Home » Articles » தப்பித்தலா? விடுதலையா?

 
தப்பித்தலா? விடுதலையா?


admin
Author:

(15.04.2001) அன்று ‘தன்னம்பிக்கை’ மாத இதழும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸஃ’ நிறுவனமும் இணைந்து நடத்திய “விட்டு விடுதலையாவோம்” நிகழ்ச்சியில் திரு.வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அவர் உரையிலிருந்து சில பகுதிகள் உங்களுக்காக)

விடுதலையாவது என்றால் என்ன? நம்மில் பலருக்கு தப்பித்தலுக்கும், விடுதலைக்கும் வேறுபாடு தெரிவதில்லை. பள்ளிவிட்டு ஓடிவரும் குழந்தைகளைப் பாருங்கள். அவர்களிடம் எதிலிருந்தோ தப்பித்து வந்த சந்தோஷம் இருக்கும். தப்பித்தல் என்பது தற்காலிக நிம்மதி. அது மற்றவர்களிடமிருந்து தப்பிப்பது. ஆனால் விடுதலை என்பது நம்மிடமிருந்து நாமே பெறுவது.

நம் மனதை ஆக்கிரமித்திருக்கும் பழைய பதிவுகளிலிருந்து விடுதலை, நமக்கு நாமே போட்டிருக்கும் முகத்திரைகளிலிருந்து விடுதலை, நம்மை பழைய பெருமைகளில் புதைந்து போக வைக்கிற இறந்த காலத்திலிருந்து விடுதலை, இதையெல்லாம்தான் இளைஞர்களுக்கு இப்போது தேவைப்படுகிற விடுதலைகள்.

‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுதல் மகிமை இல்லை’ என்றார் மகாகவி பாரதி. இந்த நொடிதான் சத்தியம் என்று நுண்ணறிவோடு உணர்ந்து விநாடிக்கு விநாடி முழுமையாக வாழ்பவர்கள் இந்த விலங்குகளிலிருந்து விடுதலையாகிறார்கள்.

“ஒரு படியில் கால் வைக்கும் போது கடந்து வந்த படி காணாமல் போகிறது” என்று எங்கோ படித்திருக்கிறேன்.

கடந்த காலமும் படிதான். ஒரு மரம், பழுத்த இலைகளை அகற்றிவிடுவது போல, ஒரு செடி காய்ந்த பூக்களைக் கழற்றி விடுவது போல, நம் மனம் கடந்த காலத்திலிருந்து மீண்டு இந்த நொடியில் முழுமையாக ஈடுபடும்போது விடுதலை ஏற்படுகிறது.

தப்பித்தல் என்பது ஒரு உலோகத்துக்குத் தங்கமுலாம் பூசுவது மாதிரி. அது விரைவில் வெளுத்து விடும். விடுதலை என்பது ஒரு உலோகத்தை தங்கமாக ரசவாதம் செய்வது மாதிரி. அது நிரந்தரமாய் நிலைத்திருக்கும்.

நம்மை நாம் வளர்த்துக் கொள்வதற்கு புத்தக வாசிப்பு என்பது மிக மிக முக்கியம். புத்தகம் என்பது தாள்களின் தொகுப்பு மட்டுமில்லை. தகவல்களின் தொகுப்பு மட்டுமில்லை, அந்தப் புத்தகத்தை வாங்கிய நினைவுகளையும் அது நம் மனதில் பதிவு செய்து விடுகிறது. எந்தச் சூழலில் எந்த விதமான புத்தங்களை நாம் வாங்குகிறோம் என்பது நாம் நம்மையே எடை போட உதவும்.

புத்தகம் வாங்குவது ஒரு கலை, அதை எப்படி வாசிப்பது என்பது ஒரு கலை. வாசித்ததை அசைபோடுவது என்பது ஒரு கலை. அசைபோடுவதை எப்படி மனதில் தக்க வைப்பது என்பது ஒரு கலை. தக்க வைத்ததை எப்படி வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை. வெளிப்படுத்தியது போலவே எப்படி வாழ்வது என்பது ஒரு கலை. புத்தகங்களை இவ்வளவு நுட்பமாக பயன்படுத்துபர்கள்தான் காலப்பெருவெளியில் அழியாத பாதச்சுவடுகளை விட்டுச் செல்கிறார்கள்.

