Home » Cover Story » நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!

 
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!


admin
Author:

“விட்டு விடுதலையாவோம்” தன்னம்பிக்கை கூட்டம் 8-07-2001 அன்று ஒரு வினோதமான சம்பவத்துடன் தொடங்கியது.

கூட்ட ஏற்பாடுகளை கவனிக்க நிர்வாக ஆசிரியர் திரு வேணுகோபால் மாலை 4.30 மணி அளவில் அரங்கிற்குள் நுழைந்தார். நுழைந்தவர் வேகவேகமாக வெளியே வந்துவிட்டார். என்ன காரணம் என்று கேட்டார்கள். “ஏதோ கூட்டம் நடக்குது போல இருக்குதுங்க, 200, 300 பேர் உட்கார்ந்திருக்காங்க. நான் பாட்டுக்கு உள்ளே போயிட்டேன்” என்றார்.

அருகிலிருந்த அரங்க உதவியாளர் “இல்லீங்க உங்க கூட்டத்துக்குத்தான் முன்கூட்டியே வந்திருக்காங்க” என்றார். ஆம் 4.30 மணிக்கு அரை அரங்கம் நிரம்பியிருந்தது. 5.15 மணிக்கு முழு அரங்கமும் நிரம்பி நடைபாதையிலும் ஆர்வத்தோடு, வாசகர்கள், இளைஞர்கள் வந்து நிரம்பியிருந்தனர்.

மிகச் சரியாக 5.52க்கு தன் பேரவையினர் புடைசூழ வந்து இறங்கினார் கவிப்பேர்ரசு வைரமுத்து. முன்னதாகவே வ்திருந்த டாக்டர் வினு அறமுடன் ஒரு சின்ன உரையாடல். அதற்குள் 6 மணி ஆகிவிட்டது. அரங்கிற்கு பலத்த கரகோஷத்துக்கிடையில் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.

விழாவின் முதல் கட்டமாக தன்னம்பிக்கை இதில் இணையாசிரியர் மரபின் மைந்தன் முத்தையா எழுதிய “இதுக்குப்போய் அலட்டிக்கலாமா” என்கிற நூலை கவிப்பேர்ரசு வைரமுத்து வெளியிட கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு. கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

முதலில் டாக்டர். வினு அறம் பேச அழைக்கப்பட்டார். கடந்த இதழில் வெளியாகி இருந்த அவரது நேர்காணலைப் படித்து ஈர்க்கப்பட்டிருந்த வாசகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உரையாற்றினார்.

நல்ல தமிழில் பேச இயலாது என்பதை வருத்தத்தோடு முதலிலேயே சொல்லிக்கொண்ட வினு அறம் ஆங்கிலம் கலந்து அவ்வப்போது பேசினாலும் மொழியைக் கடந்திருந்த உணர்ச்சியும், இந்த தேசம் குறித்த ஆழ்ந்த அக்கறையும் அரங்கையே கட்டிப்போட்டது எனலாம்.

பேரூர் அருகிலிருக்கும் சின்னஞ்சிறு கிராமங்களிலிருந்து அயல் நாடுகள் வரையில் தான் பழகியிருக்கிற பார்த்திருக்கிற, பணிபுரிந்திருக்கின்ற உலக மனிதர்களைப் பற்றிய அனுபவத்தோடு பேசினார் டாக்டர் வினு அறம்.

“உலகில் ஏற்படும் மாற்றம் நம்மிடம் தொடங்க வேண்டும்” என்கிற காந்தியடிகளின் கருத்தை மேற்கோள் காட்டிய அவர் காலங்காலமாக இந்தியாவின் பலம் அதனுடைய அறிவும், அனுபவமும்தான் என்று அழுத்தமாக தெரிவித்தார்.

