Home » Articles » சிரிப்போம் சிறப்போம்

 
சிரிப்போம் சிறப்போம்


ஞனசம்பந்தம் கு
Author:

இந்த நூற்றாண்டு.. வேகம். மிக வேகம். கணவன், மனைவியை தாஜா பண்ண… குழந்தைகள், பெற்றோர்களை சந்திக்க கூட… மாணவர்கள், வகுப்புக்கு போக்கூட நேரமில்லாத வேகமான உலகம்.

“டென்ஷன்” மன இறுக்கம்.

இதைப் போக்க யோகா செய்யுங்கள் என விளம்பரங்கள். யோகா வகுப்பிற்கு, “டென்ஷனோடு” ஓட்டம். ஞாபக சக்தியை வளர்க்க மாத்திரை சாப்பிடுங்கள் என ஆலோசனை. ஒரு வாரமாக, தொடர்ந்து ஞாபக சக்திக்காக மாத்திரைகள் சாப்பிட்ட என் நண்பர், அந்த மாத்திரை டப்பாவை எங்கே வைத்தோம் என ஞாபக மறதியில் அலைகிறார்.

இந்த வேகம், டென்ஷன், கோபம் எல்லாம் தணிய ஒரு சர்வரோக நிவாரணி இருக்கிறது. “சிரிப்பு” தான் அது. மலிவாக கிடைக்கக் கூடியதும் கூட!

“குழந்தைக்கு இந்தத் தடவை எங்கே மொட்டை எடுக்கப்போற?” “எப்பவும் போல தலையிலதான்” கேட்ட வேகத்திற்கு பதில் சொல்லும் வேகம்.

இதில் எங்கே சிரிப்பது என்கிறீர்களா? சிரிக்க இடமுண்டு. நகைச்சுவை தோன்றக் களமும் உண்டு.

15 ஆண்டுகளுக்கு முன் எங்கள் கிராமத்திற்கு டி.வி. வந்தது. சிலர் வீட்டில் வாங்கி பலர் பார்த்தார்கள். எங்கள் வீட்டில் டி.வி. பார்க்க எப்போதும் ஒரு “மினி தியேட்டர்” கூட்டம் அமர்ந்திருக்கும். தினசரி நான் கல்லூரி முடிந்து, நகரத்திலிருந்து கிராமத்திற்குப் போய் இரவு 8 மணி அளவில் வீட்டுக் கதவை திறந்தால்.. ஒரு கதிர் அறுப்பு கூட்டமே வெளியேறும்.

ஒரு நாள் ஒரு சிக்கல் வந்தது. தினமும் நான் 8 மணிக்கு வருவதைப் பார்த்த, படம் பார்க்க வந்த ஒரு பொடின் “இந்த ஆளும் தினம் தினம் வந்துர்றாண்டா” என்றான் எரிச்சலோடு. நானே திகைத்துப் போய்விட்டேன்.

டி.வி. வந்தால் இது போன்ற சூழல்கள் தோன்றுகின்றன. இதுபோல் பல களங்கள். எல்லா இடத்திலும் நகைச்சுவை பிறக்கிறக்கிறது. குழந்தைகளிடம் இருந்தே தொடங்குவோம்.

ஒரு அப்பா பையனிடம் கேட்டார். “டேய் கணக்குல நீ எத்தனை மார்க்?”

“அண்ணணைக் காட்டிலும் ரெண்டு மார்க் கம்மி” இது பையன்.

“சரி… அண்ணன் எத்தனை?”

“அண்ணன் ரெண்டு” இந்த உரையாடலைப் பேசுகிற வேகத்தில் படித்தால்தான் புரியும்.

குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் உறவு எப்படி?

ஒரு அம்மா தன் குழந்தையை இடுப்பில் வைத்து சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள். குழந்தை சாப்பிட மறுத்தது.

“உன்ன பேய் கிட்ட புடுச்சுக் குடுக்கவா? தாயார் மிரட்டிக் கேட்டாள்”.

