Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

எனக்குத் தெரிந்து ஒருவர் தன் வீட்டிலே ஒரு சைக்கிள் வைச்சிருந்தார். நாற்பது வருஷத்துக்கு முந்தைய சைக்கிள், பெல்லைத் தவிர எல்லாமே சத்தம் போடும். அதை யார் தலையிலாவது கட்டிலாம்னு தவியாத் தவிச்சார். இருநூறு ரூபாய் கிடைச்சாக்கூடப் போதும் கொடுத்துடலாம்னு பார்த்தார் யாருமே மாட்டலை. ஆனா, மனுஷ்ன் ஒவ்வொரு நாள் இரவும் தூங்கப்போறதுக்கு முன்னே மறக்காம அந்த சைக்கிளைத் தூக்கி நடுஹாலிலே வைச்சுட்டுதான் கதவைப் பூட்டுவார். வெளியே வைச்சா திருடு போயிடுமோன்னு பயம்.

நான் பொதுவாச் சொல்றேன். நம்ம பொறுப்பிலே இருக்கிற ஒரு சாதாரணப் பொருளைக்கூட பாதுகாக்கிறதிலே இவ்வளவு கவனமா இருக்கிற நாம, பொதுச்சொத்துன்னு வர்றபோது கொஞ்சம் கூட கவலைப்படறதே இல்லை.

சமீபத்திலே பாருங்க இயற்கைச் சூழலுக்கு மாசு தராத முறையிலே பேருந்துகளில் சில மாற்றங்களை டெல்லி நிர்வாகம் செய்தது. அதனால் சில பேருந்துகள் வரலை. பொது மக்கள் கோபமாகி ஐந்தாறு பேருந்துகளை எரிச்சுட்டதா பார்க்கறோம்.

நான் பொதுவாச் சொல்றேன், ஒரு சிக்கலான நேரத்திலே நம்ம மனோபாவம் எப்படி இருக்குங்கறதைப் பொறுத்துத்தான் நாம பண்பட்டவங்களா இல்லையான்னு தெரியும்.

பேருந்து சரியா வரலைங்கிறதுக்காக, இருக்கிற பேருந்துகளையும் எரிக்கறது எந்த விதத்திலேயும் சரியில்லை. நம்ம இரண்டு விதமாப் பிரிக்கலாம். பங்கேற்பு மனோபாவம், பதட்ட மனோபாம் அப்படீன்னு.

போதிய அளவு பேருந்துகள் இல்லாதபோது வாடகைக்கார், வேன், இதையெல்லாம் பங்கீட்டு முறையிலே பயணிகள் பயன்படுத்தலாம். அலுவலகம் போறவங்க ஒரு நாள் லீவ் சொல்லலாம். பயணத்தைத் தள்ளி வைக்கலாம். இப்படி எவ்வளவோ முறைகள் இருக்கிறபோது வன்முறையிலே இறங்கற பதட்ட மனோபாவம் ரொம்பத் தப்பு.

நான் பொதுவாச் சொல்றேன், பிரச்சினைகளுக்கு எதிரான இடத்திலே நம்மை நாமே வைச்சுப் பார்கறதாலே தான் பதட்ட மனோபாவம் வருது. சில பொது நன்மைகளுக்காக சில சிரமங்கள் ஏற்படுதுங்கிறதை நாம உணர ஆரம்பிக்கணும்.

பஸ்ஸிலே போய்கிட்டு இருக்கோம், ரயில்வே கேட் போடறாங்க. பத்து நிமிஷம் நிக்கறதுக்குள்ளே எத்தனை பேர்கிட்டே என்னென்ன புலம்பல்? இதையே வேறமாதிரி நினைச்சுப்பாருங்க. ஆளில்லாத லெவல் கிராஸிங்கிலே ரயில்மோதி பஸ்ஸில் இருந்த 50 பேர் பலி. அப்படீன்னு செய்தி படிக்கறபோது நமக்கு மனசு பதறுது. இந்த ரயில்வே நிர்வாகத்துக்குப் பொறுப்பே கிடையாது. அப்படீன்னு சலிச்சுக்கிறோம். ஆனா, நாம போற பாதையிலே ரயில்வே கேட் போட்டா நம்மாலே பொறுத்துக்க முடியலை.

பதட்ட மனோபவத்திலிருந்து பங்கேற்பு மனோபாவத்துக்கு மாறி வர்றதுதான் பொறுப்புள்ள குடிமகனுக்கு அடையாளம். ஒரு கும்பலா இருக்கறபோது பதட்ட மனோபாவம் உடனே தொத்திக்கும். அந்த நேரத்திலே சமநிலையிலே நம்ம உணர்ச்சிகளை வைத்திருப்பதுதான் நாம் படித்த படிப்புக்கும், நமக்கு இருக்கற பொதுநல அக்கறைக்கும் அடையாளம்.

கூட்டம் கூட்டமா போகிற போதும் பண்பாடு, அகிம்சை, அமைதி இதையெல்லாம் காக்க முடியும்னு காமிக்கத்தான் காந்தியடிகள் அகிம்சைப் போராட்டத்தை ஆரம்பிச்சாரு.

அவரோட உண்ணாவிரதப் போராட்டம், அந்த காலத்துல வரவேற்பைப் பெற்றதே, அது ஏன்னு நினைக்கறீங்க? அநு வரைக்கும் போராட்டம்னு சொன்னாலே கல்வீசறது. ரகளை பண்றதுன்னு இருந்தது. ஆனா, உண்மையான போராட்டம் அடுத்தவங்களை சிரமப்படுத்தறது இல்லை. தன்னைத்தானே சிரமப்படுத்திக்கிறது அப்படீங்கிற புதிய முறையை காந்தியடிகள் அறிமுகம் செய்தார். அது வெற்றி பெற்றது.

நான் பொதுவாச்சொல்றேன்,பதட்ட மனோபாம் இருக்கிற மனிதன் சமூக விரோதியா மாறிடறான். பங்கேற்பு மனோபாவம் இருக்கிற மனிதன் சமூக நலத்தொண்டனா மாறிடாறான். இரண்டு பேருமே ஒரே பிரச்சினையைத் தான் எதிர்கொள்றாங்க. ஆனா அவங்க அணுகுமுறை வேற மாதிரி இருக்கு. அதனால அவங்களுக்கு கிடைக்கிற பட்டமும் வேற மாதிரி போயிடுது.

நம்மைப் பார்க்கறவங்க ஒருமாதிரியா நினைச்சு ஒதுக்கி வைக்காம, முன் மாதிரியா நினைச்சு மதிக்கிற மாதிரி நடக்கணும் இல்லையா?அப்ப, நீண்டகால நன்மைக்காக குறுகிய கால சிரமங்களை ஏற்று, மற்றவங்களுக்கு முன் மாதிரியா நடக்கறதுதான் நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. நான் சொல்றது சரிதானே…

உலகுக்கு எதிரிகள் ஒரு மாதிரி மனிதர்கள்
உடனடித் தேவை முன் மாதிரி மனிதர்கள்

தொடரும்..

 

1 Comment

  1. riya says:

    nice ending…..

Leave a Reply to riya


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்