விழிப்புணர்வும், அறிவுக்கூர்மையும்தான் இன்று தலைமை நிலைக்கு கொண்டு செல்லும். நல்ல உணர்வுகள் மட்டும் இருந்தால் போதாது. செய்கிற பணியில் நிபுணத்துவமும் மிகவும் தேவையாக இருக்கிறது என்று சொன்ன டாக்டர். வினு அறம் கல்வி முறையில் படைப்பாக்க முறையிலான சில மாற்றகள் வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

சமூகப் பொறுப்புணர்வு உள்ளவர்கள் கூட்டமைப்பில் தான் சில மாற்றங்கள் வரும் என்று தெரிவித்த அவர் பதிப்பாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும்,பணியாளருக்கும்,நிறுவனருக்கும், ஏழைகளுக்கும்,பணக்கார்ர்களுக்கும் ன்று இந்தக் கூட்டமைப்பு விரிவாகிக் கொண்டே போக வேண்டும் என்றார்.

பெரிதாக்க் கனவு காணுங்கள். கனவுகளை ஆற்றலோடு இணையுங்கள். அதை செயலாக மாற்றுங்கள் என்று அவர் முழக்கமிட்டு அமர்ந்தார்.

தொடர்ந்து கவிப்பேர்ரசு வைரமுத்து உரையாற்றுவார் என்று நிர்வாக ஆசிரியர் அறிவித்ததும் எழுந்த கரவொலி அடங்க சில நிமிடங்கள் பிடித்தது.

ஒலிபெருக்கியை பிடித்த கவிஞர் இந்த அவைக்கு எனது நம்பிக்கை வணக்கங்கள் என்று தொடங்கினார்.

பேச்சாளன் என்பவன், “அவையின் எதிர்பார்ப்புக்கு பேசியே பழகிவிட்டதால்,நாடக்க் கலையின் தாக்கத்தால் பேச்சுக்கலை உருவானதால், பேச்சுக்கலையில் சில நாடகத் தன்மைகள் வந்திருக்கின்றன. சபை உணர்ச்சியால், அறிவால், மனப்பாடத் திறமையால், சிரிக்கவைப்பதால் பிரமிப்பு ஊட்டுவது பேச்சாளனின் கடமை அல்ல. தான் பார்த்ததை, உற்றதை, உணர்ந்ததனை, கற்றதை, ரணப்பட்டதை, சொந்த வாழ்க்கையின் அனுபவ்களை வரித்துரைக்கும்போது, அது கேட்போரின் வாழ்க்கையில் ஒரு ஓரத்திலாவது பயன் படுமேயானால் அதுதான் விட்டு விடுதலையாவோம் நிகழ்ச்சியின் ஒட்டு மொத்தப்பயன்” என்றார் கவிப்பேர்ரசு வைரமுத்து.

எல்லோரிடமும் நான்கு பந்துகள் இருக்கின்றன. அந்த நான்கு பந்துகளை கையாளுவதுதான் நமது வாழ்க்கையாயிருக்கிறது. என்று சொன்ன கவிஞர், தொழில், குடும்பம், உடல் நலம், நட்பு ஆகியவைதான் அந்த நான்கு பந்துகள் என்றார்.

இதில் தொழில் ரப்பர் பந்து, ஒரு முறை கீழே விழுந்தால் எழுந்து கொள்ளும் அல்லது எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குடும்பம், உடல் நலம், நட்பு வட்டம் மூன்றுமே கண்ணாடிப் பந்துகள். உடைந்தால் ஒட்ட வைக்க முடியாது என்றார்.

தொழிலைப் பொறுத்தவரையில் இன்றைக்கு வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதாகப் பலர் சொல்கிறார்கள். ஆனால் வேலையில்லாத் திண்டாட்டத்தைவிட தகுதியில்லாத் திண்டாட்டம் தான் அதிகம் இருக்கிறது என்ற கவிஞர் வைரமுத்து ஒரு உதாரணத்தையும் சொன்னார்.

என்னிடம் சிலபேர் வேலை கேடு வருவார்கள். என்ன வேலை தெரியும் என்று கேட்டால் எந்த வேலை என்றாலும் செய்கிறேன் என்று சொல்கிறார்கள். உலகத்திலேயே இந்தியாயில்தான் இதை நீங்கள் கேட்க முடியும். எந்த வேலையென்றாலும் செய்கிறேன் என்று.

