Home » Articles » (நி)தானம்

 
(நி)தானம்


சாந்தாசிவம்
Author:

ஐம்புலன்களையும் நம் கட்டுக்குள் அடக்கி மனிதப் பிறவியின் உண்மையான அர்த்தங்கள், அதன் பலன், பரிபூரணங்கள் என்ன? என்று உணர்ந்தால்தான் நாம் நிதானத்தைக் கடைபிடிக்க முடியும். நிதானம் நம்மை உயர்த்தி மேம்பட வைக்கும். “நிதானத்தை கடைபிடிக்க ஆரம்பித்தால் நாம் வெற்றியின் முதல் படியில் கால் வைத்தவராவோம்.”

நிதானமில்லாத சந்தோஷம், தோன்றியதும் மறையும் நீர்க்குமிழியைப் போன்றது. அப்பொழுது அதில் அவசரமும், ஆதங்கமும் அழுகைகளோடு கூடிய ஆர்ப்பாட்டமும் ஆட்கொண்டு ஆளையே அசிங்கப்டுத்திக் காட்டும்.

படிக்கும்போது நிதானமிழந்தால் தேர்வில் தோல்வி.

ஒரு பணியில் ஈடுபடும்போது நிதானமிழந்தால் பொருள் நஷ்டத்துடன் காலமும் விரயம்.

வாகனங்களில் செல்லும்போது நிதானமிழந்தால் விபத்து, சமைக்கும்போது நிதானமிழந்தால் உணவுப்பொருள் வீண்.

திறமையான ஒரு வியாபாரி சற்று நிதானமிழந்தாலும், பெருத்த நஷ்டத்துடன் நல்ல வாடிகையாளர்களையும் இழக்க நேரிடும்.

இப்படி, நம் வாழ்வில் எண்ணற பல விஷயங்களிலும் நாம் நிதானிக்க வேண்டும்.

ஒரு மனிதன் தன்னால் எவ்வளவு முன்னேற முடியும் என்பதைச் சிந்தித்து அறிந்து செயல்படும்போது…நிதானம் அவன் வசப்பட்டு தன் நிலைமையை உயர்த்திக்கொள்ள முற்பட்டு விட்டான் என்றே அர்த்தம். நிதானத்தை கடைபிடித்தால் எதிர்மறையான அணுகுமுறைகள் நம்மை அணுகாது.

பேசிய பிறகு வருந்தவதைவிட பேசும் முன்பே யோசித்து நிதானத்தை கடைபிடித்துப் பேச வேண்டும். பேசும்பொழுதெல்லாம் நம் உள்ளத்தின் வெளிப்பாடுகளையும் தெரியவைக்கிறோம் என்பதை நினைவு கூர்தல் அவசியம்.

பல வெற்றியாளர்களை நம்முன்னே நிறுத்தி பட்டியலிட்டுப் பார்ப்போம். அவர்களால் முடியாதுபோய் போராடி வெற்றிகண்ட ஒரே ரகசியம் “தன்னம்பிக்கை” என்பது நமக்குத் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும். அப்போது ஏற்படும் சந்தோஷம்தான் நிதானமான, மற்றவர்கள் கண்களுக்குத் தெளிவாக புலப்படும் சந்தோஷம்.

நிதானத்தைப் பற்றி எழுதும் நாம் மிகச்சரியான நிதானமுடையவன் என்று தவறாக எண்ணி விடாதீர்கள். நானும் என் வாழ்வில் பல விஷயங்களிலும் எண்ணியபடி நடக்க முடியாமல் நிதானமிழந்து நிலை தடுமாறியவள் தான்.

பல சமயங்களில் நிதானமாக நடந்தாலும், சில விஷயங்களில் நிதானமாக நடக்க முடியாமல் முயன்று கொண்டிருக்கும் ஒரு சராசரி பெண்தான்.

என் உறவினர் ஒருவர் எந்த ஒரு தொழிலாகட்டும். அதன் அணுகுமுறைகளை முழுவதும் அக்கறையோடு கேட்டுத் தெரிந்து கொள்ளவார். ஆனால், அவற்றில் இறங்கும்போது அகலக்கால் வைப்பதோடல்லாமல் சரியான வரிசைக் கிரமமாக நடைமுறைகளைத் கையாளாது நஷ்டத்திலும் கஷ்டத்திலும் யார் பேச்சையும் கேட்காது மாட்டிக் கொண்டு திணறுவார்.

ஆனால், ஒரு வியாபாரம்பற்றி அடுத்தவருக்கு சொல்லும்போது எல்லாம் சரியான புத்திமதியாக இருக்கும். இவர் செய்யும் போதுதான் கோட்டடை விட்டு விடுவார். “சொல்வது யாவர்க்கும் எளிதாம்” என்பது கடந்த 17 வருடங்களாக பல தொழில்களின் அனுபவங்களில் நான் இவரிடம் தெரிந்து கொண்டவை.

