Home » Cover Story » நம்பிக்கையும் நானும்

 
நம்பிக்கையும் நானும்


நல்லி குப்புசாமி செட்டியார்
Author:

டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் பேசுகிறார்.

(நல்லி குப்புசாமி செட்டியார், ஜவுளி உலகின் ஜாம்பவான். தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் கிளைபரப்பி இருக்கும் நல்லி பழமைக்கும், புதுமைக்கும் பாலமிடும் ஒரே நிறுவனமாக அமைந்துள்ளது. இதன் நிர்வாகியாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வரும் இவர், நல்லி நிர்வாகத்தின் மூன்றாவது தலைமுறை. தனது நெடிய அனுபவத்தின் பதிவுகளாக நிர்வாகவியல், வணிக உறவுகள், தனி மனித்த் தொடர்புகள் போன்ற துறைகளில் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். பட்டு நூல், படைப்பு நூல் இரண்டிலும் புகழ்பெற்றுத் திகழும் இவர் நமக்காக செலவிட்ட நேரத்தின் சாரம் உங்களுக்காக…!)

நல்லி நிர்வாகத்தின் வரலாறு பற்றி விரிவாகச்சொல்லுங்களேன்

எங்களது பூர்வீகம் ஆந்திர மாநிலம். கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் எங்களது முன்னோர்கள் தெற்கே காஞ்சிபுரத்திற்கு அனுப்பப்பட்டார்கள். அப்படி காஞ்சிபுரம் வந்தவர்கள்தான் நாங்கள்.

“நல்லி” என்பது எங்களது குடும்பப்பெயர்.

அப்போதெல்லாம் மின் தறிகள் கிடையாது. இவ்வளவு மிருதுவான பட்டும் கிடையாது. நாளொன்றுக்கு10 மணி நேரம் தறியில் வேலை செய்தால் புடவை நெய்து முடிக்க மூன்று நாட்களாகும்.

எனது பாட்டனார் அமரர் நல்லி குப்புசாமி செட்டியார் இதற்கு விதி விலக்கு. தறியில் உட்கார்ந்தால் 1 நாளில் ஒரு புடவையை நெய்து விடுவார். புடவைகளை சென்னை எடுத்து வந்து வாடிக்கையாளர்களிடம் சேர்பித்து விட்டு ஊர் திரும்புவார்.

வாரம் ஒரு முறை நிகழ்ந்து கொண்டிருந்த இந்தப் பயணம் இரண்டு நாளுக்கு ஒரு முறை என்கிற அளவிற்கு வளர்ந்ததும், தன் வேலை கெடுவதாக உணர்ந்தார் எனவே சென்னையிலேயே ஒரு விற்பனை டிப்போ தொடங்கினார்.அப்பொழுதெல்லாம் இந்தப் பகுதி காடுபோல கிடந்தது. இந்த அளவிற்கு பிரபலம் ஆகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

கடை தொடங்கியவுடனே வியாபாரம் சூடு பிடித்துவிட்டதா?

அப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு 5 புடவைகள் தான் விற்கும். ஒன்பது கஜம் புடவை ரூபாய் 18. ஆறு கஜம் புடவை ரூபாய் 12. அப்படி விற்கிற ஐந்து புடவைகளில் நான்கு கடனுக்கு விற்கப்படும். மாதம் 5 ரூபாய் என்கிற தவணையில் வாங்கிச் செல்வார்கள்.

அப்பொழுதெல்லாம் ரூபாய் 5 என்பதே பெரிய விஷயம். சென்னையை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு ஒரு பிரிவுக்கு என் தந்தையும், இன்னொரு பிரிவுக்கு ஒரு மேலாளரும் சைக்கிளிலேயே செல்வார்கள். அந்த மேலாளர் இன்னும் எங்கள் கடையிலேயே பணி புரிகிறார். இப்பொழுது 82 வயதாகும் அவர் நான் பிறப்பதற்கு 2 வருடம் முன்பு வேலையில் சேர்ந்தவர்.

அப்போது 1939ல் உலக யுத்தம்நடந்தது. குண்டு வீச்சுக்கு பயந்து மற்றவரகள் எல்லாம் கடையை காலி செய்து கொண்டு போனார்கள். ஆனால் எனது அப்பாவுக்கு ஒரு வாடிக்கையாளர் ராகவேந்திர்ர் படத்தைக் கொடுத்து இதை கடையில் மாட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் கடையை காலி செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டுப்போனார்.

