Home » Articles » வணக்கம் தலைவரே

 
வணக்கம் தலைவரே


முத்தையா ம
Author:

சில மேடைகளில் நகைச்சுவையாக ஒரு கதை சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

ஒரு கட்சித் தலைவர் பேசிக்கொண்டிருந்தாராம். “நான் வெகு நாட்களாக ஒரு விஷயம் சொல்கிறேன், யாருமே கேட்பதில்லை! கட்சி மாறுபவர்களைத்தூக்கில் போட வேண்டும்.இதை நான் தி.மு.க. வில் இருந்தபோதும் சொன்னேன், அ.தி.மு.க-வில் இருந்தபோதும் சொன்னேன். காங்கிரசுக்குப் போனபோதும் சொன்னேன். இன்று வந்திருக்கும் கட்சியில் இருந்து கொண்டும் சொல்கிறேன், கட்சி மாறுபவர்களை தூக்கில் போடவேண்டும்” என்று.

உடனே, அவருக்கு ஒரு சீட்டு வந்ததாம், “உங்களைத் தூக்கில்போட நாங்கள் ரெடி, நீங்க ரெடியா?” என்று.

நான் சொல்வதைத் தானே நம்பாத தலைவரை, தொண்டர்கள் நம்புவதில்லை. சில வணிக நிறுவனங்களில் கூட, அலுவலர் – நிர்வாகம் ஒற்றுமைக்கா வார்கூட்டங்கள் போடுவதுண்டு. அதிலே கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகளை அடுத்தநாள் நிர்வாகியின் மேசைக்குக் கொண்டுபோனால், “சரி சரி? வேலையைப் பாருங்க” என்று சொல்லிவிடுவார்.

இத்தகைய தலைமை மீது பணிபுரிகிறவர்கள்நம்பிக்கை இழப்பார்கள். தந்த வார்த்தையை எந்தக் காலத்திலும் காற்றில் விடா தலைவர்களைத்தான் தொண்டர்கள் கைவிட மாட்டார்கள்.

தலைமைப்பண்பின் பதினோராவது விதி.

தனது வார்த்தையை தானே ம்புகிற தாமதமானாலும் செயல் வடிவம் தருகிற தலைவரே நல்ல தலைவர்.

தனது வார்த்தையை தானே நம்புகிற தாமதமானாலும் செயல் வடிவம் தருகிற தலைவரே நல்ல தலைவர்.

இன்றைக்கும் இராமனை நாம் கொண்டாடுகிறோம். இராம இராஜ்ஜியம் வேண்டும் என்கிறோம். ஏன்? எல்லாம் அவரது மூன்று அம்சக் கொள்கை காரணமாகத்தான்!

ஒருசொல் – ஒரு இல் – ஒரு வில்.

இன்று நிறைய தலைவர்களுக்கு இந்த மூன்றுமே இல்லை. ஒரு சொல் கிடையாது. ஒரு இல் – அதுவும் இல்லை. ஒரு ஒரு will – இது இல்லாமல் தான் அடிக்கடி கட்சித்தாவல்கள் நடைபெறுகின்றன.

தலைவர்கள், தங்களுக்கென்று ஆலோசகர்கள் வைத்துக் கொள்ளலாமா? என்று ஒரு கேள்வி இருக்கிறது. இதுபற்றி நிறையப்பரிடம் ஆலோசனை கேட்பது சரியில்லையல்லவா. ஒவ்வொரு மனிதருக்குமே ஒரு அந்தரங்க ஆலோசகர் இருக்கிறார். அவருக்கு “உள்ளுணர்வு” என்று பெயர்.

பொது நன்மைக்காக சில முடிவுகளை தலைவர்கள் எடுக்கும்போது நிர்வாகத்தில் உள்ளவர்கள் தடை சொல்வார்கள். “இதற்கு சட்டத்தில் இடமில்லையே” என்று சுட்டிக் காட்டுவார்கள். அல்லது எதிரிகள் முட்டுக்கட்டை போடுவார்கள். இது போன்ற நேரங்களில், எல்லாம், உள்ளுணர்வு காட்டும் வழி சரியான தாகவே இருக்கும்.

“தலைவர் வாழ்க!” என்று தொண்டர்கள் கோஷம் போடும் போதெல்லாம், இந்தக் கூட்டத்தில் யார் யார் எதிரியாவார்கள் என்று உள்ளுணர்வு காதுக்குள் முணுமுணுக்கும் இரைச்சலில் புகழ் மயக்கத்தல் அதைக் கேட்காமல் விட்டுவிட்டால் பிற்பாடு சிரம்ம்தான்.

உள்ளணர்வின் குரை உற்று கவனிக்கும் தலைவர்கள் பின்னால் வரப்போகும் சிக்கலுக்கும் முன்கூட்டியே தீர்வுகளைத் தயாரித்து வைத்திருப்பார்கள்.

