்.

(திரு. தி. வீரபாண்டியன், சன் டிவியின் அரசியல் விமர்சகர். “ஞானபீடம்” நிகழ்ச்சித் தயாரிப்பாளர். இவற்றைத் தாண்டி ஒரு நல்ல கவிஞர், பேச்சாளர். திரையில் தோன்றுவது போலன்றி, மெனமையான மனிதர், பல அரசியல் தலைவர்களை கேள்விக்கணைகளால் திணற வைக்கிற திரு. வீரபாண்டியன், தன் நல்லியப்புகளால் அதே தலைவர்களின் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் திகழ்கிறார். இதோ… தன்னம்பிக்கை வாசகர்களுக்காக, திரு. வீரபாண்டியன் அவர்களுடன் ஒரு “நேருக்கு நேர்”)

உங்கள் குடும்ப பின்புலம் பற்றிச் சொல்லுங்களேன்?

நான் பிறந்தது திருத்துறைப்பூண்டியில். என் தந்தை திரு. திருநாவுக்கரசு விடுதலைப் போராட்ட வீரர். பெருந்தலைவர் காமராஜரின் உற்ற நண்பர். நேர்மையான அரசியல், தூய்மையான பொது வாழ்க்கை, இதற்கெல்லாம் இலக்கணமாகத் திகழ்ந்த அவரது வாழ்க்கை முறை என்னுள் ஆழப்பதிந்தது.

அய்யம்பேட்டை மாரிமுத்து, கழுகுமலை கந்தசாமி போன்ற நல்ல கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவார் என் தந்தை. அவர்களோடு பழகிப்பழகி, வீதி நாடகங்களில் பார்வையாளனாக கூடப்போய், நாடக வெறி எனக்குள் ஏற்பட்டது. அதே நேரத்தில் இலங்கை வானொலியின் தாக்கம அதிகமாக இருந்தது.

சிறுவனாக இருந்தபோதே மற்றவர்களுடன் சேர்ந்து கயிறுகட்டி “வானொலி நிலையம்” நடத்துவது, பெஞ்சு போட்டு, மேடைப்பேச்சு நிகழ்த்துவது, இவைதான் என் பிள்ளைப் பருவ விளையாட்டு, வானொலியில் பணிக்கு சேர வேண்டுமென்பது பிஞ்சு வயதிலேயே பதிந்து விட்ட கனவு.

அந்தக் கனவு நனவானதா?

ஆனது. ஆனால் அவ்வளவு எளிதாக இல்லை. சலிக்காமல் நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்றுக் கொண்டேயிருந்தேன். 2000 பேர் பங்கேற்பார்கள். அதிலிருந்து இறுதித் தேர்வுக்கு இருவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த இரண்டு பேரில் ஒருவனாகவே நான் எப்போதும் இருப்பேன். “நீயா நானா” என்கிற நிலைதான் ஒவ்வொரு நேர்முகத் தேர்விலும்.

இறுதியாக சென்னை வானொலியின் தேர்வில் பங்கேற்றேன். 2400 பேரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதித்தேர்வுக்குப் போனேன். அதில் நடுவர்களாக திரு. நா பார்த்தசாரதி, திருமதி. அரசுமணிமேகலை, திரு. ஜி. சுப்பிரமணியம் போன்றோர் பங்கேற்றனர்.

கடுமையான போட்டி. நான் தேர்வு செய்யப்பட்டதாக மாலையில் அறிவிக்கப்பட்டது. நா. பா. என் முதுகில் தட்டி, ‘உனக்கு இந்த வேலையை வாங்கித் தந்தவர் மகாகவி பாரதி’ என்றார். ஏனென்றால், தேர்வில் ‘பாரதியின் குயில் பாட்டு எந்த ஊரில் நடப்பதாக அமைந்துள்ளது?’ என்று கேட்டனர். நான் உடனே

“காலை யிளம் பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்’ என்று தொடங்கி

“செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகரின்
மேற்கே சிறு தொலைவில் மேவுமொரு மாஞ்சோலை’ என்று குயில்பாட்டு வரிகளை மேற்கோள் காட்டி பதில் சொன்னேன்.

