Home » Articles » பெற்றோர் பக்கம்

 
பெற்றோர் பக்கம்


admin
Author:

செயல்களின் பின்னணி என்ன?

‘எம்புள்ளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது’ அவனை கெட்ட நண்பர்கள் குடிகாரனாக்கிவிட்டாங்க’ மதுவிற்கு அடிமையான இளைஞனுடைய தாயின் கதறல்.

‘எங்க பொண்ணு கள்ளங்கபடமில்லாதவ. அவளை ஆசை வார்த்தை காட்டி சம்மதிக்க வச்சு ஏமாத்திட்டான் பாவி’ – காதலில் தோல்வியடைந்த பெண்மணியின் பெற்றோரின் ஆதங்கம்.

‘எங்க பையன் ஒரு அப்பாவி; இந்தக் கொலைக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லை; சதிகாரர்களோட சேர்ந்ததால அவன மாட்டிவுட்டுட்டானுக’ – கொலைக்குற்றத்திற்காக குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மகனுக்கு, ஒரு பெற்றோர் சொல்லும் வாக்கு மூலம்.

இக்கூற்றுகளைப் பார்த்தால் தங்களுடைய பிள்ளைகள் நேர்மையானவர்கள்; மற்றவர்களே இவர்களை கெடுத்துவிட்டார்கள் என்பது போலத்தெரியும். ஆனால் இதுபோன்ற பல சூழ்நிலைகளைத் தெளிவாக ஆராய்ந்தால், இதில் சம்பந்தப்பட்ட பிள்ளைகளே முக்கிய பங்கு வகித்திருப்பார்கள்.

கதை ஒன்றைப் பார்ப்போம். குழந்தைகளுக்கு சக்திமான் பிடிக்கும். நான் சொல்வது புத்திமான் கதை.

புத்திமான் ஒரு முறை காட்டின் வழியாக தன்னுடைய சக நண்பர்களுடன் போய்க்கொண்டிருந்தான்.

ஒரு கிராமத்தில் எல்லையை நெருங்கும்போது அழகான பழமரம் ஒன்றைப்பார்த்தனர்.

“அடடா.. மாம்பழம் போல அழகா இருக்குதே. எல்லோரும் பறிச்சு வயிறு ரொம்ப சாப்பிடலாம்” என நண்பர்கள் மரத்தில் ஏறி பறித்து சாப்பிட முனைந்தபோது “அதை யாரும் சாப்பிடாதீங்கள்” என்ற புத்திமான் “அதெல்லாம் விஷப்பழம். கீழே போடுங்க” என்று சொல்லிவிட்டு , அந்த மரத்தை வெட்டித் தள்ளினான்.

இதையறிந்த அந்த கிராம மக்கள் ஓடி வந்து, “ஏன் இந்த மரத்தை வெட்டினாய்? எங்க கிராமத்தின் வருவாயையே பாழாக்கிவிட்டாய்” என்று சத்தமிட்டனர்.

வழக்கமாக வெளியூர்களிலிருந்து வரும் வியாபாரிகள் அந்த ஊர்ப்பக்கம் வரும்போது அந்த மரத்தடியில் ஓய்வெடுத்துவிட்டு அந்த விஷப்பழத்தை சாப்பிட்டதும் அங்கேயே இறந்து விடுவார்கள். அவர்களிடமிருக்கும் பணத்தை எடுத்து அந்த கிராமமே பங்கு போட்டுக் கொள்ளும்.

இத்தனை ஆண்டுகளாக பலருக்கும் தெரியாத அந்த விஷ மரத்தைப் பற்றி விவரம் அந்த புத்திமானுக்கு எப்படித் தெரிந்தது என ஆச்சரியப்பட்டார்கள்.

புத்திமான் சொன்னான் “ஒரு கிராமத்தின் அருகில் இத்தனை பழங்களுடன் ஒரு மரத்தை அந்த கிராமத்திலுள்ள சிறுவர்கள் சும்மாவா விடுவார்கள்? இதில் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கிறது; இந்த பொது அறிவுதான்’ இதை கண்டுபிடிக்க உதவியது என்றான்.

