Home » Articles » சிரிப்போம் சிறப்போம்

 
சிரிப்போம் சிறப்போம்


ஞனசம்பந்தம் கு
Author:

“உலகின் முதல் பெண்மணி யார்?”

“ஏவாள்.. சார்”

“அவளோட சிறப்பும் பெருமையும் எது?”

“கடவுளால் படைக்கப்பட்டது சிறப்பு சார்”

“பெருமை?”

“அவளுக்கு மாமியார் கிடையாது சார்”

ஒரு வகுப்பறையில் நடைபெற்ற உரையாடல் அது..

“இராமன் காடு சென்றபோது சீதையும் உடன் சென்றாளே… ஏன் தெரியுமா?”

“தெரியும் சார்.. ஒரு மாமியார் இருந்தாலே தாங்கமுடியாது. சீதைக்கு அறுபதாயிரம் + மூன்று மாமியார் அதனால்தான் சார்”

இப்போது படிக்கும் மாணவ மாணவியர் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்.

அதையே நகைச்சுவைத் துணுக்காக மாற்றினார் ஒருவர்.

மேல் நாட்டில ஒருவருடைய வீட்டில் வளர்த்த நாய் கடித்ததால், அவருடைய மாமியார் இறந்து போனார். அவளுடைய இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்களாம்.

அங்கே வந்தர்களுள் ஒருவர் வீட்டுக்கார்ரை அணுகி, “ஐயா, அந்த நாயை விலைக்குத் தரமுடியுமா?” எனக் கேட்டார். வீட்டுக்காரர் கோபத்தோடு சொன்னாராம் “இதோ இங்கே வந்திருக்கும் ஆயிரம் பேரும் எதற்கு வந்துள்ளனர் தெரியுமா? இந்த நாயை வாங்கத்தான் ” என்றாராம்.

நம் நாட்டில் மாமியார் X மருமகள் சண்டை என்றால் மேல் நாட்டில் மாமியார் X மருமகன் சண்டைதான்.

எந்த ஒரு செய்தியும், நாம் எடுத்துக்கொள்வதைப் பொறுத்தே துன்பமாகவோ, இன்பமாகவோ அமையும்.

உற்சாகமான மன எழுச்சியை எப்போதும் பெற்றிருக்க என்ன செல்வது? என்று பலர் கேட்கிறார்கள். என்றும் பெரிய சிரமமில்லை. கொஞ்ச நாளைக்கு டி.வியில் வரும் “மெகாத்தொடர்” களைப் பார்க்காமல் இருந்தாலே உற்சாகம் ஊற்றெடுக்கும் என்கிறார் ஒரு அனுபவசாலி.

நட்சத்திரங்கள் நிறைந்த வானம், ஓசையோடு விழும் அருவி, கால் நடையும் பனி நிறைந்த புல்தரை, இரவு நேரத்தில் மெல்லிய இசையுடன் வரும் வானொலி, கூட்டமே இல்லாத கோவில் என்று ஒரு பட்டியல் போட்டுக்கொண்டு ரசிக்கத் தொடங்குங்கள் உற்சாகம் உங்களோடு ஓடிவரலாம்.

நல்ல நகைச்சுவைப் படங்கள், பேச்சு, எல்லாம் கூட ஒரு புத்துணர்ச்சியைத் தருபவைதான்.

ஒரு உணவு விடுதிக்கு தந்தையும் மகனும் சென்றார்கள்.

பையனுக்கு வயது 10 இருக்கும். தந்தை மகனிடம் கேட்டார் “உனக்கு இன்னொரு ஐஸ்கிரீம் வாங்கித் தரட்டுமா?

“நீங்கள் இன்னும் ஒன்றுமே வாங்கித்தரவில்லையே” ஆச்சரியத்தோடு மகன் கேட்டான்.

“இல்லை நீ மூன்று வயது பையனாக இருந்தபோது ஒரு முறை வாங்கித் தந்தேன்..நீதான் மறந்து விட்டாய்” என்றாராம்.

கோபம் என்ற உணர்வு எல்லாவற்றையும் சிதைத்து விடும். அதை அடக்க முடியுமானால் எதனையும் சாதிக்கலாம். சரி…

கோபத்தை எப்படி அடக்குவது?

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் ஏறியிருந்த பெட்டியில் இரண்டு ஆங்கிலேயரும் ஏறியிருந்தனர்.