உடனே நான் என் உதவியாளரை அழைத்து “இயக்குநர் பாரதிராஜா ஒரு நல்ல டிரைவர் கேட்டார் இவரை சேர்த்துவிடும என்று சொல்லுவேன். “அய்யய்யோ டிரைவிங் தெரியாது” என்பார். “அப்படியா? நல்லிக்கு போன் செய் வேலை இருக்கிறாத என்று கேட்போம்” என்றால், அதில் அனுபவம் இல்லை என்பார்.”சரி பாலூ ஜூவல்லரியில் சேர்ந்து நகைகளை விற்பனை செய்கிற பிரிவில் வேலை செய்கிறாயா என்றால் கணக்கு வழக்குகள் தெரியாது” என்பார்.

உழைக்காமலேயும், எந்த முயற்சியும் இல்லாமேலேயும் சம்பாதித்து ஆக வேண்டும் என்கிற மனப்பான்மை நிறைய பேருக்கு இருக்கிறது. இது மிக ஆபத்தான விஷயம்.

செதுக்காமல் எப்படி சிற்பம், அணைக்காமல் எப்படி கற்பம், உழைக்காமல எப்படி உயர்வு. உழைப்பு ஒன்றுதான் வெற்றிக்கான வழி என்பதை புரிந்து கொண்டு தொழிலில் முழுமையான ஈடுபாட்டோடு விளங்குபவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறுகிறார்கள்.

அடுத்தது, குடும்பம், குடும்பம் என்று வருகிபோது, முதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது குடும்பத்தின் மிக முக்கியமான வலிமையே அதன் உறவுச் சங்கிலிதான். ஒருவரை ஒருவர் மதித்தல், பொதுவாக அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டாலே குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்கிறோம் என்று நிறைய ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெறும் தேவைகளைத் தருவது மாத்திரம் குடும்பமாகிவிடாது. மனிதர்கள், மனிதர்களுக்கிடையேயான உறவுகள் இவைதான் குடும்பத்த்தை மிகச்சரியாக வைத்திருக்கும்.

குழந்தை வளர்ப்பதில் பலபேர் ஒரு விஷயத்திற்கு மறந்து விடுகிறார்கள். குறிப்பிட்ட வயதிற்குமேல் குழந்தைகளுக்கு பெற்றோர் தேவையில்லை. நான் சொன்னபடி என் மகன் கேட்பதில்லை என்று பெற்றோர்கள் சொல்வார்கள். கேட்டால் மகனுக்கு 50 வயதிருக்கும்.

திரும்பத்திரும்ப நாம் போகும் பாதையிலேயே நம் பிள்ளைகள் பயணம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பது கூடாது. ஒரு சின்ன செடி கூட மண்ணைப் பிடித்துக் கொண்டுதான் நிற்கிறது. மண்ணைப் பிடிக்க மாட்டேன் என்று சொன்னால் செடியில்லை. விண்ணை பற்றிக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால் நட்சத்திரம் இல்லை. கண்ணைப் பற்றிக்கொள்ள மாட்டேன் என்றால் இமை இல்லை. மனிதர்களைப் பற்றிக் கொள்ள மாட்டேன் என்றால் நீ இல்லை. எனவே குடும்பம் என்கிற அந்த நிறுனத்தை குடும்பம் என்கிற அந்த நிறுவனத்தை அந்தக் கண்ணாடிப் பந்தை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும்.

உடல் நலம், இதுபற்றி நாம் நிறைய பேச வேண்டிருக்கிறது. வாழ்க்கையைப் பொறுத்த வரையில் நாம் ஒவ்வொரு நாளும் செய்கிற சின்னச்சின்ன செயல்கள் கூட நம் நலத்திற்கு எதிராக அமைந்துவிட முடியும்.

உதாரணத்திற்கு, ஒரு சின்ன விஷயம் சொல்லுகிறேன். காலை எழுந்தவுடன் சிலபேர் காபி குடிக்கிறார்கள். நீண்ட நேரமாக வயிறு காலியாக இருந்தது. வயிறு ஒரு விதமான கொதிநிலையில் இருந்திருக்கிறது. அப்போது இன்னொரு சுடுபானத்தை ஊற்றினால் கேடு அதிகம். எனவே காலை பல் துலக்கியவுடன் ஒரு செம்பு தண்ணீர் குடித்துவிட்டு 10 மணித்துளி இடைவெளிக்குப் பிறகு காபியோ, தேனீரோ அருந்துவது நல்லது.