இவையெல்லாம் இவருக்கு ஈட்டித் தந்தது பல வித்த்திலும் கடன்களைத்தான்.

“நிதானமான வாழ்க்கை – நல்ல அடித்தளமிட்ட அருமையான உறுதியான கட்டிடம்” நிதானத்தோடு நாம் ஒரு பொருளை கொடுத்து உதவும் தானம்தான் மிக உயர்வான முழுமையான தானமாக இருக்கும். ஒரு பொருளை ஒருவருக்கு கொடுத்துவிட்டு பின் ஒரு சமயம் “அட அப்போது தூக்கிக் கொடுத்தோமே இப்பொழுது நமக்கே தேவைப்படுதே” என்பதெல்லாம் உதவி, தானம் என்ற சொல்லில் இடம் பெறாதவை.

நம் பக்கத்து வீட்டுக்காரர்/நம் உறவினர்/ சிநேகிதி என “குஜராத்” நிதிக்கு தொலைக்காட்சியில் நிதி வழங்கியவர்கள் பெயரெல்லாம் போட்டு பிரமாதப்படுத்துவதால் தாங்களும், தன் பங்கு அதிகம் இருப்பதற்காக போட்டிக்கு பல ஆயிரங்களை தந்துவிட்டு “அவனால் தான் நானும் சில ஆயிரங்கள சேர்த்து தர வேண்டியதாகிவிட்டது. பாவி கொஞ்சம் குறைவாகத் தந்திருக்க கூடாது? எங்கே போய் இதெல்லாம் சேரப்போவதோ, பெயரை போடுறாங்கன்னு கொடுத்தேன்” என்போர் எத்தனையோ பேர்.

போட்டிக்கும், பொறாமைக்கும், பெருமைக்கும் செய்யப்படும் பொருளுதவியினால் ஒரு பயனும் இல்லை. எந்த எதிர்பார்ப்பும் செய்யும் உதவி, தானங்களில் இருக்கக் கூடாது.. அடுத்தற்கு உதவும் குணம் அன்பிருந்தால் மட்டுமே செய்யப்படுபவை. பிறர் எதிர் பார்க்காதபோது கருணை உள்ளத்தோடு செய்யப்படும் உதவிதான் தானம் என்றழைக்கப்படுகிறது.

உள்மனதில் ஆழமாக அவர்களே உணர முடியாத வண்ணம் தூண்டப்பட்டு ஏற்படக்கூடிய உன்னதமான உயர் நோக்கான செயல் “தானம்”. அது தூண்டப்படும்போது அவர்களை யாரும் தடுத்துவிட முடியாது.

நிதானத்தில் பிறந்து வரும் புனிதம்தான் தானங்கள். இதில் புகழ், கௌரவம், லாபம் என்ன என்ற எதிர்நோக்கமெல்லாம் இருக்காது.

தன்னலமற்ற சேவை நோக்கின் வெளிப்பாடுதான் தானம், தயாளகுணம், தவக்குணம். அன்பின் ததும்பலால் மனதில் துளித்துளியாக வெளியே சிதறும் சிறப்பான குணம்.

உண்மையான தானத்தில் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் இருவருக்குள்ளும் அந்த ஷனத்தில் உள்ஆழத்தில் ஏற்படும் உணர்ச்சிகள் இருக்கிறதே… அதை அந்த இருவரால் மட்டுமே அனுபவித்து உணர முடியும். அதை வர்ணித்து எழுதி விடலாகாது. நிதானத்தோடு செய்யும் தானம்தான் இதையெல்லாம் நிகழ்த்திக் காட்டும்.

நம் முன்னோர்களில் பெரும்பாலும் இப்படியெல்லாம் இருந்தனர். இப்படிச் செய்து அவர்கள் சொர்க்கங்களை மண்ணிலேயே அனுபவித்துச் சென்றவர்கள். தற்போதோ, இப்படிப்பட்டவர்களை தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

தானம் பெறுபவர், சற்று உணர்சிகளின் உந்துதலில் இன்ப அதிர்ச்சியால், அப்படியே.. தவித்துப்போய் நிலைகொள்ளாத சந்தோஷம் அடைவார். ஆனால், தானம் கொடுப்பவரோ கருணையோ நிதானமாக பொறுமை, நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி போன்ற கலவையின் வெளிப்பாட்டால் அதை வடிகாலாககச் செய்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. இம்மாதிரியான தானங்கள் செய்பவர்கள் இக்காலத்தில் சொற்பமே.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?