இரண்டு பேரும் விவேகானந்தரை வெறுப்போடு பார்த்தார்கள். இந்தியர்கள் என்றாலே அவர்களுக்கு இளக்காரம், ஏளனம்தான். அதுவும் துறவி என்றால் கேட்கவா வேண்டும். விவேகானந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என நினைத்து அவரைக்குறித்து அவர் காதுபடவே இழிவாகப் பேசினர்.

விவேகானந்தர் ஒரு வார்த்தையும் பதில் பேசவில்லை. சண்டையிடவில்லை. மௌனமாக அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தார்.

அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றது. விவேகானந்தர் ஸ்டேஷன் மாஸ்டரை அருகில் அழைத்து “குடிப்பதற்கு நல்ல நீர் கிடைக்குமா? என்ற ஆங்கிலத்தில் அழகாகக் கேட்டார்.

அவர் ஆங்கிலம் பேசியதைக் கேட்ட, இரண்டு ஆங்கிலேயர்களும் திடுக்கிட்டனர்.

“உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?” ஒருவர் வேகமாக விவேகானந்தரிடம் கேட்டார்.

“நன்கு எழுதவும் பேசவும் தெரியம்” ஆங்கிலத்திலேயே பதில் கூறினார் விவேகானந்தர்.

“அப்படியானால் நாங்கள் கடந்த அரைமணி நேரமாக உங்களைத் திட்டிக் கொண்டிருந்தோமே.. நீங்கள் ஏன் எங்களோடு சண்டையிடவில்லை?” என்றனர்.

அதற்கு விவேகானந்தர் பொறுமையாக விடை கூறினார். “நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல்முறையல்ல” புத்திசாலித்தனமான பேச்சு சுவையாக இருக்கும்.

கடவுளும், மனிதனும் உரையாடினால் எப்படி இருக்கும்?

ஒரு மனிதன் கடவுளிடம் கேட்டான் “சுவாமி உங்களுக்கு, ஒரு கோடி வருடம் என்பது எப்படி?”

“ஒரு நிமிடம் போல” என்றார் கடவுள்.

“சரி, ஒரு கோடி ரூபாய் என்பது…” இது மனிதனின் சந்தேகம்.

“சந்தேகம் என்ன ஒரு ரூபாய்தான்”

“அப்படியானால் எனக்கு ஒரு ரூபாய் தரமுடியுமா?” என்று வினயமாகக் கேட்டான்.

உடனே, கடவுள் “அப்படியானால் ஒரு நிமிடம் பொறு என்றார். மனிதன் மயங்கி விழுந்தான்.

வெற்றிக்கான மன நிலையைப் பெறுவது எப்படி, இது சிலரின் சந்தேகம், மராட்டிய வீரர் சிவாஜியின் பெருமையை வரலாறு கூறும். அந்த வீரர் எப்படி உருவானார்? அவரது தாயார் வீரம் செறிந்த கதைகளையே அவருக்கு எப்போதும் கூறுவது வழக்கம்.

அடிக்கடி தன் மகனோடு அமர்ந்து அந்த வீரத்தாய் தாயம், சொக்கட்டான் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது வழக்கம். எல்லா விளையாட்டுகளிலும் தாயார் தோற்றுக்கொண்டே இருப்பாராம்.

ஒருமுறை சிவாஜி தன் தாயிடம் கேட்டார். “அம்மா நீங்கள் ஒருமுறை கூட ஜெயிப்பதில்லையே ஏனம்மா?”

“மகனே! ஒரு முறைகூட விளையாட்டாக இருந்தாலும் தோற்கக்கூடாது என்பதற்காகத்தான்” என வீரமாகக் கூறினாராம். இந்த வீர உரைகளே வீர சிவாஜியை உருவாக்கின.

சிறு வெற்றிப்படிக்கட்டுகளே மிக உயர்ந்த லட்சியக் கோட்டைக்கு நம்மை இட்டுச் செல்லும்.

வாழ்க்கையை ரசித்தல், கோபத்தைத் தவிர்த்தல், மகிழ்ச்சியைப்பெருக்குதல், கவலைகளைக் கைவிடுதலை இவையெல்லாம் புதிய உலகின் பல வழிகள் தாம்.

சிறிய ஒரு நகைச்சுவை…

“அப்ளிகேசனைப் பூர்த்தி செய்ய யாராவது டெல்லி போவார்களா?” கோபத்தோடு கேட்டாள் மனைவி.

“உளறாதே என்ன போட்டிருக்கு பார் Wriet in Capital அதனால் தான் போனேன்”.

(மீண்டும் அப்புறம்…)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?