Home » Articles » உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?

 
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?


ஜெயச்சந்திரன்
Author:

உங்கள் தோல்விக்கும், துன்பத்திற்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா? உங்கள் உள்ளத்தில் பதிந்திருக்கும் “முடியாது” என்னும் எண்ணம்தான்.

அதுவா? என்னால் முடியாது. அந்தக் காரியமா? சாத்தியமில்லை. அதைச் செய்வதா? சூழ்நிலை சாதகமாக இல்லை இவ்வாறாக முடியாது; சாத்தியமில்லை; சாதகமாக இல்லை என்று எதிர்மறை எண்ணத்தை உள்ளத்தில் உறுதியாகப் பதித்து வந்திருக்கிறீர்கள்.

எதிர்மறைப் பதிவுகள்தான் உங்கள் வெற்றித் தேர் நகர்வதைத் தடுக்கும் தடைக் கட்டைகளாக மாறி விட்டன.

இந்த எதிர்மறைப்பதிவுகளை மாற்றி, ஆக்கப் பதிவுகளாக்கும் வரை உங்கள் வாழ்க்கையில் வெற்றி காண்பது அரிதாகவே இருக்கும்.

ஆக்கப் பதிவுகளைப் படியச் செய்ய வேண்டும் என்றால் முதலில் உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும். அதற்கு உங்களை நீங்கள் சரியாக அடையாளம் காணவேண்டும்.

நீங்கள் உங்கள் அறிவை, திறனை, ஆற்றலை ஆயிரம் மடங்கு குறைத்து மதிப்பிடுகிறீர்கள். அதனால் தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. தன்னம்பிக்கை வளர மறுக்கிறது. உங்களை நீங்களே சரியாக அடையாளம் காணாமல் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியாது. இப்போது நீங்கள் “யார்” என்று உங்களுக்குச் சரியாக அடையாளம் காட்டுகிறேன்.

“நீங்கள் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்திருக்கிறான். என்று மறை நூல்கள் கூறுகின்றன.

“சாயல்” என்றது எதை குறிக்கிறது? கடவுளிடம் உள்ள படைக்கும் சக்தி, உருவாக்கும் சக்தி, அற்புதம் செய்கிற சக்தி மனிதனிடமும் உள்ளது.

கடவுள் மட்டும் கால் வைத்திருந்த சந்திரனில் மனிதர்களை கொண்டு சென்று இறக்குவதற்கு ராக்கெட் விண்கலங்களை மனிதன் படைத்து வெற்றி காணவில்லையா?

கடவுள் உயிரினங்களை உருவாக்கினால், கடவுளால் உருவாக்கப்பட்ட மனிதர்கள் சிலர் ஒன்று சேர்ந்து செம்மறியாட்டிற்கு உடலிலிருந்து ஒரு செல்லை எடுத்து குளோனிங் முறையில் செம்மறியாடுகளை உருவாக்குகின்றனர். பன்றியின் உடலிலிருந்து ஒரு செல்லை எடுத்து சில பன்றிக்குட்டிகளை உருவாக்குகிறார்கள். குளோனிங் முறையிலே மனிதர்களையும் உருவாக்கும் ஆற்றல் மனிதனிடம் இருப்பது இன்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

மனோ சக்தியைப் பயன்படுத்தி நம்ப இயலாத பல அற்புதங்களைப் பல மனிதர்கள் செய்து கொண்டுள்ளார்கள்.

ஆகவே, உங்களிடம் படைக்கும் சக்தி உருவாக்கும் சக்தி, அற்புதம் செய்கிற ஆற்றல் அடங்கியுள்ளன. நம்புங்கள்.

கருணை மிக்க நம் தந்தையாகிய இறைவன் தன் குழ்ந்தைகளாகிய மனிதர்கள் விரும்பியதை அடைந்து மகிழ்ச்சியோடு, நிறைவோடு வாழ வேண்டும் என்றே சித்தம் கொண்டிருக்கிறான். அதற்காக தனக்கும், தன் குழந்தைக்கும் இடையில் பிரதிநிதியாக, இணைப்புப் பாலமாக “ஆழ்மனம்” என்னும் தேவதையை வைத்து, ஆழ்மனதிற்கு அளவற்ற ஆற்றலையும், எல்லையற்ற விசுவாசத்தையும் கொடுத்துள்ளான். மனிதனைப் பார்த்து “கேளுங்கள்; கொடுக்கப்படும்” என்ற வாங்குறுதியையும் தந்திருக்கிறான். நீங்கள் “ஆட்டோ சஜசன்” முறையில் கேளுங்கள்; மீண்டும் மீண்டும் கேளுங்கள் கொடுக்கப்படும்.

இவ்வுண்மைகளை அறிந்து கொள்வீர்களானால், இயற்கையே நீங்கள் வெற்றியும், திருப்தியும், மகிழ்ச்சியும் அடைவதற்கேற்ப உங்களைப் படைத்துள்ளது என்பதையும் , நீங்கள் அளவற்ற ஆற்றலை உள்ளடக்கி உள்ளீர்கள் என்பதையும் புரிந்துகொள்வீர்கள்.

பின் ஏன் மனிதன் எதையும்”முடியாது ” என்று எண்ணுபவனாக மாறி விட்டான்? என்று கேட்கிறீர்களா?

காட்டிலிருந்து ஆண் யானையைப் பிடித்து வருகிறார்கள். கனமான சங்கிலியை காலில் பிணைத்து மரத்தில் கட்டி வைக்கிறார்கள். நிமிடத்திற்கு சுமார் நான்கு முறையாக தொடர்ந்து விடுவித்து கொண்டு ஓட அது முயல்கிறது. ஆயிரக்கணக்கான முறை முயற்சித்தமையால், காலில் புண் ஆகிறது, வலி எடுக்கிறது. பல நாட்கள் “முடியாது”, “முடியாது” என்னும் எண்ணத்தைத் தன் உள்ளத்தில் பதித்துக் கொள்கிறது.

நாளடைவில் கனமற்ற சங்கலியால், சிறு கம்பத்தில் கட்டி வைத்தாலும் அது விடுதலை பெற முயற்சிப்பது இல்லை; விடுபட்டுச் செல்வதுமில்லை.

இந்தச் சோகத்தை மனிதனுகும் நடந்து விட்டது. முடியாது, முடியாது என்னும் எண்ணம் பல்லாயிரம் தடவை பதிந்து விட்டமையால் வறுமையிலிருந்தும், பற்றாக்குறையிலிருந்தும், தோல்வியிலிருந்தும் விடுதலை பெறும் எண்ணமே இன்றி மனிதன் வாழ்ந்து கொண்டுள்ளான்.

நீங்கள் உங்களுக்குள் புதைந்துள்ள ஆற்றலை அடையாளம் காணுங்கள். அதைப் பயன்படுத்தி பெரிய இலக்கினைச் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். குறிக்கோளை வெல்லமுடியும் என்று உறுதியாக நம்புங்கள்.

“என்னால் முடியும்; என்னால் முடியும் எதையும் சாதிக்க; என்னால் முடியும்” என்னும், ஆழ்மனக் கட்டளையைத் தொடர்ந்து கொடுங்கள். “முடியாது” என்னும் பதிவுகள் அழிந்து “முடியும்” என்னும் எண்ணம் பதியும். மகத்தான வெற்றி பெறுவீர்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?