நான் ஒரு கவிதையில் கூட எழுதியிருந்தேன் ஒவ்வொருவரும் தன்னை ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். மனச்சிக்கல் இல்லாமல் பொழுது முடிகிறதா? மலச்சிக்கல் இல்லாமல் பொழுது விடிகிறதா? என்று. மலச்சிக்கல் இல்லாமல் விடிகிற பொழுது மனச்சிக்கல் இல்லாமல் முடிகிற பொழுது, இதுதான் மனிதனுடைய அடிப்படைத் தேவை.

நாம் சாப்பிடுகிற உணவு செரிப்பதற்கு 18 மணி நேரமாகிறது. எனவே நார்சத்து மிக்க உணவை சாப்பிடுபவர்கள், காய் கறி உணவை சாப்பிடுபவர்கள் காலையில் சாப்பிடுவது நல்லது. அது மறுநாள் காலையில் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறது.

தினமும் காலையில் 2 நிமிடங்கள் இதயத்தை துடிக்க விடவேண்டும். இதயம் வேகமாக இயங்குவதற்கான பயற்சி இது. பிராணவாயுவை உள்ளிழுத்து நுரையீரலின் தரையை தொட வைத்து அந்தக் காற்று கிருமிகளைக் கிளப்பி வெளியே கொண்டு வர வைக்க வேண்டும்.

ஒரு மனிதனுடய இயக்கத்திற்கு மிக முக்கியமான தேவை காற்று. நீரில்லாமல், உணவில்லாமல், வெளியில் நிழலில்லாம் கூட சில நாட்கள் வாழ்ந்து விட முடியும். ஆனால் மூளைக்கு காற்று 7 நிமிடங்களில் போகவில்லை யென்றால் மனிதன் இறந்து விடுகிறான். அவன் இதயம் இயங்கிக்கொண்டிருக்கும். ஆனால் மூளை இறந்து போகும். இயங்கும் இதயம், இறந்த மூளை இதைத்தான் “கோமா” என்று சொல்கிறார்கள். எனவே உடல் நலம் பேணுதல் என்பது நம்முடைய கையில்தான் இருக்கிறது.

முக்கியமாக பழக்கங்களுக்கு நாம் அடிமை யாகிவிடக்கூடாது. எனக்கு ஏ.சி. இல்லையென்றால் தூக்கம் வராது.மின் விசிறி சுழலாவிட்டால் உட்கார முடியாது. என்றெல்லாம் சொல்வது தவறு. திற்ந்தவெளி வாழ்க்கையாகத் தான் தமிழனுடைய வாழ்க்கை இருந்திருக்கிறது. இப்போது வந்த நவீனங்களுக்கு நாம் அடிமையாகிவிட்டால் அவை கிடைக்காத சூழலில் மிகவும் சிரமப்படுவோம்.

பழக்கத்திற்கு உடம்பு மிக எளிதில் அடிமையாகிவிடும். 2 மீன் விற்கிற பெண்கள் இருந்தார்கள். ஒரு ஊரிலே போய் மீன் விற்று விட்டு திரும்பிவரும்போது மழை பிடித்துக் கொண்டது. தங்களுக்கு தெரிந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு போய் ஒதுங்கினார்கள். அது ஒரு பூக்காரியின் வீடு. வீடு முழுவதும் பூக்கள் உள்ளே மழைக்கு ஒதுங்குகிறார்கள்.

உறங்கும் நேரம் வந்தது. இருவரும் படுத்தார்கள். ஆனால், அந்த மீன்விற்கிற பெண்ணால் “பூ நாற்றத்தை” பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த பூ நாற்றத்தில் எப்படி தூங்குகிறீர்கள் என்று பூ விற்பவளிடம் கேட்டார்கள். பிறகு மீன்கூடையை எடுத்து தலைக்குப் பக்கத்தில் வைத்த பிறகுதான் அவர்களால் ஓரளவு தூங்க முடிந்தது. உடல் பழக்கத்திற்கு அடிமையாகிவிடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நான்காவதாக, நட்பு என்கிற பந்து நண்பர்களை நாம் பேசுவதை கேட்பதற்கான செவிகளாகவும், சில பொது செய்திகளை நமக்குத் தருவதற்கான ஒரு வாயாகவும். தான் நாம் பார்க்கிறோம். ஆனால் நண்பர்கள், என்கிற வட்டம் இருக்கிறதே இதை தேர்வு செய்வது மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்று.