இதைக்கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தப் ‘பொது அறிவு’ பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு அவசியம் இருத்தல் வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடுகள், பேச்சு நடத்தை போன்றவற்றின் பின்னணிகளை அறிய வேண்டும்.

ஒரு தந்தை,மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் உள்ளவராக இருந்தால் அவருடைய பிள்ளைக்கு அப்பழக்கம் வருதல் எளிது. மேலும் விளம்பரங்களில் காட்டுவதைப்போல புகை பிடிப்பது, மது அருந்துவதுதான் ஆண்மையின் அழகு, அந்தஸ்து என்ற தவறான நம்பிக்கை இளம் சிறுவர்களிடம் உருவாகாதபடி அதன் கொடுமைகளை, அதனால் கெட்டழிந்தவர்களைப் பற்றி அவ்வப்போது சொல்லி வருதல் நல்ல செயலாகும்.

பெரும்பாலும் தீயபழக்கத்திற்கு ஆளாகும் இளம் வயதினர் குறிக்கோளற்றவர்களாக இருக்கிறார்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களை ஏதாவது ஒரு துறையில் ஈடுபடுத்தி விட வேண்டும்.

படிப்பில் ஏதாவது ஒரு துறையில் உயர்ந்த குறிக்கோளை அமைத்து அந்த சிந்தனையை வளர்க்க வேண்டும். அவை தவிர ஓவியம், இசை, நடனம், விளையாட்டு போன்வற்றில் எதில் ஈடுபாடு உள்ளதோ அதில் கவனத்தை திருப்பி விட வேண்டும். ஏதாவது ஒன்றில் சாதனை படைப்பவராக விளங்குவோருக்கு தீய பழக்கங்களில் ஈடுபாடு வராது.

மாணவர்கள் பெற்றோர்களை விட்டு, மற்றவர்களுடன் பழகும்போது, குறிப்பாக ஹாஸ்டலில் தங்கும்போது அவர்களுடன் யார் யார் பழகுகிறார்கள் என்பதை கவனிப்பது அவசியம்.

பல சமயங்களில் ‘தமக்கு எந்த தீய பழக்கமும் இல்லை; நண்பர்களில் சிலர் மட்டுமே குடிப்பார்கள்; புகைப்பார்கள் என்று சொல்லும்போது ஒரு சந்தேகப்பார்வை அவசியம் இருக்க வேண்டும்.

வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் பிள்ளைகளின் நண்பர்களுடன் பெற்றோர்களும் சகஜமாக பழகிக் கொண்டால், பல சமயங்களில் உதவியாக அமையும்.

வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து பங்கேற்க வைத்தால் நண்பர்களின் வட்டத்தை அறிந்து விடலாம்.

இச்செயல்கள் சந்தேகத்தின் அடிப்படையாகி விடக்கூடாது. எச்சரிக்கையின் அடிப்படையிலும் நல்லுறவிற்காகவும் அமைய வேண்டும்.

இவை தவிர, குழ்தைகளிடம் தேவைக்கதிகமான பணத்தை கொடுப்பது, அவர்களை தவறான பொழுதுபோக்கு மற்றும் தீய பழக்கத்திற்கு பயன்படுத்த வழி செய்தது போலாகிவிடும்.

அதற்கு பதிலாக வங்கியில் ஒரு அக்கவுண்ட் வைத்து அவர்களின் பெயரில் பணத்தை சேமிக்கலாம்.

இவைதவிர லஞ்சம் வாங்குதல், கடத்தல் செய்தல், கட்டுப்பாடில்லாத உணவு, தீய சொற்களைப் பேசுதல் போன்ற பல குறைபாடுகளை பெற்றோர்கள் மூலமே பிள்ளைகள் கற்பதால் இவைகளையெல்லாம் தவிர்க்கும் விதத்தில் பெற்றோர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்