Home » Articles » வணக்கம் தலைவரே

 
வணக்கம் தலைவரே


முத்தையா ம
Author:

“தலைவர் என்று சொன்ன மாத்திரத்திலேயே ஆள், அம்பு சேனை, சொகுசு போன்ற சுகங்கள் மட்டுமே நம் நினைவுக்கு வருகின்றன.

ஒரு தலைவரை நெருங்கிக் கேட்டுப்பாருங்கள்! வியர்வை, இரத்தம், கண்ணீர், கவு என்று உண்மையான பட்டியலை எளியிடுவார். இன்றைய – சமூக அமைப்பில், மேல் தளத்திற்கு வருகிற யாரும், அதற்குரிய விலையைக் கொடுத்துதான் வரமுடியும். “ஏதோ அதிர்ஷ்டம்! மேலே வந்துட்டாரு” என்பதெல்லாம், பொறாமையால் வருகிற பொருமல் தானே தவிர, அதில் உண்மை இராது.

சந்தர்ப்பத்தால் மேலே வந்துவிட்டவர்களும், தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளாவிட்டால் அதனைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது. எனவே, முயற்சி செய்யாமல் தலைவராகி விடலாம் என்பது, மூடநம்பிக்கை.

தலைமைப்பண்பின் நான்காவது விதி.

திறமையான தொண்டர் தான் முழுமையான தலைவர்

ஒரு சங்கத்தின் தலைவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அதனை அங்குலம் அங்குலமாக உள் மனசில் ஒத்திகை பார்த்துவிட்டு வரும் அளவு அவருக்கு அனுபவம் இருக்கும்.

செயலாளரைக் கூப்பிட்டு சொல்வார், “விஐபிங்க சில பேர் தாமதமா வந்தா சீட் இருக்காது. மேடைக்குப் பின்னாலே 20 சேர் வைச்சுக்குங்க, கரண்ட் போனா சிரமம், ஜெனரேட்டர் இருக்கான்னு பார்த்துக்குங்க. மேடையிலே மினரல் வாட்டர் வைக்கணும் பேச்சாளர்களுக்கு கூல்டிரிங்க்ஸ் ஒத்துக்காது, அப்பப்ப காஃபி கொடுங்க. மீட்டங் லேட்டா தொடங்குகிற மாதிரி இருந்தா அப்பப்ப மேடையிலே அறிவிப்பு குடுங்க.”

இதையெல்லாம் டெலிபோனில் சொல்லிவிட்டு பதட்டமில்லாமல் கூட்டம் தொடங்கும் நேரத்திற்கு வந்து சேருவார். ஏனென்றால், இதே மனிதர் பத்து வருடங்களுக்கு முன் ஒரு தொண்டராக இருந்து வேறு, விஐபிக்களை நிற்க வைத்ததற்காக தலைவரிடம் “டோஸ்” வாங்கியிருப்பார்.

கரண்ட், போன பிறகுதான் ஜெனரேட்டர் இருக்கிறதா? என்று சிறப்பு விருந்தினர் விசாரிக்க, பதில் சொல்லத் தெரியாமல் விழித்திருப்பார். ஒரு அமைச்சரை விழாவுக்குக் கூப்பிட்டுவிட்டு, தூசு மிதக்கும் குடிநீரை மேசையில் வைத்து திட்டு வாங்கியிருப்பார்.

“ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்று பாரதி சொன்னதை பாப்பாக்கள் கேட்குதோ என்னவோ, தலைவர்கள் கேட்பார்கள். “அடுத்தது என்ன, அடுத்த என்ன” என்கிற தவிப்புதான் தலைவர்களை உருவாக்கும் கருப்பை.

“அய்யா உங்கள் பகுதியில் குடிநீர் பழுப்பு நிறமாக வருகிறது” என்று விண்ணப்பம் “டைப்” செய்து, வீடுவீடாகக் கையெழுத்து வாங்குவதிலிருந்து, “எங்க ஊர் மிராசுதாரர் தன் அல்சேஷன் நாயை அடித்துக் கொல்கிறார்” என்று மேனகா காந்திக்கு கடிதம் எழுதுவது வரை, எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருப்பது. தலைமைப்பண்பின் அடையாளம் தான் (மொட்டை பெட்டிஷன்கள் இதில் அடங்காது)

அப்படியொருவர் உங்கள் வீதயில் இருந்தால் “வேலையில்லாத ஆளு” என்று கிண்டல் செய்யாதீர்கள்! பார்க்கிற போதெல்லாம் நல்லாயிருகீங்கள? உங்க மாதிரி ஆளுங்களாலேதான் மழை பெய்யறது” என்று பாராட்டி வையுங்கள். யார் கண்டது இன்னும் 5 வருடங்களில் கலர் சைரன் வைத்த காரில் தேசியக் கொடி படபடக்க வந்து இறங்கினாலும் இறங்குவார்.

பொதுவான விஷயங்களில் தயக்கமில்லாமல் தொடர்ந்து ஈடுபடும் குணம், பொறுப்புகளை வலிய ஏற்றுக்கொள்கிற மனப்பான்மை, இவையெல்லாமே ஒரு தலைவர் அரும்பி வருவதற்கான அடையாளங்கள்தான்.

“ஒருத்தன் என் வழியிலே” கிராஸ் செய்து கிட்டே இருக்கான். அவனை சும்மா விடப் போறதில்லை என்று ஒருவர் உறுமினால் அவர் நல்ல தலைவர் இல்லை என்று அர்த்தம்.

ஐந்தாவது விதி இது.

தலைவர்கள் தங்கள் எதிரிகளைக் குறி வைப்பார்கள் குறிப்பிடமாட்டார்கள்.

முடிந்தவரை எதிரிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது. எதரிகள் இருந்தால் அவர்களை நேரடியாக எதிர்த்துக் கொள்ளாமல் நாசுக்காக விலகுவது போன்றவையெல்லாம், தேர்ந்த தலைமைப் பண்பின் வெளிப்பாடு.

அருகிலிருப்பவர்கள் யாரும் எதிரியாகாமல் காப்பது, தொலைவில் உள்ள எதிரிகள் தொல்லை தராமல் பார்ப்பது, இவை இரண்டுமே தலைவலியை விரும்பாத தலைவர்களின் குணம்.

தலைமைப் பொறுப்பிற்கு ஆசை இருக்குமென்றால், அடுத்தவர்களை அதட்டி மிரட்டுவது தான் மரியாதை என்று சிலர் தவறாக நினைப்பதுண்டு. பொதுவாக, தலைவர்களில் சில அடுக்குகள் உண்டு.

முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாவது நிலை என்று அமைப்பின் வலிமைக்கேற்ப அந்த அடுக்குகளை அடுக்கலாம். இதில் இரண்டாவது, மூன்றாவது நிலையில் இருப்பவர்கள் வெற்றி அதிகாரத்தால் வளர நினைத்து தொண்டர்களை வெறுப்பேற்றி விடுவார்கள். இவர்கள் மிக விரைவில் வீழ்ந்து விடுவதும் உண்டு.

ஆறாவது விதி:

தலைவர்கள் கட்டளையிடுவதில்லை கேட்டுக் கொள்கிறார்கள்.

அன்பு – உணர்ச்சி – தோழமை – சகோதரத்துவம் போன்ற “சென்டிமென்ட்” ஆயுதங்களை சரியாகப் பயன்படுத்துபவர்களே தெளிவான தலைவர்கள்

தொடரும்….


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்