பலபேர் “எங்களுக்கு சாதிக்க ஆசைதான். ஆனால் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன”என்று சொல்கிறார்கள். பிரச்சினைகள் இல்லாதவர்களால் சாதிக்கவே முடியாது. பிரச்சினையும்,சாதனையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

இன்னும் சிலபேர் தங்கள் ஏக்கங்களையே தாழ்வு மனப்பான்மை என்று தவறாகக் கருதி விடுகிறார்கள். ஏக்கம் வேறு, தாழ்வு மனப்பான்மை வேறு. ஒரு குறிபிட்ட அளவு தாழ்வு மனப்பான்மை இருப்பது கூட நல்லதுதான். அப்போது தான் அதனை இட்டு நிரப்பி ஒருவன் உயர முடியும். அதீதமான தாழ்வு மனப்பான்மை மனச்சிதைவு, மனப்பிறழ்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.

சிலர் தன் மனவருத்தங்களை சொல்ல மனநல மருத்தவரிடம் செல்கிறார்கள். மனநல மருத்துவர் என்பவர் நம் புலம்பல்களை பொறுமையாகக் கேட்பவர். மற்றவர்களிடம் புலம்பினால் அவர்களின் புலம்பல் பட்டியல் இன்னும் பெரிதாக இருக்கும். ஆனால் நாம் சொல்வதையெல்லாம் ஒரு மனநல மருத்துவர் கேட்பார். அவர் தீர்ப்பாரா என்பது வேறு விஷயம்.

“ஒரு மனிதர் 100% புத்தி சுவாதீனத்துடன் இருந்தால் அவரை என்ன செய்வீர்கள்” என்று ஒரு மனநல மருத்துவரிடம் கேட்டபோது “அவரை குணப்படுத்துவோம்” என்று பதில் சொன்னாராம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நம் பிரச்சினைகளுக்கு வெளியிலிருந்து யாரும் தீர்வு தரப்போதில்லை. நாமே நம்மைப் பார்த்து நம்மை வளர்த்துக் கொண்டால்தான் விடுதலை அடைய முடியும்.

உண்மையான முதிர்ச்சி என்பது அறிவிலோ திறமையிலோ இல்லை. அடுத்தவர்களை சார்ந்து வாழாத தன்மைதான் முதிர்ச்சி. இந்தப் பக்குவத்தை குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தர வேண்டும். தங்கள் தேவைகளை தாங்களே முயன்று பெறுகிற வலிமையை குழந்தைகளுக்குத் தரவேண்டும். நிறையப்பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக தாங்களே படிக்கிறார்கள். இது தவறு.

ஆப்பிரிக்காவில் சில மரங்கள் முன்னூறு அடி, நானூறு அடி உயரத்திற்கு வளருகின்றன. அவற்றை இந்தியாவில் கொண்டு வந்து நட்டால் 30 அடிக்கு மேல் வளரவில்லை. ஏனென்று பார்த்தால் ஆப்பிரிக்காவில் அடர்ந்த காடுகளில் 300,400 அடிக்கு வளர்ந்தால் தான் சூரிய வெளிச்சம் கிடைக்கும். அந்த நிர்ப்பந்தம் காரணமாய் அந்த மரங்கள் அந்த உயரத்திற்கு வளர்ந்தன. ஆனால் இங்கே சூரிய வெளிச்சம் எளிதாய்க் கிடைப்பதால் மரங்கள் வளரவில்லை. நிர்ப்பந்தம் இருந்தாலேயொழிய, மரங்கள் வளர்வதில்லை, மனிதனும் வளர்வதில்லை.

ஆகவே, கட்டுச்சோறு கட்டிக்கொடுப்பது போல உபதேசங்களை திணித்தால் அது குழந்தைகளின் அறிவை மழுங்கச் செய்யும். கடன் வாங்கிய கருத்துகளில் வாழ்வை செலுத்தாமல் சுய அறிவு கொண்டு வாழ்க்கையை நடத்துபவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

வாழக்கை என்பது பெரிய பயணம். பிரச்சினைகளும், கேள்விகளும் எதிர்கொள்கிற பயணம். அவற்றை தயாரித்த பதில்களுடன் எதிர்கொள்வதென்பது இயலாது. முழுமையான விழிப்புணர்வும், விநாடிக்கு விநாடி வாழ்கிற நுட்பமும், துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால் நம் பாதையிலிருக்கும் முட்கள் அனைத்தும் பஞ்சு மெத்தையாய் மாறிவிடும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்