மற்றவர் எல்லோரும் போய்விட எங்கள் கடை மட்டும் தொடர்ந்து நடந்தது. இங்கே ஒரு கடை இருக்கிறது என அப்பொழுதான் பொது மக்களுக்குத் தெரிந்தது. நாளடைவில் பட்டின் ரகங்கள் அதிகமாயின. பட்டின் தேவையும் அதிகமானது. தரம், குறித்த காலத்தில் தருதல் போன்ற கொள்களை கடைபிடித்ததால் “நல்லி” பிரபலமானது.

பட்டுப்புடவையை பொறுத்தவரை தொடர்ந்து பாரம்பரியமாக வரும் வாடிகையாளர்களே அதிகம். அவர்களை எப்படி தக்க வைத்துக்கொள்கிறீர்கள்?

பட்டு வாங்குவதில் வாடிக்கையாளர்கள் முக்கியமாகப் பார்ப்பது கைராசியே. அந்த வகையில் தொடர்ந்து இரண்டு மூன்று தலைமுறைகளாக எங்களிடமே பட்டு வாங்கிற குடும்பங்கள் ஏராளம்.

எங்கள் கடையைப் பொருத்தவரை புடவை வாங்கிக் கொண்டுபோய் சில காரணங்களால் திருப்பிக் கொண்டு வந்தால் உடனே திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். அவ்வாறு எப்போதாவதுதான் நடக்கும். ஆனாலும், வாடிக்கையாளர்களின் மன நிறைவுதான் முக்கியம் என்பதில் மிக்க கவனமாக இருக்கிறோம்.

லண்டன் போயிருந்தபோது “செல்பிரிட்ஜ்” என்ற கடையைப்பார்த்தேன். அங்கே வாடிக்கையாளர்கள் திரும்பக் கொண்டு வரும் பொருட்களைப் பெற்றுக்கொண்டு பணம் தருவதற்கே மூன்றாவது மாடியில் ஆறு கவுண்டர்கள் வைத்திருக்கிறார்கள்.

அடுத்தது, எனது நேரடி கவனம். கல்கத்தாவில் எனக்கொரு நண்பர் நிறைய தொழிற்சாலைகள், ஆலைகள், ரியல் எஸ்டேட் என்று நடத்தி வருகிறார்.

அவரது விசிட்டிங் கார்டில் ஒரு பக்கம் முழுக்க அவரது பல்வேறு தொழில்களின் பட்டியல்தான் அச்சடிக்கப்பட்டிருக்கும்” எப்படி இத்தனை தொழில்களை நிர்வகிக்கிறீர்கள்?” என்று நான் கேட்டதற்கு “என்னால் இவ்வளவு தொழில்களை பார்த்துக் கொள்ள முடியும். ஆனால், ஓர் “நல்லி” கடையை நிர்வகிக்க முடியாது” என்று பதில் சொன்னார். அதற்கு அவர் சொன்ன காரணம் நியாயமானது.

ஒரு உற்பத்தி இடத்திலோ, தொழிற்சாலையிலோ ஒரு தொழிலாளி ஒரு இயந்திரத்தில் ஒரு நாளில் எந்த அளவிற்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்று சொல்லிவிட முடியும். ஒரு இலக்கை நிர்ணயிக்க முடியும். ஒரு துணிக்கடையில் அது சாத்தியமில்லை.

தொழிற்சாலையில், உற்பத்தி அறிக்கையை வைத்து ஒரு பணியாளரின் செயல்பாட்டை மதிப்பிட முடியும். ஆனால் துணிக்கடை என்கிற போதே முதலாளியின் நேரிடை கண்காணிப்பு மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் முதலாளியே வரவேற்று உபசரிப்பதற்கும் கடையிலேயே இருக்க வேண்டியது அவசியமாகிறது.

திருமண பட்டுப்புடவைகள் வாங்கும் பொழுது கடை உரிமையாளர் அதனை பிரார்த்தனை செய்து தருவார் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இவையெல்லாம் வாடிக்கையாளர்களிடம் நல்லுறவு வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் வழிகள்.

நல்லி போன்ற பெரிய பட்டு நிறுவனங்களைப் பார்க்கும்போது இந்த்துறைக்குப் புதிதாக வருகிறவர்கள் நாமும் இதுபோல் பெரிய நிறுவனம் வேண்டும் என்ற உநம்பிக்கை கொள்கிறார்களா? அல்லது இவர்களோடு போட்டி போட வேண்டாம் என ஒதுங்கிவிடுகிறார்களா?

தரத்தில் கவனம் செலுத்துதல், குறித்த காலத்தில் புடவைகளை கொடுத்தல் போன்றவிற்றில் உறுதி இருந்தால் யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலும் வரலாம்.