“குடுத்துக்கோ” – இது குழந்தை.

“சரி.. பூதத்துக்கிட்டே கொடுக்கவா?”

“குடுத்துக்கோ” – திகைத்துப் போன தாய் சொன்னாள்…

“அப்ப சரி உன்னை உங்க டீச்சர் கிட்ட பிடிச்சுக் கொடுத்திடவா” – சடாரென்று குழந்தை சாத்த்தை விழுங்கி விட்டது.

சிரிப்பின் களத்தை மாற்றிப் பாருங்கள்.

ஒரு ஆஸ்பத்திரி. நர்ஸ் ஓடி வந்து டாக்டரிடன் “டாக்டர் அந்த நோயாளி ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டான்”

“எப்படி… பிழைச்சுட்டானா?”

“ஆமா?…நம்ம ஆஸ்பத்திரி சுவர் ஏறிக்குதித்து ஓடிட்டான்”. ஆபத்தான விஷயத்தில் கூட நகைச்சுவை தோன்றுகிறது.

கிராமத்தில் சில நகைச்சுவைகள் ஆச்சரியமாக இருக்கும்.

ஒருவன் தெருவில் போய்க்கொண்டிருந்தான். பின்னால் வந்த ஒருவன் அவனிடம் கேட்டான். போனவாரம் செத்தது நீயா? உங்க அண்ணனா?”

அதற்கு அவன் குழப்பத்தோடு சொன்னான்…

“எங்க வீட்டிலதான் கேட்டுச் சொல்லனும்”

உலகம் முழுவதிலும் உள்ள மேதைகளின் வரலாற்றைப் பார்த்தால் மிக மெல்லிய நகைச்சுவைகள் இழையோடுவதைக் காணலாம்.

அமெரிக்காவின் ஜனாபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் ஒரு முறை தன்னுடைய பூட்ஸ்களுக்கு பாலிஸ் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய மந்திரி சபையில் இருந்த ஒருவர் வந்து ஆச்சரியத்தோடு ஆபிரகாம் லிங்கனிடம் கேட்டாராம்” என்ன உங்களுடைய பூட்ஸ்களுக்கு நீங்களே பாலிஸ் போடுகிறீர்களே!

அதற்கு லிங்கன் அமைதியாக கேட்டாராம் “நீங்கள் யாருடைய பூட்ஸ்களுக்கு பாலிஸ் போடுவீர்கள்?”

ஆசிரியர், மாணவர்களுக்குகிடையே நடக்கும் நகைச்சுவை எப்போதும் இனிக்கும், மகிழ்வைத் தரும்.

ஒரு நாள் வகுப்பறையில் நான் கரும்பலகையில் ஒரு திருக்குறளை எழுதிக் காட்டி, ஒரு மாணவனைப் பார்த்து “இதை எழுதியவர் யார்?” என கேட்டேன்.

“நீங்கள் தான் சார்” சட்டென்று சொன்னான் மாணவன்.

வெகுவேகமாகப் பதில் சொல்லும் மாணவர் பலர் உண்டு.

“இரண்டாம் பானிப்பட் போர் ஏன் நடந்தது?” ஆசிரியர் கேட்டார்.

“முதலாம் பானிப்பட் போர் சரியாக நடக்காததால்” என்றான் மாணவன்.

குடும்பச் சூழலில், திருமண வீட்டில் பேருந்து நிலையங்களில், ரயில் பிரயாணங்களில், திரை அரங்குகளில், எங்கும் உள்ள நகைச்சுவையை மாதந்தோறும் சந்திப்போம். அவைப்பற்றிச் சிந்திப்போம்.

மீண்டும் அடுத்த மாதம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2001

மனசு விட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!
கேள்வி – பதில்
வாசகர் கடிதம்
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?
தலைப்புச்செய்தி
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
பொதுவாச்சொல்றேன்
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”
"ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"
வணக்கம் தலைவரே
பெற்றோர் பக்கம்