சென்னை வானொலியில் பணிபுரிந்த நாட்களில்தான் சிங்கப்பூர் வானொலியில் வேலை வாய்ப்பு உள்ளதாக விளம்பரம் வெளியானது. அதற்கும் விண்ணப்பித்தேன். அங்கு வேலை கிடைத்து ஐந்து வருடங்கள் பணிபுரிந்தேன்.

அரசியல் விமர்சகராக இன்று விளங்குகிறீர்கள். படித்த வர்க்கம் அரசியலிலிருந்து விலகியிருப்பதை உணர்கிறீர்களா?

அரசியல் சரியில்லை என்று சொல்லி சிலர் விலகியுள்ளனர். அரசியல் ஒரு நல்ல கருவி. இன்று எல்லாவற்றிலும் அரசியலுக்கு இடம் இருக்கிறது. எனவே, அரசியலைப் புறக்கணித்துவிட்டு ஒரு சமூகம் வாழ்ந்துவிட முடியாது என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை இருக்கிறது.

அரசியல் மாசடைந்திருப்பதாகக் கருதினால், அதனைத் தூய்மை செய்ய முன்வருதுதான் படித்தவர்களின் கடமையே தவிர வட்டு விலகுவதால் எந்த நன்மையும் ஏற்பட்டு விடாது.

அரசியலை புறக்கணிக்கக்கூடாது தூய்மை செய்ய வேண்டும் என்கிறீர்கள். இந்த எண்ணம் ஏற்பட்டது எப்படி?

அரசியல், புறக்கணிக்கக் கூடியதல்ல என்பது பிள்ளைப் பருவத்திலிருந்தே எனக்குள் ஏற்பட்ட எண்ணம்தான். என் அப்பா விடுதலைப்போராட்ட வீர்ர் என்று சொன்னேன். விடுதலையடைந்த இந்தியாவிலும் அவர் அநீதிகளுக்கு எதிரே தொடர்ந்து குரல் கொடுப்பவராகவும் திகழ்ந்தார்.

ஒருமுறை திருத்துறைப்பூண்டி நகரில் காவல்துறை ஆய்வாளராக ஒருவர் பணியாற்றினார். வரம்பு மீறி பொதுவாழ்க்கைப் பிரச்சனைகளில் தலையிடுவார். இரவு விடுதிகளில் சீட்டாடுவார். அப்பாவி மக்களை அடிப்பார். கேட்டால், ‘நான் யார் தெரியுமா?’ போலீஸ் மந்திரி கக்கனுக்கு சொந்தமாக்கும். ஜாக்கிரதை’ என்று மிரட்டி வந்தார்.

ஒரு நாள் அமைச்சர் க்ககன் திருத்துறைப்பூண்டியில் கொடியேற்றுவதாக ஏற்பாடாகி இருந்தது. என் அப்பாதான் அந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அமைச்சர் வந்ததும் அந்தக் காவல் துறை ஆய்வாளர் கார் கதவைத் திறந்துவிட்டார்.

என் அப்பா ஆவேசமாகிப் போய் ‘கொஞ்சம் இருங்க கக்கன்! இந்த மாதிரி ஆளுங்ககிட்டே அடிவாங்கத்தான் நாம மக்களுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தோமா? இவரு 3 சீட்டு விளையாடறாரு. கேட்டா கக்கனுக்கு சொந்தம்னு சொல்றாரு. நீங்கதான் இப்படி நடக்கச்சொல்லி அனுமதி கொடுத்தீங்களா? ஒண்ணு அவரு இந்த ஊரில் இருக்கணும். இல்ல நாங்க இருக்கணும் என்று சீறினார்.

24 மணி நேரத்தில் அந்த ஆய்வாளர் மாற்றப்பட்டார். தவறுகளைத் தட்டிக் கேட்கிற இயலபை என் தந்தையிடம் பார்த்தேன். சிறுமை கண்டு பொங்குகிற குணம்தான் சமூக மாற்றங்களுக்கு ஆதாரம் என்று உறுதியாக நம்பத் தொடங்கினேன்.

