Home » Articles » பொதுவாச்சொல்றேன்

 
பொதுவாச்சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

திருப்பூரிலே, “சிற்பி ரகுநாதன்” அப்படீன்னு ஒரு பேச்சாளர் இருக்காரு. நல்ல புரட்சிகரமான சிந்தனைகள் உள்ள ஆளு. அவரை சமீபத்திலே பார்த்தேன்.

என் கையிலே இருந்த “தன்னம்பிக்கை” இதழை பரட்டிப் பார்த்தாரு. மோட்டுவளையைப் பார்க்கறாரு, என்னப்பார்கறாரு, பெருமூசு விடறாரு. “என்னங்க விஷயம்” னேன்.

மெதுவா ஆரம்பிச்சாரு “இல்லீங்க? உழைத்தால் உயரலாம், உழைத்தால் உயரலாம்னு எல்லாம் சொல்றாக; உழைக்கறவன் எப்படீங்க உயருவான்? மாசம் 3000/- ரூபாய் சம்பளம், வாங்கிட்டு நாள் பூரா உழைக்கிறவன் மாசக் கடைசியிலே கைமாத்து வாங்க கிளம்பறானே! இது ஏன்? உயர்வுக்கு தேவை உழைப்பா? விழிப்பா? ” அப்படீன்னாரு! “அடடே! நல்ல சிந்தனையா இருக்கே” அப்படீன்னு அதைப் பத்தி ரொம்ப நேரம் யோசிச்சேன்.

நான் பொதுவாச் சொல்றேன், “உழைப்பு” அப்படீங்கற வார்தைக்கு இப்ப அர்த்தம் மாறிகிட்டு வருது. ஒரு எஜமான் – ஒரு தொழிலாளி அப்படீங்கிறது எல்லா இடங்களிலேயும் இல்லை. ஒரு நிர்வாகி – ஒரு அலுவலர் – அந்த அலவலர் இயக்குகிற இயந்திரம் அப்படீன்னுதான் இருக்கு. அந்த இயந்திரம், “லேத்” இயந்திரமா இருக்கலாம். கம்ப்யூட்டராகவும் இருக்கலாம்.

ஒரே குடும்பத்திலே இரண்டு மூணு பேர் சம்பாதிக்கறது. சொத்துவாங்கறது, முதலீடு செய்யறது இப்படி பணம் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகுது.

நான் பொதுவாச் சொல்றேன். இந்த காலங்களிலே உயர்வு அப்படீங்கறதுக்கு “சாமர்த்தியம்” அடிப்படையா வேண்டியிருக்கு. கூலித்தொழிலாளர்களா இருக்கிற குடும்பங்களிலே கூட இரண்டு மூணு விதமா வருமானம் ஏற்படுத்திக்கணும்கிற விழிப்புணர்வு இருக்கு.

ஒரு குடும்பத்துக்கு குறைஞ்சது மூணு வழிகளிலே வருமானம் வரணும்னு சொல்றாங்க. நான் பொதுவாச் சொல்றேன், ஒரு கூலித் தொழிலாளர்னு வைச்சுக்குங்க. அவரு வேலைக்குப் போவாரு, அவர் மனைவி வீட்டு வேலைக்குப் போவாங்க, அவங்க பையன் படிச்சு வேலைக்கு போவாரு. கொஞ்சம் செழிப்பா வந்துடுவாங்க.

ஒரு பள்ளிக்கூட வாத்தியாருன்னு வைச்சுக்குங்க. சம்பளம் வாங்குவாரு, டியூஷன் எடுப்பாரு, சின்னதா ஒரு பெட்டிக் கடையோ மளிகைக்கடையோ வீட்டுக்குப் பக்கத்திலேயே வைச்சிருப்பாரு.

சம்பாதிக்கிற பணம் சாராயத்துக்குப்பாதி சீட்டாட்டதுக்கும் மீதி அப்படீன்னு வீசிட்டு வர்ற குடும்பங்களிலே தள்ளாட்டம் இருந்துகிட்டே இருக்கும்.

“புத்தியா புழைச்சுக்கமா” அப்படீன்னு கிராமங்களிலே ஒரு சொல் தட்டுப்படும், இதுக்குத்தான் “சாமர்த்தியம்னு” பேரு.

நான் பொதவாச் சொல்றேன், எந்திரங்கள் வந்து மனிதனுடைய வேலையை சுலபமாக்கிடுச்சு. காலையிலே 10-5 ஒரு இடம் சாயங்காலம் 6-8 இன்னொரு இடம்னு வேலை பார்க்கிற தலைமுறை வளர்ந்துகிட்டே வருது.