கண்களைப் பார்த்து பேசாதாவனையும், பேசுகிறபோது கண்களைப் பார்க்காதவனையும் நல்ல நண்பர்களாக்க் கொள்ள முடியாது. அவர்களிடம் நட்புக்கான எந்த குணமும் இருக்காது. கண்கள் இதயத்தின் வாசல் என்று பைபிள் சொல்கிறது. நண்பன் என்பவன் நம்மை செம்மைப்படுத்துபவனாக, நம் வாழ்க்கையோடும் எல்லா நிலைகளோடும் துணை நிற்பவனாக இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய இளைஞர்களுக்கு அச்சம் இருக்கிறது. சிலபேர் வருகிறார்கள் பார்க்கிறேன். ஐயா வணக்கம் என்று தடுமாறி தடுமாறிச் சொல்கிறார்கள். எழுத்துக் கூட்டி வணக்கம் சொல்ல வேண்டிய காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. யாரும் நமக்கு எஜமானர்கள் இல்லை என்ற உணர்வோடு நாம் பழகத் தொடங்க வேண்டும்.

அச்சம் என்கிற இருட்டு சொட்டுசொட்டாக வடிந்துவிடும். அல்லது மொத்தமாக தொலைந்து விடும். அச்சமற்ற வாழ்க்கைக்கு இன்னொரு அடிப்படையான தேவை புத்துணர்வு. நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்ற எச்சரிக்கையோடு கண்காணிக்கிற இயல்பு இதைத்தான் அரிமா நோக்கு என்று சொல்வார்கள்.

அரிமா நோக்கு என்றால் என்ன? சிங்கம் ஓரிடத்துக்கு போக வேண்டுமென்றால் உடனே சட்டென்று கிளம்பிவிடாது. மெல்ல எழுந்து நிற்கும். பக்கவாட்டில் பார்வையைப் பரப்பும். வலதுபுறம் மறுபடியும் பார்க்கும். நான்கைந்து அடிகள் எடுத்துவைக்கும். எதிரிகள் யாராவது இருக்கிறார்களா? தாக்குவதற்கு யாரும் தயார் நிலையில் இருக்கிறார்களா? என்று பார்த்துவிட்டு பிறகு அடுத்த அடியை எடுத்து வைக்கும். அத்தகைய அரிமா நோக்கு இன்றைய இளைஞர்களுக்குத் தேவை.

நம்முடைய வாழ்க்கையில் இந்த நான்கு பந்துகளையும் கவனமாக்க் கையாண்டபின் நம்மைப் பிணைத்து வைத்திருக்கும் தடைகளிலிரந்து விட்டு விடுதலையாகி விடுவோம் என்றார் கவிப்பேரரசு வைரமுத்து.

தொடர்ந்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். கூட்டம் முடிந்து அரங்கிலேயேயிருந்து வரிசையில் வந்த வாசகர்களுக்கெல்லாம் கையெழுத்துப் போட்டு நலம் விசாரித்துவிட்டு விடைபெற்றார் கவிப்பேரரசு.

கூட்டம் முடிந்து திரும்பிய அனைவின் செவிகளிலேயும் டாக்டர் வினு அறம் விழாவில் பாடிய பாட்டு எதிரொலித்துக்கொண்டேயிருந்தது. “சாந்தி நிலவ்வேண்டும் ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்”.

ஆம் அதுதானே நமது ஆசையும்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2001

மனசு விட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!
கேள்வி – பதில்
வாசகர் கடிதம்
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?
தலைப்புச்செய்தி
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
பொதுவாச்சொல்றேன்
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”
"ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"
வணக்கம் தலைவரே
பெற்றோர் பக்கம்