நேருக்கு நேர் நிகழ்ச்சி மூலம், அரசியல் அமைப்பிலுள்ள பல தலைவர்களை விமர்சனம் செய்கிறீர்கள். அரசியல் தலைவர்கள் மீது இருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்வதாக உங்கள் கேள்விகள் பலநேரம் அமைந்து விடுகிறதே?

அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை இழக்கச் செய்வதல்ல என் நோக்கம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்வதுதான் என் நோக்கம்.

அவர்கள் சமூகத்தின் பிரதிநிதிகள். ஆனால் சமூகத்தில் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். யாரும் விசாரணைக்கு உடபடுவார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சி மூலம் நாம் உணர்கிற விஷயம். அதுவும் மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளைத்தான் நான் கேட்கிறேன்.

மக்களை சந்திக்கும்போது “என்னங்க! இந்தக் கேள்வியை விட்டுட்டீங்களே’ என்று அவர்களே எடுத்துத் தருவதுதண்டு. எனவே மக்கள் கருத்துத்தான் என் கேள்விகளில் எதிரொலிக்கின்றன.

இந்த நிகழ்ச்சி மூலம் பல அரசியல் தலைவர்களின எதிர்ப்பும் நீங்கள் பெற வேண்டி வந்திருக்குமே?

தொடக்கத்தில் என் கேள்விகளை அதிகப் பிரசங்கித்தனம் என்று சொன்னவர்கள் உண்டு. ஆனால், நான் இந்தக் கேள்விகளுக்காக கடுமையாக உழைக்கிறேன். ஒவ்வொரு அரசியல் தலைவரைப் பற்றியும் வருகிற செய்திகளைத் தனித்தனிக் கோப்புகளில் திரட்டி வைப்பேன். பேட்டியின் போது அவர்கள் சொன்ன கருத்தை எங்காவது மறுத்தால் உடனே ஆதாரங்களைக் காட்டுவேன். இந்த வழக்கத்தை நான்தான் முதலில் ஏற்படுத்தினேன்.

அயல் நாட்டு தொலைக்காட்சிகளில் இது போல் நிகழ்ச்சிகள் இன்னும் கடுமையாக நடக்கும். முதலில் வருத்தப்பட்ட சில தலைவர்கள் அவர்களுக்கு எதிரான தலைவர்களையும் அதே நேர்மையுடன் பேட்டி கண்டதும் புரிந்து கொண்டு நட்பு பாராட்டத் தொடங்குகிறார்கள்!

நம்பிக்கையோடு வாழ்வின் பல கட்டங்களைக் கடந்திருக்கிறீர்கள் நம்பிக்கையில் ஊற்றுக் கண் எது?

நல்ல புத்தகங்களே நம்பிக்கையின் ஊற்றுக் கண்கள். எத்தகைய புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்கிறோமோ அந்த அடிப்படையில் வாழ்வில் உயர்வுகளை நாம் பெற முடியும்.

ஜேம்ஸ் ஆலனின் ‘மனம் போல் வாழ்வு’ இதற்கொரு உதாரணம். ‘எதனால் நீ அதிகம் கவரப்படுகிறாயோ, அதைவிடவும் பெரிய ஜீவ ஊற்று உன்னிடமிருந்தே வெளிப்படும்’ என்பது அறிஞர்களின் கருத்து.

நம்மை நாமே செதுக்கிக் கொள்ளவும், நம்மீது நாமே நம்பிக்கை பெறவும் நல்ல புத்தகங்களைத் தேடிப்படிக்க வேண்டும். லட்சிய வாழ்க்கையை உணர்ந்து பயணம் செய்யத் தொடங்குவதே பலன்தரும்.

இன்று காட்சி ஊடகமே எல்லாம் என்று கருதுகிற மனநிலை உள்ளது. காட்சி ஊடகங்களைப் போலவே புத்தகப் பழக்கமும் முக்கியம் என்பதை இளைய தலைமுறை உணர்வது நல்லது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்