உழைப்புக்கு அடுத்த கட்டம் சாமர்த்தியம். சாமர்த்தியம் – கெட்டிக்காரத்தனம் இதெல்லாம் ஆரோக்கியமான விஷயம்தான். குரூரமான சாமர்த்தியம்தான் மோசடி செய்யற வேலைக்குத் தூண்டும், அது தப்பு. ஆனா நம்ம திறமையை பலவிதங்களிலே பயனபடுத்தி மேல வர்றதுலே என்னைக்கும் தப்பே கிடையாது.

மனிதன் தன் உழைப்பை சரியான திசையிலே செலுத்தினா அதுக்கு சாமர்த்தியம்னு பேரு. நான் பொதுவாச் சொல்றேன், அந்த நாட்களிலே சொந்தமா ஒரு வீடு கட்டறதுன்னா 40-45 வயசு ஆகும். இப்ப 30 வயசுக்குள்ளே இடம் வாங்கிப்போடறாங்க. 35 வயசுக்குள்ளே வீடு கட்டத் தொடங்கறாங்க. அதுவும் எப்படி?

ஒரு இடத்தில நிலம் வாங்கி, அதை நல்ல விலைக்கு வித்துட்டு, இன்னொரு இடத்திலே நிலம் வாங்கி, இன்னும் நல்ல விலைக்கு வித்துட்டு, அந்தப் பணத்திலே வீடுகட்டறதுக்கு பேருதான் சாமர்த்தியம்.

நான் பொதுவாச் சொல்றேன், சாமர்த்தியம் சாதனையா வளரலாம். மோசடியாய் போகமாக இருந்தா போதும். நிறைய உழைக்கறதுகிற நிலைமாறி போதுமான அளவு உழைக்கிறது, பக்குவமா உழைக்கிறது, திட்டத்தோட உழைக்கிறது. இதெல்லாம் உயர்வைத் தரும்.

குறைந்த வருமானம் இருக்கிறவங்க. சம்பாதிக்கிற பணத்தை வேண்டாத வழிகளிலே செலவு செய்துவிட்டு வறுமையிலே வாடறாங்க. அப்படி வர்ற வறுமை நிலையா இருந்தா, அவன் மேலே பெற்ற தாய்கூட இரக்கப்பட மாட்டா, இதை நான் சொல்லலே, திருவள்ளுவர் சொல்றாரு.

“அறம்சாரா நல்குரவு, ஈன்ற தாயாலும் பிறன் போல நோக்கப்படும்” – குறள்

“நல்குரவு” அப்படீன்னா வறுமைன்னு அர்த்தம்.

உழப்புன்னா சாமர்த்தியம். சாமர்த்தியம்னா, மனிதசக்தியைப் பயன்படுத்தற சாமர்த்தியம்.நல்ல வழிகளிலே செயல்பறதாலே சரிவுகள் நல்ல வழிகளிலே செயல்படறதாலே சரிவுகள் வராது. உயர்வுகள்தான் ஏற்படும்.

எல்லோரும் செய்கிற தொழிலில் இருந்து வித்தியாசமா செய்தவங்க, எல்லோரும் செய்கிற தொழிலையே வித்தியாசமா செய்தவங்க, இங்க எல்லாமே நல்ல நிலைமைக்கு நிச்சயமா வரமுடியும்.

“மாடு மாதிரி உழைக்கிறேன். என்ன புண்ணியம்னு” யாரும் பெருமூச்சு விடாதீங்க. ஆங்கிலத்திலே ஒரு வாசகம் உண்டு. “நிலக் கடலைகள் மட்டுமே நீங்கள் தருவதென்றால்குரங்குகள் தான் வேலைக்கு வரும்” அப்படீன்னு (If yu have only peanuts to offer you will only ge monkeys to work).

நான் பொதுவாச் சொல்றேன். மாடு மாதிரி உழைச்சா தீவனம் கிடைக்கும், ஜீவனம் நடக்கும். உயர்வு வருமா? திட்டமிட்டு, தெளிவா நம்ம சக்தியைப் பயன்படுத்தினா கண்டிப்பா ஜெயிக்கலாம்! இல்லீங்களா?

தொடரும்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2001

தொழில்
வணக்கம் தலைவரே
சிரிப்போம் சிறப்போம்
பெற்றோர் பக்கம்
தன்னம்பிக்கை பாடம் கற்போம்
மனித சக்தி மகத்தான சக்தி
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
பொதுவாச்சொல்றேன்
உறுதியா? பிடிவாதா?
நம்பிக்கை
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்…
நாளும் நாளும் நம்பிக்கை
கேள்வி பதில்
வாசகர் கடிதம்