விலை என்று வருகிபோது முடிந்த அளவு குறைந்த விலைக்கு தருவது என்று வைத்துக் கொள்ள வேண்டும். செலவுகளை குறைத்துக்கொண்டால் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க முடியும்.

நல்லியைப் பொறுத்துவரை காலம் காலமாகவே “கறார் விலை என்பது பழகிவிட்ட ஒன்று. விலையை தேவையில்லாமல் கூட்டுவதில்லை. அதனால் குறைப்பதுமில்லை.

புதிதாக வருகிறவர்கள் வாடிக்கையாள்களில் இன்றைய மநிலையப்புரிந்து கொள்ளவேண்டும். பொதுவா, இப்பொழுதெல்லாம் அவர்களுக்கு நேரமிருப்பதில்லை. நம்மிடம் ஒரு டிசைன் இல்லையென்றால் அதை வேறு கடையில் வாங்கக் கொள்வார்களே திவிர நாம் உருவாக்கித் தரும் வரை காத்திருப்பதில்லை. எனவே இவற்றையெல்லாம் சமாளிக்கும் ஆற்றலிருந்தால் யார் வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம்.

நாம் நம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால் வாடிக்கையாளர்கள்தங்கள் கடையை மாற்றிக்கொள்கிறார்கள். புதிதாக வருபவர்களுக்கு இந்த துறையில் நிறைய வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக பட்டு, நகைகள் போன்றவைகள் எல்லாம் ஆடம்பரப் பொருள் தானே! எல்லாத் தரப்பினருக்கும் தேவையான பொருள் என்று சொல்லிவிட முடியுமா?

பொருளாதாரத்தில் எவ்வளவு பின் தங்கியிருந்தாலும் திருமணத்தின்போதோ, பண்டிகையின்போதோ பட்டெடுப்பது எல்லோருக்குமே உள்ள ஒரு இயல்புதான். அதனல்தான், பட்டு விற்பனையாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது என்கிறேன்.

ஒருவர் நம்மிடம் 4000 ரூபாய்க்கு தீபாவளி சமயத்தில் பட்டு வாங்குகிறார் என்றால், அது அவருடைய ஒரு மாத சம்பளமாக இருக்கலாம். எனவே தரமானதை நியாயமான விலையில் நாம் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக, ஒரு காலத்தில் ஆடம்பரம் என்று கருதப்படுவது ஒரு காலத்தில் அத்தியாவசியமாகிறது.

முன்பெல்லாம் கடைக்கு ஏ.ஸி. போடுவது என்றால் ஆடம்பரம். இப்போதுள்ள சீதோஷ்ணம், ஜனத்தொகைப் பெருக்கம், மாசுபடிந்த சுற்றுச்சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு பார்க்கிற பொழுது ஏ.ஸி. ஆடம்பரமல்ல, அத்தியாவசியம் என்று படுகிறது.

துணிக்கடையில் வேலைக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஒரு நாள் சொந்தமாகக் கடை தொடங்க வேண்டும் என்கிற கனவோடு வருபவர்கள்தான். ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் பலருக்கும் இருக்கிற சிரமம் உங்களுக்கும் இருக்கிறதா?

நல்லியைப் பொறுத்தவரை, இங்கே வேலைக்கு வருகிறவர்களை நாங்களாக நிறுத்துவதில்லை. உடல் தளர்ந்து, கண்பார்வை மங்கி, தானாக நின்று கொண்டவர்கள் தான் அநேகம். இங்கிருந்த வெளியெ போய் துணிக்கடை தொடங்கியவர்களும் யாரும் கிடையாது.

நல்ல பணிச்சூழலை ஒரு நிறுவனம் தருமென்றால் வெளியேற யாருக்கும் விருப்பம் வராது என்பதுதான் என் கருத்து.

ஊழியர்களுக்கு பி.எஃப் (வருங்கால வைப்பு நிதி) போன்றவை இல்லாத காலத்திலேயே, ஓய்வு பெறுகிறவர்களுக்கு நல்ல தொகையை நாங்கள் கொடுத்ததுடு. ஓய்உ பெற்ற பிறகும் உணவுக்கு மற்றவர் கையை எதிர்பார்க்கிற சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறோம்.

அதுபோல, திடீர் மருத்துச் செலவுகள் அவர்கள் சக்திக்கு மீறி ஏற்பட்டால் அதுவும் நாங்களே செய்து விடுகிறோம். கூட பிறந்தவர்களுக்கு ஒன்று வந்தால் செய்யமாட்டோமா என்ன?

உங்கள் கிளைகள் பற்றி…?