நெப்போலியன் வாழ்வில் ஒரு சம்பவம். ஒரு இரவு நேரத்தில், பகைவர்களின் திடீர் தாக்குதலை சாமாளிக்க வேண்டிய சூழலில் நெப்போலின் படைகள் இருந்தன. அவன் நல்ல தூக்கத்தில் இருக்கும் நெப்போலியனை எழப்ப அவரது தளபதி தயங்கினார். எதற்கும் பார்க்கலாம் என்று கூடாரத்துக்குள் நுழைந்தார். தலைவரின் தலைமாட்டுக்கு அருகே மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தைப் பார்த்தார்.

அதில், அன்று இரவு எதிரிகள் தாக்கக்கூடும் என்று யூகித்து, அதற்கான வியூகத்தையும் நெப்போலியன் விளக்கியிருந்தார். அந்தக் கடிதத்தைத் துணைகொண்டே தளபதி எதிரிகளை விரட்டி, அவர்கள் சூழ்ச்சியை முறியடித்ததாக வரலாறு சொல்கிறது.

தலைமைப்பண்பின் பன்னிரெண்டாவது விதி:

உள்ளுணர்வின் ஆலோசனையை மதிக்கும் தலைவர்களே மேன்மையான தலைவர்கள்

ஆலோசனை சொல்லும் உள்ளுணர்வின் கூர்மையை உணர வேண்டுமென்றால், எப்போதும் விழிப்பாக இருக்கும் தன்மை, தலைவருக்குத் தேவை.

குறட்டை விடுவோர் சங்கத்தின் தலைவர்கூட, தன் சங்கத்தில் எத்தனை விதமான குறட்டை ஒலிகள் எழுகின்றன என்று ‘விழிப்போடு’ கவனிக்க வேண்டும்.

எல்லாமே குறட்டையாக இருக்க வேண்டியதில்லை. தனக்கு எதிரான உறுமல் கூட எழலாம். அதனைக் “குறட்டை” என்று அலட்சியம் செய்தால் ஆபத்து வரலாம்.

மறைந்த மத்திய அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம், தான் பதிவியில் இருந்தபோது வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை தருவதாக, ஒரு திட்டத்தை அறிமுகம் செய்யலாம் என்றுமுதலில்சிந்தித்தார். அது நடைமுறைக்கு வந்திருந்தால் நல்ல கவர்ச்சிகரமான திட்டமாக இருந்திருக்கும்.

ஆனால், உதவித்தொகை வழங்குவதைவிட வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதுதான் நீண்டகால நன்மைகளை விளைவிக்கும் என்று அவருடைய உள்ளணர்வு உணர்த்தியது.

உடனே, அதற்கான திட்டங்கள், கடனுதவி என்றெல்லாம் யோசித்து அதற்கான வழிவகைகளைச் செய்தார்.

காந்தியடிகள் பதவியில் அமரவில்லை. பெரியாரும் அப்படித்தான். இந்த இருபெரும் தலைவர்களும் மக்கள் மத்தியில் நிரந்தரமான செல்வாக்கைப் பெற்றிருப்பது எப்படித் தங்களுக்கு “நல்லது” என்று உள்ளுணர்வில் பட்டதை ஊரறியச் சொன்னார்கள். உண்மையோடு சொன்னார்கள். உயர்ந்த தலைவர்கள் ஆனார்கள்.

“ஊருக்கு நல்லது சொல்வேன் – எனக்கு
உண்மை தெரந்தது சொல்வேன்” என்றார் மகாகவி பாரதியார்.

இந்த உள்ளுணர்வின் புனைப்பெயர்தான் மனசாட்சி பல தலைவர்கள், தங்கள் மனசாட்சியைப் பொய்சாட்சி சொல்லப் பழக்குவதாகக் கேள்வி. அவர்களால்மகள் மனதிலோ தொண்டர்கள் மத்தியிலோ ஆட்சி புரிய முடியாது.

எவளவு லஞ்சம் கொடுத்தாலும் பொய்சொல்ல மறுக்கிற ஒரே ஆள் இந்த “உள்ளுணர்வு” என்கிற மனசாட்சிதான்.

அதை மையப்படுத்தி பொது வாழ்க்கயை நடத்தத்திட்டம் வகுத்த யாருமே தோற்றுப்போனதாய் சரித்திரம் இல்லை. தலவர்கள் தங்களை அடிக்கடி சுயவிசாரணை செய்து கொள்ள வேண்டும் என்று காந்தியடிகள் சொன்னதுகூட இதனால்தான்.

சுயவிசாரணை செய்து கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என்கிறீர்களா? வேறென்ன நடக்கும்.. கோர்ட் விசாரணைதான்!

(தொடரும்…)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2001

தொழில்
வணக்கம் தலைவரே
சிரிப்போம் சிறப்போம்
பெற்றோர் பக்கம்
தன்னம்பிக்கை பாடம் கற்போம்
மனித சக்தி மகத்தான சக்தி
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
பொதுவாச்சொல்றேன்
உறுதியா? பிடிவாதா?
நம்பிக்கை
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்…
நாளும் நாளும் நம்பிக்கை
கேள்வி பதில்
வாசகர் கடிதம்