Home » Articles » நிறுவனர் பக்கம்

 
நிறுவனர் பக்கம்


கந்தசாமி இல.செ
Author:

பதினெட்டே முன் வருக!

வருகிற மே 10, தமிழகத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப் போகிறவர்கள் யார் என்பதை முடிவு செய்யும் நாள். யாருக்கு வாக்களிக்கலாம் என்பதைவிட யார் யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் நான் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

நாம் அரசிலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டாலும் நாட்டில் நல்ல ஆட்சி அமைந்தால்தான் நாடு நலம் பெறும். மக்களும் நிமதியாக வாழ்ர். பழைய இதழ்களைப் புரட்டினோம். 12 ஆண்டுகளுக்கு முன் அமரர் டாக்டர் இல.செ.கந்தசாமி அவர்கள் தன்னம்பிக்கையின் முதல் இதழில் (நவம்பர் 1989) எழுதிய இளைய சமுதாயத்தினருக்கான சிந்தனைகள் இன்றைய தேர்தல் சிந்தனைக்கும் பொருத்தமாக உள்ளன. அக்கட்டுரையின் சில பகுதிகளை உங்களுக்காக மீண்டும் இங்கே தருகின்றோம்.

1. புற்றீசல்போல் கட்சிகள் பெருகுவது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல. ஆனால் கட்சிகளை விடுத்து எந்த கட்சியாக இருப்பினும் தேர்தலில் நிற்பவர்களில் யார் நல்லவர் என்று உனக்கு தெரிந்த அளவில் கணித்து ஒரு முடிவுக்கு வந்து அவர்களை தேர்ந்தெடு.

2. ஒழுக்கமில்லாதவர்கள் கொள்ளையடித்து பணம் சேர்த்தவர்கள் நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் பதவியே குறிக்கோளாக கொண்டவர்கள் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை புறக்கணித்து விடு.

நாட்டின் நன்மையில் அக்கரை கொண்டு தொலை நோக்கு பார்வை உள்ள நபர்களை நிறுத்தினால்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற ஓர் எண்ணத்தை கட்சித் தலைவர்களும் ஆளுகின்றவர்களும் உணரும் வகையில் உனது தேர்வு இருக்க வேண்டும்.

3. நாட்டின் பொருளாதாரம் வளர்கின்ற வகையில் தொழில்களைப் பெருக்கி வேலை வாய்ப்பை உருவாக்கி, உழைத்து வாழும் சமுதாயத்தை உருவாக்காமல் மானியம் என்றும் சலுகை என்றும் நாற்காலிகளை தக்க வைத்து கொள்ளும் எந்த வாக்குறுதிகளையும் நடவடிக்கைகளையும் கண்டு நீ மயங்கிவிடாதே. இவைகள் நிரந்தர தீர்வல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சலுகைகள், இனாம்கள் என்ற பெயரால் சோம்பல் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கி வருகிறோம் என்பதை எண்ணிப்பார்.

4. யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டனைக்கு உரியவர்களே, தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்ற நிலையில் உனது தேர்வு அமைய வேண்டும். பொதுவாகவே தவறான வழியில் வசதியை பெருக்கிக் கொண்டவர்கள் ‘அரசியல்’ என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு தண்டனையிலிருது தப்பித்து விடுகிறார்கள் என்பதை நீ கவனித்தில் கொள்.

5. சாதி என்றும், மதம் என்றும் இனம் என்றும் இரகசியமாக உறவு கொண்டாடி வருகின்ற புனிதர்களை நீ புறக்கணித்து விடு. குறுகிய மனப்பான்மை உள்ள இவர்களால் ஒரு நன்மையும் விளையாது. ஒதுக்கிவிடு இவர்களை உலகம் ஒன்று என்ற விரிந்த பார்வையில் உன்னை வளர்த்துக்கொள்.

6. ஆடம்பர வளைவுகள், தலைவர்களின் கட்-அவுட்கள், வண்ண வண்ண சுவரொட்டிகள் ஆகியவற்றிற்காகச் செய்யும் ஆடம்பரச் செலவுகளை எண்ணிப்பார் – இந்தப் பணம் ஏது? எங்கிருந்து வந்தது? எப்படி சம்பாதித்தார்கள்? எளிமையாக இருப்பவர்களை – மக்களை நேசிப்பவர்களைத் தேர்ந்தெடு.

7. மது பானங்கள், லாட்டரி சீட்டுகள், போதையூட்டும் திரைப்படங்கள் இவற்றின் மூலம்தான் நாட்டுக்கு வருமானம் என்று எண்ணுகின்ற – அவற்றை பரப்புகின்ற – பாராட்டுகின்ற மனப்பான்மை உள்ள தலைவர்களை ஒதுக்கி விடு. கடந்த 40 ஆண்டுகளில் – ஆண்டுக்கு – ஆண்டு இத்தீமைகளால் கொஞ்சம் கொஞ்சமாக நாம் நம் நாட்டின் பண்பாட்டையே இழந்து வருகிறோம் என்பதை கவனத்தில் வை.

8. மேலும் உனக்கு ஒரு கடமை இருக்கின்றது. படிக்காத, பாமர மக்களைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் விலைகொடுத்து வாங்குகிறார்கள். கிராமங்களில்தான் இது அதிகம். நீ கிராமங்களுக்கு செல் – நீ படித்தவன் – உண்மை நிலையை விளக்கு – பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை எடுத்துச்சொல்.

9. ஒரு முக்கியமான செய்தி. நாம் ஒருவர் வாக்கு போடாவிட்டாலும் ஒன்றும் பாதிப்பு நேர்ந்துவிடாது என்று மட்டும் எண்ணிவிடாதே. குறிப்பாக படித்தவர்களில் பலர் வாக்குப் போடப்போவதில்லை. விவரம் அறிந்தவர்கள்தாம் போடுகிறார்கள். அதனால் முடிவுகள் தவறாகவே வருகின்றன. இனி நிலைமை அப்படி இருத்தல் கூடாது. நீ மட்டுமல்ல உன் வீட்டில் உள்ள அமைரையும் வாக்குப்போடும்படிச் செய், வாக்கு போடாதவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்தை அரசுக்கு உரிய வாய்ப்பு நேரும்போது எடுத்துச் சொல்லத் தவறாதே.

சிந்தி செயல்படு – நேர்மைக்கு அழிவில்லை. தற்காலிக தோல்விகளை பற்றிக் கவலைப்படாதே; நிரந்தர வெற்றிக்கு – நிரந்தர நன்மைக்கு பாடுபடு, நாளைய இந்தியா உன் கையில்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்