முதலில் கிளைகள் தொடங்கக்கூடாது என்று நான் கருதினேன். ஏனென்றால் நேரடி கண்காணிப்பு இருக்காது என்பதால்தான். பிறகு நண்பர் ஒருவருடன் இணைந்து மதுரையில் கிளை தொடங்கினேன் பிறகு, கோவை, டெல்லி, நெல்லை, திருச்சி, பாம்பே, பெங்களூர், என்று இந்தியாவுக்குள் பல இடங்களில் கிளைகள் தொடங்கினோம்.

எனது புதல்வர் திரு.ராம்னாத் நிர்வாகத்தில் கலிபோர்னியா, டொரான்டோ போன்ற நாடுகளிலும் கிளைகள் தொடங்கினார். இப்போது தி. நகரிலேயே இன்னொரு கிளை தொடங்கவுள்ளோம்.

சர்தேச நிறுவனமாக நல்லியை வார்த்து விட்டீர்கள். சாதித்த சலிப்பு எப்போதாவது ஏற்பட்டுள்ளதா?

செய்கிற தொழிலில் மன நிறைவு என்பது எனக்கு எப்போதும் உண்டு. முதலில் என் தொழிலை நான் மிகவும் நேசிக்கிறேன்.

பாக்குத் தொழிலில் முன்னோடி, “அசோகா பாக்கு” உரிமையாளர் அமர்ர் கிருஷ்ணன் செட்டியார் ஒரு முறை சொன்னார், “இன்று அசோக பாக்கு பலராலும் விருப்ப்ப்படுகிறது. உலகில் ஒரு காலத்தில் வெற்றிலை போடுபவர்களே இல்லாமல் ஒரே ஒரு மனிதன் மட்டும் வெற்றிலைபோட்டுக் கொண்டிருந்தால், அந்த ஒரு மனிதனுக்காக நான பாக்கு உற்பத்தி செய்வேனே தவிர வேறு தொழிலுக்குப்போக மாட்டேன், வேண்டுமென்றால், அரையனா விற்கிற பாக்கை பத்துரூபாய்க்கு விற்பேனே தவிர தொழிலை மாற்றிக் கொள்ளமாட்டேன்” என்றார்.

என் மனநிலையும் அதுதான். என் தொழிலை நான் “கடனே” என்று செய்வதில்லை. என் ஓய்வு, என் உழைப்பு, எல்லாமே கடையில்தான். அதனால் எனக்கு சலிப்பு வருவது சாத்தியமில்லை.

நீங்கள் நல்லியில் மூன்றாவது தலைமுறை. நான்காவது தலைமுறையும் இதே தொழில்தானா?

என் மூத்த மகன் “நல்லி” ராம்னாத், என்னைவிடவும் திறமையாக நிர்வகிக்கிறார். முடிவெடுப்பது, நடைமுறைபபுடுத்துவது போன்வற்றைத் துணிச்சலாக மேற்கொள்கிறார். அவர் வந்துதான நல்லியை தமிழ் நாட்டைத் தாண்டி கொண்டு சென்றார்.

நவீன டிசைன்களை அறிமுகம் செய்வதில் மிகுந்த ஈடுபாட்டுடன் உள்ளார். டெல்லி, பாம்பேயில் புதிய டிசைன்கள் உடனே விலை போகின்றன. ஒரு புதிய டிசைனை நாங்கள் உருவாக்கினால், மறு நாளே விமானத்தில் டெல்லி செல்கிறது. நாங்கள் சென்னை வாடிக்கையாளருகுத் தருகிற அதே நாளில் டெல்லி கிளையிலும் அந்த புதிய டிசைன் கிடைக்கிறது.

பம்பாய் கிளை மகாலட்சுமி கோவில் அருகில் உள்ளது. பொதுவாக புடவைக்கடைகள் கோவிலைச்சுற்றி இருந்தால்தான் நல்லது. இந்தக்கணக்கு பம்பாயிலும் உண்மையாகி இருக்கிறது.

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு “தன்னம்பிக்கை” என்கிற விஷயம் எத்தனை தூரம் துணைபுரியும்? உங்கள் அனுபவத்தில் சொல்லுங்களேன்!

துணி விஷயத்திலும் துணிவு ரொம்பத் தேவை என்பதை நான் கண்டிருக்கிறேன். ஒரு புதிய முயற்சியைத் தொடங்கலாமா என்பதை உள்ளுணர்வக் கேட்டுக் கொண்டு செயல்படவேண்டும்.

சில முடிவுகளைத் தயங்காமல் மேற்கொள்வது தொழிலில் முக்கியம். பாதுகாப்பான வருமானத்திற்காக புதிய முடிவுகளை எடுக்கத் தயங்கினால் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. நேர்மையான – நியாயமான முயற்சி எப்போதும் தோற்பதில்லை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?